ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஆவின் பால் விலை உயர்வு
“தாய்ப்பால் இல்லையா, ஆவின் பால் கொடுங்க” என மருத்துவர்கள் நம்பிக்கையோடு பரிந்துரைக்கும் அளவுக்கு பெயர் பெற்றது ஆவின் பால். இது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. பல லட்சம் குழந்தைகளின் தாய்ப்பாலாகவும், உயிராதாரமாகவும் இருக்கும் ஆவின் பாலில்தான் விசத்தைபோல் தண்ணீரைக் கலந்து கொள்ளையடித்தனர் அ.தி.மு.க கிரிமினல்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து தமிழகம் மீளும் முன்பே, இதோ ஆவின் பால் விலையை திடீரென 10 ரூபாய் உயர்த்தி பச்சிளம் குழந்தைகளைப் பட்டினி போட்டு கொல்லத் துடிக்கிறது அ.தி.மு.க அரசு.

இதை வெறும் பால்விலை உயர்வு என்று மட்டும் பார்க்க முடியுமா? முடியாது. இதோடு சேர்ந்து ஆவின் பாலில் இருந்து தயாரித்து விற்பனை செய்யப்படும் நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பாதாம் பவுடர், மோர், லஸ்ஸி என 17 வகையான பொருட்களுக்கும் நிச்சயம் விலை ஏறும். மிக முக்கியமாக கூலித் தொழிலாளிகளின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்கமுடியாத டீ, காபி விலையும் கடுமையாக உயர்ந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஏன் இந்த விலை உயர்வு?

’ பால் உற்பத்தியாளர்களுக்கு 5 ரூபாய் கூடுதலாகக் கொடுப்பதால்தான் வாங்குவோர்க்கு 10 ரூபாய் விலை ஏறுகிறது என ஆவின்பால் விலை ஏற்றத்திற்கு நியாயம் கற்பிக்கிறது தமிழக அரசு.

உழைக்கும் மக்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். மாட்டுத் தீவனமான பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்றவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் தற்போது வழங்கப்படுவதில்லை. அவற்றை தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு காரணமான இந்த அரசுதான் இன்று விவசாயிகளுடைய நலனுக்காகத்தான் பால் விலையேற்றம் என்று அபாண்டமாக புளுகுகிறது.

உண்மை என்ன தெரியுமா?

தனியார் பால் நிறுவனக் கொள்ளைக்கு வழி வகுக்கவும், ஆவினை அடியோடு ஒழிக்கவும் தான், இந்த விலை ஏற்றம். இன்று வரை ஆவின் பாலுக்கும் – தனியார் பாலுக்கும் உள்ள வித்தியாசம் லிட்டருக்கு 13 ரூபாய். ஆவின் விலை ஏற்றத்திற்குப் பிறகு இது வெறும் 3 ரூபாயாகத்தான் இருக்கும். இதனால் ஆவின் வாங்கியவர்கள் தனியார் பால் வாங்கும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். அடுத்து, ஆவின் விலையே ஏறும் போது எங்களால் எப்படி சமாளிக்க முடியும் என்று கூறி தனியார்கள் 50 ரூபாய் வரை விலை ஏற்றுவார்கள். இது கற்பனையல்ல, கடந்த கால உண்மை. 2012-ம் ஆண்டில் ஆவின் விலை ஏறிய பிறகு 2, 3 முறை தனியார் நிறுவனங்கள் விலையை ஏற்றி கொளையடித்து வருகின்றன. இன்றும் அதுதான் நடக்கப்போகிறது.

எப்படியிருந்தாலும் ஆவின்பால் விலை குறைவுதான், மக்கள் அதைத்தானே வாங்குவார்கள் என நீங்கள் நினைக்கலாம். மளிகைக்கடைக்காரரிடம் கேட்டு பாருங்கள் அவர் உண்மையை போட்டு உடைப்பார். “முதலில் தினமும் 20 பாக்கெட் ஆவின் வரும், பிறகு 15, 10, 8 எனக் குறைத்து விட்டார்கள். மக்களே விரும்பிக் கேட்டாலும் ஆவின் பால் கிடைக்கவில்லை, வேறு வழியே இல்லாமல் தனியார் பாலைத் தான் தருகிறோம்’’ என்கிறார் ஒரு மளிகைக் கடைக்காரர். இப்போது தெரிகிறதா எப்படி இருந்தாலும் தனியார் பால் நிறுவனங்களுக்குத்தான் கொள்ளை லாபம்.

இன்னொரு பக்கம் தினந்தோறும் 2 லட்சம் லிட்டர் ஆவின் பாலைத் திருடி தனியார் நிறுவனங்களுக்கு விற்று விட்டு, அதே அளவு கெமிக்கல் தண்ணீரைக் கலந்து 12 வருடமாக, ஆண்டுக்கு 150 கோடிக்கு மேல் சுருட்டி, சுமார் 2000 கோடி ஊழல் செய்திருக்கிறார்கள் அ.தி.மு.க எனும் கொள்ளை கூட்டத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியும், வைத்தியநாதனும். அதிகாரிகள் துணையோடு அடித்த இந்தக் கொள்ளையை ஈடுகட்ட இன்று நம் தலையில் விலையேற்றத்தை திணிக்கிறார்கள். இது தான் ஆவின்பால் விலை உயர்வின் பின்னணி.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டு – ஆவினுக்கு வேட்டு

மக்களுக்கு, தரமாகவும் மலிவாகவும் பால் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1981-ம் வருடம் தொடங்கப்பட்டதுதான் ஆவின் நிறுவனம். 12000-க்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள், 20 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாய உறுப்பினர்கள் என குறுகிய காலத்தில் ஆலமரம் போல் வளர்ந்தது. கறந்தது கறந்தபடி, சொட்டுத் தண்ணீர் கூடக் கலக்காமல் கூட்டுறவு சொசைட்டிகளுக்கு பாலைக் கொண்டு வந்தார்கள் விவசாயிகள். அந்தப் பாலை அதே தூய்மை – தரத்துடன், வீடுவரை கொண்டு வந்து சேர்த்தனர். இப்படித்தான் தாய்ப்பாலுக்கு நிகரான மதிப்பைப் பெற்றது ஆவின் பால்.

1991-ல் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு உருவான தனியார் பால் நிறுவனங்கள் ஆவினோடு போட்டி போட முடியாமல் விழி பிதுங்கின. லாப வெறிகொண்டு அலையும் தனியார் பால் நிறுவன முதலாளிகள் விடுவார்களா? அவர்களுக்கு சேவை செய்யும் அரசுதான் விட்டுவிடுமா?

முதலில் விவசாயிகளுக்கு வழங்கிய மலிவு விலை தீவனம், பருத்திக் கொட்டை ஆகியவற்றை நிறுத்தினார்கள். பாலுக்குரிய பணத்தை மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் தராமல் இழுத்தடித்து விவசாயிகளை நோகடித்தார்கள். தொடர்ந்து நட்டமடைந்து வந்த விவசாயிகள் வேறுவழியின்றி தனியார் பால் நிறுவனங்களை நோக்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இப்படித்தான் ஆரோக்கியா, திருமலா, ஹெரிடேஜ், கெவின்ஸ் போன்ற தனியார் கொள்ளையர்கள் அரசின் துணையோடு வளர்ந்தார்கள். இன்று ஆவினுக்கு மூடு விழா நடத்த முயன்றும் வருகிறார்கள்.

இப்படி ஆவின் நிறுவனம் சீரழிக்கப்படுவதற்கெதிராக, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கெதிராகத்தான் பால் உற்பத்தியாளர்களான விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு பால் உற்பத்தி விவசாயிகளின் கோரிக்கையின்படி விலை ஏற்றப்படுவதாகக் கூறி ஒவ்வொரு முறையும் போராடும் விவசாயிகளை வில்லன்களைப் போல சித்தரிக்கும் சதி வேலையை செய்து வருகிறது இந்த அரசு. இதை எதிர்த்துப் போராடி மக்கள் சொத்தான ஆவின் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டியதும், ஆவின் விலை ஏற்றத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமை.

ஏற்கனவே காய்கறி முதல் மளிகை வரை விலைவாசி விசம்போல் ஏறி வருகிறது;. பொட்ரோல் – டீசல் விலை திடீர் திடீரென உயர்த்தப்படுகிறது; மாத பட்ஜெட்டில் குடிக்கும் தண்ணீருக்கும் சுமார் 2000 ஆயிரம் வரை ஒதுக்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்; வெளியில் சென்றால் ஒன்னுக்கு, ரெண்டுக்கு போகும் கக்கூசுக்கும் விலை ஏற்றம்; கல்வி – மருத்துவம் காசு இல்லாமல் இல்லை என்பதால் அது நமக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது; இதோ ஆவினை அடுத்து மின்கட்டண உயர்வு எனும் ஏவுகணை நம்மை தாக்குவதற்கு தயாராகி வருகிறது.

வருமானம் உயரவில்லை, வாழ்க்கைத் தரம் உயரவில்லை. நாம் என்ன செய்யப்போகிறோம். இனி பால் பயன்படுத்தும் அளவைக் குறைக்கலாம் என்று கருதுவதோ, அதிகரிக்கும் செலவுகளுக்கு ஏற்ப கூடுதலாக உழைக்கலாம் என நினைப்பதோ, இதெல்லாம் நம் தலைவிதி எதுவும் செய்யமுடியாது என சகித்துக்கொண்டு அமைதியாக வாழ்வதோ, நாம் என்ன செய்யமுடியும் என புலம்புவதோ, மனுகொடுத்துவிட்டு அரசியல்வாதிகள் – அதிகாரிகளிடம் மன்றாடுவதோ உண்மையில் தீர்வைத் தராது. ஆவின் பால் விலையை சகித்துக்கொள்ளாமல் எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும்.
ஆவின் நட்டத்தை ஈடுகட்டி விவசாயிகளுக்கு வாழ்வுதர ஆவின் பாலில் ஊழல் செய்த அ.தி.மு.க கிரிமினல்கள் – அதிகாரிகளின் சொத்துக்களை மொத்தமாகப் பறிமுதல் செய்யப் வேண்டும். அதற்கு பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டக் கமிட்டிகளை கட்டியெழுப்புவோம் அணிதிரண்டு வாரீர்.

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை.
வெளியிட்ட பிரசுரம்.

நன்றி: வினவு