பேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ். ஆளூர் ஷாநவாஸ்
அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு: அறிவுக் கருவூலத்தை இழந்தோம்!
சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள்
சென்னை பெரம்பூரில், வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப்
பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை
சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C
பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில்
பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப்
பணியில் சேர்ந்து பரிணமித்தார்.
சாதிக்க வேண்டும்
என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும்,
அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார்.
தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக்
கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த
கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.
