காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி
எஸ். இராமச்சந்திரன். இதழ் 35. 02-10-2010
பேரரசர் இராஜராஜ சோழன் தஞ்சையில் தமது பெயரால் ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற சிவன் கோயில் எடுப்பித்து 1,000 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இதனையொட்டித் தமிழக அரசின் முன்முயற்சியால் மிகப்பெரும் கேளிக்கைகள், இராஜராஜனோடு தம்மை ஒப்பிட்டுக்கொள்ளும் ஆட்சியாளர்களின் அகம்பாவத்தைத் திருப்தி செய்யும் கூத்து அரங்கேற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழக வரலாற்றில் இராஜராஜ சோழன் தொடக்கிவைத்த சில போக்குகள், அவை சுட்டிக்காட்டும் நுண்ணரசியல் ஆகியவை பற்றி விவாதிக்கும் ஆய்வே இக்கட்டுரை.
கி.பி. 985ஆம் ஆண்டில் இராஜராஜன் ஆட்சிக்கு வந்தார். இது அந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதிக்குப் பிறகு நான்கைந்து நாள்களுக்குள் நடந்திருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கே.ஏ.நீலகண்டசாஸ்திரி கருதுகிறார். தமது சிற்றப்பன் உத்தமசோழன் ஆட்சியதிகாரத்தை அனுபவிக்க விரும்பியதால் க்ஷத்திரியர்களின் தர்மத்துக்கு இணங்க அவர் ஆள்வதற்கு வழிவிட்டு இராஜராஜன் விலகி நின்றதாகவும், உத்தம சோழன் ஆட்சிக்காலம் முடிந்தபின்னர்தாம் சோழ மன்னராக முடிசூட்டிக் கொண்டதாகவும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் (சுலோகம் 69-70) குறிப்பிடுகின்றன.(1)
இராஜராஜனுக்கு க்ஷத்திரிய சிகாமணி என்ற பட்டம் இருந்தது என்பது கல்வெட்டுகளால் தெரியவருகிறது. ஆயினும், இராஜராஜ சோழன் க்ஷத்திரிய தர்மத்துக்கிணங்கப் பதவியை விட்டுக்கொடுத்தார் என்பதெல்லாம் ஆஸ்தானப் புலவர்களின் புகழ்மொழியே தவிர வேறல்ல.
இராஜராஜ சோழன் ஆட்சி முறையில் மட்டுமின்றி, அரசியல் நெறிமுறைகளிலும் சில புதிய போக்குகளை உருவாக்கினார் என்பதில் ஐயமில்லை. அவை க்ஷத்திரிய தர்மப்படியான விட்டுக்கொடுத்தல் என்ற திருவாலங்காடு செப்பேட்டுப் புகழ்மொழிக்கு நேர்மாறான நெறிமுறைகள் என்பதுதான் விசித்திரம். இராஜராஜ சோழனின் முதல் வெற்றியும் முதன்மையான வெற்றியும் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய நிகழ்வே ஆகும். இம்மன்னனின் நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
“சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும், “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும் இரண்டு விதமாகக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. காந்தளூர்ச்சாலை என்பது கேரள மாநிலத்தின் தென் எல்லையில் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள வலியசாலை என்ற இடமே என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளையைத் தாண்டிக் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உதியன் பேரூரிலிருந்து பூவாறு என்ற ஊருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காந்தளூர்தான் என்றும் இருவேறு விதமாக அடையாளம் காணப்படுகிறது. இவ்வாறு அடையாளம் காணப்படுவதற்குக் காரணங்கள் இரண்டு:
1. மேற்குறித்த திருவாலங்காட்டுச் செப்புப் பட்டயம் இராஜராஜ சோழனின் முதல் வெற்றி தென் திசை நோக்கிய திக்விஜயம் எனக் குறிப்பிடுகிறது. பாண்டிய மன்னன் அமர புயங்கனை வென்று கடலினையே அகழியாகக் கொண்டதும் சுடர்விடுகின்ற மதில்களுடன் கூடியதும் வெற்றித் திருவின் உறைவிடமும் எதிரிகளால் புகமுடியாததுமாகிய விழிஞத்தை வென்றார் என்று அப்பட்டயம் குறிப்பிடுகின்றது. விழிஞம், திருவனந்தபுரத்திற்குத் தெற்கே கடற்கரையில் அமைந்துள்ளது. எனவே, இப்பகுதியிலுள்ள காந்தளூரை வென்றதுதான் திருவாலங்காட்டுச் செப்பேட்டால் உணர்த்தப்படுகிறது என்பது இத்தகைய பொருள்கோடலுக்கு அடிப்படை.
2. ஆய் வேளிர் ஆட்சிப் பகுதியில், அதாவது குமரி மாவட்ட – கேரள மாநில – எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பார்த்திவசேகரபுரம் என்ற ஊரில் கல்விச்சாலை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தப் பார்த்திவசேகரபுரம் சாலை என்பது 95 சட்டர்களுக்கு (பிராம்மண மாணவர்களுக்கு) த்ரைராஜ்ஜிய வ்யவஹாரம் (மூவேந்தர் ஆட்சிப் பகுதிகளின் நிர்வாகம்) குறித்த கல்வியும், பயிற்சியும் வழங்குகின்ற ஒரு நிறுவனம் (கல்விச் சாலை) ஆகும் என்று ஆய் மன்னன் கோக்கருநந் தடக்கனின் பார்த்திவசேகரபுரம் செப்பேடு (கி.பி. 866) தெரிவிக்கிறது. இச்செப்பேட்டில் காந்தளூர்ச்சாலையை முன்மாதிரியாகக் கொண்டு பார்த்திவசேகரபுரம் சாலை அமைக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. காந்தளூர்ச்சாலை என்பது இராணுவப் பயிற்சி நிலையமும் நிர்வாகப் பயிற்சி நிலையமும் இணைந்த, பிராம்மணர்களுக்குரிய ஒரு முன்னோடியான பயிற்சி நிறுவனமாக இருந்திருக்க வேண்டும். காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வு இத்தகைய இராணுவப் பயிற்சி நிலையத்தை இராஜராஜன் வெற்றி கொண்ட வீரச்செயலைக் குறிக்கும் என்பது இவ்வரலாற்று ஆய்வறிஞர்களின் முடிபாகும்.
கலமறுத்து என்பது “சேரர்களின் கப்பல்களை அழித்து, அதாவது சேரர்களின் கடற்படைப் பலத்தைத் தகர்த்து” என்று சிலர் பொருள் கொண்டுள்ளனர். “வேலை கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து” என்று முதல் இராஜாதிராஜனின் (கி.பி. 1018-1054) மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்படுவதால் இவ்வாறு பொருள்கொள்வதற்கு உரிய முகாந்திரம் இருக்கிறது.(2) கலம் என்ற சொல் கப்பலைக் குறிப்பதற்கு முதலாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மையே. (“அலை கடல் நடுவில் பல கலம் செலுத்தி.”) மேற்கண்ட குறிப்புகளிலிருந்து காந்தளூர்ச்சாலை என்பது சேர நாட்டின் கடற்கரையையொட்டி அமைந்திருந்த ஓர் இடம் என்று தெரிகிறது. ஆயினும், இது ஒரு கடற்படைத் தளமாக இருந்திருப்பின் காந்தளூர்ச்சாலை என்ற பெயரினைக் காந்தளூர்த் துறைமுகம் என்றே பொருள்கொள்ள வேண்டியிருக்கும். இதற்குச் சாத்தியமில்லை.
மேலும், காந்தளூர்ச்சாலையை முன்மாதிரியாகக்கொண்டு அமைக்கப்பட்ட பார்த்திவசேகரபுரம் சாலைக்கு வழங்கப்பட்ட அறக்கட்டளைச் செயல்பாடு ‘சாலாபோகம்’ என்றே மேற்குறிப்பிடப்பட்ட செப்பேட்டில் குறிப்பிடப்படுகிறது. இது கல்விச்சாலை – பயிற்சிக்கூடம்தானே தவிர துறைமுகத்துடன் இதற்குத் தொடர்பில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறது. மேலும், “வேலை கொண்டதும் விழிஞம் அழித்ததும் சாலை கொண்டதும் தண்டுகொண்டு அல்லவோ” என்ற கலிங்கத்துப்பரணிப் பாடல் வரிகள் உள்ளன. விழிஞம் என்பது கடற்கரையில் அமைந்திருந்த துறைமுக நகரம் என்பது இதன்மூலம் புலப்படுத்தப்படினும், இதை வைத்துக் காந்தளூர்ச்சாலை என்ற நிறுவனம் விழிஞத்துக்கு அருகிலிருந்தது என்று பொருள்கொள்ள இயலாது. இவை சோழ மன்னனின் படை வலிமையால் வெற்றி கொள்ளப்பட்டன என்று மட்டுமே பொருள்படும்.
எனினும், இத்தகைய காரணங்களால் பாண்டிய, சேர நாடுகளின் எல்லைப் பகுதியில், திருவனந்தபுரம் அருகில் கடற்கரையில் காந்தளூர்ச்சாலை இருந்திருக்க வேண்டுமென்று அறிஞர்கள் முடிவுசெய்தனர். இன்றுவரை இக்கருத்தே ஏற்கப்பட்டுள்ளது. கலம் என்ற சொல்லுக்கு உண்கலம், முகத்தல் அளவையில் ஓர் அளவு, படைக்கலம் என்பன போலப் பல பொருள்கள் உண்டு. கலன் என்ற சொல்லுக்கு வில்லங்கம் என்ற ஒரு பொருளும் உண்டு. கி.பி. 1220ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில்(3) “இவ்வூர்க்கு எப்பேர்ப்பட்ட கலனுமில்லை; கலனுளவாய்த் தோற்றில் நாங்களே தீர்த்துக் கொடுப்போமாகவும்” என்ற வாசகம் காணப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டுவரை ஓலைச்சுவடிகளில் எழுதப்படும் நில விற்பனை போன்ற ஆவணங்களில் “இந்த சாசனத்தில் யாதொரு கலனும் இல்லை. கலன் ஏதுமிருப்பின் நானே கலன் தீர்த்துத் தருவேனாகவும்” என்று விற்பனை செய்பவர் எழுதிக் கையொப்பமிடும் வழக்கம் இருந்தது.
கலன் என்ற சொல் கலம் என்பதன் திரிபு (கடைப்போலி) ஆகும். இது கலகம், கலாம் என்ற என்ற சொற்களின் திரிபெனத் தோன்றுகிறது. பூசல், போட்டி என்ற பொருளில் புறநானூற்றில் (69:11) ‘கலாம்’ குறிப்பிடப்படுகிறது. அத்தகைய ஒரு பொருளில் கலமறுத்து என்பது வில்லங்கம் தீர்த்து என்ற பொருளிலோ, எந்த ஒரு வில்லங்கத்துக்கும் இடமில்லாத வகையில் போட்டியில் வென்று என்ற பொருளிலோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.(4) இராஜராஜ சோழனின் தகப்பன் சுந்தர சோழனின் ஆட்சிக்காலத்தில் வேத சாக்கைகளை ஒப்பித்து விளக்கம் சொல்லிச் சில சட்ட நுணுக்கங்களை மெய்ப்பித்தல் என்பது ‘மெய்க்காட்டுதல்’ என்றும், இத்தகைய போட்டிகளில் வென்று எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமில்லாத வகையில் ஒரு வழக்கின் சட்டக்கூறுகளை மெய்ப்பித்தவர் “கலமறுத்து நல்லாரானார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் கோயில் தேவராயன் பேட்டை சிவன் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள அக்கல்வெட்டில் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சட்டக்கூற்றினை மெய்ப்பிக்க வல்ல வேதமறிந்த பிராம்மண மாணவர்களிடையே போட்டி வைக்கப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்புகள் செய்யப்பட்டன என்ற செய்தி பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது:
ஜைமினிகள் சாம வேதத்து மேற்பாதத்து ஒரு துருவும் கீழ்ப்பாதத்து ஒரு துருவும் கரைப்பறிச்சு பட்டம் கடத்துப் பிழையாமே சொன்னார் ஒருகாற் கொண்டார் அல்லாதாரை மெய்க்காட்டுத் தீட்டினார் எல்லாரும் தம்மில் அஞ்சுபுரியிலும் சொல்லிக் கலமறுத்து நல்லாரானார் ஒருவர்க்கு வ்ருத்தியான இக்காசு மூன்றும் இத்தேவரே குடுப்பாராக (5)
அப்படியாயின் காந்தளூர்ச்சாலை என்பது பேரரசர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வில்லங்கமாக அமைந்திருந்தது என்றும், அத்தகைய வில்லங்கத்தைத் தீர்த்துப் பேரரச விரிவாக்கத்திற்கு இருந்த தடையை நீக்கிய செயல்பாடு காந்தளூர்ச்சாலை கலமறுத்து என்று குறிப்பிடப்பட்டது என்றும் முடிவு செய்யலாம். கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டுவரை சேர நாட்டில் ஆட்சி செய்த மன்னர்கள் சேரமான் பெருமாள் என்றும், பெருமாக்கோதை என்றும் குறிப்பிடப்பட்டனர். (6) அவர்களுடைய ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடுகின்ற வடக்கன் பாட்டுகள் போன்ற பழங்கதைப் பாடல்களின் மூலம் சேரமான் பெருமாள் பதவி என்பது, பரம்பரையாக வருகின்ற அரச பதவி அன்று என்றும், போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பதவியே என்றும் தெரியவருகின்றன.
மலபார்ப் பகுதியில் (இன்றைய மலைப்புரம் மாவட்டம்) பொன்னாணிக்கு அருகில் அமைந்துள்ள திருநாவாய் என்ற திருத்தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடைபெறுவது வழக்கம். வியாழன் சிம்மத்தில் இருக்கின்ற ஆண்டில் மாசி மாதம் மக நட்சத்திர நாளில் மகாமகம் திருவிழா நிகழும். ‘மாமாங்ஙம்’ என்று மலையாளத்தில் வழங்கப்படும் இத்திருவிழாவின்போது க்ஷத்திரிய வர்ணத்தவர்களுக்குள் பலவிதமான போட்டிகள் நிகழும். படைக்கலப் பயிற்சி (களரிப் பயிற்சி) தொடர்பான போட்டிகளும், ஆட்சிக் கலை தொடர்பான பலவிதமான நேர்முகத் தேர்வுகளும் நடைபெறும். இப்போட்டிகளுக்கு நடுவராக இருப்பவர் 63 நாடுவாழிகளின் தலைவரான வள்ளுவ நாடாழ்வான் ஆவார். இந்த நாடுவாழிகள் பதவி என்பது ஆண்வழியாக வருகின்ற பரம்பரைப் பதவியே. இத்தகைய நாடுவாழிகள் அனைவரும் க்ஷத்திரிய வர்ணத்தவரே.
திருநாவாய் அமைந்திருந்தது வள்ளுவ நாட்டில்தான். வள்ளுவ நாடாழ்வானின் தலைநகரமாகிய பெருந்தலமன்றம் – வள்ளுவ நகரம் (தற்போதைய பெரிந்தல்மன்னா – அங்காடிபுரம்) வள்ளுவ நாட்டில்தான் உள்ளது. எனவே, சேரமான் பெருமாளைத் தேர்ந்தெடுக்கிற போட்டிகள் நிகழும் இடமாக வள்ளுவ நாடாழ்வான் ஆட்சிப் பகுதியாகிய திருநாவாய் தேர்வு செய்யப்பட்டதன் பொருத்தத்தை நாம் எளிதில் உணர இயலும். திருநாவாயில் இத்தகைய நிகழ்வு நடந்து வந்தமைக்குக் கேரளோல்பத்தியிலும் சான்று உள்ளது. (7) பன்னிரு ஆண்டுச் சுழற்சி, வியாழ வட்டம் எனப்படும். கேரள மாநிலக் கல்வெட்டுகளில் வியாழ வட்டம் காலக் குறியீடாகப் பயன்படுத்தப்படுவது மரபாகும். இது சேரமான் பெருமாள் மன்னர்களால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கவேண்டும்.
சேர நாட்டில் இத்தகைய ஒரு ஜனநாயக மரபு தென்னிந்திய அரசாட்சி முறை மரபுகளுக்கு மாறாக எவ்வாறு உருவாயிற்று என்பது ஆய்வுக்குரியது. ஆனால், அது குறித்த ஆய்வை மேற்கொள்ளும்முன் அத்தகைய ஒரு மரபில் இராஜராஜ சோழனின் குறுக்கீடு ஏற்பட்ட பின்னணியைப் புரிந்துகொள்வது அவசியம். திருநாவாய்த் திருத்தலத்திற்கு மிக அருகில் காந்தளூர் என்ற ஊர் உள்ளதென்றும், அவ்வூரில் ஒரு பெரிய கோயில் உள்ளது என்றும், 1830-35ஆம் ஆண்டுக்குரிய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பினி நில அளவைப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. (8)
இந்தக் காந்தளூரே மேற்குறித்த சாலை அமைந்திருந்த காந்தளூராக இருந்திருக்க வேண்டும். இக்காந்தளூர்ச்சாலையில் போர்ப் பயிற்சியும் நிர்வாகப் பயிற்சியும் பெற்ற மாணாக்கர்கள் க்ஷத்திரிய வர்ணத்தவராகவே இருந்திருக்க வேண்டும். (9) பார்த்திவசேகரபுரம் சாலையைப் போன்று த்ரைராஜ்ஜிய வ்யவஹாரத்துக்குரிய பிராம்மண மாணவர்களுக்குப் பயிற்சியளித்த நிறுவனமாக இது இருந்திராது என நாம் ஊகிக்கலாம். ஏனெனில், திருநாவாயில் நடைபெற்ற போட்டிகளில் க்ஷத்திரியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இத்தகைய ஒரு போட்டி நடைபெறுகிற இடமாகத் திருநாவாய் தேர்வு செய்யப்பட்ட காரணம் அல்லது இத்திருத்தலம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் நிகழ்கின்ற ஓர் இடமாக முன்னரே உருவாகியிருக்கும் பட்சத்தில் மகாமக விழாவின்போது இங்குப் போட்டிகளை நடத்துவதற்கு நாடுவாழிகள் முடிவுசெய்ததன் காரணம், இவ்வூர் காந்தளூர்ச்சாலைக்கு அருகில் அமைந்திருந்ததால்தான் போலும்.
காந்தளூர் வள்ளுவ நாட்டில் அமைந்திருப்பதும் நாடுவாழிகளின் தலைவரான வள்ளுவ நாடாழ்வான் மேற்குறித்த போட்டிகளுக்கு நடுவராக இருந்த நிகழ்வும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல என நாம் புரிந்துகொள்ள இயலும். காந்தளூர்ச்சாலையில் பயிற்சி பெற்றோர் பிராம்மண வர்ணத்தவராக அன்றி, க்ஷத்திரிய வர்ணத்தவராகவே, அதாவது அரச குலத்தவராகவே இருந்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மறைமுகமான குறிப்பு கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குரிய முத்தரையர் குலச் சிற்றரசன் சுவரன் மாறனின் செந்தலை (சந்திர லேகைச் சதுர்வேதி மங்கலம்) பாடல் கல்வெட்டில் உள்ளது.
—வண்டரவம் கார்தோற்றும் காந்தளூர்
மண் தோற்ற வேந்தர் மனம்
“வண்டுகளுடைய ரீங்காரம் மேகத்தின் முழக்கம்போல ஒலிக்கின்ற காந்தளூரின் நில உரிமையைப் பறிகொடுத்த வேந்தர்களின் மனம்” என்பது இதன் பொருளாகும். காந்தளூர்ச் சாலை என்பது வேந்தர் குலத்துக்குரியதே என்ற பொருளை இது மறைமுகமாகக் குறிப்பதாகத் தெரிகிறது. (10) இது பாண்டியர் – சேரர் கூட்டணியை எதிர்த்துப் பல்லவர்கள் சார்பாக முத்தரையர் குலச் சிற்றரசன் பங்கேற்ற போர் குறித்த பாடல் ஆகும்.
இவ்வாறு போட்டிகளின் மூலம் சேரமான் பெருமாளாக முடிசூடுபவர் தேர்ந்தெடுக்கப்படுகிற நிகழ்வு குறித்துப் பெரியபுராணத்திலும் (வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பா. 132-135) ஒரு வகையான பதிவு உள்ளது. செங்கோற் பொறையன் எனும் அரசனின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு, அம்மன்னன் துறவு மேற்கொண்டு தவம் செய்யச் சென்றுவிட்டான் என்றும், அமைச்சர்கள் சில நாள் கூடி ஆலோசித்துத் திருவஞ்சைக்களம் கோயிலில் சிவபெருமான் திருத்தொண்டில் ஈடுபட்டிருந்த பெருமாக்கோதையாரிடம் சென்று ‘மலை நாட்டுச் செய்தி முறைமை’யால் அரசாட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள் என்றும், அதன்படி பெருமாக்கோதையாரும் சிவபெருமானிடம் அனுமதிபெற்று அரசாட்சியை மேற்கொண்டார் என்றும் விவரிக்கப்பட்டுள்ளன.
போட்டிகளின் மூலம் அரசன் தேர்வு செய்யப்படும் முறை பற்றிய நேரடியான குறிப்பு ஏதும் பெரியபுராணத்தில் இல்லையென்பது உண்மையே. மலை நாட்டுச் செய்தி முறைமை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அரசராகப் பதவி ஏற்கும் முன்னர், போட்டியிடுவதற்குத் தகுதி பெற்றவர்கள் கோயிலதிகாரி எனப்படும் பதவியை வகித்தனர் என்பதற்கும் சேர நாட்டு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன. கோயிலதிகாரி என்ற பதவி இளவரசர் பதவிக்குச் சமமானது என்றே கேரள வரலாற்றாசிரியர்கள் சிலர் கருதுவர். சேரமான் பெருமாள் திருவஞ்சைக்களத்தில் சிவபிரான் திருத்தொண்டில் ஈடுபட்டிருந்ததாகப் பெரியபுராணம் கூறுவதை இத்தகைய கோயிலதிகாரி பற்றிய குறிப்பாகவே நாம் கொள்ளலாம். (11) இச்சேரமான் பெருமாள் நாயனாரின் ஆட்சிக்காலம், காடவர் கோன் கழற்சிங்கன் எனப்பட்ட இராஜசிம்ம பல்லவன் ஆட்சிக் காலமான கி.பி. 730க்கும் கி.பி. 765க்கும் இடைப்பட்ட (12) ஆண்டுக் காலமாக இருக்க வேண்டும்.
வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகர ஆழ்வாரும் (கி.பி. 800) இவ்வாறு பதவிக்கு வந்தவரே. தமது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, அவர் துறவு மேற்கொண்டு திருமால் வழிபாட்டுக்குத் தம்மை அர்ப்பணித்து கொண்டதாக அறிய முடிகிறது. சேர (பெருமாள்) மன்னர்கள் இவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பதவி வகித்தார்கள்; பதவிக் காலத்தின்போதும் அவர்கள் தமக்கென்று தனி உடைமை ஏதும் வைத்துக்கொள்ளாமல் ஒரு துறவியைப் போலவே ஆட்சி நடத்தினார்கள் என்பதற்கான ஆதாரம் மாதவாச்சாரியாரின் ‘சம்க்ஷேப சங்கரக்யம்’ என்று குறிப்பிடப்படுகிற சங்கர திக்விஜயம், ஆனந்தகிரியின் சங்கரவிஜயம் ஆகியவற்றின் அடிப்படையில் சதாசிவ பிரம்மேந்திரர் (கி.பி. 16-17ஆம் நூற்றாண்டு) எழுதிய “ஜகத்குரு ரத்னமாலா” என்ற நூலில் உள்ளது. ஆதி சங்கரர் காலடியில் பிறந்தபோது கேரள ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் ராஜசேகரன் என்றும், அவன் ஆசார்யன் என்றும் யாயாவரனாக இருந்தான் என்றும் அந்நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன12.
ஆசார்யன் என்பது பிறருக்குப் போர்க் கலை, நிர்வாகக் கலை ஆகியவற்றைப் போதிக்கின்ற ஆசிரியன் என்று பொருள்படும். வியாழ வட்டக் காலக்கணக்கீட்டின்படி 12 ஆண்டுகளே ஆட்சிபுரிகின்ற அரசன் வியாழனின் (குரு) இயல்புடையவனாகத்தானே இருப்பான்? யாயாவரன் என்பது தனக்கென ஓர் உடைமையும் வைத்துக்கொள்ளாமல் சுற்றித் திரிகின்ற ஓர் ஆன்மீகவாதியைக் குறிக்கும். அத்தகைய யாயாவரன் ஓர் இல்லறத்தானாக இருக்கும்பட்சத்தில் தன் குடும்பத்திற்குரிய ஒரு வேளை உணவுக்கான பொருளை மட்டுமே சேமிக்கலாம். இல்லறத்தானாக இன்றித் தனிமனிதனாக இருக்கும்பட்சத்தில் அடுத்தவேளை உணவுக்காகக்கூட ஒரு சிறு நெல்மணியையும் சேமிக்க அனுமதிக்கப்பட மாட்டான். (13) இவ்வாறு ராஜரிஷி போன்று எவ்வித உடைமைமீதும் பற்றின்றி ஓர் ஆட்சியாளன் இருப்பது என்பது சோழ பாண்டிய நாடுகளில் நடைமுறையில் இல்லை. சேர நாட்டில் மட்டும்தான் நடைமுறையில் இருந்தது.
இத்தகைய நடைமுறை ஒரு பேரரசை நிறுவித் தனக்குப்பின் தனது சந்ததியினர் மட்டுமே தொடர்ந்து பேரரசர்களாக உலகாள வேண்டும் என்று விழைகின்ற தன்முனைப்பும் அதிகார வேட்கையும் படைத்த ஒரு மாமன்னனுக்கு இடையூறாகவே இருந்திருக்கும் என்பதும், அத்தகைய இடையூற்றினை முழுமையாக நீக்கினால் மட்டுமே அம்மன்னன் தன் குறிக்கோளை எய்த முடியும் என்பதும் மிக எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய அடிப்படை உண்மைகளாகும். இத்தகைய நடைமுறைக்கு அடிப்படையாக இருந்த ஒரு கல்வி நிறுவனத்தைத் தம் படைபலத்தால் கைப்பற்றுவது, அல்லது அந்நிறுவனத்தையே மூடுவது போன்ற ஒரு வீரச்செயலை இராஜராஜன் புரிந்துள்ளார். இதனையே தம் முதன்மையான வெற்றியாக அவர் பறைசாற்றியுள்ளார்.
“கலமறுத்து நல்லாரானார்” என்ற கோயில் தேவராயன்பேட்டைக் கல்வெட்டு வாசகத்தைக் “காந்தளூர்ச்சாலை கலமறுத்து” என்ற வாசகத்துடன் ஒப்பிட்டு இராஜராஜன் காந்தளூரில் இத்தகைய ஒரு போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றார் எனப் பொருள்கொள்வதற்கும் சாத்தியமுண்டு என்றும், ஆயினும் இராஜராஜ சோழனின் வெற்றி படைபலத்தால் பெற்ற வெற்றி என்பதால் அது இத்தகைய போட்டியைக் குறித்திருக்க வாய்ப்பிலை என்றும் அறிஞர் தி.நா. சுப்பிரமணியம் கருதியுள்ளார். (14)
கலமறுத்தல் என்பது வில்லங்கம் தீர்த்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுவதற்கு வேறு ஓர் எடுத்துக்காட்டும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைக்குளம் என்ற ஓர் ஊர் உள்ளது. இவ்வூரைப் பற்றிய ஒரு குறிப்பு திருநந்திக்கரையிலுள்ள கி.பி. 8ஆம் நூற்றாண்டைய கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. “திருநந்திக்கரைப் பெருமக்களும் தளி ஆள்வானும் குருந்தம்பாக்கத்துக்கூடி தலைக்குளத்து கலமற்ற யாண்டு ஸ்ரீநந்திமங்கலம் என்று பேரும் செய்து நம்பி கணபதிக்குக் குடுத்தோம்” (15) என்ற குறிப்பு காணப்படுகிறது. தலைக்குளம் ஊரின் நிலவுடைமை முதலான அதிகாரங்கள் குறித்த வில்லங்கங்கள் இருந்துள்ளன என்றும், அவ்வில்லங்கங்கள் தீர்த்துவைக்கப்பட்ட நிகழ்வினை முதன்மையான நிகழ்வாகக் கருதிக் கலமற்ற யாண்டு என்று காலக்கணக்கீடு செய்யப்பட்டது என்றும் தெரியவருகின்றன.
இராஜராஜ சோழனுக்கு முன்னரே பாண்டிய நாடு சோழர்களுடைய ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது. அமரபுயங்கன் என்ற பாண்டிய மன்னன் மீண்டும் சுயாட்சி அடைய முயன்றபோது அவனை இராஜராஜன் வெற்றிகொண்டு பாண்டிய அரசுரிமையையும் தாமே மேற்கொண்டார். அப்போரில் அவர் விழிஞம் வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றார் என்ற செய்தி இராஜராஜனின் மகனான இராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் பதிவு பெற்றிருப்பதாலும் இராஜராஜன் தமது முதன்மையான எதிரியாகப் பாண்டிய மன்னர்களையே கருதினார் என்பது “செழியரைத் தேசுகொள் கோ ராஜகேசரி வன்மரான ஸ்ரீராஜராஜ தேவன்” என்று தம்மைக் குறிப்பிட்டுக் கொள்வதாலும், பாண்டிய நாட்டின்மீது படையெடுத்துப் பெற்ற வெற்றியே இராஜராஜனின் முதன்மையான வெற்றி என்றும், இப்போரின்போது சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனை விழிஞத்தில் எதிர்கொண்டு முறியடித்திருக்கலாம் என்றும் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.
இது ஏற்புடைய கருத்து ஆகாது. ஏனெனில், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் விழிஞம் கைப்பற்றப்பட்டு விட்டது. அதன் பின்னர், சேரமானார் படை விழிஞத்தைக் கைப்பற்ற முயன்றபோது பாண்டியர்களால் விழிஞம் மீட்கப்பட்டுவிட்டது. இதுகுறித்த நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. (16) கி.பி. 9ஆம் நூற்றாண்டில் ஆய் மன்னன் விக்கிரமாதித்த வரகுணன் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு கி.பி. 926ஆம் ஆண்டளவில் சேர மன்னன் கோதை ரவிவர்மன் விழிஞத்தைக் கைப்பற்றினான் என்பதும், முதற் பராந்தக சோழனின் பட்டத்தரசி முக்கோக் கிழானடிகள் சேர அரச குலத்தவன் என்பதும் உண்மையாக இருப்பினும், கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் விழிஞம் பாண்டியர்களால் மீட்கப்பட்டு விட்டது. (17) எனவே, கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பாண்டியர்களுடைய ஆட்சிப் பகுதியாகவே விழிஞம் இருந்திருக்கிறது என்பது உறுதியான ஓர் உண்மையாகும்.
அடுத்து, பாஸ்கர ரவிவர்மன் இராஜராஜ சோழனின் சமகாலச் சேர அரசன் என்பது உண்மையே ஆயினும், அவனுடைய ஆட்சிப் பகுதியின் தென்னெல்லை, கோட்டயம் – அருகிலுள்ள பத்தனந்திட்டா – திருக்கடித்தானமே என்பதால், விழிஞமும் திருவனந்தபுரமும் பாஸ்கர ரவிவர்மன் திருவடியின் ஆட்சியில் அடங்கவில்லை என்பதை நாம் உய்த்துணர முடியும். எனவே, காந்தளூர்ச்சாலை விழிஞத்துக்கு அருகிலிருந்ததென்ற முன்முடிவின் அடிப்படையில் இராஜராஜனின் பாண்டிய நாட்டுப் படையெடுப்புடன் காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வினை இணைப்பது பொருத்தமன்று. திருவாலங்காட்டுச் செப்பேடு இராஜராஜனின் சமகாலத்து ஆவணப் பதிவு அன்று என்பதையும் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகளில் காணப்படும் குறிப்புகள் மட்டுமே சமகாலப் பதிவுகள் என்பதையும் நாம் கருத்தில் கொள்வது அவசியம். பாண்டிய நாட்டில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் அவருடைய 8ஆம் ஆட்சியாண்டுக்குப் பிறகே கிடைக்கின்றன என்பதும், காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வு 4ஆம் ஆட்சியாண்டிலிருந்தே கல்வெட்டுகளில் பதிவுபெறத் தொடங்கிவிட்டது என்பதும் கவனத்துக்குரியன.
சோழர்கள் முன்னரே பாண்டிய நாட்டை வெற்றிகொண்டு விட்டதன் விளைவாகச் செழியர்களின் தேசு (ஒளி) முன்னரே குன்றிவிட்டது. சோழர்களும் இராஜராஜனுக்கு முன்னரே இருமுடிச் சோழர்களாக உருவாகிவிட்டார்கள். காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வுக்குப் பிறகு இராஜராஜ சோழன் மூவேந்தர்களின் முடியையும் தரித்தவர் என்ற பொருளில் மும்முடிச் சோழன் என்ற பட்டம் புனையத் தொடங்கிவிட்டார். எனவே, சேர நாட்டு அரசியல் நடைமுறைகளை மாற்றி அமைத்த நிகழ்வுதான் இராஜராஜன் மும்முடிச் சோழன் என்ற பட்டம் புனைவதற்கான முகாந்திரத்தை உருவாக்கித்தந்தது எனலாம்.
இராஜராஜனுடைய சேர நாட்டுப் படையெடுப்பு பற்றிய ஒரு சமகாலப் பதிவு திருக்கோவலூர் (“ஜெய ஜெயவென்று மொழி” என்று தொடங்கும்) பாடல் கல்வெட்டில் (18) இடம்பெறுகிறது. “உதைகை முன் ஒள்ளெரி கொளுவி உதைகை வேந்தைக் கடல்புக வெகுண்டு” என்பன அவ்வரிகள் ஆகும். உதைகை வேந்து என்று இப்பாடலில் குறிப்பிடப்படுபவன் சேர அரசனே ஆவான். உதியன் நகர் என்பது உதியை, உதகை, உதைகை என வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது, மாக்கோதை நகர் என்பது மகோதை, மகோதகை, உதகை எனத் திரிந்திருக்கலாம். இவ்வூர், குமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் அமைந்துள்ள உதயகிரி எனச் சிலரால் கருதப்படுகிறது. உதகை வெற்றிக்குப் பிறகு சேரநாட்டில் தம்முடைய பிறந்த நாளாகிய சதய நட்சத்திர நாள்தோறும் விழாக் கொண்டாடப்படுவதற்கு இராஜராஜன் ஏற்பாடு செய்தார் என்றும் தெரியவருகிறது. முதற்குலோத்துங்கன் காலத்து இலக்கியமாகிய கலிங்கத்துப்பரணியில் (தாழிசை 20) இச்செயல் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
சதய நாள் விழா உதியர் மண்டிலம்
தன்னில் வைத்தவன் தனியொர் மாவின்மேல்
உதயபானு வொத்துதகை வென்றகோன்
குலோத்துங்கனின் மகனான விக்கிரமசோழனின் புகழைப் பாடும் ஒட்டக்கூத்தரின் விக்கிரமசோழன் உலா (32-34) இராஜராஜனின் சேர நாட்டு வெற்றியைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
—தூதர்க்காப்
பண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோன்
விக்கிரம சோழனின் மகனாகிய இரண்டாம் குலோத்துங்க சோழனின்மீது இயற்றப்பட்ட குலோத்துங்க சோழன் உலா (46-48)
—சூழவும்
ஏறிப்பகலொன்றில் எச்சுரமும் போயுதகை
நூறித் தன் தூதனை நோக்கினான்
– என்று இவ்வீரச் செயலைக் குறிப்பிடுகிறது.
இரண்டாம் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராசராசனைப் புகழ்ந்து ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட இராசராசன் உலா (40-42) முதல் இராஜராஜனுக்குரிய இதே வீரச்செயலைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
—சூழி
மதகயத்தாலீரொன்பது சுரமு மட்டித்து
உதகையைத் தீயுய்த்த உரவோன்
உதைகை வேந்து எனத் திருக்கோவலூர்ப் பாடல் கல்வெட்டில் குறிப்பிடப்படுபவன் பாஸ்கர ரவிவர்மனாகவே இருக்க வேண்டும். அவனது தலைநகரான கொடுங்கோளூரை (திருவஞ்சைக்களம்) மகோதகை எனக் குறிப்பிடுவதுண்டு. எனவே, இராஜராஜன் ஒள்ளெரி கொளுவிய உதகை, கொடுங்கோளூரே எனத் தெரிகிறது. (19) மேலும், பதினெட்டு காடுகளைக் கைப்பற்றிச் சேர நாட்டை இராஜராஜன் தமது ஆதிக்கத்தின் கீழ்க் கொணர்ந்த நிகழ்வு என்பது, கொங்கு நாட்டு வழியாகச் சென்று – பாலைக்காட்டுக் கணவாய் ஊடாகச் – சேர நாட்டிற்குள் புகுந்து திருச்சிவப்பேரூர் (திருச்சூர்) வழியாகவோ, பரதப்புழை ஆற்றங்கரையிலுள்ள திருநாவாய் வழியாகவோ திக்விஜயம் செய்து பெற்ற வெற்றியாகவோ இருக்க இயலும்.
காந்தளூர்ச்சாலை கலமறுத்து இராஜராஜ சோழன் மும்முடிச் சோழனாக முடிசூடிய பின்னரும், காந்தளூர்ச்சாலைப் பயிற்சிக்கூடம் மூடப்பட்டு விடவில்லை. திருநாவாய்த் திருத்தலத்தில் நிகழ்ந்துவந்த மகாமக விழாவையும் அவ்விழாவின்போது நிகழ்ந்த போட்டிகளையும் மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவந்துள்ளன எனத் தெரிகிறது. அதே வேளையில், சேர நாட்டு அரசியலில் நம்பி திருப்பாத (நம்பூதிரி) பிராம்மணர்களின் ஆதிக்கம் மேலோங்கத் தொடங்குவதையும் அவதானிக்க முடிகிறது.
இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனின் “திருமன்னி வளர” எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில் 21 தலைமுறை க்ஷத்திரியர்களை அழித்த புராண புருஷனாகிய பரசுராமன், சாந்திமத் தீவில் பாதுகாப்பாக ஒளித்துவைத்த கிரீடத்தினை இராஜேந்திர சோழன் கவர்ந்துவந்த செய்தி குறிப்பிடப்படுகிறது. (20) மட்டுமின்றி, இராஜேந்திர சோழனின் புதுவை – திருவாண்டார் கோயில் கல்வெட்டின் மெய்க்கீர்த்திப் பகுதியில் “தண்டாற் சாலை கலமறுத்த கோப்பர கேசரி வர்மரான ஸ்ரீராஜேந்திர சோழ தேவன்” என்ற வரி இடம்பெற்றுள்ளது. (21) இராஜேந்திர சோழனின் மகனான முதல் இராஜாதிராஜனின் ‘திங்களேர்தரு’ எனத்தொடங்கும் மெய்க்கீர்த்தியில் பின்வரும் வரிகள் இடம்பெற்றுள்ளன:
வேணாட்டரசைச் சேணாட்டொதுக்கிந்
கூவகத்தரசைச் சேவகந் துலைத்து
மேவு புகழிராம குட மூவர் கெட முனிந்து
மிடல் கெழுவில்லவன் குடர் மடிக் கொண்டுதன்
நாடு விட்டோடிக் காடு புக்கொளிப்ப
வஞ்சியம் புதுமலர் மிசைந்தாங் கெஞ்சலில்
வேலை கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து
“வேணாட்டு அரசனை வானுலகத்துக்கு அனுப்பி, கூபக அரசனின் வீரத்தையழித்து, மூஷிக குல ராமகுட மூவரை வீழ்த்தி, சேரனைக் காட்டுக்குத் துரத்தி, திருவஞ்சைக் களத்தில் வஞ்சி மாலை சூடி, கடற்கரையில் அமைந்துள்ள காந்தளூர்ச்சாலை கலமறுத்து” என்பது இவ்வரிகள் உணர்த்தும் பொருளாகும். மூஷிக வம்சம் குறித்து ‘மூஷிக வம்ச காவியம்’ என்ற சமஸ்கிருத நூல் ஒன்று உள்ளது. மூஷிக வம்சத்தவரின் தனி ஆட்சி சேர நாட்டின் வட நாட்டில் தொடங்கிவிட்டது, ஆய்வேள் ஆட்சிப் பகுதியில் வேணாட்டு அரச வம்சம் ஒன்று மீண்டும் உயிர்த்தெழுந்துவிட்டது என்றும் தெரிய வருகிறது.
இத்தகைய அரச வம்சங்களின் ஆட்சி என்பது, பரம்பரை ஆட்சி முறையே என்பதும், 12-13ஆம் நூற்றாண்டுகளில் இவ்வரசுகள் நம்பி திருப்பாத பிராம்மணர்களுடன் சம்பந்த உறவுகொண்ட மருமக்கள் தாய சாமந்த அரசுகளாக உருவாகத் தொடங்கிவிட்டன என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
இராஜாதிராஜனுக்குப் பிறகு, கி.பி. 1070ஆம் ஆண்டில் பதவியேற்ற முதல் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்திலும் காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வும், சேர நாட்டுப் படையெடுப்பும் நிகழ்ந்துள்ளன. கலிங்கத்துப்பரணி (தாழிசை 370)
வேலை கொண்டதும் விழிஞம் அழித்ததும்
சாலை கொண்டதும் தண்டுகொண்டல்லவோ
எனக் குறிப்பிடுவதை முன்னரே கண்டோம். முதற் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழனின்மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட ‘விக்கிரம சோழன் உலா’ (கண்ணி 24) குலோத்துங்கனின் இவ்வீரச்செயல் பற்றி
சேலைத் துரந்து சிலையைத் தடிந்திருகால்
சாலைக் கலமறுத்த தண்டினான்
எனக் குறிப்பிடுகிறது. குலோத்துங்க சோழனால் மகோதைப் பட்டினம் (கொடுங்கோளூர் – திருவஞ்சைக்களம்) அழிக்கப்பட்டதாகவும், அப்போதைய சேர அரசர் ராமவர்மன் குலசேகர ராஜா தனது தலைநகரைக் காக்க முடியாததால், கொல்லத்தைத் தன் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தான் என்றும் கருதப்படுகின்றன. சில அறிஞர்கள் இவனையே வேணாட்டு அரசர்களின் மூதாதை எனக் கருதுகின்றனர். இப்படையெடுப்பில் குலோத்துங்க சோழனின் சார்பில் பங்கேற்றவன் பாண்டிய மன்னன் பராந்தக பாண்டியன் ஆகலாம். (22) இம்மன்னன் குலோத்துங்கனின் தென்கலிங்கப் படையெடுப்பில் முதன்மையான பங்கேற்றதாகத் தெரிகிறது. தென்கலிங்கப் போரில் தெலுங்குச் சோழ அரசனாகிய பீமன் என்பவனுடைய ஸ்ரீகாகுளத்தைக் கைப்பற்றித் தென் கலிங்கத்தை வென்றதாக இம்மன்னன் குறிப்பிட்டுக்கொள்கிறான்.
இம்மன்னனுடைய “திருவளரச் செயம் வளர” எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில் “தெலிங்க வீமன் குளம் கொண்டு தென்கலிங்கம் அடிப்படுத்துத் திசையனைத்தும் உடனாண்ட ஸ்ரீபராந்தக தேவன்” என்ற குறிப்புள்ளது. இம்மெய்க்கீர்த்தியில் “சேரலனைச் செருவில் வென்று திறைகொண்டு வாகை சூடிக் கூபகர்கோன் மகட்குடுப்பக் குலவிழிஞம் கைக்கொண்டு கன்னிப்போர் செய்தருளிக் காந்தளூர்ச்சாலை கலமறுத்து” என்ற வரிகளும் இடம்பெற்றுள்ளன. (23) காந்தளூர்ச்சாலை கலமறுத்தது பற்றிய கடைசிக் குறிப்பு இதுவே எனலாம். இராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கிச் சற்றொப்ப ஒரு நூற்றாண்டு காலம் சோழர்கள் காந்தளூர்ச்சாலையைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். கேரள வரலாற்று அறிஞர்கள் இதனை “நூற்றாண்டுப் போர்” என்றே குறிப்பிடுவர்.
இந்நூற்றாண்டுப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிற காலகட்டத்திலேயே பார்த்திவசேகரபுரம் (சாலை அமைந்துள்ள ஊர்) திருமால் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள முதல் இராஜாதிராஜன் கல்வெட்டு ஒன்றில் “காரித்துறைக் கேரளன் ஆதிச்ச வன்மனாயின ராஜாதிராஜ வள்ளுவ நாடாழ்வான்” என்ற ஓர் அதிகாரி குறிப்பிடப்படுகிறான். மலைப்புரம் மாவட்ட வள்ளுவ நாட்டுப் பகுதியிலிருந்து பூர்விக அரச குலத்தவர் பலர் சோழர்கள் ஆதரவுடன் தென்குமரிப் பகுதியில் குடியேறத் தொடங்கிவிட்டதை இத்தகைய குறிப்புகள் உணர்த்துவதாகக் கொள்ளலாம். (24) சேர நாட்டின் வட பகுதியிலிருந்து ஆய்வேள் நாட்டினை நோக்கிய குடியேற்றங்கள் காந்தளூர்ச்சாலையை முன்மாதிரியாகக் கொண்டு, பார்த்திவசேகரபுரம் சாலை உருவாக்கப்பட்ட காலகட்டத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும்.
நிர்வாகச் சீரமைப்பு தொடர்பான இத்தகைய முயற்சிகளும், குடியேற்றங்களும், ஊர்ப்பெயர் சூட்டல்களும் புதுமையானவை அல்ல. ஆயினும், சேரர் குல க்ஷத்திரிய வர்ணத்தவர்களின் குடியேற்றம் என்ற அளவில் காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வுக்குப் பிறகே பெருமளவு குடியேற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் வள்ளுவ நாடாள்வான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு முதன்மையான குடும்பத்தினைத் திருச்செந்தூர்ப் பகுதியிலுள்ள தென்றன்கரைப் புரவரி நல்லூர் (தென்புரையூர்) – மணத்திப் பகுதியில் குடியேற்றினர். சேர நாட்டு நில வருவாய் நிர்வாக அமைப்பாகிய தேசம் என்ற பெயரை மணத்திப் பகுதிக்குச் சூட்டினர். “வள்ளுவ நாடாழ்வான் தேசமாய இம்மணத்தி” என்றே கி.பி. 1245ஆம் ஆண்டுக்குரிய மணத்தி – குட்டித்தோட்டம் இடையாற்றீஸ்வரம் கல்வெட்டு குறிப்பிடுகிறது. வடகேரள வள்ளுவ நாட்டை ஒட்டியமைந்துள்ள கண்ணனூரைச் சேர்ந்த வீரமழகிய பாண்டிய தேவன் என்பவர் இப்பகுதியின் வள்ளுவ நாடாள்வான் தேசத்திற்கு ஸ்ரீகாரியமாக (செயலராக) இருந்துள்ளார். (25)
இப்போது சேர நாட்டு க்ஷத்திரியர்கள் பற்றி ஆராய்வோம். பெருமாக்கோதை மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் சேர நாட்டில் நான்கு வர்ணத்தவர்கள் நிர்வாகத்தில் நான்கு சபைகள் இருந்தன. இரிஞ்ஞாலக்குடா சபை பிராம்மணர்களாலும், மூழிக்களம் சபை க்ஷத்திரியர்களாலும், பரவூர் சபை வைசியர்களாலும், அயிராணிக்களம் சபை சூத்திரர்களாலும் நிர்வகிக்கப்பட்டன. க்ஷத்திரிய வர்ணத்தவருக்குரிய சபை 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகிய திருமூழிக்களத்தினைத் தலைமையகமாகக் கொண்டதாகும். (26) திருமூழிக்களம் சபையை நிர்வகித்த க்ஷத்திரியர்கள் “மூழிக்களத்து ஒழுக்கவிச் சான்றார்” என்று குறிப்பிடப்படுகின்றனர். சேர நாடு முழுமையிலும் கோயில்கள் அனைத்தையும் இவர்கள் வகுத்த நடைமுறைப்படிதான் நிர்வகித்து வந்தனர். இக்கச்சம் மூழிக்களக்கச்சம் எனப்பட்டது.
அதாவது, இச்சான்றார்கள் (நாடார் எனத் தற்போது அழைக்கப்படும் சாதியார்) மூழிக்களம் என்ற ஊர்ப்பெயரால் குறிப்பிடப்பட்டாலும் சேர நாடு முழுமையும் பரவியிருந்தனர். இவர்கள் ஒழுக்கவிச் சான்றார்கள் எனக் குறிப்பிடப்படக் காரணமே கோயில்களின் ஒழுக்கு அவி (நடைமுறை ஒழுங்கும் நிவேதனமும்) தொடர்பான இவர்களுடைய அதிகாரத்தால்தான். தமக்கென உடைமைகள் ஏதுமின்றி இவர்கள் பிச்சை ஏற்று வாழ்ந்தனர். பிச்சை என்பது புத்த பிட்சுக்களின் பிக்ஷை போன்று மிகவும் மரியாதையுடன் அளிக்கப்படுவதாகும். மூழிக்களத்துச் சான்றார் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இல்லறத்தார் வீட்டில் பிச்சை ஏற்கச் சென்றால் அந்த இல்லத்தைச் சேர்ந்தவர்கள் அவரை மரியாதையுடன் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச்சென்று பாதபூஜை செய்து உணவளித்து அனுப்புவர். வீட்டிற்கு உரியோர் அழைத்தும் சான்றார்கள் அவர்கள் வீட்டில் பிச்சை ஏற்கச் செல்லவில்லை என்றால் அது அந்த இல்லத்தார்க்கு வழங்கப்படும் தண்டனையாகக் கருதப்படும். எனவே, மூழிக்களத்துக் கச்சத்தை சேர நாட்டுக் கோயில் நிர்வாக அமைப்பு சார்ந்தோர் யாரும் மீறுவதில்லை. இவ்விவரம் சேர நாட்டுக் கல்வெட்டுகளில் கி.பி. 13ஆம் நூற்றாண்டுவரை பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது:
இக்கச்சம் பிழைச்சார் மூழிக்களத்து ஒழுக்கவிச் சான்றாரைப் பிழைச்சோருள் படுவது. இக்கச்சம் பிழைச்சார் இல்லத்துப் பிச்சை புகப் பெறார். (27)
பெருமாக்கோதை மன்னர்கள், குறிப்பாக ஆதி சங்கரரின் சம காலத்துச் சேர அரசனாகிய இராஜசேகரன் யாயாவரன் என்று குறிப்பிடப்படுவதைக் கண்டோம். இத்தகைய யாயாவரர்களுக்குரிய ஒழுக்கத்தினையே முழிக்களத்துச் சான்றார்கள் பின்பற்றியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. தர்ம சாஸ்திர நூல்கள் இல்லறத்தாரில் சாலின், யாயாவரன் என்ற இரு வகையினரைக் குறிப்பிடுகின்றன. இவர்களுள் யாயாவரன் ஆசார்யனாக இருக்கும்பட்சத்தில் தான் அளிக்கின்ற கல்விக்கோ, பயிற்சிக்கோ தட்சிணையாகக்கூட எதையும் பெறக்கூடாது என்பது விதியாகும். (28) சேர நாட்டுச் க்ஷத்திரிய சான்றோர்களும், பெருமாக்கோதையாகத் தேர்வு பெறுகின்ற மன்னர்களும் இல்லறத்தில் ஈடுபட்டாலும் உடைமையில் பற்றின்றி எத்தகைய தியாக வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதற்கு இவை சான்றுகளாகும்.
ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்த இராஜசேகரன், ஆசார்யன் அல்லது குரு என்று வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படுகிறான். இம்மன்னன் ஆதி சங்கரருக்குக் களரிப் பயிற்சி, வர்மக் கலை போன்றவற்றைக் கற்பித்துள்ளான் என நாம் ஊகித்துப் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய போர்க்கலைப் பயிற்சிகள் புத்த பிட்சுக்களால் பயிலப்பட்டு வந்தன என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது. மூழிக்களத்து ஒழுக்கவிச் சான்றோர் மரபும் – அது பாகவத வைணவ மரபாகவே இருப்பினும் – புத்த சமயத்தால் தாக்கம் பெற்ற ஒரு மரபாகவே இருக்க முடியும். ஆதி சங்கரர், புத்த சமய மரபுகள் பலவற்றை வேதாந்த மரபுக்குள் புகுத்தியவர் என்ற பொருளில் அவரை வைதிக வேடமிட்ட (பிரசன்ன) பௌத்தர் என்றே விசிஷ்டாத்வைத ஸ்தாபகர் இராமானுஜர் குறிப்பிடுகிறார்.
ஆதி சங்கரர் இராஜசேகரனிடம் பயிற்சி பெற்றார் என்பதற்குப் பிற்காலச் சமூக வரலாற்று ஆவணப் பதிவு ஒன்று ஆதாரமாக அமைகிறது. சேலம் திருச்செங்கோடு அருகிலுள்ள கருமாபுரம் என்ற ஊரிலுள்ள சான்றோர் (நாடாள்வார் அல்லது நாடார்) சமூக மடம் ஒன்று ஆதி சைவ சிவாச்சாரியார் ஸ்ரீமத் ஆண்ட சிவசுப்பிரமணிய பண்டித குருசுவாமியின் தலைமையில் இயங்குகிறது. அம்மடத்திற்குரிய செப்பேடு கி.பி. 17ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன் கூடியதாகும். சான்றோர் சாதியினரின் பாரம்பரியப் பெருமையைப் பட்டியலிடும் அப்பட்டயம் “மன்னர்க்கு மன்னனாம் சங்கராச்சாரியாருக்கு தயவுடன் உபதேசம் தானருளிச் செய்தவன்” என்று சான்றோர் குல மூதாதை ஒருவனைப் புகழ்கிறது. (29) இம்மூதாதை சேர நாட்டுச் சான்றோனாகிய இராஜசேகரன்தான் என்பதை நாம் எளிதில் உய்த்துணர முடியும்.
கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கேரளச் சத்திரியர்கள் பலர் குடிபெயர்ந்து சென்று, தங்களுடைய போர்க்கலை அறிவு, நிர்வாக அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் பாண்டிய நாட்டு ஆட்சியமைப்பில் இடம்பிடித்தனர். ‘மூழிக்களத்துச் சான்றார்’ என்பதை ‘விழிச் சான்றார்’ என்பதன் திரிபாகிய ‘முழிச் சான்றார்’ என்று பொருள்கொண்டதன் விளைவாகவோ, இயல்பாகவே சமூகத்தின் அத்யக்ஷர் அல்லது ‘முதுகண்’ணாக இருந்தோர் என்ற பொருளிலோ, சான்று என்ற தமிழ்ச் சொல் சாக்ஷி (ச+அக்ஷி = கண்ணால் கண்ட சான்று) என வடமொழியில் குறிப்பிடப்படுவதையொட்டிச் சான்றார் குலத்து நாயன்மாரான ஏனாதிநாதரை ‘சாக்ஷி குலோத்பவர்’ என உபமன்யு பக்தவிலாசம் என்ற சமஸ்கிருத நூல் குறிப்பிடுவதை அடியொற்றியோ, ‘கேரளி மிழிச்சானார்’ என்றே தம்மைச் சிலர் குறிப்பிட்டுக்கொண்டதையும் காண முடிகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் வட்டம் ஓணான்குடி எனும் ஊரில் கூலவிராகுக்கொல்லை என்ற இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள பலகைக் கல்லில் “கேரள மிழிச்சானான் தென்னவதரையன் ஆசிரியம் சுபமஸ்து” என்று கி.பி. 14ஆம் நூற்றாண்டைய எழுத்தமைதியுடன்கூடிய கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 1311இல் நிகழ்ந்த மாலிக்காபூர் படையெடுப்புக்குப்பின் நிலை குலைந்துபோன தமிழகத்தில், போர்த் திறமையும் மக்களைப் பாதுகாத்து சுயாட்சி நடத்தும் அனுபவமும் படைத்த சிலர், தமது ஆசிரியத்தில் (பாதுகாப்பில்) சில பகுதிகளைப் பிடித்து ஆண்டுள்ளனர். தென்னவதரையன் என்ற பெயருடைய கேரளச் சத்திரியனான இம்மனிதன் ஓணன்காரிக்குடிப் (ஓணான்குடி) பகுதியைச் சில காலம் ஆண்டுள்ளான் என இக்கல்வெட்டால் புலனாகிறது.
நூற்றாண்டுப் போருக்குப் பிறகு காந்தளூரின் நிலைமை என்னவாயிற்று என்பதைப் பார்ப்போம். புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் எல்லைப் பகுதியில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சுந்தர பாண்டியன் பட்டினம் என்ற ஊரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் “மலை மண்டலத்துக் காந்தளூரான எறிவீர பட்டினத்து ராமன் திரிவிக்கிரமனான தேவேந்திர வல்லபப் பதினெண் பூமிச் சமயச் சக்கரவர்த்திகள்” என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (30) காந்தளூர் வணிகர்களின் ஆதிக்கத்திலும் வணிகர் பாதுகாப்புப் படையான எறிவீரர்கள் பாதுகாப்பிலும் நிர்வகிக்கப்பட்ட ஒரு கடற்கரைப் பட்டினமாக உருவாகிவிட்டது என்பது இதனால் தெரியவருகிறது.
இதன் பின்னர், அப்பகுதியில் மாப்பிள்ளைமார் எனப்படும் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் உருவாகி வேரூன்றத் தொடங்கியது. சமூக அமைப்பிலும், அரசியல் அமைப்பிலும் க்ஷத்திரியச் சான்றோர்களின் பங்களிப்பு குறித்த சுவடுகள்கூட இதற்குப்பின் இல்லாமல் போய்விடுகின்றன. நம்பி திருப்பாத பிராம்மணர்கள், அவர்களுடன் சம்பந்த உறவு கொண்ட மறக்குல அகம்படியர்களான நாயர்கள் ஆகியோரின் நிர்வாகத்தில் அனைத்துக் கோயில்களும் செயல்படத் தொடங்குகின்றன. கி.பி. 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை இந்நிலையே தொடர்கிறது. கி.பி. 1780க்குப் பின் நிகழ்ந்த திப்பு சுல்தானின் படையெடுப்பின் விளைவாக வள்ளுவக் கோன் திருப்பாதம் அரண்மனை இடிக்கப்பட்டது. வள்ளுவக் கோனாத்ரி திருவிதாங்கோடு இராஜ்யத்திற்குத் தப்பியோடியது, பேரளவில் நிகழ்ந்த இஸ்லாமிய மதமாற்றங்கள் ஆகியவற்றையும் மீறி, கோயில் நிர்வாகம் இயங்கிவந்தது.
1857ஆம் ஆண்டில் நிகழ்ந்த சிப்பாய்கள் புரட்சி எனப்படும் முதல் சுதந்திரம் போராட்டத்திற்குப் பிறகு, ஆங்கிலேய அரசு இந்தியர்களின் மதம் மற்றும் வழிபாடுகள் தொடர்பான நடைமுறைகளில் தலையிடுவதில்லை என வெளிப்படையாக அறிவித்ததன் விளைவாக, மாப்பிள்ளைமார் இஸ்லாமியர்களின் சுயாட்சி முயற்சிகள் தீவிரமடைந்தன. இக்கால கட்டத்திற்குப் பிறகு, 1926வரை நடைபெற்ற மாப்பிள்ளைமார் கலவரத்தில் மலைப்புரம் பாலக்காடு மாவட்டங்களில், குறிப்பாக வள்ளுவ நாடாள்வானின் பூர்விக ஆட்சிப் பகுதியில் பல கோயில்கள் இடிக்கப்பட்டு, ஆவணங்கள் எரிக்கப்பட்டு, நம்பூதிரி ஜன்மிகள் – நாயர்கள் கூட்டணியினர் கொல்லப்பட்டு மிகப்பெரும் அராஜகம் அரங்கேறிற்று.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் துருக்கியில் தோன்றிய கிலாபத் இயக்கத்தின் வெற்றி இப்பகுதி மாப்பிள்ளைமார் முஸ்லிமளுக்கு மிகப்பெரும் உத்வேகத்தை அளித்தது. மாப்ளாஸ்தான் என்ற பெயரில் நம்பூதிரி ஜன்மி – நாயர் கூட்டணியிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றித் தங்கள் சுயாட்சியின் கீழ்க் கொண்டுவருகின்ற ஆவேசமும், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபடுகின்ற முனைப்பும் இணைந்து ஒரு சுதந்திரப் போராட்டம் போன்ற தோரணையில் இது நிகழ்ந்தது. மாப்ளா கலவரம் என வழங்கப்படுகின்ற இக்கலவரம் ஆங்கிலேய அரசால் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டது என்பது உண்மையே. ஆயினும், வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் இக்கலவரத்தில் வரலாற்றுத் தடயங்கள் பல அழிக்கப்பட்டமை மிகப் பெரிய சோகமான நிகழ்வே ஆகும்.
இராஜராஜ சோழனால் எந்தக் காந்தளூர்ச்சாலை ஒரு கலமாக, வில்லங்கமாகக் கருதி அழிக்கப்பட்டதோ அக்காந்தளூர்ச்சாலை மலைப்புரம் மாவட்டம் திருநாவாய்க்கு அருகிலுள்ள காந்தளூர்தான் என்ற உண்மை கேரள வரலாற்று ஆசிரியர்களுக்குக்கூடப் புலப்படாமல் போனதுதான் மிகப் பெரும் விந்தையாகும்.
அடிக்குறிப்புகள்:
[1] South Indian Inscriptions, Vol. III, No. 205.
[2] வரி. 5-7, பக். அ-11. பாண்டியர் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிலையம், சென்னை-115, 1999. “பார்த்திவசேகரபுரம் என்று பேர் இட்டு காந்தளூர் மர்யாதியால் தொண்ணூற்று ஐவர் சட்டர்க்கு சாலையும் செயதான் ஸ்ரீகோக்கருநந் தடக்கன்”
[3] South Indian Inscriptions, Vol. VII, No. 430.
[4] 1836-37ஆம் ஆண்டில் ஜே.பி. ராட்லரால் தொகுக்கப்பட்ட A Dictionary Tamil and English அகராதியில் கலன் என்ற சொல்லுக்கு Controversy, Dispute, Claim, Pretension, Law suit என்றும், கலன் தீர்த்தல் என்ற தொடருக்கு Indemnify என்றும் பொருள் கூறப்பட்டுள்ளன. p. 42, Part II, Dictionary Tamil and English, International Institute of Tamil Studies, Taramani, Chennai-113, 2000.)
[5] தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் கோயில் தேவராயன்பேட்டைக் கல்வெட்டு, South Indian Inscriptions, Vol. XIII, No. 250.
[6] பெருமகன் என்ற சொல்லின் திரிபாகிய ‘பெருமான்’ என்பதே கோதை என்ற சேர குலப் பட்டத்துடன் இணைந்து பெருமாக்கோதை எனப்பட்டது. பெருமாக்கோதை என்பது ‘பெருமாள்’ என்றும் சுருக்கிக் கூறப்படும். பெருமகன் என்ற தமிழ்ச் சொல்லே இலங்கையிலுள்ள சிங்கள பிராமிக் கல்வெட்டுகளில் ‘பருமுக’ என்ற வடிவில் இடம்பெற்றுள்ளது. இப்பட்டமே பருமன், வர்மன், பன்மன் எனப் பலவித வடிவங்களில் சத்திரிய வர்ணத்தவனைக் குறிக்கும் பட்டமாக (Surname) வழங்கிற்று. வர்மன் என்பது பிராம்மணர்களுக்குரிய பட்டமென்று தமிழக அமைச்சர் பெருமகன்(?) ஒருவர் தஞ்சையில் அண்மையில் பேசியுள்ளார். தமிழகத்தில் நிலவும் ஆய்வு வறுமையை இது உணர்த்துகிறது.
[7] கேரளோல்பத்தி, கேரளம் பரசுராம க்ஷேத்ரமாக மாறிவிட்ட பின்னர் எழுதப்பட்ட நூலாதலால், க்ஷத்ரிய வர்ணத்தவர்க்கு முதன்மையளிக்காமல், 32 பிராம்மண ஊர்ச் சபையார் மாமாங்கத்தில் (மகாமகத்தில்) சேரமான் பெருமாளாகத் தேர்வு செய்யப்படுபவரை அங்கீகரித்ததாகக் குறிப்பிடுகிறது. மேலும், கடைசிப் பெருமாள் அரசர், மாமாங்கம் நடத்தும் பொறுப்பினை வள்ளுவக் கோனாத்ரி (வள்ளுவக்கோன் திருப்பாதம் மருமக்கள் வழி அரசர்) வசம் விட்டுச் சென்றதாகவும், பின்னர் கோழிக்கோடு சாமூதிரி (சாமிதிருப்பாதம்) அவரிடமிருந்து இப்பொறுப்பினைப் பறித்துக் கொண்டதாகவும் கூறுகிறது. பார்க்க: The Special Features of Chera Inscriptions, M.G.S. Narayanan, in the Journal of the Epigraphical Society of India, Vol. XXIV, Editor: M.D. Sampath, Mysore-570012, 1998.
[8] A Descriptive Memoir of Malabar, Lieutenants Ward and Conner, Kerala Gazetteres, Govt of Kerala, 1995.
[9] கேரள வரலாற்றறிஞர் திரு. எம்.ஜி.எஸ். நாராயணன் அவர்கள் காந்தளூர்ச்சாலை என்பது பிராம்மணர்களுக்குப் போர்ப் பயிற்சி – நிர்வாகப் பயிற்சி வழங்கிய கல்விச் சாலையாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார். இக்கருத்து ஏற்புடையதாகாது. பார்க்க: Kandalur Salai – New Light On the History Of Aryan Expansion in South India, Proceedings of the Indian History Congress, 32nd Session, Jabalpur, 1970.
[10] Epigraphia Indica Vol. XIII, p. 146.
[11] பெருமாள் மன்னர்கள் தமது தலைநகரான திருவஞ்சைக் களத்தில் இருந்த கோயில்களின் நிர்வாகத்தை மட்டுமே தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என எம்.ஜி.எஸ். நாராயணன் கருத்துத் தெரிவித்துள்ளார். பார்க்க: The Special Features of Chera Inscriptions, முன் சுட்டிய கட்டுரை.
[12] Travancore Archaeological Series, Vol. II, p. 10, Editor: T.A. Gopinatha Rao, Department of Cultural Publications, Kerala, 1992.
[13] History of Dharmasastras, P.V. Kane.
[14] பக். 14-15, தென்ன்னிந்தியக் கோயில் சாசனங்கள், கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை, 1957.
[15] Travancore Archaeological Series, Vol III, Part 1, No. 54, K.V. Subhramania Iyer, 1921.
[16] கோமாறஞ் சடையனின் ஆட்சிக் காலத்து நடுகல். Travancore Archaeological Series, Vol. I, p. 232, Editor: T.A. Gopinatha Rao, Department of Cultural Publications, Govt. of Kerala.
[17] கல்வெட்டாய்வாளர் வி. வெங்கையா அவர்கள் இத்தகைய கருத்தினைத் தெரிவித்துள்ளார். பார்க்க: Footnotes 14, 15. Chapter IX, Colas, K.A.N. Sastry.
[18] South Indian Inscriptions, Vol VII, No. 863.
[19] ராஜராஜன் ஒள்ளெரி கொளுவிய உதகை எது? செந்தீ. நடராசன், பழங்காசு இதழ் 5, பக். 49.
[20] செருவினற் சினவி இருபத்தொரு கால் அரசு களைகட்ட பரசுராமன் மேவரும் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்…தண்டாற்கொண்ட கோப்பர கேசரி வர்மன். – முதல் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி. பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
[21] Annual Report on Epigraphy 363/1917.
[22] முதற் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டை நிர்வகித்துவந்த சோழ அரச குல ஆளுநர்களாகிய கங்கைகொண்ட சோழ பெருமாக்கள் வம்சத்துச் சோழ-பாண்டியர்களை ஒடுக்குவதற்குப் பாண்டிய அரச குலத்தைச் சேர்ந்த பராந்தக பாண்டியனைப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், குலோத்துங்கன் தாய் வழியில்தான் சோழனே தவிர, தந்தை வழியில் சாளுக்கியன் ஆவான். அதனால்தான் போலும், குலோத்துங்கனுக்குக் கடன்பட்டிருந்தால்கூட சுயாட்சி நடத்துகின்ற ஒரு பேரரசருக்குரிய தோரணையுடன் பராந்தக பாண்டியன் தனது மெய்க்கீர்த்தியைப் பொறித்து வைத்துள்ளான்.
[23] Travancore Archaeological Series, Vol. 1, p. 49.
[24] Travancore Archaeological Series, Vol. 1, p. 55.
[25] வரலாறு – இதழ் 6, இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சி-17.
[26] திருமூழிக்களம் குலகம் (கோயிலகம்) க்ஷத்திரிய சபையே என்பது கேரள தேச வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது. P. 10, Edited: T. Chandrasekaran, Govt Oriental Manuscript Library, Chennai-5, 1960. இவ்விவரம் பற்றி மேலும் அறிவதற்குப் பார்க்க: p. 231, Chapter 6, Travancore State Manual, R. Nagamayaa; pp. 266, 274-275, 371, Vol II, Part I, Kerala State Gazetter, Adoor K.K. Ramachandran Nair, Govt of Kerala, திருமூழிக்களம் என்பது பிராம்மணக் குறுங்குழுவால் நிர்வகிக்கப்பட்ட சபை என்று கேரள வரலாற்று அறிஞர்கள் சிலர் தவறாகக் கருதுகின்றனர்.
[27] கோட்டயம் மாவட்டம் எட்டிமானூர் வட்டம் குமாரநல்லூர் பகவதி கோயிற்கல்வெட்டு – கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி. Travancore Archaeological Series, Vol. III, Part I, No. 49. இத்தகைய ஓம்படைக் கிளவி கேரள மாநிலம் முழுமையும் பல கோயிற் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.
[28] pp. 641-2, Vol. II, part 1, The History of Dharamsastras, P.V. Kane, Bandarkar Oriental Research Institute, Pune-411004, 1997.
[29] பக். 231, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், செ. இராசு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991.
[30] முத்தூற்றுக்கூற்றம் கள ஆய்வு, எஸ். இராமச்சந்திரன், ஆய்வு வட்டக் கட்டுரைகள், தொகுதி-1, ஆய்வு வட்டம், சென்னை, 1995.
- See more at: http://solvanam.com/?p=10841#sthash.5RMg2rdu.dpuf

நன்றி : சொல்வனம்