Friday, November 30, 2018

சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே நேர்காணலில் திரு ஆர் பாலகிருஷ்ணன்

ஹரப்பா, மொஹஞ்சதரோ இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு (செப்டம்பர் 20, 1924) 94 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்பதை நிறுவ முடியும் என்கிறார் ஒடிஷா மாநில கூடுதல் தலைமைச் செயலரும் ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன்.
சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் The Pot Route: from Indus to Vaigai என்ற தலைப்பில் வியாழக்கிழமையன்று இது தொடர்பாக உரை நிகழ்த்திய ஆர்.பாலகிருஷ்ணன், தன் உரைக்குப் பிறகு பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து.
கே. சிந்துச் சமவெளி ஆய்வு முடிவுகள் வெளியாகி 94 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அந்த ஆய்வு முடிவென்பது தமிழ் வரலாற்று ஆய்வில் எவ்வளவு முக்கியமானது?
ப. 1924 செப்டம்பர் 20 என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்த நாகரிகம் குறித்த செய்திகள் வரும் முன்பாக நம்முடைய புரிதல் வேறு மாதிரி இருந்தது. இப்படி ஒரு நாகரிகம் இருந்ததே தெரியாது. அது தெரிந்த பிறகுதான் இந்திய வரலாற்றை வேறு மாதிரி பார்க்கும் பழக்கமே ஏற்பட்டது. ஆய்வு முடிவு வெளிவந்தபோதே இது திராவிட நாகரிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறதென அப்போதே சொல்லப்பட்டது. அதற்குப் பிறகும் பலரும் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். சாட்டர்ஜி, கிராஸ் பாதிரியார், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற பல ஆய்வாளர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆர். பாலகிருஷ்ணன்.
Image captionஆர். பாலகிருஷ்ணன்
இப்போது பல்துறைகளைச் சேர்ந்த ஆய்வுகள், அதில் கிடைத்த தரவுகள் மூலமாக இது ஒரு திராவிட நாகரிகமாக இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு உண்டு என்று சொல்வதையெல்லாம் தாண்டி, இது ஒரு திராவிட நாகரிகமே என்று சொல்லக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கே. இந்த ஆய்வு முடிவு வெளியாகும் முன்பாக இந்திய வரலாற்றைப் பார்ப்பது எப்படி இருந்தது, இந்த நாகரிகம் குறித்த முடிவுகள் வெளியான பிறகு எப்படி மாறியது?
ப. தரைக்குள் இப்படி ஒன்று இருந்தது தெரியாத காலகட்டதில் நம் நாகரிகத்தைப் பற்றிச் சொல்ல இலக்கியங்கள் மட்டுமே இருந்தன. அப்போது வெளிநாட்டு ஆய்வாளர்களால் படிக்கக்கூடிய வகையில் இருந்தது வடமொழி இலக்கியங்கள்தான். அதனால், இந்தியப் பண்பாட்டின் துவக்கத்தை வேதத்திலிருந்து துவங்கும் பழக்கம் இருந்தது. வேதகால நாகரிகத்திற்கு முன்பாக வசித்தவர்கள் பண்பாடற்றறவர்கள் போலவும் அதற்குப் பிறகுதான் பண்பாடு வந்ததுபோலவுமே வரலாறு அணுகப்பட்டது. ஆனால், 4,500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மிகப் பெரிய நகரம் இருந்தது, அது தரையில் புதைந்து கிடந்தது என்பது தெரிந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது.
கே. பானை ஓடுகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் குறித்து சில முடிவுகளுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். என்ன முடிவு அது?
ப. யானை சென்ற பாதையைவைத்து யானைத் தடத்தைக் கண்டுபிடிப்பதுபோல, இது பானைத் தடம். Silk route, Spice route என்றெல்லாம் இருப்பதைப் போல இது Pot Route என்பதை நாங்கள் முன்வைக்கிறோம். ஹரப்பாவில் கிடைத்த பானை வகைகளில் பெரும்பாலானவை கறுப்பு - சிவப்பு வண்ணம் கொண்டவை. ஆனால், கங்கைச் சமவெளிப் பகுதிகளில் கிடைத்தவை வண்ணம் தீட்டப்பட்ட பழுப்பு நிற மண் பாண்டங்கள். ஆனால், ஹரப்பாவுக்கு தென்பகுதியில் குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் கிடைப்பது எல்லாமே கறுப்பு - சிவப்பு வண்ணம் கொண்டவைதான். ஆனால், வரலாற்றாளர்கள், இதனை முதுமக்கள் தாழியோடு தொடர்புபடுத்தி பெருங்கற்கால மட்பாண்டங்கள் என்று ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள். அதற்கு மேல் ஏதும் நடப்பதில்லை. இப்போது நாங்கள் முதல் முறையாக ஒரு மேப்பை தயார் செய்து, painted greyware என்ற பழுப்பு நிற பானை ஓடுகள் கிடைத்த கங்கைச் சமவெளியைச் சுற்றி, கறுப்பு - சிவப்பு வண்ண பானைகளைப் பயன்படுத்தும் கலாசாரம்தான் சூழ்ந்திருந்தது; ஆகவே இந்த கறுப்பு - சிவப்பு வண்ணப் பானைகளைப் பயன்படுத்தும் கலாசாரத்தின் தொடர்ச்சியை ஆராய வேண்டுமென்ற கருத்தை முன்வைத்த்திருக்கிறோம்.
கே. பானை ஓடுகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என எப்படி நிறுவுவீர்கள்?
ப. முன்பு சொன்னதைப் போல இதுவும் ஒரு பல்துறை ஆய்வுதான். சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்ததைப் போன்ற பானை ஓடுகள் கீழடியிலும் கிடைத்திருக்கின்றன. பானைகள் புலம் பெயர்ந்து வந்திருக்க முடியுமா? ஒவ்வொரு பானைக்கு பின்னாலும் ஒரு பானை செய்பவர் இருக்கிறார். அவருடைய சமூகப் பின்புலத்தை ஆராய வேண்டும். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் பானை செய்பவர் என்னவாக அழைக்கப்பட்டிருப்பார் என்பது தெரியவில்லை. ஆனால், அவருடைய இடம் முக்கியமானதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இம்மாதிரி ஒரு நகரத்தில் செங்கல் சூளை வைத்திருந்தவர்கள், பானை செய்பவர்கள் ஆகியோருக்குத்தான் முக்கியத்துவம் இருந்திருக்கும். அதுபோன்ற ஒரு முக்கியத்துவத்தை பானை செய்பவர்களுக்குக் கொடுத்த இலக்கியம் சங்க இலக்கியம்தான்.
"சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே"படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சங்க இலக்கியத்தில் பானை செய்யும் குயவனை முதுவாய்க்குயவ என்று அழைக்கிறார்கள். அதாவது நீண்டகால அறிவைக் கொண்ட குயவர் என்று பொருள். இந்த நீண்டகால அறிவு என்பது எதைக் குறிக்கிறது? அதுதான் அந்த நாகரிகத்தின் ஆழம். அதேபோல முதுமக்கள் தாழி செய்யும் குயவரை கலம்செய் கோவே என்கிறார்கள். அதாவது பானை செய்பவரை தலைவன் என்று அழைக்கும் சமூகப் பண்பாடு அப்போது இருந்திருக்கிறது. இந்த சமூகப் பண்பை நாம் மறுக்க முடியாது. இந்த சமூகப் பண்பு வட மாநிலங்களில் உள்ள சமூகப் பண்புக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
குயவர்களுக்கு இருக்கக்கூடிய குலப் பெயர்கள், வம்சாவழிப் பெயர்கள், குடிப் பெயர்கள், சாமி பெயர்கள், கோவில் பெயர்கள் எல்லாமே அந்தப் பாதை நெடுக இருக்கிறது. பானை என்பது அந்தப் பானை மட்டுமல்ல. அந்த பானை, அதைச் செய்பவர் சார்ந்த சமூகம்.
கே. சிந்துச் சமவெளியில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த எழுத்துகளுக்கும் தமிழ்நாட்டில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த எழுத்துகளுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்திருக்கிறதா?
ப. நிறைய இடங்களில் இருந்திருக்கிறது. ஆங்கிலத்தில் grafitti என்பார்கள். அதாவது பானைகளில் இருக்கக்கூடிய கீறல்கள். இந்தக் கீறல்கள் எழுத்துகளாக மாறியிருக்கின்றன. இந்த எழுத்துக் கீறல் உள்ள பானை என்று சொன்னால், இந்தியாவில் கிடைத்த பானைகளில் 80 சதவீதம் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கிறது. எழுத்துகள் எழுதப்பட ஆரம்பித்ததே பானைகளிலாகத்தான் இருக்க முடியும். கஷ்டப்பட்டு கற்களில் எழுதியிருக்கலாம். ஆக, எழுத்து வரிவடிவம் ஆகியவை ஆரம்பித்ததே பானைகளில்தான். இம்மாதிரி எழுதுவது சிந்துச் சமவெளியிலும் தமிழகத்திலும் அதிகமாக இருக்கிறது. சங்க இலக்கியத்தில் இது குறிப்பிடப்படுகிறது. பீடும் பெயரும் எழுதி என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியாக பானைகளில் எழுதியது நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. அதற்குப் பிறகு தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதியது கிடைக்கிறது. இது ஒரு தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. இதைத்தான் நான் சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று சொல்கிறேன். சிந்துவெளி எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது சங்க இலக்கியம் பேச ஆரம்பிக்கிறது. சங்க இலக்கியம் பேசும் நிகழ்வுகள் எல்லாம் அப்போதைய நிகழ்கால நிகழ்ச்சிகள் அல்ல.
அவர்கள் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளை, ஆயிரம் ஆண்டுகளாக தம் சமூகத்திற்குள் கேட்டுவந்த கதைகளைத்தான் அவர்கள் கவிதையாக மாற்றுகிறார்கள். அதில் பேசப்படும் விஷயம் எல்லாம் பழைய விஷயம். அது பழைய நகரங்களோடு தொடர்புடையதாக இருக்கு. ஹரப்பாவுக்கென ஒரு இலக்கியம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்.
கே. ஹரப்பா, மொஹஞ்ச - தாரோ பகுதிகள் இந்தியாவின் வட மேற்கில் இருக்கின்றன. சங்க இலக்கியம் தென்னிந்தியாவில் தோன்றியது. இடைப்பட்ட நிலப்பரப்பில் என்ன நடந்தது?
ப. கலாசாரம் நிலங்களைக் கடந்து பயணிக்கும். ஆஃப்கானிஸ்தானில் சார்த்துகை என்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடம் மொஹஞ்ச-தரோவிலிருந்து வட மேற்கில் 1900 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. செல்வதற்கான பாதையே மிகக் கடினமான பாதை. அந்த சார்த்துகையில் லாபஸ் லாஜுலி என்ற விலை உயர்ந்த கற்கள் கிடைக்கும். அவற்றை வைத்து அணிகலன்களைச் செய்வதற்காக சிலர் அங்கே குடியேறினார்கள். அங்கேயும் இதேபோல பானைகளைச் செய்தார்கள். அதை இப்போது ஹரப்பிய நாகரிகம் என ஒப்புக்கொள்கிறோம். மொஹஞ்ச-தரோவுக்கும் கீழடிக்கும் இடையில் கிட்டத்தட்ட அவ்வளவு தூரம்தான் இருக்கும். இந்த இரு நிலப்பரப்பிற்கும் இடையில் தொடர்ச்சி இருக்கிறது.
மகாராஷ்டிரா, குஜராத் குயவர்களுடைய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் தென்னிந்திய குயவர்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆக பழக்க-வழக்க தொடர்பு இருக்கிறது, இலக்கியத் தொடர்பு இருக்கிறது. இவற்றைத் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது.
கே. சிந்துவெளி நாகரிகத்தில் பானை செய்பவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்ததாகச் சொன்னீர்கள். அவர்கள் சமூகத்தில் அடைந்த வீழ்ச்சியும் வேதகால நாகரிகத்தின் எழுச்சியும் சந்திக்கும் புள்ளி ஒன்றாக இருந்ததா?
ப. அப்படித்தான் தெரிகிறது. கன்வர்ஸ் என்ற ஆய்வறிஞர் இந்த கறுப்பு - சிவப்பு பானை செய்பவர்களும் பழுப்பு நிற பானை செய்பவர்களும் கங்கைச் சமவெளியில் சில நூறு கி.மீ. தூரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு வாழ்ந்திருந்தாலும் அவர்களுக்கு இடையில் எந்தப் பரிமாற்றமும் இருக்கவில்லை. ஐநூறு, அறநூறு ஆண்டுகளுக்குப் பிறகே இரு பண்பாடுகளும் சந்தித்துக்கொண்டன. ஒரு பக்கம் ஹரப்பா நாகரிகத்தில் பானை, செங்கல் செய்பவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்திருப்பார்கள் என்று யூகிப்பதற்கு அங்கு கிடைத்த தொல்பொருள் தடயங்கள் ஆதாரமாக இருக்கின்றன. அவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டார்கள். அவர்களே விழாக்களை அறிவித்தார்கள். அவர்களே பூசாரிகளாக இருந்தார்கள். அவர்களே தலைவன் என அறிவிக்கப்பட்டார்கள். இதற்கெல்லாம் சங்க இலக்கியத்திலும் நம்முடைய மட்பாண்டக் கீறல்களிலும் தடயங்கள் இருக்கின்றன. ஏதோ உயர்ந்த இடத்திலிருந்து கீழே வந்துவிட்டோம் என்ற உணர்வு இந்தியாவில் உள்ள எல்லாக் குயவர்கள் மத்தியிலும் இருக்கிறது.
"சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே"படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம், எழுச்சி, சரிவு, வீழ்ச்சி ஆகியவையும் பானை செய்வோரின் தோற்றம், எழுச்சி, சரிவு, வீழ்ச்சி ஆகியவையும் இணையாக நடந்திருக்கின்றன. எப்போதுமே ஒரு வருத்தம், இழந்தது குறித்த கோபம், மனத்தாங்களல் அவர்களுடைய வாய்மொழி மரபில் இருந்துகொண்டேயிருக்கிறது. இது ஒரு கூட்டு மனப்பான்மையாக இருக்கிறது. இதை அவர்கள் காலம்காலமாக கடத்திவந்திருக்கிறார்கள். இதை ஆராய வேண்டியிருக்கிறது. தொல்லியல் என்பது கிடைக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் இம்மாதிரியான வரலாற்று ஆய்வு எல்லாத் துறைகளையும் சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
கே. சிந்துவெளிக்கு அருகில் இருப்பது கங்கைச் சமவெளி. நீங்கள் குறிப்பிடும் வைகைச் சமவெளி வெகுதூரத்தில் இருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் ஏன் கங்கைச் சமவெளிக்குப் பரவவில்லை?
ப. சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்தபோது எல்லோருமே அங்கிருந்து தெற்கு நோக்கி வந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் அங்கேயே தங்கிவிட்டார்கள். சிலர் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கைச் சமவெளியை அடைந்தார்கள். அங்கிருந்த நாகரிகத்தின் மீது அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதேபோல கங்கைச் சமவெளி நாகரிகத்தின் தாக்கம் அவர்களிடமும் இருந்திருக்கும். புதிய மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். பண்பாட்டுத் தாக்கம் இருந்திருக்கும்.
ஆனால், தமிழ்நாடு மிகவும் வெளியில் இருப்பதால் அவர்கள் தங்கள் பண்பாட்டுக் கூறுகளைத் தக்கவைத்திருப்பார்கள். மற்ற இடங்களில் அது குறைவாக இருந்திருக்கும். அதனால் அடையாளம் காண்பது சிரமமாக இருக்கும். இந்தியாவில் யாரைச் சுரண்டிப் பார்த்தாலும் ஹரப்பாவின் கூறு ஏதாவது இருக்கும். யாரிடம் அதிகம் இருக்கும் என்பது விவாதத்திற்குரியது.
"சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே"படத்தின் காப்புரிமைNASA/USGS
Image captionசிந்து நாகரிகத்தின் நகர்ப்புற குடியேற்றங்கள் தற்போதைய வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பரவியுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாம் பெரிதாக அகழ்வாய்வுகளைச் செய்யவில்லை. திராவிடக் கருதுகோள்களின் அடிப்படையில் நாம் ஆய்வுகளைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அந்த ஆய்வை குஜராத், மகாராஷ்டிரா, சிந்து, கங்கைச் சமவெளி, வைகைச் சமவெளி என எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்.
கே. வைகைக் கரையில் ஏற்கனவே கீழடியில் அகழ்வு செய்யப்பட்டிருக்கிறது. வேறு எங்கு செய்ய வேண்டும்?
ப. வைகைக் கரையை ஒட்டிய 200 இடங்கள் அகழ்வாய்வு தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை. நான் ஏற்கனவே கீழ் - மேல் என்பது குறித்து சொல்லியிருக்கிறேன் (அதாவது கீழ் என்பது எப்போதும் கிழக்குப் பகுதியிலும் மேல் என்பது மேற்குப் பகுதியிலும் இருப்பதோடு, உயர்வானதாகவும் கருதப்படும். சிந்துவெளியிலும் இப்படித்தான் இருந்தது என்பது பாலகிருஷ்ணனின் வாதம்). இந்த இடங்களில் கீழ்-மேல் விகுதிகளோடு உள்ள இடங்கள், வைகைக் கரையோரமாக இருக்கும் அகழாய்வு சாத்தியமுள்ள இடங்களை நிச்சயம் ஆய்வுசெய்ய வேண்டும்.
இதில் இடங்களின் பெயர்கள் மிக முக்கியமானவை. அவை சாகாவரம் பெற்றவை. அவை நாகரிகத்தின் துவக்கத்திற்கும் மலர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சியமாக இருக்கின்றன. அவை சாவதில்லை.
கே. உங்களுடைய முந்தைய ஆய்வு சிந்துவெளியின் இடப்பெயர்கள் பற்றியது. அதில் நீங்கள் சொல்லியிருப்பது என்ன?
ப. மனிதன் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டேயிருப்பவன். இப்படி புலம்பெயர்வது என்பது மனிதனின் அடிப்படைகளில் ஒன்று. இப்படிப் புலம்பெயரும்போது அவன் எதை எடுத்துச்செல்ல முடியும்? அவன் தன் பூமியைத் தோண்டி எடுத்துச்செல்ல முடியாது. நினைவுகளைத்தான் எடுத்துச்செல்ல முடியும். தான் செல்லும் புதிய இடத்தில் அவன் தன் பழைய இடத்தை மீள் உருவாக்கம் செய்வான். அப்படிச் செய்யும்போது தன் பழைய ஊர்ப் பெயரை எடுத்துச் செல்வான். கடவுள் நம்பிக்கையை எடுத்துச்செல்வான். இப்படிப் புலம் பெயர்பவர்களோடு, இடப்பெயர்களும் புலம்பெயரும். அப்படி தமிழகத்திலும் சிந்துச்சமவெளியிலும் இருந்த இடப் பெயர்களை நான் என் ஆய்வில் ஒப்பிட்டிருக்கிறேன்.
கே. தற்போது வெளியாகியிருக்கும் ராகிகடி மரபணு ஆய்வு முடிவுகள், சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சுட்டிக்காட்டுவதைப்போல இருப்பதாகச் சொல்கிறது...


ப. ராகிகடி ஆய்வு முடிவுகள் இப்போதுதான் வெளியாகத் துவங்கியிருக்கின்றன. முறைப்படி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இந்த முடிவு தனிப்பட்ட முறையில் எனக்கு வியப்பு எதையும் தரவில்லை. கிட்டத்தட்ட எதிர்பார்த்த விஷயம்தான். முழுமையான முடிவை நானும் அவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

Thursday, November 29, 2018

ஐராவதம் மகாதேவன்: காலம் அரிக்காத கல்வெட்டு. ரவிக்குமார். மின்னம்பலம்

ஐராவதம் மகாதேவன்: காலம் அரிக்காத கல்வெட்டு ரவிக்குமார் மின்னம்பலம் 28 நவம்பர் 2018


ஐராவதம் மகாதேவன்: காலம் அரிக்காத கல்வெட்டு!

கைமாறு கருதாத உழைப்பாலும் அறிவுத் திறத்தாலும் தமிழ்க் கல்வெட்டியல் ஆய்வுகளில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அறிஞர் ஐராவதம் மகாதேவன்,

தஞ்சை மாவட்டத்தின் வரகூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த 'ராயர் கூட்டம் ' என்ற புகழ்பெற்ற குடும்பத்தினரின் வழி வந்தவர். அவரது முன்னோர்களில் ஒருவரான ஆனை பாகவதர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் அவையில் வித்வானாக இருந்தவர். அவரது தந்தை மருத்துவப் படிப்பை முடித்து பர்மாவில் பணிபுரிந்தபோது பிறந்தவர்தான் ஐராவதம் மகாதேவன். பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பிய அவரது பெற்றோர் திருச்சிராப்பள்ளியில் குடியேறினர். அங்கு பள்ளியில் பயிலும்போது அவரது உறவினர் ஒருவர் மூலமாக அவர் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார். தனது 12ஆவது வயதிலேயே சமஸ்கிருதத்தில் கவிதை எழுதும் அளவுக்கு அதில் தேர்ச்சியும் பெற்றார்.

தன்னைப் போலவே தனது மகனையும் மருத்துவராக்க விரும்பினார் மகாதேவனின் தந்தை. ஆனால் போதுமான மதிப்பெண் பெறாததால் பிஎஸ்சி பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்டார். அதிலும் போதிய மதிப்பெண் பெறாத காரணத்தால் மீண்டும் மருத்துவப் படிப்பு கை நழுவிச் சென்றது. எனவே சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். சட்டம் படித்து திருச்சிராப்பள்ளியில் வழக்கறிஞராகத் தொழிலைத் தொடங்கிய மகாதேவன் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று 1954ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். 1958ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று புது டெல்லிக்குச் சென்றார். அதுவே அவரது வாழ்க்கையின் திசையைத் தீர்மானிப்பதாக அமைந்துவிட்டது.

கல்வெட்டுத் துறையிலும் கலை வரலாற்று ஆய்விலும் முத்திரை பதித்த மாபெரும் ஆளுமையான சி.சிவராமமூர்த்தியை அங்குதான் அவர் சந்தித்தார். அவரிடம் கல்வெட்டியலின் ஆரம்பப் பாடங்களை அவர் கற்றார். 1961ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் நாட்டுக்குத் திரும்பியபோது சென்னையில் இருந்த மாபெரும் வரலாற்றறிஞரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியை சந்தித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்குத் தலைப்பு ஒன்றைப் பரிந்துரைக்குமாறு வேண்டினார். 'தமிழ்நாட்டில் ஏராளமான குகைகள் உள்ளன. அவற்றில் பிராமி எழுத்துக்களாலான கல்வெட்டுகள் இருக்கின்றன என்றார் நீலகண்ட சாஸ்திரி . அங்கிருந்த கே.வி.சுப்ரமணிய அய்யரோ 'அவையெல்லாம் தமிழ் எழுத்துகள். ஆனால் அவற்றை எவரும் படித்தறிய முடியவில்லை. அதை ஏன் நீங்கள் முயற்சித்துப் பார்க்கக் கூடாது ?' எனக் கேட்டார். அதுதான் தமிழ் பிராமி குறித்த ஆராய்ச்சியில் ஐராவதம் மகாதேவன் ஈடுபடக் காரணமாக அமைந்தது.

தமிழ் வரிவடிவத்தின் தோற்றம்

1960களில் ஆரம்பித்த அவரது தமிழ் பிராமி ஆராய்ச்சி பல்வேறு கட்டுரைகளாக வெளிப்பட்டுவந்தாலும் அது 2003ஆம் ஆண்டுதான் முக்கியமான ஒரு நூலாக வெளிவந்தது. கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களை ஆராய்ந்து அந்த நூலில் அவர் வெளியிட்டார். (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) குகைகளில் காணப்படும் கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழின் வரிவடிவத்தின் தோற்றம் குறித்த தீர்க்கமான முடிவுகளை அந்த நூலில் அவர் முன்வைத்துள்ளார். கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் கிபி நான்காம் நூற்றாண்டுக்கும் இடையிலான சுமார் அறுநூறு ஆண்டு காலத்தைச் சேர்ந்த எண்பத்தொன்பது கல்வெட்டுகளை ஆய்வு செய்து அந்த நூலில் வெளிப்படுத்தியிருந்தார். அந்தக் கல்வெட்டுகள் யாவும் தமிழ் பிராமி எழுத்துகளால் ஆனவை. அவற்றுள் எண்பத்து நான்கு கல்வெட்டுகள் சமணத்தைச் சேர்ந்தவை மீதமுள்ள ஐந்து கல்வெட்டுகள் எந்த மதத் தொடர்பும் இல்லாத, தனி நபர்கள் குறித்தவை. அவற்றில் ஒன்றுகூட வைதீக மதத்தைச் சேர்ந்ததில்லை. 'கிபி ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இருபத்தோரு கல்வெட்டுகளில் ஒன்றே ஒன்று மட்டும்தான் வைதீக மதத்தைச் சேர்ந்ததெனத் தெரிகிறது' என அவர் குறிப்பிட்டிருந்தார் (பக்கம் 128).


பௌத்தர்களும் சமணர்களும் தமிழ்ச் சமூகத்துக்கும், இலக்கியத்துக்கும் ஆற்றியுள்ள சேவையை ஐராவதம் மகாதேவனும் அந்த நூலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏறத்தாழ கிபி பதினாறாம் நூற்றாண்டு வரை அந்த சேவை நீடித்ததையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார் . தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களும்; சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பெருந்தொகை போன்ற காப்பியங்களும்; திருக்குறள், நாலடியார் போன்ற அற நூல்களும்; திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி போன்ற அகராதி நூற்களும் சமணர்களால் இயற்றப்பட்டன என்பதைத் தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கும் ஐராவதம் மகாதேவன் தமிழ் மொழிக்கு வரிவடிவம் கொடுத்தவர்கள் சமணர்களே என்று தமது ஆய்வு நிரூபணம் செய்கிறது என்றும் தெரிவித்திருந்தார். பிற்காலத்தில் சங்க இலக்கியம் செழிக்க அவர்கள் ஏற்படுத்தித் தந்த வரிவடிவமே உதவியது. மக்களிடம் கல்வி அறிவு பரவவும் அதுவே காரணமாயிற்று' எனவும் ஐராவதம் மகாதேவன் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார் (பக்கம் 139).

தமிழ் பிராமி மட்டுமல்லாது அவர் சிந்துவெளிக் குறியீடுகளைப் படித்தறிவதிலும், சிந்துவெளிப் பண்பாடு என்பது திராவிடப் பண்பாடுதான் என்பதை நிறுவியதிலும் மிகப்பெரும் சாதனையைச செய்திருக்கிறார். அந்த ஆர்வம் அவர் 1966ஆம் ஆண்டு டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றபோது உருவானது. தமிழ் பிராமி குறித்த கள ஆய்வுகள் பணியிட மாறுதலால் தடைபட்ட நிலையில் டெல்லியிலிருந்தபடியே வேறொரு ஆய்வில் ஈடுபட அவர் விரும்பினார்.

அப்போதுதான் தலைமைச் செயலக நூலகத்தில் ஹண்டர் என்பார் எழுதிய சிந்துவெளி எழுத்துகள் பற்றிய நூல் ஓன்று தற்செயலாக அவரது கையில் கிடைத்தது. அந்த நூலின் மூலமாக சிந்துவெளி எழுத்துக்களின் அடிப்படை அம்சங்களைக் கற்றுக்கொண்ட அவர், மத்திய தொல்லியல் துறை அலுவலகத்திலும் நேஷனல் மியூசியத்திலும் வைக்கப்பட்டிருந்த சிந்துவெளி முத்திரைகளை ஆராயும் வாய்ப்பைப் பெற்றார். அந்த நேரத்தில்தான் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இயங்கிவந்த ஜவகர்லால் நேரு நினைவு அறக்கட்டளை ஐராவதம் மகாதேவனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஃ பெல்லோஷிப் ஒன்றை வழங்க முன்வந்தது. சிந்துவெளி எழுத்துக்களைக் கணினி மூலமாக ஆராய்ச்சி செய்யுமாறு பொள்ளாச்சி மகாலிங்கம் அறிவுரை கூறியது மட்டுமின்றி அப்போது தொழில்நுட்பக் கல்விக்கான இயக்குனராக இருந்த வா.செ .குழந்தைசாமியிடம் அறிமுகமும் செய்துவைத்தார். அவர் தனது கட்டுப்பாட்டில் கிண்டியில் அமைந்திருந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த கணினி மூலமாக ஐராவதம் தனது ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து உதவிகள் அனைத்தையும் செய்தார். போதிய எழுத்துருக்கள் அக்காலத்தில் இல்லாத காரணத்தால் ஐராவதம் சிந்துவெளி எழுத்துக்கள் பற்றிய தனது ஆராய்ச்சியை நூலாக வெளியிட 1977ஆம் ஆண்டுவரை காத்திருக்க நேர்ந்தது.

சிந்துவெளி நாகரிகமும் பண்டைய தமிழரும்

சிந்துவெளிக் குறியீட்டுகளின் அடிப்படையில் அகத்தியர் குறித்த தொன்மத்தை அவர் மறுவிளக்கம் செய்திருக்கிறார். சிந்துவெளி நாகரிகத்தை தென்னாட்டு திராவிடத்தோடு இணைப்பதற்கு அகத்தியர் தொன்மம் ஒரு முக்கியமான ஆதாரம் என்பது அவரது கருத்து. மு.இராகவையங்கார் தனது வேளிர் வரலாறு என்னும் நூலில் வேளிருக்கும் யாதவருக்கும் பொதுவான முன்னோர்கள் அகத்தியரின் தலைமையில் குஜராத்தின் துவாரகையிலிருந்து தென் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்ததை விவரித்திருக்கிறார். தொல்காப்பியத்துக்கு உரை எழுதும்போது நச்சினார்க்கினியரும் இரண்டு இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் . வேளிர் குலத்தைச் சேர்ந்த 18 வேந்தர்களையும் 18 குடும்பங்களையும் அகத்தியர் அழைத்துவந்து தென் பகுதியில் குடியமர்த்தியதாகவும், அவர் தென் கோடியில் இருக்கும் பொதிகை மலைக்குச் சென்று தங்கியதாகவும் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார் என ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டுகிறார். சிந்துவெளி குறீயீடுகளில் அடிக்கடி காணப்படும் கமண்டலம் போன்ற குறியீட்டை கமண்டலத்திலிருந்து பிறந்ததாகச் சொல்லப்படும் முனிவர்களின் தொன்மங்களோடு பொருத்திப் பார்த்து, வசிஷ்டரும் அகத்தியரும் கமண்டலத்திலிருந்து பிறந்தவர்கள் என ரிக் வேதத்தில் கூறப்பட்டிருப்பதையும், அகத்தியர் ' கும்ப சாம்பவர்' என அழைக்கப்படுவதையும் இணைத்து அகத்தியரின் தொன்மத்துக்கு சிந்துவெளிக் குறியீட்டுகளின் அடிப்படையில் புது விளக்கம் தந்திருக்கிறார். காவடி சுமந்து செல்வது போன்று பொறிக்கப்பட்டுள்ள உருவங்களை பொறை, இரும்பொறை; ஆதன் பொறையன்; எவ்வி எனப் படித்திருப்பது அவருக்கிருக்கும் ஆழ்ந்த மொழி அறிவை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

தமிழ் பிராமி ஆராய்ச்சியில் கே.வி.சுப்ரமணிய அய்யரும், தி.நா.சுப்பிரமணியமும் செய்த முன்னோடிப் பணிகளை எப்படி ஐராவதம் மகாதேவன் வளர்த்தெடுத்தாரோ அப்படியே சிந்துவெளி எழுத்துகளைப் படித்தறிவதில் ஹண்டரும் அஸ்கோ பர்போலாவும் செய்த பணிகளை அடுத்த கட்டங்களுக்குக் கொண்டுசென்றார். இந்த இரண்டு துறைகளிலும் எவராலும் புறக்கணிக்க முடியாத ஆய்வுகளை ஐராவதம் மகாதேவன் செய்திருக்கிறார். 'சோழர் வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்கிற எவரும் எப்படி நீலகண்ட சாஸ்திரியின் ஆய்வைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாதோ அப்படி தமிழ் பிராமி , சிந்துவெளி எழுத்துகள் பற்றிய ஆய்வுகளில் ஐராவதம் மகாதேவன் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்காமல் எவரும் அந்தத் துறைகளில் ஆய்வு மேற்கொள்ள முடியாது' என அறிஞர் ஒய்.சுப்பராயலு கூறியது மறுக்க முடியாத உண்மையாகும்.

பிடிப்பும் உறுதியும்

ஐராவதம் மகாதேவன் தனது ஆய்வில் எப்படி பிடிப்போடு இருந்தாரோ அப்படித் தனது ஆய்வு முடிவுகளில் உறுதியாக இருந்தார். பழந்தமிழ் எழுத்துக்களை தமிழ் பிராமி என அழைப்பது பொருத்தமற்றது அதைத் தமிழி என்றோ அல்லது தொன்மை தமிழ் எழுத்து என்றோ அழைக்கலாம் எனக் கல்வெட்டியல் அறிஞர்கள் நடன.காசிநாதன், புலவர் இராசு, முனைவர் இராசவேலு முதலானவர்கள் வலியுறுத்தி வந்தாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. தமிழ் பிராமி என்ற பெயர் லலிதா விஸ்தாரம் என்ற நூலிலிருந்துதான் எடுத்தாளப்பட்டது. அந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் பிராமி என்ற சொல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியலில் தமிழி என்ற சொல்லும் உள்ளது. அதாவது பிராமி என்பது வேறு, தமிழி என்பது வேறு என்பதைத்தான் அது காட்டுகிறது. தமிழ் பிராமி என அழைக்கும்போது அசோகன் பிராமியே இங்கு வந்ததுபோல ஒரு எண்ணம் ஏற்படுகிறது . 'அப்படி அசோகன் பிராமி என்பது இங்கே வந்திருந்தால் அது வந்த பிறகு தமிழி என்பது போய்விட்டதா? அல்லது பிராமியே தமிழி என்று அழைக்கப்படுகிறதா?' என்ற கேள்விகளை கே.வி. ரமேஷ், நாகசாமி போன்ற கல்வெட்டியல் அறிஞர்கள் ஏற்கனவே எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் எந்த விமர்சனத்துக்கும் கவலைப்படாமல் தொடர்ந்து பழந்தமிழ் எழுத்துக்களை தமிழ் பிராமி என்றே அவர் குறிப்பிட்டுவந்தார்.

ஐராவதம் மகாதேவனின் பிடிவாதத்துக்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் எல்லாமே கிமு 3ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவையே என அவர் காலக் கணிப்பு செய்துவந்தார். 2011ஆம் ஆண்டு பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த நெல்மணிகளை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து அது கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தபோது அந்த அகழ்வாய்வை நடத்திய பேராசிரியர் கா.இராஜன் அவர்களிடம் நான் ஒரு நேர்காணலைப் பதிவு செய்தேன். அப்போது ஐராவதம் அவர்களின் காலக் கணிப்பு குறித்தும் கேட்டேன். "இந்தியாவில் அசோகனுக்கு முந்தைய வரிவடிவங்கள் கிடைத்திருக்கின்றன. பிராகிருத வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. பிராமி வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் அகழ்வாய்வு மேற்கொண்டபோது கிடைத்த வரிவடிவம் கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், மற்றைய தொல்லியல் அறிஞர்கள் அதை ஒரே ஒரு சான்றுதான் கிடைத்திருக்கிறது எனச் சொல்லி ஒதுக்கிவிட்டார்கள். அதன் பிறகு நாகசாமி கொற்கையில் அகழ்வாய்வு செய்து அங்கு கிடைத்த வரிவடிவத்தை கிமு 785 என்று கண்டறிந்தார். அதையும் ஒரே ஒரு சான்றுதான், இன்னும் பல ஆதாரங்கள் வேண்டும் என்று சொல்லி ஒதுக்கிவிட்டார்கள். அதைப்போல சத்தியமூர்த்தி ஆதிச்சநல்லூரிலே அகழ்வாய்வு செய்து கிமு 1300 எனச் சொன்னார். அவரே கேரளாவிலிருக்கும் மாங்காட்டில் ஆய்வுசெய்து அதைக் கிமு ஆறாம் நூற்றாண்டு எனச் சொன்னார். அதையும் ஏற்க மறுக்கிறார்கள். 'நிறைய சான்றுகள் வேண்டும் அப்போதுதான் ஏற்க முடியும்' என்ற வாதம் பொருத்தமற்றது" எனப் பேராசிரியர் கா.இராஜன் குறிப்பிட்டார்.

அத்துடன்,"ஐராவதம் மகாதேவன் அவர்கள் சான்றுகள் அதிகம் கிடைக்காத காலத்தில் தமிழ் பிராமியின் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு எனச் சொல்லிவந்தார். ஆனால், அவரே ஆதாரங்கள் அதிகம் கிடைக்க ஆரம்பித்த பிறகு கிமு இரண்டாம் நூற்றாண்டு என இன்னும் காலத்தைக் குறைத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இது ஒரு மாறுபட்ட கருத்தாகத் தெரிகிறது. அதை அப்படியே ஏற்றுக்கொண்டாலும்கூடத் தமிழகம் முழுவதும் ஒரே காலக்கணிப்பு எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை" என வருத்தத்தோடு அவர் சொன்னார்.

தமிழ்க் கல்வெட்டியல் ஆய்வை மேலும் செழுமைப்படுத்தும் நோக்கம் கொண்டவையாகவே ஐராவதம் மகாதேவனின் இந்தப் பிடிவாதமான நிலைப்பாடுகளை நாம் கருத வேண்டும். அவர் வலியுறுத்தியதுபோல எண்ணிக்கையில் அதிகமான ஆதாரங்கள் தற்போதைய அகழ்வாய்வுகளில் கிடைத்துவருகின்றன. எனவே இங்கே கிடைக்கும் எழுத்துகள் தமிழி எழுத்துகள்தான் என்பதையும், அவை அசோகன் பிராமியைக் காட்டிலும் காலத்தால் முந்தியவை என்பதையும் இந்திய வரலாற்று அறிஞர்கள் ஏற்கின்ற காலம் தொலைவில் இல்லை. அப்படி ஏற்கப்பட்டு இந்திய வரலாறு தமிழ் நாட்டில் தொடங்கி திருத்தி எழுதப்படுவதற்கான பலமான அடித்தளத்தை அமைத்துவிட்டுப் போயிருக்கிறார் ஐராவதம் மகாதேவன். அந்த மகத்தான அறிஞருக்குத் தமிழ்ச் சமூகம் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

(கட்டுரையாளர்: முனைவர் ரவிக்குமார் அரசியல், கலை, இலக்கிய விமர்சகர். மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். இவரைத் தொடர்புகொள்ள:adheedhan@gmail.com)