Tuesday, September 20, 2016

சாத்தனூர் கல்மரம் சிங்கநெஞ்சன் மின்தமிழ்


wikipedia

16THMUSEUM_163188f.jpg (636×476)
The Hindu
Sathanur006.jpg (800×479)

“நீ கல்லாகப் போகக் கடவாய்’, தவறு செய்த (?) மனைவியை சபித்தார் முனிவர்.உடனே முனிவரின் மனைவி கல்லாக மாறிவிட்டார். பின்னர் இராமர் காலடி பட்டு கல்லாக இருந்த அகலிகை மீண்டும் பெண்ணாக மாறினாள். இது இதிகாசக் கதை. கற்பனைக் கதைதான். உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் காலத்தின் கோலத்தால் மரங்கள் கல்லான நிகழ்வுகள் புவியியல் வரலாற்றில் பூமியின் பல பகுதிகளில் பல்வேறு காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அப்படிக் கல்லாக மாறிய மரங்கள் தமிழ் நாட்டில் “கல்மரங்கள்” என்றே அழைக்கப்படுகின்றன. நம் நாட்டில் கல் மரங்கள் அதிகமாக உள்ள மாநிலம் நம் தமிழ்நாடுதான்.

தமிழக நில அமைப்பில் சுமார்    80%   வன்பாறைகளால் ஆனது. தீப் பாறைகளும் , உருமாற்றுப் பாறைகளும் இவ் வன்பாறைகளில்  அடங்கும். தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் மென்பாறைகள் காணப் படுகின்றன. படிவப் பாறைகள்  இத் தொகுப்பில் அடங்கும். அரியலூர் பகுதியில் இத்தகைய படிவப் பாறைகளே உள்ளன. பெரும் நீர்நிலைகளில் ஆறுகளால் கொண்டுவரப்படும் படிவங்கள் மற்றும் வண்டல்கள் படிகின்றன.. பல இலட்சக் கணக்கான ஆண்டுகள் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்போது, நீர்நிலைகளின் அடியில்  படியும் படிமங்களின் அளவு, பலநூறு மீ. அளவிற்கு உயர்ந்து விடுகிறது. இப்படிவங்கள்  அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக கெட்டிபட்டுப் பாறைகளாக மாறுகின்றன, இவையே படிவப்பாறைகள் (SEDIMENTARY ROCKS ) எனப்படுகின்றன. . மணல் பாறைகள், களிப் பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் ஆகியவை இப்பகுதியில் கிடைக்கும படிவப் பாறைகள் ஆகும்.

நீர்நிலைகளின் அடியில் படிவங்கள் படியும்போது, அந்த நீரில் வாழும் உயிரினங்களும், ( சிப்பி, நண்டு, நத்தை, மீன் போன்றவையும் , நீர் வாழ் தாவர வகைகளும்), ஆற்றிலடித்து வரப்படும் மரங்கள், கிளைகள் மகரந்தங்கள், ஆற்றில் வாழும் உயிரினங்கள், ஆற்றோரம் உள்ள நிலப் பகுதியில் வாழும் உயரினங்கள் ஆகியவையும் சேர்ந்து புதையுண்டு போகின்றன. மேலும் மேலும் படிவங்கள் மேலே படியும் பொது அடியில் உள்ள படிவங்கள் அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உட்பட்டு கெட்டிப் படுகின்றன. பாறைகளாக உருவெடுக்கின்றன. அதில் படிந்துள்ள உயிரினங்களில் உள்ள செல்லுலோஸ் போன்ற மென்பொருட்கள் , குவார்ட்ஸ் போன்ற கணிமங்களால் இட மாற்றம் செய்யப் பட்டு , அந்த உயிரினங்கள் உருக் குலையாமல் அப்படியே  தொல்லுயிர் படிவங்களாக (FOSSILS) மாறுகின்றன. பொதுவாக , தொல்லுயிர் எச்சங்கள் படிவப் பாறை களிலேயே  காணப்படுகின்றன. தாம் அடங்கியுள்ள படிமப் பாறைகள் தோன்றிய காலம், சூழ்நிலை போன்றவற்றை அறியவும், பரிணாம வளர்ச்சி பற்றி அறியவும் தொல்லுயிர் எச்சங்கள் மிகவும் பயன் படுகின்றன. தொல்லுயிர் எச்சங்களை ஆய்வு செய்யும் கல்வி தொல்லுயிரியல் (PALAEONTOLOGY) என்று வழங்கப் படுகிறது. புதைபடிவ எரிபொருட்களாகிய நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயு ஆகியவற்றை கண்டுபிடிக்கும் பணியில் தொல்லுயிரியல் பெரும்பங்கு வகிக்கிறது.

அரியலூர் பகுதியிலுள்ள படிவப்பாறைகளில் பல்வேறு வகைப்பட்ட  தொல்லுயிர் எச்சங்கள் ஏராளமான அளவில் கிடைக்கின்றன. இவற்றில் மிகப் பெருபாலானவை கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்களே ஆகும். இதன் வாயிலாக , தற்போது இப்பகுதிக்கு நூறு கி.மீ. கிழக்கில் உள்ள கடல் , சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்திருக்கிறது என அறிய முடிகிறது.

இந்திய புவியியல் ஆய்வுத்துறையை சேர்ந்த ப்ளான்ஃ போர்ட் (BLANFORD-1862)  மற்றும் இராபர்ட் ப்ரூஸ் ஃபுட் ( ROBERT BRUCE FOOTE-1873) ஆகியோர் இங்கே ஆய்வுகள் நடத்தி , இங்குள்ளப் படிவப் பாறைகள் பற்றியும் அவற்றில் பொதிந்துள்ள 12 கோடி ஆண்டுகள் பழமையான தொல்லுயிர் எச்சங்கள் பற்றியும் உலகிற்கு எடுத்துரைத்தனர். அன்று முதல் அரியலூர் பகுதி “PARADISE OF PALAEONTOLOGISTS” என்றே அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் உள்ள புவிஅறிவியல் அருங்காட்சியகங்களை , அரியலூர் பகுதி தொல்லுயிர் எச்சங்கள் அலங்கரிக்கின்றன.

இவ்வளவு பெருமை வாய்ந்த அரியலூர் பகுதியில் இந்திய புவியியல் ஆய்வுத்துறைக்கு தலைமை ஏற்ற முதல் இந்தியர் எனும் பெருமை பெற்ற எம்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்  1940 ஆம் ஆண்டில், ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அவர் அரியலூருக்கு பத்து கி.மீ. மேற்கேயுள்ள சாத்தனூர் எனும் கிராமத்திற்கு 7௦௦ மீ. வடக்கே   ஓடைப் படுகை ஒன்றில் 18மீ. நீளமுள்ள தொல்மர எச்சம்/ கல் மரம். ( FOSSIL TREE / WOOD FOSSIL) ஒன்றை கண்டு பிடித்தார். இந்த சாத்தனூர் கிராமத்தின் அருகே உள்ள வரகூர், ஆனைப்பாடி, அழுந்தளையூர், சாரதாமங்கலம் போன்ற கிராமங்களின் அருகே உள்ள ஓடைப் படுகைகளிலும் சில மீ. நீளமுள்ள கல் மரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஆயினும் சாத்தனூர் அருகே உள்ள 18 மீ. நீளமுள்ள கல்மரம்தான் இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிக நீளமான, மிகப் பெரிய கல்மரம் ஆகும். அருகே உள்ள ஆனைப்பாடி ஓடைப் படுகைகளில் காணப் படும் “அம்மோநைட்” எனப்படும் கடல் வாழ் உயிரினத்தின்  தொல்லுயிர் எச்சங்கள் , சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரிடேஷியஸ்  காலத்தை சேர்ந்தவை. (இவைகளில் சில கார் சக்கரம் அளவிற்கு பெரிதானவை) எனவே இந்தப் பகுதி சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலின் கீழ் இருந்தது- ஆற்றில் அடித்து வரப்பட்ட பெரிய அடிமரம் கடலில் சேர்ந்து , மேலே மேலே படிந்த படிவங்களின் அடியில் சிக்கி கல்லாக  சமைந்தது (PETRIFICATION)  என்பது தெளிவு.. மணல் பாறைகளில் பதிந்து பூமிக்கு அடியில் இருந்த சாத்தனூர் கல்மரம் , ஓடைகளில் ஓடிவரும் தண்ணீரால் மேலேயுள்ள மண் அரிக்கப்பட்டு , அதனால் வெளிப் பட்டிருக்கிறது. ஆய்வின் போது  கிடைத்த தடையங்களின் அடிப்படையில் , இந்த அடிமரம் சுமார் 26  மீ. இருந்திதிருக்க வேண்டும் என்றும், ஓடை நீரால் அடித்த் செல்லப் பட்டது போக எஞ்சியுள்ள  18மீ. பகுதியே தற்போது நாம் பார்ப்பது. என்றும் தெரிய வருகிறது.

இந்தக் கல்மரம் ஜிம்னோஸ்பேர்ம் ( GYMNOSPERM ) எனப்படும் “பூக்காத”-/”கனிதரா’ தாவரங்கள் பிரிவில்  “கோனிஃபர்” (CONIFER)  எனப்படும் கூம்புடை பிரிவை சார்ந்தது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன் ‘க்ரீடேஷியஸ்” காலகட்டத்தில் இவ்வகைத் தாவரங்களே பூமியில் பெருகி இருந்தன. பின்னர் “ஆஞ்சியோஸ்பேர்ம்”  எனப்படும் பூக்கும் / கனிதரும் மரங்கள் தோன்றின.

தற்போது சாத்தனூர் –அரியலூர் பகுதிகளில் கடலும் இல்லை , பெருங்காடுகளும் இல்லை. இப்பகுதி இன்றைக்கு கடலிலிருந்து 1௦௦ கி.மீ. மேற்கே தள்ளியுள்ளது. ஆனால் 12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட “க்ரீடேஷியஸ்” காலகட்டத்தில் இபகுதி கடலின் கீழ் இருந்தது என்பதை இங்கே கிடைக்கும் கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் (MARINE  FOSSILS) உறுதி செய்கின்றன. அன்றைய கடற்கரையை ஒட்டியோ அல்லது சற்று தள்ளியோ இருந்த நிலப்பகுதியில் 60-70 அடி உயரமுள்ள மரங்கள் இருதிருக்க வேண்டும். அந்த மரங்கள் ஆறுகளால் அடித்து வரப் பட்டு, கடலை அடைந்து, கடலுக்கு அடியில் படிந்த படிவங்களோடு சேர்ந்து படிந்து , கல்லாக சமைந்திருக்க வேண்டும்., பிற்காலத்தில் புவியியல் மாற்றங்களால் கடல் பின்னே செல்ல தற்போது இந்தக் கல் மரங்களும் ஏனைய தொல்லுயிர் எச்சங்களும், நிலப் பகுதியில் புதைந்து கிடக்கின்றன.ஆறுகளிலும் ஓடைகளிலும் மண் அரித்து அடித்து செல்லப் படும்போது, இவை வெளிப் படுகின்றன.

சரி , மரம் எப்படிக் கல்லாக மாறுகிறது.? சாதரணமாக மரம் மண்ணில் புதையுண்டு போகும் பொது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளால் அவை மட்கிப் போகும் வாய்ப்புகளே அதிகம். மாறாக , அந்த மரம் புதையுண்ட இடத்தில் மேலும் மேலும் படிவங்கள் படியும் போது அதனால் ஏற்படும் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக மரம் தகன நிலைக்கு உட்பட்டு குமைந்துபோய் கரியாக மாறக் கூடும். நிலக்கரி, பழுப்பு நிலக்கரிப் படிவங்கள் இப்படித்தான் உருவாகியுள்ளன. இதனை CARBONAISATION  அல்லது கரியாக மாறுதல் எனக் குறிப்பிடலாம். மூன்றாவதாக மண்ணில் புதைந்த மரம் மட்கிப் போகும் முன்னால் அந்த மரத்திலுள்ள செல்களின் இடை வெளிகளிலும், செல் அடுக்குகளின் இடை வெளிகளிலும் , நிலநீர் புகுந்து விடுகிறது. அந்த நீரில் கரைந்துள்ள சிலிகா அந்த இடைவெளிகளை ஆக்கிரமித்து தாவரப்  பொருளான செல்லுலோசை இடமாற்றம் செய்து விடுகிறது. இந்த நிகழ்வின் போது மரத்தின் அமைப்பு  உருக்குலையாமல் அப்படியே காப்பாற்றப் படுகிறது. மரம் கல்லாக சமையும் இந்நிகழ்வு “PETRIFICATION” (PETRA  MEANS ROCK)  என்று அழைக்கப்படுகிறது.நிலநீரில் கரைந்துள்ள கனிமங்களின் தன்மைக்கேற்ப கல் மரத்தின் நிறம் மாறுபடுகிறது. சாத்தனூர் கல் மரம் சிலிகாவால் ஆனதால் இது பழுப்பு நிறத்தில் உள்ளது.

அரியலூரைச் சுற்றியுள்ள சாத்தனூர், ஆனைப்பாடி வரகூர் ஆகிய இடங்களில் மட்டுமின்றி , விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை, கடலூர் மாவட்டம் நெய்வேலி, புதுவை காலாப்பட்டு மற்றும் விருதாச்சலம் பாரூர் ஆகிய இடங்களிலும் கல் மரங்கள் கிடைக்கின்றன. இராஜஸ்தான் மாநிலம் பொக்ரேன் பகுதியிலும் கல்மரங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  உலக அளவில் அரிசோனா கல்மரக் காடுகள் மிகவும் புகழ் பெற்றவை.

சாத்தூர் கல் மரத்தின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் கருதி, இந்திய புவியியல் ஆய்வுத் துறை இதற்குக்   கல்மரப் பூங்கா என  பெயரிட்டு , தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது..இந்த இடம் வேலியிட்டு பாதுகாக்கப் பட்டு வருகிறது. ஓடை அரிப்பால் வெளிப்பட்ட இந்தக் கல்மரம், எதிர் காலத்தில் ஓடை வெள்ளத்தினால் அகற்றுபட்டு விடக்கூடாது  என்பதற்காக , செயற்கைக்  கால்வாய் அமைத்து ஓடை திருப்பி விடப்பட்டுள்ளது. கல்மரம் பற்றிய புவியியல் குறிப்பு ஒன்றும் இத்துறையினரின் அறிவிப்புப் பலகையில் காணப் படுகிறது. பாதுகாப்பிற்காக பணியாள் ஒருவரும் இருக்கிறார்.

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் (N.H. 45), பெரம்பலூரில் இருந்து, ஆறு கி.மீ. தெற்கே சிறுவாச்சூர் எனும் ஊர் உள்ளது. அங்கிருந்து கிழக்கே செல்லும் சாலையில் 14 கி.மீ. பயணித்தால் சாத்தனூரை அடையலாம்.அண்மைக்காலத்தில் சாத்தனூர் கல் மரத்தின் சிறப்பு பற்றி அறிந்த தமிழக அரசின் சுற்றுலா துறை , சிறுவாச்சூர்- சாத்தனூர் சாலையை செப்பனிடு பணியை மேற்கொண்டது. சாத்தனூரில் கல் மரத்திற்கு அருகே ஓய்வு விடுதி ஒன்றும் கட்டப் பட்டது. பத்து கோடி ஆண்டுகள் பழமையான கல்மரத்தைப் பாதுகாத்துவரும் இந்திய புவியியல் ஆய்வுத் துறையின்  பணி பாராட்டிற்குரியது.

யூடுயூப் விடியோ பொன்னுசாமி காசி தங்கராஜன் 


நன்றி சாத்தனூர் கல்மரம் சிங்கநெஞ்சன் மின்தமிழ்