Friday, October 7, 2016

சுக்ரீஸ்வரர் கோவில் கல்வெட்டுச் சொல்லும் கோயில் ரகசியங்கள்

சுக்ரீஸ்வரர் கோவில் கல்வெட்டுச் சொல்லும் கோயில் ரகசியங்கள்



 https://ramanchennai.files.wordpress.com/2011/08/img_6069.jpg

மெல்லிய காற்று வருடிச்செல்லும் கடற்கரையில் நிற்பது போன்று கண்முன் விரிகிறது அந்த இடம். பல்லவர்களின் கலைக்கூடங்களானமாமல்லபுரம் கடற்கரை கோயில் போன்ற கம்பீரம். சுற்றிலும் விரிந்து கிடக்கும் தரிசு நிலங்களுக்கு இடையே காவி நிறத்தில் பளிங்கு மண்டபம்போல் காட்சியளிக்கிறது அக்கோயில்.

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பெரியபாளையம் சுக்ரீஸ்வர சுவாமி ஆலயம். தல புராணத்தில் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ­ஸ்ரீராமரின் தோழனான சுக்ரீவன் இவ்வூரில் பரம்பொருளான ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று நாமம். 

கோயிலின் அர்த்த மண்டபச் சுவரில் உள் புடைப்புச் சிற்பமாக சுக்ரீவன் ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்கிறான். இந்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு காணப்படும் கல்வெட்டுகள் இக்கோயிலின் பழம்பெருமையை பறை சாற்றுகின்றன.



இக்கோயிலின் தொன்மையினையும் பெருமையினையும் இரண்டு விதமாக வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபிக்கிறார்கள். சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் இந்தக் கோயிலைப் பற்றி பாடியிருப்பதால் இக்கோயில் சுந்தரர் வாழ்ந்த காலமான எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
கி.பி. 1220ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படும் பழமையான கல்வெட்டு. 

எனவே இக்கோயில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இந்தக் கல்வெட்டு, கோயில் அர்த்த மண்டபத்தின் வடக்கு குமுதவரியில் காணப்படுகிறது. மக்கள் தங்கள் சொந்த செலவில் கோயிலுக்கு பூஜைகள் செய்வதையும் திருவிழாக்கள் எடுப்பதையும் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதியிருக்கிறார்கள். ஆனாலும் கோயில் விழாக்களில் தங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றோ, தங்களுக்கு முதல் மரியாதை அளித்த பின்னர்தான் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றோ அவர்கள் விரும்பியதில்லை.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்: வீரராஜேந்திர சோழ சக்கரவர்த்தி என்ற சிறப்புப் பெயர் பெற்ற சிவபிராமணன், இவ்வூரை ஆண்ட வீரராஜேந்திரன் என்ற அரசனிடம் 30 பொன் கொடுத்து, கோயில் திருவிழா மற்றும் அபிஷேக ஆராதனைகளில் தான் ஓர் உபயதாரராக பங்குபெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அரசனும் இந்த ஆருடைய நாயனார் கோயிலில் அவருக்குச் சில சிறப்பு உரிமைகளைக் கொடுத்து ஆணை பிறப்பித்தான். இதை சிரமேற்கொண்டு அந்த சிவபிராமணன் இறுதிவரை சிவத்தொண்டு செய்து வந்தார். படியாய்க் கிடந்து பணிவிடை செய்தாரே தவிர பரிவட்டம் எதையும் எதிர்பார்க்கவில்லை.இதைச் சொல்லும் கல்வெட்டு செய்தியை கவனியுங்கள்:

‘நம்முடன் நின்று இனக்கு காணி தர வெனும் என்று
நமக்கு தந்த பொன் முப்பது இப்பொன் 
முப்பதுக்கும்
இவனுக்கு நாம் குடுத்த காணியாவது.....
தொம் இக்கொயிற்காணி முப்பது வட்டமும்
அனுபவிப்பாளாகவும் இக்கோயில்கள் பூசை
தெவ கன்ட பெறு எழுவன முறைப்பன....’

இக்கோயிலின் அர்த்த மண்டபத்தின் ஜகதி வரியில் காணப்படும் கல்வெட்டு தேவ தானங்கள் பற்றிய ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறது. சுந்தர பாண்டியன் என்ற மன்னன் இக்கோயிலுக்கு கொடுத்த தேவதான நிலங்களை சிதக்குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்த விவசாயிகள் உழுது பயிரிட்டுக் கொள்ளவும் விளைச்சலில் பாதியை இக்கோயிலுக்கு தரவும் ஆணை பிறப்பித்துள்ளான். மேலும் சிதக்குறிச்சி விவசாயிகள் கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்தையும் பட்டியையும் ஆண்டு கொள்ளவும் அணை அமைத்து வாய்க்கால் வெட்டி குளம் காத்து நீர்ப்பாசனம் செய்துகொள்ளவும் ஆணை பிறப்பித்தான். இதோ அந்தக் கல்வெட்டுச் செய்தி:

‘வாயறைக்கா நாட்டு சிதக்குறிச்சியில்
ஊராளிகளுக்கும்
நம் ஓலை குடுத்த பரிசாவது நம்பிள்ளை
சுந்தரபாண்டி தெவர் நங்குரக்குத்தளி 
நாயினார்க்குத்
......நன்செய் புன்செய் நத்தமும் தொட்டமும்
குளமும் குளப்பரிப்பும் உட்பட்ட நிலம் குடி 
நீங்காத்
தெவதானமாகவும் நஞ்செய் உழுது வாரம்...’

அமெரிக்காவில் 1930ல் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டபோது ‘டென்னசிப் பள்ளத்தாக்குத் திட்டம்’ என்ற திட்டத்தை அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் அறிமுகப்படுத்தினார். அதன்படி டென்னசி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த சுமார் 40,000 ஹெக்டேர் நிலங்கள் நீர்ப்பாசனத்திற்கும் விவசாயத்திற்கும் உட்படுத்தப்பட்டன. தரிசாகக் கிடந்த விளைநிலங்களில் பயிர் செய்யவும், நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ளவும், மின்சார உற்பத்தி செய்யும் தனியாருக்கு அனுமதி வழங்கினார். தரிசு நிலங்களை மேம்படுத்துவதும் அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்துவதும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு உதவும் என்று இருபதாம் நூற்றாண்டில் அமெரிக் காவுக்கு வந்த சிந்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மன்னர்களுக்கு இருந்தது என்பதற்கு ஓர் உதாரணம் கீழே குறிப்பிடப்பெறும் செய்தி.

தென்கரைச் சூரலூர் என்ற கிராமம் தரிசாகவும் பாழ்பட்டும் கிடந்தபோது அவ்வூரைப் புதுப்பித்து குடியேற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளவும், அங்கு குடியேறும் மக்கள் அவ்வூரில் உள்ள நிலங்களில் பயிர் செய்துகொள்ளவும் அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்தான். வேளாண்மையின் விளைச்சலில் வருபவற்றில் இரண்டில் ஒரு பங்கை வரியாகக் கோயிலுக்குச் செலுத்த வேண்டுமென்று கூறி, கோயில் வருவாயைப் பெருக்கினான். இந்தச் செய்தியை மகாமண்டபத்தின் வடக்கு ஜகதியில் காணப்படும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

நீர்ப்பாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த நம் மன்னர்கள் நீர்ப்பாசனம் இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக அந்த வசதி செய்து தர, அணைகள் கட்ட ஆணை பிறப்பித்துள்ள செய்திகளும் இக்கோயில் கல்வெட்டுகளில் இருந்து கிடைக்கின்றன. இவ்வூரை ஆண்ட சுந்தர பாண்டிய மன்னன், சுக்ரீஸ்வரர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டிருந்த சூரலூரில் நீர்ப்பாசன வசதி செய்யவும் நொய்யாற்றில் கட்டப்பட்ட அணையையும் அந்நீர் பாயும் குளத்தையும் பாதுகாத்து ஒழுங்குபடுத்தும் பணியை பேரூர் நாட்டு வெற்றலூர் செம்படவன் பிள்ளையான் செய்வதற்கும் ஆணை பிறப்பித்துள்ளான். நீர்ப்பாசனத்தை நிர்வகிக்கும் முறை, கொங்குப் பாண்டியன் காலத்தில் சிறந்திருந்தது என்பதை இதன்மூலம் நாம் உணர முடிகிறது.

‘ஸ்வஸ்தீஸ்ரீ தண்டேஸ்வரன் ஓலைச் சாகரஞ்சூழ்
வையகத்துக் கண்டீஸ்வரன் கரும மாறாய்க
பண்டே அறஞ்செய்தான் செய்தான் 
அறங்காத்தான்
பாதம் திரும்பாமல் சென்னிமெல் வைத்து - 
அருளாலாதி
சண்டெஸ்வரன்னா தெசம் நம்பிள்ளை சுந்தர பாண்டிய தெவற்கு...
......தானத்தாற்கு ஏற நாயனார்சி பண்டாரத்துக்கு
சிலவறுப்பானாகவும் மீன் படுக்கும் பொதுக்
குளத்தில்
மீன் சிலவற படுக்குமளவும் தானத்தாற்கு 
நிச்சயித்தபடி 
கறிதவிர் கறியிட்டுப் பொதுவானாகவும் இவ்வூர்
நான்கெல்லையும் உள்பட அணையுங்......’

வெகு விரைவில் நாம் பெரிய நீர்ப்பற்றாக்குறைக்கு ஆட்படுவோம் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் எச்சரித்து வருகிறார்கள். அந்த எச்சரிக்கைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு நாம் இன்னும் நீர் நிலைகளை மாசுபடுத்தி, பாழ்படுத்தி வருகிறோம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்தக்குளங்களை உருவாக்கி, அவற்றைப் புனிதமாகக் கருதி, நம் அரசர்கள் பாதுகாத்து வந்த செய்தி எத்தனைப் பரவசமானது! இந்தக் கோயிலின் மகா மண்டபத்தின் தெற்குப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டு கூறும் செய்தி இது: இந்தக் கோயிலுக்குச் சொந்தமான சில நிலங்கள் அமுதுபடி முதலிய திருப்பணிகளுக்காக விடப்பட்டிருந்தன. ஆனால், இந்த ஊரின் குளம் பாழ்பட்டுக் கிடந்தது. 

அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுக் கிடந்தது. எனவே குளத்தை செப்பனிடவும், அந்நீர் பாயும் நிலத்தில் பயிர் செய்து கொள்ளவும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அமுதுபடி முதலியன செய்யவும் மன்னன் உத்தரவிட்டார். இவ்வாறு அமுதுபடிக்காக விடப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

‘இன்னாயிநாற்கு அமுதுபடிக்கும் திருநாள் படிக்கும்
திருப்பணிகளும் வெண்டும் வெஞ்சனாதிகளுக்கும்
திருமடை விளாகத்துக்கு மெற்கில் நல்லாற்றில் குளம்
அனாதி பாழாய்க் கிடந்தமையில் இக்குளமும்
இந்தக் குளத்தில் நீர் ஏறிப்பாயும் நிலமுற்றது
திருநாமத்துக் காணியாக குடுத்தொம்.’

தாயார் ஆவுடையம்மன் சந்நதியின் வடபுறக் குத்துக்கல்லில் உள்ள கி.பி. 1499ம் ஆண்டைச் சேர்ந்த அரசன் நஞ்சராய உடையார் காலத்துக் கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. இம்மன்னன், கோயில் பூஜைகள் சிறப்பாக தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் கோயிலின் வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று எண்ணினான். எனவே நான்கு பொன் நிலம் வாங்கி அந்நிலத்தில் இருநூறு தென்னை மரங்கள் வளர்த்து அதன் வருமானத்தைக் கொண்டு இக்கோயில் பூஜை செலவுக்கு பயன்படுத்திக்கொள்ள ஆணை பிறப்பித்தான்.



தமிழகத்திலேயே பண்டைய வணிகக் குழுக் களைப் பற்றிக் கூறும் கல்வெட்டு இக்கோயிலில்தான் உள்ளது. இந்த வணிகக் குழுக்களை கில்ட்ஸ் (நிuவீறீபீs) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். வணிகக் குழுவினர் பெருங்கா என்னும் இடத்தில் கூடி, குரக்குத்தளி ஆருடைய நாயனாரை வைகாசித் திருநாளில் எழுந்தருளச் செய்வதாக முடிவு செய்தனர். இதற்காகும் செலவுக்காக ஏற்றுமதி, இறக்குமதி, தலைச்சுமை போன்ற பண்டங்களுக்கு சுங்க வரி விதித்து அப்பணத்தைக்கொண்டு இத்திருநாள் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இப்பெருஞ் செய்தியைக் கூறும் பெருங்கல்வெட்டைப் பாருங்கள்:

‘வைகாசித் திருநாள் எழுந்தருளிவிப்பதாக 
பட்டிணப்பகுதி
கட்டிக் குடுத்த பரிசாவது; நான்கு திசை யேறு சாத்து
இறங்குசாத்து நடக்கும் சரக்குகளுக்கு மிக பொதி
ஒன்றுக்கு பணம் ஒரு மாவும் புடவைக் கட்டு 
ஒன்றுக்கு
பணம் இரண்டு மாவும் பாக்கு பொதி ஒன்றுக்கு
பணமரை மாவும் பசும்பை யொன்றுக்குப் 
பணமரை மாவும்
கழுதை மேல் வரும் பண்டங்....களுக்கு...

-இது போல நம் முன்னோர்கள் கோயிலை மையமாகக் கொண்டு மண்ணையும் மக்களையும் காக்க செய்த பல அற்புதமான காரியங்களின் மௌன சாட்சியாய் இருக்கின்றன கோயில் கல்வெட்டுகள்.

நன்றி: தினகரன்

No comments:

Post a Comment