Showing posts with label Archaeology. Show all posts
Showing posts with label Archaeology. Show all posts

Monday, August 3, 2015

வந்தவாசி அருகே வெண்குன்றம் மலையில் சமணர் படுக்கைகள் - கோ.ஜெயக்குமார்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiShHBN1Ks-D-DkDkNYhfzBhyphenhyphenxaY6i8VUPwc9USvVWSuCn077hfRrFY12Sat7R0w4yTq3VZYQqHs30iOKZ-_8eKsooSDzG8MAwEnhBE3FWewVhtRcqcN1YOVBXtY5MJhV1DTUsHKYcq6AQ/s1600/vandavasi1.jpg 



வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலைப்பகுதியில் சமணர் படுக்கைகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் சிலர் தெரிவித்தார்கள். இதுகுறித்து மேலும் விசாரித்தப்போது பல புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன. வந்தவாசி-செய்யாறு சாலையில் வந்தவாசியிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள வெண்குன்றம் மலையில் கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டோம். இதில் அம்மலையில் சமணர் படுக்கைகள் இருப்பது தெரியவந்தது.

இந்த மலையில் உள்ள சமணப்படுக்கைகள்  சுமார் 2000 ஆண்டுகளுக்கும் தொன்மையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மலையில் பெருங்கற்காலத்திற்குரிய கல்வட்டங்களும், கற்காலக் கருவிகள் செய்யப்பட்டதற்கான மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைக் கொண்டு மலையின் கிழக்குப் பகுதியை ஆய்வுசெய்தபோது அங்கு படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCn8QX5ejZchINLmKqLM4juPUSm1CDzAtHexXqjLWz-6FCGgvpyql7Ewt8F9vjYHQIV8YYcEUrNO8sMXu0nA850BshrxM_F-k58uyxd-SEoX9VdFxOsIw1ZH_Ykds22VX7_We4QS84xSM/s1600/krish.jpg

சாய்வான அமைப்பை கொண்டுள்ள சமணப் படுக்கைகள் கிழக்கு நோக்கி உள்ளன. இந்த படுக்கை தளத்தின் அகலம் 170 செ.மீ., நீளம் 150 செ.மீ. ஆக உள்ளது. இதை பார்க்கும்போது 4 முதல் 5 துறவிகள் உறைவிடமாக கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZTudPgntcPQqdpZMyvUsEoo4aHlE5G2QHJLgFev-mhtkyDKd_quoOqTx6O5ewZwkKzlPKboB2r8F3mlp1pYT0RlEWHbOmuZj74lGqOmFIXVJxqEVAYGfRHqR1J0IXmWEHlln5g5luCUA/s300/images6.jpeg

இந்த பாறையில் தரைப்பகுதியை துறவிகள் இயற்கையாகவே பயன்படுத்தி உள்ளனர். இந்த பயன்பாட்டினால் பாறையின் தரைப்பகுதி நன்றாக தேயந்திருப்பதை பார்க்கும்போது துறவிகள் பல நூற்றாண்டுகள் இதை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று உணர முடிகிறது.

கீழ்த்தளப் பாறையின் நடுப்பகுதியில் 33 செ.மீ. நீளமும், 21 செ.மீ.அகலமும் கொண்ட ஒரு செவ்வக் குழி காணப்படுகிறது. இதற்கு தெற்காக இப்போது விளையாடும் ஆடுபுலி ஆட்ட கட்டம் காணப்படுகிறது. இதுபோன்ற கட்டங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் இதர பகுதிகளில் உள்ள படுக்கைகள் போலவும் காணப்படுகிறது.

இம்மலையில் காணப்படும் பாறைகளின் மேல் பல இடங்களில் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுப் பாறை மீது மழை, காற்று, வெயில் படுவதால் சிதைவுகள் ஏற்பட்டுள்ளன. கல்வெட்டின் மீது ஊரார்கள் தங்கள் பெயரையும் செதுக்கி வைத்துள்ளதால் கல்வெட்டின் தகவலை முழுமையாக அறிய முடியவில்லை.


சில கல்வெட்டுகளை ஆய்வுசெய்தபோது தமிழ் (பிராமி) வடிவ  எழுத்துகளையும், வட்டெழுத்துகளையும் உடையதாக உள்ளன. இக்குன்றை சார்ந்த பிற பகுதிகளில் தாழ்வான குகைத்தளங்கள் காணப்படுகிறது. படுக்கை குன்றுக்கு தெற்கில் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த ஏரிப்பகுதியில் முதுமக்கள் தாழி புதைக்கப்பட்டுள்ளன.

இந்த தாழிகள் மழை, வெள்ளத்தால் சிதைவு ஏற்பட்டு உடைந்து காணப்படுகின்றன. எனவே இந்த ஏரிப்பகுதியில் துறவிகள் இறந்தபிறகு இதுபோன்ற தாழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வு மேற்கொண்டால் தமிழர் பண்பாட்டுக்குரிய அரிய செய்திகள் வெளிப்படும் என்பதில் அய்யமில்லை.
வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீதவளகிரி என்று அழைக்கப்படும் மலை உள்ளது. இம்மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரர் கோயில் உள்ளது. மேலும் விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையார் கோயில்களும் உள்ளன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLiZWV_iJ6D2CJyNDpSgNmBmcCTFC8cATEnAE9jHQgF1tk_QW2b9P92NcxVlMysMRi9F1lbyoUmt1CGvejcLcGgsAChwJyeB_ZSVtfGPTgfhwNgp0ADEU9Bxoxgc42zLAWijQIgBroqkWL/s1600/1.bmp

இந்தக் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலை மீது ஏறிச்சென்று இறைவனை வழிபடுகின்றனர். பின்னர் மாலை 6 மணிக்கு ஸ்ரீதவளகிரீஸ்வரர், ஸ்ரீவிநயாகர் ஆலயங்களில் தனித்தனி கொப்பரைகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

To Refer Original Click:
நன்றி கோ.ஜெயகுமார்.  தமிழ்மணம். ப்ளாக்ஸ்பாட்

Monday, January 12, 2015

தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி வினோத் ராஜன் வர்சுவல் வினோத்

Arachalur Inscription Photo-courtesy  The Hindu

தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி வினோத் ராஜன் வர்சுவல் வினோத்
மார்ச் 5, 2011


zha_tamil_correctஇந்தியாவின் பண்டைய இலக்கிய மொழிகளுள் ஒன்று தமிழ் மொழி. திராவிட மொழிகளிலேயே மிக முந்தைய இலக்கிய படைப்புகள் நிகழந்தது தமிழில் தான். பண்டைக்காலத்தில் வடபுலத்து சமஸ்கிருத பிராகிருத மொழிகளுக்கு இணையாக இலக்கியம் சமைக்கப்பெற்றதும் தமிழ் மொழியில் தான். தமிழ் இவ்வாறு தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் முக்கிய பங்கு அதன் எழுத்தும் வகித்தது.
 
ஒரு மொழியை நிலைநிறுத்த எழுத்து என்பது என்றுமே மிகவும் அத்தியாவசியமானது. எழுத்தில்லாத மொழி நிலைப்பது கடினம். மொழியினை போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு இட்டுச்செல்லக்கூடியது எழுத்து மட்டுமே. எழுத்தற்ற மொழி மிக விரைவிலேயே சிதைவுக்கு உள்ளாகி உருத்தெரியாமல் போய் விடும். இலக்கணம் சமைக்கவும் இலக்கியம் படைக்கவும் எழுத்து முக்கியம். இன்று எழுத்துமுறை இல்லாது இருக்கும் மொழிகள் அனைத்தும் இலக்கியமற்ற திருத்தம்பெறாத மொழி எழுத்துமுறைகள் பலவாறாக வகைப்படுத்தப்படுகிறது. உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்யெழுத்துக்கள் என எழுத்துக்களை வகுக்கும் எழுத்துமுறை “அபுகிடா” என்று அழைக்கப்படுகிறது. இந்திய மற்றும் சிங்கள, தாய், கம்போடிய, லாவோ முதலிய தெற்காசிய-தென்கிழக்காசிய எழுத்துமுறைகள் அனைத்தும் இந்த வகையின் கீழ் வரும். தமிழ் எழுத்துமுறையும் அபுகிடா வகையை சார்ந்ததே.

சிந்து சமவெளி எழுத்துக்கள்

இந்தியாவில் மிகவும் பழமையாக கிட்டக்கூடிய எழுத்துக்கள் சிந்துசமவெளி எழுத்துக்கள். ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. சிந்து சமவெளி எழுத்துகளின் மொழி இந்தோ-ஆரியம் என்றும், பழந்தமிழ் என்றும், முண்டா மொழிக்குடும்பத்தை சார்ந்தது என்றும் இஷ்டத்திற்கும் கருத்துக்கள் விரவி கிடக்கின்றன. பார்க்கப்போனால், சிந்து சமவெளி எழுத்துக்கள் உண்மையான எழுத்துமுறையா அல்லது வெறும் குறியீடுகளா என்பது கூட இன்னும் முழுமையான ரீதியில் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு நிறுவப்படவில்லை.


பிராமி

சிந்துசமவெளி எழுத்துக்களுக்கு பிறகு, அசோகர் காலத்தில் 300 BCE அளவில் இந்தியா முழுதும் தொல்லியல் நிபுணர்களால் பிராமி  என்றழைக்கப்பெறும் எழுத்துக்களில் பல்வேறு ஸ்தூபிகள், கல்வெட்டுகள் உருவாகின்றன. இந்தியா முழுதும் பிராகிருத மொழியினை பிராமி எழுத்துக்களிலியே அசோகர் கல்வெட்டுகளில் பொறிக்கிறார். அந்த பிராமியே பல்வேறு பிரதேச வேறுபடுகளால், திரிந்து, பல்வேறு உருபெற்று நவீன இந்திய எழுத்துமுறைகள் உருவாகின. அசோகரின் பிராமி எழுத்துமுறை அரமேய எழுத்துமுறையின் தாக்கத்தில் உருவானது என்று பொதுவாக கருதப்படுகிறது.
 
Brahmi_asoka_article
அசோகரின் அலஹாபாத் ஸ்தூபி கல்வெட்டு

brahmi_grantha_transcription

தே³வாநம்ʼ பியே பியத³ஸீ லாஜா ஹேவம்ʼ ஆஹா
அம்ʼநத அகா³ய த⁴ம்ʼம காமதாய அகா³ய பல […]

சங்க காலத்திலேயே ஜைன மதமும் பௌத்த மதமும் தமிழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, நிலைபெற்றுவிட்டன. இவ்விரு மதங்களுள் தமிழகத்தில் முதலில் ஸ்தாபனம் செய்யப்பட்ட்து ஜைன மதமாகத்தான் இருக்க வேண்டும். (சமண [ < சிரமண ] என்பது பௌத்த-ஜைன மதங்களை ஒன்றுசேர குறிக்கூடிய சொல், தமிழகத்தில் ஜைன சமயத்தை மட்டும் குறிப்பதில் இருந்தே, சிரமண சமயங்களில், முதலில் நுழைந்த்து ஜைன சமயம் என்று யூகிக்கலாம்).
அவ்வாறு ஜைன சமயத்தை வடநாட்டில் இருந்து தமிழகத்தில் ஸ்தாபனம் செய்யவந்த ஜைன முனிவர்களும் ஆச்சாரியர்களும் வடநாட்டில் வழக்கில் இருந்து பிராமி எழுத்துமுறையை தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக கருதப்படுகின்றது. ஜைனர்களும் பௌத்தர்களும் பொதுவாகவே மக்கள் மொழியில் போதிப்பவர்கள். எனவே, தமிழில் தங்களுடைய போதனைகளை வெளிப்படுத்த வேண்டி, பிராமியை தமிழுக்கு கொண்டுவந்திருக்க வேண்டும். ஆரம்ப கால தமிழ் பிராமி கல்வெட்டுகள் பெரும்பாலும் ஜைன முனிவர்களின் குகைகளில் காணப்படுவது இக்கருத்துக்கும் வலுசேர்ப்பதாக உள்ளது.

தமிழ் பிராமி

அவ்வாறு அவர்கள் கொண்டு வந்த பிராமி எழுத்துமுறை தமிழுக்குரியதாக இல்லை. பிராகிருதத்தின் ஒலியியலும் தமிழின் ஒலியியலும் வேறானவை. தமிழில் கூட்டெழுத்துக்கள் அதிகம் கிடையாது, சொல்லிறுதி தனிமெய்களும் அதிகம். பிராகிருத்ததில் மகரத்தை தவிர்த்து வேறு சொல்லிறுதி மெய்கள் வருவதில்லை. அதனால் அசோக பிராமியில் தனி மெய்யினை (க், ங் முதலியவை) குறிக்க இயலாது, மெய்யெழுத்துக்கூட்டுகளை வேண்டுமென்றால் கூட்டெழுத்துக்களாக எழுத இயலும் (உதாரணமாக, க்ய, க்த ஆகியவற்றை எழுதலாம், ஆனால் க் என்ற தனி மெய்யை எழுத முடியாது) .  எனவே, பிராமியை தமிழுக்கு ஏற்றார்போல் செய்ய பல்வேறு முயற்சிகள் நிகழ்ந்தன.
பிராகிருதத்தில் இல்லாத தமிழுக்குரிய ற,ழ,ன,ள முதலிய எழுத்துக்களுக்கு வடிவங்கள் உருவாக்கப்பட்டன, எ, ஒ என்ற குறில் எழுத்துக்களை ஏகார, ஓகார எழுத்துக்களின் மீது புள்ளியினை வைத்து உருவாக்கினர். [பிராகிருதத்தில் எ, ஒ கிடையாது] (தமிழில் எ, ஒ’விற்கு புள்ளி வழக்கம் வீரமாமுனிவர் காலம் வரை நீடித்தது) தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்கள் பொதுவாக கைவிடப்பட்டன. அசோக பிராமியின் கூட்டெழுத்து முறையும் கைவிடப்பட்டது.
தமிழ் பிராமி மூன்று கட்டங்களை உடையாதாக அறியப்படுகிறது, முற்கால தமிழ் பிராமியில், எழுத்தில் உள்ளார்ந்த அகரம் கிடையாது. ஆகார’க்குறி அகரம், ஆகாரம் இரண்டையும் குறித்த்து. இடைக்கால தமிழ் பிராமியில், ஆகாரக்குறி நிலை பெற்றது. அனால், ஒரு எழுத்து மெய்யா, அல்லது அகர உயிர்மெய்யா என்ற தெளிவு இருக்காது. பிற்கால தமிழ் பிராமியில் மெய்யெழுத்துக்களையும் (மற்றும் எகர ஒகரங்களையும்) குறிக்க புள்ளி உருவாக்கப்பட்ட்து அதாவது, ”நிகழ்காலம்” என்ற சொல் பின்வாறாக எழுதப்பட்டிருக்கும்:
முற்கால முறை : நிகாழகாலாம
இடைக்கால முறை : நிகழகாலம
பிற்கால முறை : நிகழ்காலம்

300 – 400 CE வரை தமிழ் பிராமியில் எழுதப்பட்டு வந்தது,

தொல்காப்பியம் புள்ளியை எகர ஒகரங்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் குறிப்பிடுவதில் இருந்து, தொல்காப்பிய காலத்தில் புள்ளி வழக்கில் வந்திருக்க வேண்டும்.
 
pugalur_tamil_brahmi_inscription
2ஆம் நூற்றாண்டு CE – புகழூர் தமிழ் பிராமி கல்வெட்டு

உள்ள உரை:
கொஆதன செலலிருமபொறை மகன  
பெருஙகடுஙகொன மகன ளங 
கடுஙகொ ளஙகொ ஆக அறுததகல  

புள்ளியோ, எகர ஏகார, ஒகர ஓகார வேறுபாடோ கல்வெட்டில் இல்லாததை கவனிக்கவும். இகரமும் விடுபட்டுள்ளது

திருந்திய உரை:
கோஆதன் செல்லிரும்பொறை மகன் 
பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்
கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்தகல்

முசிறி – தமிழ் பிராமி  எழுத்துக்கள் – 2ஆம் நூற்றாண்டு பொது.சகாப்தம் 
 
 brami-amana 

”அமண” (< சமண) என்று பானையில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள். ( அதற்கு அடுத்து இருக்கும் இரண்டு வடிவங்கள்- சித்திரக்குறியீடுகள்). பழந்தமிழ் துறைமுகமான முசிறியில் [இன்றைய கேரளாவின் எர்ணாகுளத்தில் “பட்டணம்”] இது கிடைத்துள்ளது. 2ஆம் நூற்றாண்டளவிலேயே ஜைன மதம் சேர நாட்டில் செல்வாக்குடன் திகழ்ந்தது என்பதை இதன் மூலம் அறியலாம்.
 
வட்டெழுத்து

பிறகு ஓலைச்சுவடியில் எழுதுவதற்கு வசதியாக தமிழ் பிராமி வட்ட வடிவமாக உருமாற துவங்கியது. இந்த காரணத்தினால் இக்காலக்கட்டத்து தமிழ் எழுத்து வட்டெழுத்து என அழைக்கப்படுகிறது. வட்டெழுத்து உருவான அதே கால கட்டத்தில், வடமொழி எழுதுவதற்காக பிராமியில் இருந்து பல்லவ கிரந்தம் என்ற எழுத்து பல்லவர் காலத்தில் தோன்றியது. வட்டெழுத்தும் பல்லவ கிரந்தமும் ஒரே காலக்கட்டத்தில் தோன்றியவை.
ஐந்தாம் நூறாண்டில் இருந்து 11ஆம் நூற்றாண்டு வரை தமிழை எழுத வட்டெழுத்து பயன்பட்டது. 7ஆம் நூற்றாண்டு வரை வட்டெழுத்து மட்டுமே, தமிழை எழுத பயன்பட்டது. அதன் பின்னர் அதன் பயன்பாடு படிப்படியாக குறைந்து. பிறகு நவீன தமிழ் எழுத்துக்களின், மூலமான பல்லவ-தமிழ் எழுத்துக்களால் முழுமையாக தமிழ் எழுதப்பட துவங்கியது. 11ஆம் நூற்றாண்டு வரை மட்டுமே தமிழ் எழுத பயன்பட்டாலும், 19ஆம் நூற்றாண்டு வரை கேரள தேசத்தில் மலையாள மொழியினை எழுத பயன்பாட்டில் இருந்தது. வட்டெழுத்தின் இன்னொரு வடிவமான கோலெழுத்து முறையும் மலையாளத்தை எழுத நீண்ட காலம் வழக்கில் இருந்தது.
வட்டெழுத்தில் புள்ளியின் பயன்பாடு நிச்சயமாக காணப்படும். அதனால், எகர ஒகரங்களும் தெளிவாக குறிக்கப்பெறும். ஒரே விஷயம் ப’கர வ’கர வேறுபாடுகள் அவ்வளவு தெளிவாக இருக்காது, இரண்டும் மிகவும் ஒத்த வடிவங்களை பெற்றிருக்கும்.

vatteluttu_inscription_corrected


மஹேந்திர பல்லவர் காலத்து நடுகல்லில் வட்டெழுத்து 

கோவிசைய மயேந்திர 
பருமற்கு முப்பத்திரண்டா 
வது பொன்மோதனார் சே 
வகன் வின்றண்[வ]டுகன்
புலி குத்திப் பட்டான் 
கல்
 
பல்லவ தமிழ்

பல்லவ கிரந்தத்தை பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா ? பல்லவ கிரந்தத்தை அடிப்படையாக கொண்ட எழுந்த பல்லவ-தமிழ் எழுத்துக்களும் அதே 7ஆம் நூற்றாண்டளவில் தமிழை எழுத பிரயோகிக்கப்பட ஆரம்பித்த்து. பல்லவ கிரந்தத்தில் இல்லாத ற,ழ,ன போன்றவை வட்டெழுத்தில் இருந்து கடன்பெற்று எழுதப்பட்டன. மகரமும் லகரமும் கூட வட்டெழுத்தை அடிப்படையாக கொண்ட வடிவத்தை பெற்றிருந்தன.
இந்த காலக்கட்டங்களில், அதாவது 7ஆம் நூற்றாண்டில் இருந்து, தமிழ் இரண்டு எழுத்துமுறைகளில் எழுதப்பெற்றது. பல்லவ-சோழ ராஜ்யமாக இருந்த வட தமிழகத்தில் பல்லவ எழுத்துக்களிலும் பாண்டிய ராஜ்யமாக இருந்த தென் தமிழகத்தில் வட்டெழுத்திலும் எழுதப்பட்டன.
11 ஆம் நூற்றாண்டளவில் வட்டெழுத்துமுறை முழுமையாக கைவிடப்பட்டு, தமிழ் முற்றிலும் பல்லவ எழுத்துக்களில் எழுதப்பட ஆரம்பித்த்து.
நம்முடைய தற்கால தமிழ் எழுத்துக்கள் இந்த பல்லவ எழுத்துமுறையில் இருந்து தோன்றியதே.
பல்லவ தமிழ் எழுத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. புள்ளி குறிக்கப்பெறவே இல்லை. நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்களிலும் கூட புள்ளியின் பயன்பாட்டை ஏட்டளவில் குறித்தாலும் ஓலைச்சுவடிகளிலோ கல்வெட்டுகளிலோ புள்ளியை காண இயலாது. இதற்கு புள்ளியிட்டால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும் என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதனால், எகர ஏகார ஒகர ஓகார வேறுபாடும் இருக்காது. ர’கரமும் காலும் ஒரே வடிவத்தை கொண்டிருக்கும்.
”கொள” என்ற சொல் கொள், கோள், கெரள், கெர்ள், கேர்ள், கேரள், கேரள என்று என்னவாகவும் இருக்கலாம். இடத்திற்கு ஏற்றார்போல் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
 
pallava_tamil_inscription


1005 CE சேர்ந்த ராஜ ராஜனின் செப்பேடு பல்லவ தமிழில்
 

வீரமாமுனிவருக்கு முற்பட்ட தமிழ்

சுமார் 15ஆம் நூற்றாண்டளவிலேயே தற்கால தமிழுக்கு மிகவும் நெருங்கிய வடிவினை தமிழ் எழுத்துக்கள் பெற ஆரம்பித்தன.  அதே நேரத்தில், பல்லவ தமிழின் குறைபாடுகள் அவ்வாறே தொடர்ந்த வண்னம் இருந்தன.
tamil_15th_century

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அச்சிடப்பட்ட ஒரு தமிழ் கிறிஸ்தவ நூல்.

ரகத்திற்கும் காலிற்கும் வித்தியாசம் இல்லாத்த்தை கவனிக்கவும். அதே போல புள்ளி இருக்காது. எகர ஏகார வேறுபாடும், ஒகர ஓகார வேறுபாடும் இருக்காது. செசுவகையிலுளபடடபாதிரிமாா (< சேசுவகையிலுளபட்டபாதிரிமார்), முகவுரை போன்ற சொற்களை காண்க.

வீரமாமுனிவரின் தமிழ்

வீரமாமுனிவர் என்று தன்னை அழைத்துக்கொண்ட கிறிஸ்தவ மிஷினரி கொன்ஸ்டன்ஸோ பெஸ்கி பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார். கிறிஸ்தவ மதத்தை தமிழகத்தில் பரப்புவதற்காக, தமிழ் மொழியை அவர் கற்றுக்கொள்ள நேர்ந்த்து. தமிழ் எழுத்துமுறையினில் பல குறைகள் அவரை உறுத்தியது.
வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் தமிழை கற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்ய இவை தடையாக இருப்பதாக கருதினார், எனவே பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ் எழுத்துமுறையில் புகுத்தினார்.
ஏற்கனவே கூறியது போல், தமிழில் புள்ளி ஏட்டளவில் இலக்கண நூல்களில் மட்டுமே இருந்தது. நடைமுறையில், அதன் பயன்பாடு மிகவும் அருகிக்காணப்பட்டது. அச்சின் மூலம் புள்ளியின் பயன்பாட்டை மீண்டும் கொண்டு வந்தார்.
அதே போல, எ, ஒ முதலிய குறில்களும் (இலக்கணரீதியாக) புள்ளி பெற வேண்டி இருந்தது. புள்ளி பெறாதது நெடில்களாக கருதப்பட்டன.


புள்ளியினை மீண்டும் பிரபலப்படுத்தினாலும், அதே எகர ஒகரங்களுக்கான புள்ளியை அவர் பிரபலப்படுத்தவில்லை. உயிர் எழுத்துக்கள் புள்ளி பெறுவதை அவர் விரும்பாத காரணத்தினால் எ, ஒ ஆகியவற்றின் அமைப்பில் சில மாற்றங்களை செய்து ஏ , ஓ என புது நெடில் உருவங்களை படைத்தார். அதே போல, ஒற்றைக்கொம்பை மாற்றி நெடில்களுக்கு இரட்டை கொம்பை (ே) உருவாக்கினார். ஈகார உயிர்மெய்கள் ஒரு சுழி பெறுவது போல, கொம்பும் இன்னொரு சுழி பெருமாறு வடிவம் உருவாக்கப்பட்டது. புள்ளி பெறாத பழைய நெடில்கள், வீரமாமுனிவரின் தமிழில் குறில்களை குறித்தன.
அவர் எண்ணிய இரட்டைக்கொம்பு கீழிருந்து மேலாக எழுதப்பட வேண்டும் என்பது [ஈகாரக்குறி போல], ஆனால், இப்போதைய நடைமுறையில் அது மேலிருந்து கீழாகத்தான் எழுதப்படுகிறது. இவ்வாறு தான் காலப்போக்கில் எழுத்துக்கள் மாறுபாடுகளை அடைகின்றன !
அதே போல, கால்’ போல இருந்த ரகரத்துக்கு கீழே இன்னொரு சாய்வுக்கோடு இட்டது, யாரோ ஒரு பெயர் தெரியாத அச்சுத்தொழிலாளி மாற்றியதாக அறியப்படுகிறது.
 
பெரியார் தமிழ்

பெரியாருக்கு முற்பட்ட தமிழில் ஐகாரத்திற்கு இருவேறு குறிகள் இருந்தன. ல,ள,ன,ண முதலியவை ஒரு குறியையும், பிற எழுத்துக்கள் வேறு குறியையும் பெற்றன. அதே போல், ற,ன,ண ஆகியவையின் ஆகார உயிர்மெய்கள் சிறப்பு வடிவம் பெற்று திகழ்ந்தன.
இவைகளை ஒழுங்கற்றவைகளை பெரியார் கருதியதால், அவை அனைத்தும் எம்.ஜி.ஆர்’ஆல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனைத்தும் மெய்களும் ஒரே சீராக ஐகாரக்குறியையும், காலையும் பெற்றன.
tamil_periyar_reform

தமிழ்-பிராமியில் இருந்து துவங்கி வட்டெழுத்து, பல்லவர் எழுத்து என பல்வேறு வடிவங்களை பெற்று,  வீராமாமுனிவரின் சீர்த்திருத்தத்தில் துவங்கி, பெரியாரால் சீர்திருத்தம் செய்யப்பெற்ற எழுத்துக்களிலேயே இன்று தமிழ் எழுதப்பட்டு வருகிறது.
இவ்வாறாக, பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து பெற்று வந்தாலும், கடந்த 2000 வருடங்களாக, தமிழ் பல்வேறு எழுத்துமுறைகளில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
 
பிற்சேர்க்கை

தமிழ்-பிராமி, வட்டெழுத்தாகவும் பல்லவ-தமிழ் எழுத்தாகவும் சமகாலத்தில் உருமாற்றம் பெற்ற விதம். நடுவில் தமிழி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது “தமிழ்-பிராமி”.
tamil_brahmi_vatteluttu

தமிழ் இணைய பல்கலைக்கழகம்: http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051414.htm

மேற்கோள்கள்
    1. Early Tamil Epigraphy, Airavatam Mahadevan
    2. Elements of South Indian Paleography, A.C. Burnell
    3. Indian Epigraphy, Richard Salamon
    4. Slides of Dr. S Swaminathan, Tamil Heritage Foundation http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=311&Itemid=398
    5. Indoskript http://userpage.fu-berlin.de/~falk/
    6. Dr. Rajam’s Post : Doctrina Christam, 1579, Cochin http://viruntu.blogspot.com/2010/09/doctrina-christam-1579-cochin.html
    7. Tamil-Brahmi script found at Pattanam in Kerala http://www.hindu.com/2011/03/14/stories/2011031453981800.htm
நன்றி: வினோத் ராஜன், வார்சுவல் வினோத்
 

Wednesday, October 15, 2014

பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் – நடன காசி நாதன்

பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் – நடன காசி நாதன்

இன்றைக்கிருக்கும் தமிழ் எழுத்தின் மிகப் பழைய வடிவத்தைப் ”பண்டைத் தமிழ் எழுத்து” என்கிறோம். இவ்வெழுத்தைச் சிலர் தற்பொழுது ”தமிழ் பிராமி” என்றும் ”தாமிழி” என்றும் எழுதுகின்றனர். தமிழ் பிராமி என்றழைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து என்றும், அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியிலிருந்து இவ்வெழுத்துத் தோன்றியதே எனினும் அதிலிருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர். அவ்வாறெனில் பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் ”பிராகிருத பிராமி” என்று அழைப்பதுதானே சரியாகும். மேலும் அப்பிராமி எவ்வெழுத்திலிருந்து தோன்றியது? திடீரென்று அவ்வெழுத்தை மௌரியர் உருவாக்கிக் கொள்கையில் மற்ற பகுதி மன்னர்கள், குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் தங்களுக்கென ஒரு எழுத்தை உருவாக்கிக் கொண்டிருக்கமாட்டார்களா? அவ்வாறு தங்களுக்கு உருவாக்கிக்கொண்ட எழுத்துதான் தமிழ் எழுத்து. அதன் பழமை குறித்துப் பண்டைய வடிவத்தைப் ”பண்டைத் தமிழ் எழுத்து” என்று அழைக்கிறோம்.

சற்றேறக்குறைய கி.மு.300ல் எழுதப்பெற்றதெனக் கொள்ளப்பெறும். ”சமவயங்க சுத்த” என்னும் சமண நூலில் பதினெட்டு வகையான எழுத்துகள் குறிக்கப் பெற்றுள்ளன. ”பம்பி”, ”தாமிழி” என்ற எழுத்துகள் அவற்றில் காணப்படுகின்றன. ”பம்பி என்பது பிராமி எழுத்தைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும், ”தாமிழி” என்பது தமிழைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும் கொள்ளப்படுகிறது. அந்த பிராமி எழுத்தில் அசோகன் கல்வெட்டுகள் உள்ளன என்றும் தாமிழி எழுத்தில் தமிழ்நாட்டில் உள்ள பண்டைய கல்வெட்டுகள் எழுதப்பெற்றுள்ளன என்றும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுகள் தமிழ் எழுத்திலும், தமிழ் மொழியிலும் இருப்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பிராகிருத மொழியில் உள்ள அசோகன் கல்வெட்டுகள் ”பம்பி” எழுத்தில்தான் உள்ளன என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் ”பம்பி” எழுத்தில் உள்ளதாகக் கொள்ளப்படுகிறது. அசோகன் கல்வெட்டில் காணப்படும் எழுத்திற்குப் ”பிராமி” என்ற பெயரை முதன் முதலில் சூட்டியவர் ப்யூலர் என்ற மேல்நாட்டார்தான். அவ்வாறு அழைக்கப்பெற்றது சந்தேகத்திற்கு இடமானது என்றும், வேறு ஒரு புனிதமான எழுத்திற்கு ”பிராமி” என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கலாம் என்றும் டி.பி. வர்மா கருதியுள்ளார்.

அசோகன் கல்வெட்டுகள் நிலையே அவ்வாறு இருக்கும்போது தென் இந்திய பண்டைக் கல்வெட்டுகள் ”தென்னிந்திய பிராமியிலே” எழுதப் பெற்றுள்ளன என்பதும், தமிழ்நாட்டுப் பண்டைய கல்வெட்டுகள் ”தமிழ் பிராமியில்” எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் ஏற்றுக் கொள்ள இயலாதவை.

தமிழ் எழுத்துப் பிராகிருத மொழியில் ”தாமிழி” என்று குறிக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி ஆங்கிலமொழி பேசுவோரால் ”ட்ராங்குபார்” என்றழைப்பதுபோல், தமிழ்மொழி பேசும் நாம் தமிழ் எழுத்து என்றுதான் குறிப்பிடுதல் வேண்டும். இந்தியாவின் முதன்மைக் கல்வெட்டு ஆய்வாளராக இருந்த கே.ஜி. கிருஷ்ணன் தமிழ் எழுத்து என்றே கூறிவந்தார்.

Monday, October 13, 2014

தொல்லியல் அறிஞர் பேராசிரியர் ராஜன் நேர்காணல்: புதிய தலைமுறை வார இதழ் அக்டோபர் 2014



2500 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிட்டவன் தமிழன் அந்த நெல்மணிகள் இப்போதும் இருக்கின்றன 

நீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை ஆண்டுகளாக தமிழர்களின் உணவாக இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? அண்மையில் நான் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகளைப் பார்த்தேன். தொல்லியல் அறிஞரான பேராசிரியர் ராஜன் அவர்களிடம் அந்த நெல்மணிகள் உள்ளன.
Prof.K.Rajan
பேராசிரியர் ராஜன் உலக அளவில் மதிக்கப்படும் தொல்லியல் அறிஞர்களில் ஒருவர்.ஆழ்கடலுக்குக் கீழ் சென்று ஆய்வுகள் நடத்திய முதல் இந்தியத் தொல்லியல் வல்லுநர். கொடுமணல், பொருந்தல் போன்ற இடங்களில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் தமிழர்களின் தொன்மை, சங்க காலம் இவற்றைப் பற்றிய புதிய செய்திகளையும் வெளிச்சங்களையும் அளித்துள்ளன.

தற்போது புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவராகப் பணியாற்றிவரும் பேராசிரியர் ராஜனுடன் புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் நிகழ்த்திய உரையாடலில் இருந்து…..

மாலன் (தலைமுறை): சங்க காலம் சங்க காலம் என்கிறார்களே சங்ககாலம் என்பது எந்தக் கால கட்டத்தைக் குறிக்கிறது?

பேராசிரியர் ராஜன்: மார்ட்டீமர் வீலர் (Mortimer Wheeler) என்ற தொல்லியலாளர் புதுச்சேரி அருகில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் மிகப் பெரிய அகழ்வாராய்வு ஒன்றினை 1940களில் நடத்தினார்..தமிழர்களுக்கும் ரோமானியர்களுக்குமிடையே வர்த்தகம் நடைபெற்று வந்தது என்ற கருத்ததாக்கத்தை முதன்முதலில் அவர்தான் வெளியிட்டார்.முசிறி, தொண்டி, காவேரி பூம்பட்டினம், கொற்கை, அரிக்கமேடு இவையெல்லாம் சங்க காலத் துறைமுகங்கள் என்ற அடிப்படையில் அவர் அரிக்கமேடு ஆய்வைமேற்கொண்டார். அரிக்கமேட்டில் ரோமன் நாட்டிற்கு தொடர்பான பொருட்கள் கிடைத்ததனால், அந்தப் பொருட்கள் கி.மு.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் இருப்பதால், சங்க காலம் என்பது கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அவர் கருதினார். அதையொட்டி ரோமுடைய எழுச்சிக்குப் பிறகுதான் தமிழகம் எழுச்சி பெற்றது எனற் கருத்தாக்கம் உருவாகிவிட்டது.

இந்தியர்கள் ரோமானியர்களுக்கிடையேயான கடல் வழி வாணிபம் (Maritime Trade) தான்  தமிழகத்தில் அரசு என்ற உருவாக்கத்திற்கு பெரும் காரணமாக இருந்தது என்ற ஒரு கருத்து வேறு உள்ளது. கிளாரன்ஸ் மலோனி, செண்பகலட்சுமி, போன்றவர்கள் அந்தக் கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள்

இடையில அரிக்கமேட்டில் 3 மட்பாண்டங்கள கிடைத்தன. ரௌலட்டேட் வேர், (Rouletted Ware) என்ற பாண்டங்கள்,  அரிக்டேன் வேர், மது ஜாடி (amphora jar) ) என்பவை அவை. இந்த மூன்றுமே ரோமன் மட்பாண்டங்கள் என்று வீலர் சொல்கிறார். ஆனால் ரௌலட்டேட் வேர் ரோமன் மட்பாண்டம் கிடையாது. இந்த ரௌலட்டேட் வேர் இந்தியாவின் கீழக் கடற்கரை, தென்கிழக்கு ஆசியாவில் கிடைக்கிறது. ஆனால் ரோமன் பொருட்களோடு ரௌலட் வேரையும் ஒப்பிட்டு அதுவும் கி.மு.முதலாம் நுற்றாண்டு என்று உறுதி செய்துவிட்டார்கள்.

ராபர்ட் சுவெல் (Robert Sewell)  மதுரைக்கருகில் மாங்குளத்தில் சில கல்வெட்டுக்களைக் கண்டறிந்தார். அவற்றில் காணப்பட்டது அசோகர் காலத்து பிராமி எழுத்துக்கள் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) . என்று கருதினார்கள்.

ஜேம்ஸ் பிரின்ஸப் (James Prinsep) அசோகரது பிராமி கல்வெட்டுக்களை படித்தபோது இதனையும் படிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால் படிக்க முடியவில்லை. அதற்கு காரணம், அதிலிருந்த சில எழுத்துக்கள் அசோகர் கால எழுத்துக்கள போல இல்லை. அது பிராகிரத மொழி. இது பிராமி வரி வடிவம். அதே வரிவடிவமாக இருப்பதால் இதன் மொழியும் பிராகிரதமாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள் அப்போது கே.சுப்ரமணிய ஐயர் மட்டும்தான் இது பிராகிரதம் இல்லை, தமிழ் என்று சொன்னார்.

தமிழ் வடிவங்களை பார்க்கிறபோது இதனுடைய காலம் முன்னோக்கி செல்லக் கூடும் என்று ஐராவதம் மகாதேவன் முடிவு செய்து கி.மு. 3ம் நூற்றாண்டு என்றார். அசோகரது பிராமி கிமு 3ம் நூற்றாண்டு. தமிழ் பிராமி அதற்கு 100 ஆண்டுகள் முந்தியதாக இருக்க வேண்டும் என்று கிமு 3லிருந்து 2ம் நூற்றாண்டு வைத்துக் கொள்கிறார். கிமு முதலாம் நூற்றாண்டு, என்று கருதிய மார்ட்டின் வீலரின் கருத்தாக்கம் 1980 வாக்கில் 200 ஆண்டுகள் மேலும் பழமையாகி கிமு 3ம் நூற்றாண்டு என்றானது  தமிழகத்தின் அனைத்து வரலாற்று நூல்களிலும் சங்க காலம் என்பது கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 3ம் நூற்றாண்டு வரை என்று பதிவு செய்து விட்டார்கள்.

மாலன்: நீங்கள் ஈரோட்டிற்கு அருகில் உள்ள கொடுமணல் என்ற இடத்தில் நடத்திய ஆய்வுகள் சங்ககாலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முன்னதாக இருந்திருக்கக் கூடும் எனக் காட்டுகின்றனவா? கொடுமணல் ஆய்வுகளின் முக்கியத்துவம் என்ன ?  

Kodumanal Excavations
பேரா.ராஜன்: பொதுவாக தொல்லியல் அகழாய்வுகள் பெருங்கற்படைச் சின்னங்கள் எனக் கருதப்படும் ஈமக்காடுகளில் நடக்கும். பழங்காலங்களில்  மிகப் பெரிய கற்பலகைகளைக் கொண்டும், பெரிய கற்களைக் கொண்டும் அமைக்கப்பட்ட  ஈமக் குழிகளில் உடல்கள் புதைக்கப்பட்டன. ( Megalithic Culture) ஆதிச்சநல்லூர், குன்னத்தூர், கொடுமணல் என்று எல்லா அகழ்வாய்வுகளிலும் இந்த ஈமக்காடுகள் பற்றிய பதிவுகள் நிறைய இருக்கிறது. 1960களில் நடந்த தொல்லியல் ஆய்வு என்பது ஈமக்க்காடுகளை பதிவு செய்வது, ஆவணப்படுத்துவது என்பதாக மட்டுமே இருந்தது. ஈமக்காடுகளை ஆவணப்படுத்தியவர்கள் அதை சங்க காலத்தோடு தொடர்பு படுத்தியும் இருக்கிறார்கள். ஈமக் காடுகள் என்பது நீத்தார் நினைவாக உருவாக்கப்பட்டது என்பது சரி, ஆனால் அவர்களுக்கென்று ஒரு வாழ்விடம் இருந்திருக்குமல்லவா? அதை யாருமே ஆவணப்படுத்தவில்லை. இதனால் அந்த காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு (அல்லது அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு) வாழவிடங்களே இல்லை என்ற நிலைப்பாடு உருவாகிவிட்டது. பதிவுகளில் ஏற்பட்ட இந்த பிரச்னைகளால் அந்த மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தார்கள் என்று சொல்கிறாரகள். லட்சுமி கிங்கல் என்பவர் SOUTH INDIAN LEGACY A PANDUKKAL COMPLEX Lawrence S. Leshik, South Indian Megalithic Burials: The Pandukal Complex (Weisbaden: Franz Steiner Verlag GMBH, 1974) என்ற புத்தகத்தில் அவர்கள் அந்த காலத்தில் நடோடிகளாக இருந்தார்கள் என்பதை பதிவு செய்திருக்கிறார் (பெருங்கற்படைச் சின்னங்களைச் சங்க இலக்கியங்கள் 'பதுக்கை' எனக் குறிப்பிடுகின்றன).

நம்முடைய நொய்யல் ஆற்றங்கரை நாகரீகம் பற்றிய ஆய்வை புலவர் செ.ராசு ஈரோட்டில் உள்ள கலைமகள் பள்ளியோடு சேர்ந்து நடத்தினார். அவர், அந்தப் பகுதியில் உள்ள  கொடுமணல் முக்கியமான ஊராக இருக்க வேண்டும் என்றும், பதிற்றுப்பத்தில் வருகிற ‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்’ என்ற வரியில் உள்ளகொடுமணம்தான் இந்த கொடுமணலாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை சிறிய அளவில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் தமிழ் பல்கலைகழகத்திற்கு இணைப் பேராசிரியராக அதன்பின் வந்து சேர்ந்தார். பேராசிரியர் சுப்புராயலு மதுரை பல்கலைகழகத்தில் இருந்து தமிழ் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.

நான் கோவாவில் துவாரகை பற்றி கடல் அகழாய்வு செய்து கொண்டிருந்தேன். நீங்களும் நம்ம ஊருக்கு வந்து இந்த ஆய்வில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று என்னையும் அழைத்தார்கள். எனவே நானும் தமிழ் பல்கலைகழகத்தில் வந்து சேர்ந்தேன். நாங்கள் மூவரும் முக்கியமான ஆய்வுக் குழுவாக மாறிவிட்டோம். புலவர் இலக்கிய அறிஞர். பேராசிரியர் சுப்பராயலு கல்வெட்டியலில் மிகவும் புலமை வாய்ந்தவர். நாங்கள் ஒரு குழுவாக கொடுமணல் அகழாய்வை எடுத்துக் கொண்டோம்.

நாங்கள் கொடுமணல் ஆய்வை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஏழு முறை ஆய்வுசெய்தோம். (எங்களுக்கு கல்விப் பணி இருந்ததால் ஏழு ஆண்டுகள் என்று சொல்வதில்லை. ஏழு சீசன் என்று சொல்லுவோம், மே, ஜுன் என்று 2 விடுமுறை மாதங்களில் மட்டும்தான் போக முடியும். மற்ற மாதங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய பணி இருக்கும்) 1980, 90களில் கொடுமணல் அகழாய்வை நாங்கள செய்தபோது மண் அடுக்கு அடிப்படையில் செய்தோம். அப்போது மத்தியில் ரௌலட்டேட் வேர் என்ற மட்பாண்டம் கிடைத்தது. அதேநேரம் வட இந்திய வெள்ளி முத்திரை நாணயங்களும் கிடைத்தன. ஆனால் இந்த நாணயங்கள் ஆறாம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து நமக்குக் கிடைக்கிறது. அது கிமு முதலாம் நூற்றாண்டு வரை வருகிறது. இதை வைத்து ஆறாம் நூற்றாண்டு என்று முடிவு செய்வதா 2ம் நூற்றாண்டுஎன முடிவு செய்வதா என்ற கேள்வி எழுந்தது ,, ஏற்கனவே ரௌலட்டேட் வேர் ரோமன் மட்பாண்டத்தின் காலம் கிமு முதலாம் நூற்றாண்டு வரை என்று உலகம் முழுவதும் இருந்த கருத்து  அந்த நாணயம், மண் அடுக்கு இவற்றை வைத்து சங்க காலம் என்பது கிமு 3ம் நூற்றாண்டில் இருந்து கிபி 3ம் நூற்றாண்டு வரை இருக்கும் என்று நாங்களும் முடிவு செய்தோம்.

ஆனால் நாங்கள் செய்த ஆய்வைத் தாண்டி வர முடியாத அளவிற்கு கருதுகோள்கள் இருந்ததால் அதைத் தாண்டி வர முடியவில்லை. ஆனாலும் அந்த நேரத்தில் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சங்க காலத்தை இலக்கியவாதிகள், கல்வெட்டு ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் என்று மூன்று தரப்பினரும் 3 விதமாக காலக்கணிப்புச் செய்துள்ளோம். ஆனால் மூன்றுமே அறிவியல் ரீதியாக காலம் கணிக்கப்படவில்லை. எனவே ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக் கணிப்பு இல்லை.

இந்நிலையில் அனுராதபுரத்தில் ராபின் கன்னிஹாம் என்ற பேராசிரியர்  அகழாய்வு செய்தபோது அங்கே கிடைத்த பிராமி வரி வடிவங்கள் கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று காலக் கணிப்பு செய்திருந்தார். இது மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.