களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும்
சிறப்புரை: தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பத்மாவதி
நான் தொல்லியல் துறையில் மாணவியாய் சேர்ந்த போதிலிருந்தே
களப்பிரர் வரலாற்றில் எனக்கு ஒர் ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதுபற்றி யோசித்தும்
படித்தும் வந்தேன். ஆய்வு செய்ய நினைத்தேன்.
மு.அருணாசலம், மயிலை சீனி.வேங்கடசாமி, நடன.காசிநாதன்
ஆகியோர் களப்பிரர் பற்றி எழுதிய நூல்களைப் படித்தேன். பிறர்நூல்களையும் படித்தேன்.
களப்பிரர் வரலாற்றில் அடுத்த கட்டத்திற்குப் போகமுடியவில்லை.
வரலாற்றுத் தடயங்கள் மிகவும் குறைவு. இலக்கிய ஆதாரங்கள் மட்டுமே கிடைத்தன. இதைக் கொண்டே
மேற்கூறிய அறிஞர்கள் தங்கள் அறிவாலும் ஆற்றலாலும் மிகச் சிறப்பான ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.
அவர்களைவிட கூடுதல் ஆதாரமாக களப்பிரரின் சமகாலப்பதிவாக
பூலாங்குறிச்சியில் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் கூடுதல் வெளிச்சம் கிடைத்தது.
இருந்தாலும் களப்பிரரின் ஊராட்சி, நிர்வாகம், பொருளாதாரம், அரசியல் அமைப்பு, படை, சமயம்
போன்றவை பற்றி மேலும் அறிந்து கொள்ள கூடுதல் சான்றுகள் தேவைப்பட்டன.
இந்நிலையில் தேவிபிரசாத் சட்டோபாத்யாய அவர்கள் எழுதிய
இந்தியத் தத்துவம் (Indian Philosophy) என்ற நூலைப் படித்த போது
அவர், சாங்கியம் என்ற தத்துவத்தை எழுத மேற்கொண்ட அணுகுமுறையைத் தெரிந்து கொண்டேன்.
சாங்கியம் பற்றிய நூல்கள் ஏதும் இல்லாத நிலையில்
அவர் சாங்கியத் தத்துவத்திற்கு எதிரான சமய தத்துவவாதிகள் சாங்கியம் பற்றிக் கூறி மறுத்த
தகவல்களைத் திரட்டி, எதிரிகள் இப்படிக் கூறியிருந்தால், அத்தத்துவம் எப்படியிருந்திருக்கும்
என்று கட்டமைத்து இதுதான் சாங்கியம் என்று கூறியிருக்கிறார்.
இந்த அணுகுமுறையைப் பின்பற்றி, நானும் களப்பிரருக்கு
அடுத்து ஆட்சியைப் பிடித்து களப்பிரர் பற்றிக் கூறிய தகவல்கள், அவர்களது கல்வெட்டுகள்,
செப்பேடுகளில் புதைந்து கிடக்கும் உண்மைகளைத் திரட்டினேன். களப்பிரர் ஆட்சிமுறை, ஊர்
ஆட்சி, நிர்வாகம், படை, சமயம் போன்றவை இப்படித்தான் இருந்திருக்கும் என்று எழுதினேன்.
களப்பிரர் என்பவர்கள் கர்நாடகப்பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினரும் தமிழகத்தலைவர்களும்
இணைந்த குழுவினர் ஆவர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஓராண்டு
ஆய்வு நிகழ்த்த அளித்த அனுமதியின் பேரில் “புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு” என்ற ஆய்வறிக்கையைச்
சமர்ப்பித்தேன்.
தற்போது களப்பிரரின் வீழ்ச்சி பற்றியும் பல்லவர்
எழுச்சி பற்றியும் பேச வேண்டும். வீழ்ச்சி அந்த ஆட்சியின் உள்ளார்ந்த காரணிகளால் நிகழ்ந்ததா?
அல்லது புறவயமாக ஏற்பட்ட படையெடுப்பா? படையெடுப்பு என்று தெரிகிறது. அதன் காரணமாக அந்த
ஆட்சியில் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாக அமைந்ததா என்பதைக் காண வேண்டும்.
அவ்வாறு அய்ந்த போது களப்பிருக்கு ஆதரவளித்த ஊர்த்தலைவர்கள்,
சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள் சிலர் பாண்டியருக்குக் கொடுத்த ஆதரவினால் களப்பிரர்
ஆட்சி கவிழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. ஆதரவளிக்காத சிலர் தொடர்ந்து பாண்டியரை
எதிர்த்து போராடிவந்தனர். இந்த இரண்டு தகவல்களும் பாண்டியர் ஆவணங்களில் கிடைக்கின்றன.
தமிழகத் தலைவர்கள் களப்பிரர் ஆட்சியை வெறுப்பதற்கும் பாண்டியரை ஆதரிப்பதற்கும் என்ன
காரணம். அங்கே என்ன நடந்தது?
இப்போதும் எனக்கு ஆதாரங்கள் தேவை கிடைக்காதபோது
நான் வேறொரு அணுகுமுறையைத்தான் பின்பற்ற வேண்டும்.
அதே காலகட்டத்தில் இந்தியா முழுவதிலும் எந்தெந்த
இடங்களில் எல்லாம் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியைப் போன்ற பௌத்த ஆட்சி நடந்ததோ அந்த
ஆட்சிகள் கவிழக் காரணிகளாக அமைந்தவை எவை என்று அணுக நினைத்து தேடினேன். குஷாணர் காலம்
மிகச் சிறந்த உதாரணமாக அமைந்தது. அவர்கள் பிற சமயத்தவர் வழிபாட்டை நிறுத்தி, பௌத்த
விகாரைகள், நினைவுத்தூண்கள் போன்றவற்றை அமைத்தது? வேள்வி போன்ற நடவடிக்கைகளை நிறுத்தியது.
தேவாலங்களைச் செயல்படவிடாமல் தடுத்தது. ஒரே சாதியாக நிலவியது போன்ற தகவல்கள் கிடைத்தன.
இத்தகைய பௌத்த ஆட்சிகள் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல்
5ஆம் நூற்றாண்டுவரை நிகழ்ந்து ஏறக்குறைய 5ஆம் நூற்றாண்டில் வீழ்ந்தன.
இதே காலகட்டத்தில் ரோமானியப் பேரரசுடன் நடந்த வணிகமும்
வீழ்ந்திருக்கிறது. இந்த வீழ்ச்சியும் பௌத்த அட்சிகளின் வீழ்ச்சியும் ஒரு சேர நிகழ்ந்திருக்கின்றன.
வீழ்ந்த நகரங்களில் நடத்தில் அகழாய்வுகளில் பல்வேறு
தடயங்கள் கிடைத்தன. ரோமானிய நாட்டோடு செய்த வணிகத்தால் அந்நாட்டுப் பானை ஓடுகளான ரௌலட்டட்
பானை ஓடுகள், ஆம்போரா ஜாடிகள் கிடைத்தன. காசுகள் அச்சடித்தற்கான தடயங்கள், ஏராளமான
காசுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த ஆட்சிகளில் பௌத்த விகாரைகள் நிலவுடமை நிறுவனமாக,
அதிகார மைய்யமாக பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தளமாக செயல்பட்டிருக்கலாமோ
என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
நன்றி: சமூக ஆய்வு வட்டம்
No comments:
Post a Comment