Friday, October 24, 2014

பேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ். ஆளூர் ஷாநவாஸ்

doctor abdullah 



பேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ்ஆளூர் ஷாநவாஸ்


அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு: அறிவுக் கருவூலத்தை இழந்தோம்!

சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பரிணமித்தார்.

சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.

எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும் தம் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.

பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக் கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக உருமாறினார்.

தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியார் தாசனின் பேச்சு ஒலித்தது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, சிங்கப்பூர் என பெரியார் தாசனின் குரல் உலகெங்கும் பரவியது.

பெரியாரைப் பற்றியும், அவர் வகுத்துக் கொடுத்த நெறிகளைப் பற்றியும் ஓர் மாற்றுப் பார்வையை முன்வைத்தார் பெரியார் தாசன். பெரியாரின் மறுபக்கம் அவரால் தான் வெளிப்பட்டது.

ஆக்ரோஷமும், கோபமும் பெரியார் தாசனிடம் நிறைந்து காணப் பட்டாலும், இயல்பாக அவரிடமிருந்து பொங்கியெழும் நகைச்சுவை அலை அனைவரையும் நனைத்து விடும். சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நகைச்சுவை ததும்ப அவர் வருணிக்கும் போது கலகலப்பும், சிரிப்பலையும் பற்றிப் பரவுகிறது.

பெரியார் தாசன் என்றால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற அடையாளங்களோடு சிறந்த நடிகர் என்ற சிறப்பும் சேர்ந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘கருத்தம்மா’ எனும் திரைப்படத்தில், படிப்பறியா பட்டிக்காட்டு மொக்கையனாகத் தோன்றி, சமூக அவலங்களை துல்லியமாகப் பதிவு செய்தார், பெரியார் தாசன். தாம் நடித்த முதல் படத்திலேயே இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். தோல்வி பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வாடி வதங்கும் இளையோருக்கும், பிரச்சனைப் புயலில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் சிகிச்சைத் தந்து தீர்வைச் சொன்னார்.

இந்துவாகச் சாகமாட்டேன் என்று சூளுரைத்து இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தத்தைத் தழுவிய அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார் தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.

‘தம்மோடு வாதம் புரிந்து எவரும் வெல்ல முடியாது’ எனும் அளவுக்கு பலரையும் மிரள வைத்தவர் பெரியார் தாசன். இந்து மதத்தின் தலைமையகமாகவும், இந்துக்களின் ஆன்மீக குருவாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார் தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். இந்துத்துவத் தத்துவங்களை ஆழ்ந்து உள்வாங்கி அவற்றை சரளமாக எடுத்தியம்பும் பெரியார் தாசனின் திறமைக்கு முன் இந்துமத சாமியார்களும், வீரத் துறவிகளும் திகைத்து நின்றனர்.

‘பெரியார் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டே, பெரியாரைப் போலவே யாருக்கும் தாசனாக இருக்க சம்மதிக்காதவர் பெரியார் தாசன்’ என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரின் கூற்றைப் போலவே, எவருக்கும் அடிமையாகாமல் சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்த பெரியார் தாசன், 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இறைவனின் அடிமையாக இஸ்லாத்தில் இணைந்தார்.

இஸ்லாமியராக மாறிய பின் அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். ஓயாத பயணங்களை மேற்கொண்டார். உடல்நலனைப் பற்றி கவலையே படாமல் ஊர் ஊராய் சுற்றினார். நுரையீரல் தொற்று நோய் தம்மை தாக்கியிருப்பதைக் கூட கவனிக்காமல் பயணங்களைத் தொடர்ந்தார். இயல்பாக இயங்க முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்தவரை பார்ப்பதற்காகச் சென்ற போது, சிறப்புப் பிரிவுக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என மறுத்தது மருத்துவமனை நிர்வாகம். உடனே படுக்கையிலிருந்து வெளியேறிய அப்துல்லாஹ் அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டீனில் அமர்ந்து நீண்ட நேரம் எம்மோடு உரையாடினார். விரைவிலேயே நோயிலிருந்து மீண்டு விடுவேன் என்றும், சமூகப் பணிக்கு மீண்டும் வருவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், அவர் மீண்டு வரவே இல்லை.

2001 ஆம் ஆண்டிலிருந்தே அவரை நான் நெருக்கமாக அறிவேன். அவரிடம் மணிக்கணக்கில் உரையாடிய மிகச் சிலரில் நான் ஒருவன். அவரை அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை நேர்காணல்கள் செய்துள்ளேன்.

ஒவ்வொருமுறையும் அவரை சந்திப்பதற்காக பச்சையப்பன் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள கேண்டீனில் அமர்ந்தே பேசுவோம். கடைசியாக அவரிடம் மருத்துவமனை கேண்டீனில் அமர்ந்துதான் பேசினேன்.

இனி எங்குமே அவருடன் பேச முடியாது!


Source:
Via Mail

No comments:

Post a Comment