Tuesday, October 27, 2015

புராஜெக்ட் மதுரை கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி: கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-3. தொகுத்தோர்: நூ.த.லோகசுந்தரம், நூ.த.ராணி




கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி (3):
சிராமலை அந்தாதி,
கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-2,
கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி -3
Verses discovered in
Epigraphical Inscriptions :
1. cirAmalai antAti,
kalvETTup pATalkaL manjari 2 & 3


Acknowledgements:
Preparation, Etext-keying, Proof-reading, TSCII & UTF-8 Webversions:
N D LogaSundaram & his sister Ms. N D Rani - Chennai
PDF version : Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland This webpage presents the Etext in Tamil script-UTF-8 encoding. To view Tamil text correctly you need UTF-8-compliant Tamil fonts installed on your computer and the browser set to display webpages with "utf8" charset.



© Project Madurai 1998 - 2009 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic text of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at website. You are welcome to freely distribute this file, provided this heade part is kept intact


கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-3
இப்பகுதியில்
(1) சிதம்பரம் சபாநாதர் கோயிலில் கண்டது - 17 பாடல்கள்
(2) தென்காசி விசுவநாதர் கோயில் கண்டது - 17 பாடல்கள்

கோயிலுள் பலஇடங்களில் அரசினர் கல்வெட்டாய்வாளர் தம்மால் படி
எடுக்கப்பெற்ற, பல்வேறு மன்னர் காலத்தனவாக, பல்வகை யாப்பினில்
அமைந்து ஒன்றிரண்டாக, பற்பலப் பொருள் மற்றும் கருத்தில் காணும்
தனிப்பாடல்களின் தொகுப்பு. 


சிதம்பரம் சபாநாதர் கோயில்

(இவைபற்றிய சில குறிப்புகள் இப்பக்கக் கடையில் காண்க)


(1) சிதம்பரம் சபாநாதர் கோயில் கீழ்கோபுர வலப்பக்கச் சுவரில்
தெ.இ.க.தொ. IV # 621
(நேரிசை வெண்பா)
1.1
ஓதும் சகரஆண்(டு) ஓர்ஒருபத் தெட்டின்மேல்
ஆதி மூலநாளில் ஆனிதனில் - சோதி
துளங்கிட மேல்சோழன் சோழ குலவல்லி
களங்கமற வைத்தான் கரு கீழ்கோபுர உள்வலப்பக்கச்சுவரில்,
தெ.இ.க.தொ. IV # 621, AR-173 0f 1892
(நெடிலடி ஆசிரி விருத்தம்)
1.0
வண்ணம் திகழும் கொடிமாடம் மன்னும் சோழ குலவல்லி
நண்ணும் தலைமை உடையாரை நாமார் புகழ்ப் பாமாலை
எண்ணும் படிஇல் புகழாளர் என்றே அன்றே என்னுடைய
கண்ணும் பழனக் கழுமலமும் கலந்தார் திருவு மலர்ந்தாரே உள்சுற்று வடபக்கச்சுவரில்
இ.க.தொ. V பக்.105
(கழிநெடிலடி ஆசிரி விருத்தம்)
1.3
நானிலத்தை முழு(து)ஆண்ட சயதரற்கு
நாற்பத்து நாலாம் ஆண்டில்
மீனநிகழ் ஞாயிற்று வெள்ளிபெற்ற
உரோகிணிநாள் இடபம் போதால்
தேனிலவு பொழில்தில்லை நாயகர்தம்
கோயில்எலாம் செம்பொன் வேய்ந்தாள்
ஏனவரும் தொழு(து) எத்தும் ராசராசன்
குந்தவைபூ விந்தை யாளே இரண்டாம் சுற்று வாயில் மேல் பக்கச்சுவரில்
தெ.இ.க.தொ. IV # 228
(நேரிசை வெண்பா)
1.4
மாறுபடு மன்னர்தம் கைபூண்ட வாள்இரும்பு
வேறுமவர் கால் பூண்டு விட்டதே - சீறிமிக
வேட்டம் திரிதரு களிற்று விக்கிர பாண்டியன்தன்
நாட்டம் கடைசிவந்த நாள் கீழ்கோபுர தெற்கு கதவுநிலையில்
தெ.இ.க.தொ. IV # 228
(நேரிசை வெண்பா)
1.5
மீனவற்கு விக்கிரம பாண்டியற்கு வேந்தர்இடும்
யானை திருஉள்ளத்(து) ஏறுமோ - தானவரை
வேன்றதல்ல மேனிநிறம் வெள்ளைஅல்ல செங்கனக
குன்ற(து)அல்ல நாலல்ல கோடு கீழ்கோபுர வடபக்கச் சுவரில்
தெ.இ.க.தொ. IV # 228
(நேரிசை வெண்பா)
1.6
ஏந்து மருவி இரவி புரவியின்முன்
பூந்துவலை வீசும் பொதியிலே - காய்ந்துசின
வேணா(டு) தனைவென்ற விக்கிரம பாண்டியன்மெய்ப்
பூண்ஆரம் பூண்டான் பொருப்பு கீழ்கோபுர வடபக்கச் சுவரில்
தெ.இ.க.தொ. IV # 228
(நேரிசை வெண்பா)
1.7
வெங்கண் மதயானை விக்கிரம பாண்டியனே
பொங்கி வடதிசையில் போகாதே - அங்கிருப்பாள்
பெண்என்று மீண்ட பெருமாளே பேர்இசையாழ்ப்
பண்ஒன்றும் வேய்வாய்ப் பகை கீழ்கோபுர தெற்கு கதவுநிலையில்
(நேரிசை வெண்பா)
1.8
கொங்கர் உடல்கிழியக் குத்திஇரு கோட்(டு)எடுத்து
வெங்கண் அழலில் வெதுப்புமோ - மங்கையர்கள்
சூழத் தாமம்புனையும் சுந்தரத்தோள் மீனவனுக்(கு)
ஈழத்தான் இட்ட இறை இரண்டாம் சுற்று மேல்பக்கச் சுவரில்
தெ.இ.க.தொ. IV # 228
(கழி நெடிலடி ஆசிரி விருத்தம்)
1.9
சீர்கொண்ட வெள்ளாறு குருதிப் பெருக்கில்
செவ்வாறு பட்டோட அவ்வாறு சென்றப்
போர்வென்று வனப்பேய் நடங்கண்ட தற்பின்
புலியூர் நடங்கண்ட புவனேக வீரா
பார் பண்(டு)அளந்(து)உண்டோர் ஆலில்கிடக்கும்
பச்சைப் பசுங்கொண்டலே பத்மநாபா
கார்கொண்ட நின்கையில் வேலுக்கு வற்றும்
கடல்அல்ல என்பேதை கண்தந்த கடலே கீழ்கோபுர வடபக்கச்சுவரில்
தெ.இ.க.தொ. IV # 619
(சந்த விருத்தம்)
1.10
வட்ட வெண்குடை மன்னர் தம்புகல்
காண்டு மாமுடி கொண்டுபோர்
மாறு கொண்டெழு போச ளன்தடை
கொண்டு வாணன் வனம்புகத்
தொட்ட வெம்படை வீரன் வெற்றி(யே)
புனைந்த சுந்தர மாறன்முன்
சூழிவிட்டதெ லிங்கர் சேனை(யை)
துணித்து வென்ற களத்துமேல்
விட்ட வெம்பரி பட்ட பொழுதெழு
சோரி வாரியை ஒக்கு நீர்
மேல் மிதந்தநி ணப்பெ ருந்திரள்
வெள்நு ரைத்திரள் ஒக்குமுன்
பட்டவெங்கரி யந்த வீர(ரே)
படிந்த மாமுகில் ஒக்கும்வீழ்
படுமணிக் குடை அங்கு வந்(து)எழு
பரிதி மண்டலம் ஒக்குமே கீழ்கோபுர வலப்பக்கச்சுவரில்
தெ.இ.க.தொ. IV # 618
(கலித்துறை)
1.11
காரேற்ற தண்டலைக் காவிரி நாடனைக் கானுலவும்
தேரேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்ந்து
தாரேற்ற வெம்படை ஆரியர் தண்டுபடத் தனியே
போரேற்று நின்ற பெருவார்த்தை இன்றும் புதுவார்த்தையே கீழ்கோபுர வலப்பக்கச்சுவரில்
தெ.இ.க.தொ. IV # 619
(கலித்துறை)
1.12
பண்பட்ட மென்மொழிப் பைந்தொடி கொங்கையர்க் கவைமேல்
கண்பட்ட முத்த வடம்கண்டு காக்கிலன் காடவர்கோன்
எண்பட்ட சேனை எதிர்பட் டொழுக எழுந்த புண்ணீர்
விண்பட் டலையப் படைதொட்ட சுந்தர மீனவனே கீழ்கோபுர வலப்பக்கச்சுவரில்
தெ.இ.க.தொ. IV # 620
(கலித்துறை)
1.13
இனவ(ரிக் கி)ம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெம்கடும்கண்
சினமத்த வெம்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லைமன்றில்
வனசத் திருவுடன் செஞ்சொல் திருவை மணந்ததொக்கும்
கனகத் துலைஉடன் முத்தத் துலையில் கலந்ததுவே கீழ்கோபுர தெற்குக் கதவுநிலையில்
(கலித்துறை)
1.14
மீளா வழிசெல்ல வேணாடர் தங்களை வென்ற தடம்
தோளான் மதுரைமன் சுந்தர பாண்டியன் சூழ்ந்திறைஞ்சி
ஆளான மன்னவர் தன்ஏவல் செய்ய அவனி முட்ட
வாளால் வழிதிறந் தான்வட வேந்தரை மார்திறந்தே கீழ்கோபுர தெற்குக் கதவுநிலையில்
(கலித்துறை)
1.15
வாக்(கு)இயல் செந்தமிழ் சுந்தர பாண்டியன் வாள்அமரில்
வீக்கிய வன்கழல் கண்ட கோபாலனை விண்ணுலகில்
போக்கிய பின்(பு)அவன் தம்பியர் போற்றப் புரந்(து)அரசில்
ஆக்கிய வார்த்தை பதிநா லுலகமும் ஆகியதே கீழ்கோபுர வடப்பக்கச்சுவரில்
(கலித்துறை)
1.16
புயலும் தருவும் பொருகைப் புவனேக வீரபுனல்
வயலும் தரளம்தரு கொற்கைக் காவல வாரணப்போர்
முயலும் கணபதி மொய்த்தசெஞ் சோதி முகத்(து)இரண்டு
கயலுண்(டு) எனும்அதுவோ முனி(வு)ஆறிய காரணமே சிதம்பரம் கோயிலில் (?)
தெ.இ.க.தொ. XII. பக்.10
(கலித்துறை)
1.17
சுந்தரத் தோரணம் நாட்டித் துகில்கொடி சூட்டிமுத்துப்
பந்தரப் பாலிகை தீபம் பரப்புமின் பல்லவர்கோன்
செந்தளிர்க் கைகொத் தபையன் மகளுடன் தில்லைஉலா
வந்(து)அளிந்தளிக் கும்பெரு மாள்வெற்பர் மாதை மணம்செயவே

மேல்கண்ட பாடல்களுக்கு சிறுகுறிப்புகள்


பாடல் எண்வரிசையில்

சிதம்பரம் சபாநாதர் கோயில்
 
1.1  சக ஆண்டு 1018 ல் (CE 1096)ஆனிமாத மூல நாளில் சோழகுலவல்லி என்னும் ஓர் சோழமன்னனின் அதிகாரி தன் மேல் வந்த களங்கத்தை மாற்ற இக்கோயிலுக்கு தானம் செய்து வேண்டிக்கொண்டான். (CE 1096) ல் ஆட்சி செய்த சோழ மன்னன் குலோத்துங்கன்-I
1.2
மேற்கண்ட சோழ குலவல்லி எனும் அதிகாரியைப் அவர்பால் பொருள் பெற்ற கழுமலம் எனும் ஊர்ச்சேர்ந்த (அரச குலம்/கணிகை?) ஒரு பெண் போற்றுவது.
1.3
இராசராசன் (?) குந்தவை எனும் சோழகுல அரசி மன்னனின் 44 ம் ஆண்டில் தில்லை சபாநாதர் கோயில் முழுதும் செம்பினால் கூறை வேய்ந்தாள். மன்னனின் 44 ம் ஆண்டு குறிக்கப்படுதலால் 50 ஆண்டுகள் ஆண்ட முதல்குலோத்துங்கனே (1070-1120) ஆதல் வேண்டும். எனவே செம்பொன் வேய்ந்த காலம் (1112) ஆகும்.
1.4
விக்கிரம பாண்டியன் (1283-96) எனும் பாண்டியன் சீற்றம் கொண்ட போது அவன்முன் மற்ற மன்னர் யாவரும் பயந்து வாட்களை தங்கள் காலடிலேயே
போட்டு விட்டனர்
1.5
(மேற்கண்ட) விக்கிரம பாண்டியற்கு அவன்பால் தோற்ற மன்னர் திறையாக கொடுக்கும் யானை நிரை கருப்பு நிறமுடையதே, இருகொம்புகளை (அயிராவதங்கள் அல்ல) உடையதே, பலபோர்களில் தோற்றதே, (இவன் வீரத்திற்கு பொருந்தாத அற்பமானதே).
1.6
(மேற்கண்ட) விக்கிரம பாண்டியன் கோபமடைந்து வென்றது அருவிகளின் தூவாலை வீசும் பொதியில் சேர்ந்த வேணாடு 
1.7
(மேற்கண்ட) விக்கிரம பாண்டியனே மேலும் வடதிசையில் செல்லாது திரும்பியதேன்? அங்கு வீரம் குறைந்தவரே (பெண் ஒப்பவர்) ஆட்சியில் இருப்பவர் என்பதாலா?
1.8
சுந்தர பாண்டியன் கொங்கு நாட்டவரின் யானைப் படையை வென்றவன். இவன் வீரத்தை கண்டு ஈழ மன்னன் போரிட பயந்து இறை செலுத்த விரும்பினான்.
மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 - 1239)
சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1252 - 1271)
சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1296 - 1310)
என 3 சுந்தர பாண்டியர்கள் ஆண்டனர். முதல் இருவரின் மெய்கீர்த்திகள் ஈழத்தையும் வென்ற வர்களாகவும் தில்லையில் வணங்கினராகவும் குறிக்கின்றன. இவ்வெண்பா 1.14, 1.15 (கலித்துறை) பாடல்களுக்கு அடுத்து உள்ளதாகலாம். என அவ்விரு பாடலுக்குரியவரே இப்பாடல் குறிப்பவராகும்.
அவைகளில் கண்டகோபாலன் கணபதி எனும் இரு தெலுங்கு நாட்டு மன்னர்கள் தோற்றதைக் குறிப்பதால் வடவர்களை வென்றதாக உள்ள முதலிருவரில் யாரேனுமாகலாம்
1.9
புவநேக வீரா (பாண்டியன் மன்னா !) சோழர் படையை வென்ற குருதியில் பேய்கள் களித்து நடமாட கண்டபின் தில்லை மன்றில் சிவன்தன் திருநடம் காண வந்தனையோ !.திருமால் போல் மக்களைப் பேணுபவனே எங்கள் (நாட்டு) பெண்களின் கண்கள் வற்றாத கடலேயாகும் (அழவிடாதே என்பது)
1.10
சுந்தர பாண்டியன் போசள மன்னன், வாணன், தெலிங்கர் முதலியோரை வென்ற பொது அவர் குருதியில் நிணம் நுரை மிதந்தது வானிலெழு மேகக்கூட்டத்திடை தோன்றும் ஞாயிறு வட்டம் போல் திகழ்கின்றது
1.11
பாண்டிய மன்னன் சோழனை வனம் புகவைத்து (வென்று) வடநாட்டு ஆரியருடன் தனியாக நின்று போர் (அன்று) புரிந்ததை பலர் புகழ்ந்து பேசியது இன்றும் ஒலிக்கிறது
1.12
காடவர்களை (பல்லவகுலத்தோன்றல்களை) சுந்தரபாண்டியன் வென்றதால் மங்கையர் மார்பின் பிளவிடை தொங்கும் முத்து மாலைகளை அவர் காத்துக் கொள்ளா விட்டால் தான் என்ன?
1.13
யனைப்படையுடைய சுந்தரபாண்டியன் தில்லையில் வென்று ஆள்வது திருமகளையும் (பசும்பொன் வேய்த கோயில் மற்றும் வளநாடு அதனால்) கலைமகளையும் (வெண்மை நிற முத்துகள் விளையும் நாடுடையன் ஆதலால்) ஒருசேர மணம்புரிந்தது ஒக்கும் (சோழ பாண்டியநாடு என இருநாட்டினை ஆள்கிறான்)
1.14
சுந்தரபாண்டியன் வடமன்னரை வென்றமை குறிக்கப்படுகின்றது
1.15
சுந்தர பாண்டியன் கண்டகோபாலன் எனும் தெலுங்கமன்னனை வென்று அவன் இளவல்களுக்கு தன்கீழ் இருந்தாள அரசுரிமை தந்தமை குறிக்கப்படுகின்றது
1.16
புவநேக வீரன் (பாண்டியன்) கணபதி எனும் வடுகமன்னனின் மேல் இருந்த கோபத்தை அடக்கிக் கொண்டான் ஏனெனில் அவன் முகத்தில் (தன் கொடி) மீன்களைப்போல் கண்களைக் (வீரமற்ற பெண்ணாக)கண்டதாலோ? (பணிந்ததனால் என்க)
1.17
பல்லவர் குலத்துதித்த மன்னவனொருவன் அபயனின் (சோழன்) மகளுடன் கைகோத்து வந்து மலைநாட்டார் மகளை திருமணம் செய்ய தில்லைநகர் வீதிகளில் உலா வரப் போகிறான் அதற்கு முத்துப்பந்தல் கொடி தோரணம் முதலிய நாட்டி விளக்கு பாலிகை வைத்து வரவேற்க தயாராகுங்கள் என்கிறது இப்பாடல்


தென்காசி விசுவநாதர் கோயில்
(2) தென்காசி விசுவநாதர் கோயில் மேற்படி கோயிலில்
தி.க.தொ. I பக். 96-97
(கலித்துறை)
2.1
அணிகொண்ட விந்த அணங்கும் ஒன்றேஅடி யேற்குனக்கு
மணிகொண்ட வாசன் மணியும் ஒன்றே பகைமன்னரையும்
பிணிகொண்ட காரையும் முந்நீரையும் பெரும் பூதத்தையும்
பணிகொண்ட செண்பகத் தென்னா பராக்கிரம பாண்டியனே முன்புறவாயிலிலுள்ள (இடிந்த) கோபுரச் சுவரில்
திருவிதாங்கூர் கல்வெட்டுத் தொகுதி I பக்.96
(ஆசிரிய விருத்தம்)
2.2
அன்பினுடன் சகாத்தம் ஆயிரத்து முந்நூற்(று)
அறுபத் தெட்டின்மேல் வைகாசித் திங்
மன்தியதி ஈரைந்தில் பூருவ பக்க
மருவு தசமியில் வெள்ளிவாரம் தன்னில்
மின்திகழ் உத்திரநாள் மீனத்தில் வாகை
வேல்அரிகே சரிபராக் கிரம மகிபன்
தென்திசையில் காசிநகர் கோயில் காணச்
சென்று நின்று தரிசனைதான் செய்வித்தானே இதுவுமது
(ஆசிரிய விருத்தம்)
2.3
பன்னுகலி யுகநாலா யிரத்(து)ஐஞ் ஞூற்(று)ஐம்
பத்தெட்டின் மேல்எவரும் பணிந்து போற்றச்
சென்னெல்வயல் தென்காசி நகரின் நல்கார்த்
திகைத்திங்கள் தியதிஐந்தில் செம்பொன்வாரம்
மன்னியமார் கழிநாளில் மதுரைவேந்தன்
வடிவெழுத(ஒ) ணாதபராக் கிரம மகிபன்
சொன்னவரை போல்திருக்கோ புரமும் காணத்
துடியிடையாய் உபானமுதல் தொடங்கினானே மேற்படி கோயிலில்
தி.க.தொ. I பக். 96-97
(கலித்துறை)
2.4
மென்காசை மாமலர் அன்ன மெய்யோற்கும் விரிஞனுக்கும்
வன்காசு தீர்த்திடும் விச்சுவநாதன் மகிழ்ந்திருக்கப்
பொன்காசைத் மெய்என்று தேடிப் புதைக்கும் இப்பூதலத்தில்
தென்காசி கண்ட பெருமான் பராக்கிரம தென்னவனே இடிந்தகோபுரச்சுவர்
தி.க.தொ. I பக். 96-97
(கலித்துறை)
2.5
ஆராயினும் இந்த தென்காசி மேவும் பொன்னாலயத்து
வாராத தோர் குற்றம் வந்தால் (அ)ப்போ(து) அங்கு வந்(து) அதனை
நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாரார் அணியப் பணிந்தென் பராக்கிரம பாண்டியனே இடிந்தகோபுரச்சுவர்
தி.க.தொ. I பக். 96-97
(கலித்துறை)
2.6
சேல் ஏறிய வயல் தென்காசி ஆலயம் தெய்வச்செய
லாலே சமைத்தது இங்கு என்செயல்(அ)ல்ல (அ)தனை இன்னும்
மேலே விரிவுசெய்தே புரப்பார் அடி வீழ்ந்(து) அவர்
பால் ஏவல்செய்து பணிவன் பராக்ரம பாண்டியனே இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை)
2.7
அரிகேசரி மன் பராக்கிம மாறன் அரன் அருளால்
வரிசேர் பொழில் அணி தென்காசிக் கோயில் வகுத்து வலம்
புரிசேர் கடல் புவி போற்ற வைத்தே அன்பு பூண்டு இதனைத்
திரிசேர் விளக்கெனக் காப்பர் பொற்பாதம் என் சென்னியதே இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை)
2.8
சாத்திரம் பார்த்தங்ஙன் யான்கண்ட பூசைகள் நடாத்தி
ஏத்தி அன்பால் விசுவநாதன் பொற் கோயில் என்றும் புரக்கப்
பார்த்திவன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடன் அங்(கு)
கோத்திரம் தன்னில் உள்ளார்க்கும் அடைக்கலம் கூறினனே இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை)
2.9
மனத்தால் வகுக்கவும் எட்டாத கோயில் வகுக்க முன்னின்
எனைத்தான் பணிகொண்ட நாதன் தென்காசியை என்றும் மண்மேல்
நினைத்து ஆதரம் செய்து அங்கு ஆவல் புனையும் நிருபர்பதம்
தனைத்தான் இறைஞ்சி தலை மீது யானும் தரித்தனனே இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை)
2.10
பூந்தண்பெழில் புடைசூழுந் தென்காசியைப் பூதலத்தில்
தாம் தன் கிளையுடனே புரப்பார்கள் செந்தாமரையாள்
காந்தன் பராக்ரம கைதவன் மான கவசன் கொற்கை
வேந்தன் பணிபராகி எந்நாளும் விளங்குவரே இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை) (இறங்கற்பா)
2.11
காண்தகு நீர்புனை தென்காசிக் கோபுரக் கற்பணி ஆ(று)
ஆண்டில் முடித்துக் கயிலை சென்றான் அகிலேசர்பதம்
பூண்டுறை சிந்தை அரிகேசரி விந்தைப் போர் கடந்த
பாண்டியன் பொன்னின் பெருமான் பராக்கிரம பாண்டியனே இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை) (இறங்கற்பா)
2.12
ஏரார் சகாத்தம் முந்நூற்றுடன் ஆயிரத்து எண்பத்தைஞ்சில்
சீராரும் மார்கழி சித்திரை நாளில் சிறந்து குற்றம்
வாராத பூரணையில் பராக்கிரம மாறன் (எங்கோன்)
காராரும் கண்டத்தரன் கயிலாயத்தான் கண்டனனே இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை) (இறங்கற்பா)
2.13
கோதற்ற பத்தி அறுபத்து மூவர்தம் கூட்டத்திலோ
தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ செம்பொன் அம்பலத்தோ
வேதத்திலோ சிவலோகத்திலோ விசுவநாதன் இரு
பாதத்திலோ சென்று புக்கான் பராக்கிர பாண்டியனே இடிந்தகோபுரச்சுவரில்
தி.க.தொ. I பக்.105
(கலித்துறை) (இறங்கற்பா)
2.14
ஏடியல் மாலை அணிந்தாலும் வாடும் எனப் புலவர்
பாடிய வீர வெண்பாமாலையைப் பொன்னின் பாண்டியன் போர்
தேடியவேல்செழியன் குலசேகரத் தென்னனைப்போல்
சூடிய வேந்தருண்டோ ஒருவேந்தரைச் சொல்லுகிலே முன் மண்டப வடபுறச்சுவரில்
தி.க.தொ. I பக். 103
(கலித்துறை)
2.15
விண்ணாடர் போற்றும் தென்காசிப் பொற் கோபுரம் மீதில்எங்கள்
அண்ணாள்வி செய்த பணிஇப்படிக்குறையாய்கிடக்க
ஒண்ணாதெனக் கண்டுயர்ந்த தட்டோடெங்கும் ஊன்றுவித்தான்
மண்ணாளும் மாலழகன் குலசேகர மன்னனே தென்பக்கச் சுவரில்
தி.க.தொ I பக்.105
(ஆசிரிய விருத்தம்)
2.16
ஏறிய சகாத்தமாயி ரத்துநானூற் றெழுபதின்
னாலில் வருஷம்பரி தாபிதனில் மாதம்
தேறிய சித்திரை இருபத் தொன்பதாகும்
தேதிஇரண் டாம்பக்கம் திங்கள்உ ரோகிணிநாள்
வீறுயர்ந்த மிதுனத்து நெல்வேலிமாறன்
வீரவேள் குலசேகர செழியனென்று சுரர்
ஆறுபுனை அகிலேசர் காசியிலே விளங்க
அணிமவுலி தரித்தனன் பரராசர் பணிந்தனரே பெரிய கோபுர வடபக்கச் சுவரில்
(ஆசிரிய விருத்தம்)
2.17
அத்தர்தென் காசிக்கண் டோன்கண்ட ஆலயமும்
அடியாரும் வாழ்வு பெறவந்(த)
அழகன்அதி வீரரா மன்சருவ மானிய
மதாகக் கொடுத்த படிதான்
சித்திரைப் பரணியூர்த் தெண்ட தோஷப்பொன்
திரும்பக் கொடுத்(து)அவ் வூரில்
செங்கோட்டை யார்கொண்ட பகுதியு நிறுத்தித்
திருக்கோயிலின் பகுதியாய்
வைத்ததை அறக்கழித்(து) ஆயங் கணக்குடன்
மகாநவமி திருநாளிடை
வந்த காணிக்கைப் பாட்டப்பகுதி காணம்பல்
வரிஇவை எல்லாம் கழித்துப்
பத்தியாய்க் குணராம நாதற்கு மேற்படி
பணம்கழித்(து)அடியர் வீட்டுப்
பணமும் கழித்(து)இப் படிச் சருவ மானியப்
பட்டையமும் அருளினானே



தென்காசி விசுவநாதர் கோயில்

2.1
மண்தலத்தை எல்லாம் வென்று ஆளும் சண்பகராமனான பராக்கிரம  பாண்டியனே உனக்கு பிரமனின் கைஅக்குமணியும் அணிகளணிந்த  கலைமகள் கடைக்கண் பார்வையும் ஒன்றே (கல்வி ஞானம் என இரண்டையும் ஒன்றாக காண்பவன்)
2.2
அரிகேசரி பராக்கிரம பாண்டியன்(CE1422-63)மரபுடை அரசருள் கடைக்கால பாண்டியர் தொடர்ச்சியில் ஆண்டவன். சகம்1368ல் (CE1446) வைகாசி மாதம், 10 ம் தேதி, வளர்பிறை தசமியாகும் வெள்ளிக்கிழமை, உத்திர நாளில் மீன லக்கினத்தில் தென்காசிக் கோயில் வழிபாடு செய்ய வந்திருந்து பலரும் இந்த ஆலயத்தை தொழும் பேற்றினை அளித்தான். (அக்கலத்தில் பெருமைமிகு வழிபாட்டாளர் வருகையை மிகநுண்ணியமாக எழுதி வைக்கும் எண்ணம் இருந்துள்ளமைக்கு இப்பாடலும் ஓர் சான்று) [ கல்வெட்டாளர் படிஎடுக்கும் காலத்து இக்கோயில் கோபுரம் இடிந்த நிலையிலிருந்தாக குறிக்கப் பட்டுள்ளது.1960 ல் யான் பார்த்த போதும் மின்னல் தாக்கி இடிந்து பலகாலம் இப்படியே உள்ளதாக கூறினர்.ஆனால் தற்காலம் (2008) ஆங்கு புதிதாக கோபுரம் கட்டி ஏறக்குறைய 10=15 ஆண்டுகள் கடந்துள்ளது ]
2.3
மேற்கண்ட பராக்கிரம பாண்டியன் கலியுகம் 4558ல் (CE 1457) (அ·தாவது 11 ஆண்டுகள் கழித்து) கார்த்திகைத் மாதம் ஐந்தாம் தேதி செவ்வாயன்று இந்த தென்காசி விசுவநாதர் கோயிலில் பொன்மலை போல் ஒரு கோபுரம் கட்ட தன் அரசியுடன் வந்து யாவரும் போற்ற தொடக்கவிழா நடத்தினான்.
2.4
அழிந்துபடும் செல்வத்தினை சேர்த்து புதைத்து வைத்து மடியும் இவ்வுலகில் பலகாலம் அழிமாலிருக்கும் கற்கோயிலை கட்டி பராக்கிரம பாண்டியன் புகழ்பெற்றான்
2.5 >>>> 2.10
பாண்டியன் தான் கட்டிய கோயிலை தன்காலத்திற்குப்பிறகு அதனை காப்பாற்றி போற்றி வர தானே பலவாறு பணிந்து பிற்காலத்தோரைக் கோட்டுக்கொள்வதாக உள்ள இப் பாடல்கள் காலம் செல்வம் எனபல இடர்பாடுகளுக்கிடையே முடிக்கப்பற்ற கோயிலின்பால் அவனுக்கு இருந்த ஈடுபாட்டினைக் காட்டுகின்றன. பராமரிப்பதில் குறைவரும்போது அதனை நீக்குபவர்கள் அதனை விரிவுசெய்வோர் எரி விளக்குச்சுடர்போல் அணையாமல் காப்பவர்கள் இவ்வகையில் பலவிதத்தில் ஆதரவும் ஊக்கமும் கொடுப்பவர்கள் என பலவிதமாகப் புரப்வர்கள் மன்னரால் போற்றப்படுவர் எனவும் மற்றும் அதற்கும் மேல் அவர்தம் பாதங்கள் என்தலைமேல் என மனமுருக கேட்டுக்கொள்வது கண்ணீர் மல்க வைப்பதாகும்
2.11 >> 2.14
இவை இரங்கற்பாக்கள் மன்னன் சகம் 1385 (C E 1463) விண்ணுலகம் எய்தினான் என்கின்றது
2.15
பாண்டியனுக்குப் பிறகு முடிசூடிய அவன் இளையோன் காலத்திலும் குறையாக நின்ற சில கோயில் பணிகள் முற்றுப்பெற்றன
2.16
சகம் 1470 (CE 1457) பரிதாபி ஆண்டு, சித்திரை மாதம் 29 தேதி வளர்பிறை(இருண்ட பட்சம்) திங்களாகிய உரோகிணிநாள் மீன லக்கினத்தில் பாண்டியன் வீரவேள் குலசேகரசெழியன் என வீறு பெருபெயருடன் தென்காசி விசுவநாதர் கோயிலில் பல அரசர் போற்ற பணிய முடிசூடினான்
2.17
முன்பு (பராக்கிரம) பாண்டியன் கட்டிய தென்காசி விசுவநாதர் கோயிலுக்கு (பின்னாளில் ஆட்சியில் வந்த) அதிவீரராமபாண்டியன் (முன்னோர் அக்கோயிலுக்கு)சர்வமான்யமாக கொடுத்திருந்த சொத்துக்களை உரிமைகளை, (ஓர்)சண்டையில் வெற்றி (பரணி) கண்டோனுக்கு நஷ்டஈடாக பொன் கொடுத்து மீட்டு (அடுத்துள்ள கேரளர் எல்லையில் படும்) செங்கோட்டையை ஆளும் தலைவர்கள் கொள் உரிமைகளையும் நிறுத்தி நல்லறத்தை நாட்டி மகாநவமி திருநாள் (ஓர் கேரளமன்னன் நினைவுநாள்?) வந்த காணிக்கை, பாட்டம், காணம் இவை கழித்து குணராமநாதன்பெறுவது கழித்து அடியார் வீட்டுப் பணமும் கழித்து (மற்றதை) சர்வமான்யமாக கொள்ள (செப்புப்)பட்டயம் எழுதிக் கொடுத்தான். {நாளது வரை தென்காசி செங்கோட்டை எனும் தமிழ்மொழி பேசும் சிறு பகுதிகள் முன்பு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சின்குட்பட்டு இருந்தது 1956 ல் இந்திய மொழிவாரி மாநில அமைப்பு முறையில் கன்னியாகுமரி மாவட்டம் சேர்க்கப்பட்டததைப் போல் 'தமிழ்நாடு' மாநிலத்திற்குள் திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதியானது} ஆகவே திருவிதாங்கூர் கல்வெட்டு தொகுதி என குறிக்கப்பட்டுள்ளது
(நூ.த.லோகசுந்தரமுதலி)

No comments:

Post a Comment