Wednesday, October 14, 2015

புராஜெக்ட் மதுரை கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி: கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-2 . தொகுத்தோர்: நூ.த.லோகசுந்தரம், நூ.த.ராணி




கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி (3):
சிராமலை அந்தாதி,
கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-2,
கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி -3
Verses discovered in
Epigraphical Inscriptions :
1. cirAmalai antAti,
kalvETTup pATalkaL manjari 2 & 3


Acknowledgements:
Preparation, Etext-keying, Proof-reading, TSCII & UTF-8 Webversions:
N D LogaSundaram & his sister Ms. N D Rani - Chennai
PDF version : Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland This webpage presents the Etext in Tamil script-UTF-8 encoding. To view Tamil text correctly you need UTF-8-compliant Tamil fonts installed on your computer and the browser set to display webpages with "utf8" charset.


© Project Madurai 1998 - 2009 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic text of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at website. You are welcome to freely distribute this file, provided this heade part is kept intact

கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-2  
 
முற்காலத்து தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட மண்ணகத்தில்
தற்காலத் 'தமிழ்நாட்டு' எல்லையில் அமையாத புலங்களின்று
முன்பு அரசு தொல்லியல் துறையினரால் படிஎடுக்கப்பட்டுள்ள
கல்வெட்டுகளில் காணப்படும் பாடல்கள் சிலவற்றின் தொகுப்பு

(பாடல்களைப்பற்றி சிறுகுறிப்புகள் இப்பக்க கடையில் காண்க)


(1)

இலங்கை கொழும்புநகர் காட்சிசாலை கல்ஒன்றில்
காண்பது. தெ.இ.க.தொ. IV # 1413

(நேரிசை வெண்பா)

  கங்கணம்வேற் கண்ணிணையால் காட்டினார் காமர்வளைப்
பங்கயக்கை மேல்திலதம் பாரித்தார் - பொங்கொலிநீர்
சிங்கைநக ராரியனைச் சேரா அனுரேசர்
தங்கள் மடமாதர் தாம்

(2)

இலங்கை அனுராதபுர தொல்லியல் அலுவலகத்தில்
பாதுகாத்துள்ள கல்வெட்டொன்றில் காண்பது
தெ.இ.க.தொ. IV # 1405
(நேரிசை வெண்பா)
போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந்
தீதி லருள்சுரக்குஞ் சிந்தையா - னாதி
வருதன்மங் குன்றாத மாதவன்மாக் கோதை
ஒருதன்ம பால னுளன்

(3) 

ஆந்திரத்தில் கோதாவரி வட்டம் திராட்சாராமம்
பீமேசுரர் கோயில் கிழக்கு மதிலில் காண்பது
தெ.இ.க.தொ. IV, # 1026
(நேரிசை வெண்பா)
இம்பர் நிகழ விளக்கிட்டான் இடர்கரம்பைச்
செம்பொனணி வீமேச் சரந்தன்னில் - உம்பர்தொழ
விண்ணுய்ய நின்றாடு வானுக்கு வேலைசூழ்
மண்ணுய்ய நின்றாடு வான்

 (4) 

மேற்படி கோயில் இரண்டாம் கோபுரத்தில் காண்பது
தெ.இ.க.தொ. IV, # 1338 (416 of 1893)
(ஆசிரிய விருத்தம்)
புயன்மேவு பொழில்தஞ்சை முதல்பஞ்ச
நதிவாணன் புதல்வன் பூண்ட
வயமேவு களியானை முடிகொண்டான்
மாநெடுவேல் வத்தர்வேந்தன்
இயல்மேவு தோளபயற் கிருபத்தை
யாண்டதனின் இடர்க்கரம்பைச்
செயல்மேவு ஈசற்குத் திருநந்தா
விளக்கொன்று திருத்தினானே

 (5) 

கருநாடக மாநிலம் சித்தலகட்டம் ஜங்கமகோட்டை
கொல்லஹள்ளியில் பைரவன் நிலத்துக்கல்லில் கண்டது
கர்நாடக கல்வெட்டுகள்-தொகுதி X # 9
(ஆசிரியப்பா)
பூமகள் புணர புகழது வளரப்
புவியோர் போற்ற வெங்கலி கடிந்து
செங்கோல் ஓச்சி பூழி வேந்தன்
கோழியர் குலபதி ஸ்ரீராஜ ராஜன்
ஸ்ரீவிக்கிரம சோழதேவர்க்(கு) யாண்(டு)இரண் டதனில் 5 நீரார் நிகரிலி சோழமண் டலத்துக்
காரார் வயல்சூழ் கைவர நாட்டுள்
மாட மாளிகை மண்டபம் ஓங்கிய
கூட- - - - - - - - கொற்ற
வாயதில் பாகட்டூர் - - - - - ம் 10
பாவையர் நடம்பயில் சூகுட் டூரில்
தொன்னில நிகழத் தருமமே நல்கும்
தன்மபாலன் அருமொழிச் சதுர்வேதி மங்கலத்து
பல்லோர் புகழும் நல்லூர் முதல்வன்
மாத்திரை அதனில் மாநிதி நல்கும் 15
ஆத்திரை யர்கோன் ஆதுலர் சாலை
புராணம் ஓதும் பார்ப்பனப் பெருமாள்
சாமுண் டையன் தன்பெருந் தேவி
பூச்செறி குழலாள் வீச்சமை பயந்த
தண்டமிழ் மாலையன் தாரணி ஏத்தும் 20
எண்டிசை நிகழும் இருபிறப் பாளன்
கொண்டல் அன்ன குவலய தந்திரன்
ஓங்கு புகழான் உதயமார்த் தாண்ட
பிரம்ம ராயன் தேம்கமழ் தாரோன்
செழுமறை வாணன் தன்திருத் தமையன் 25
தன்பெய ராலே பொன்புரி சடைஅணி
புண்ணியன் விண்ணவர் நாமீச்சர - - -
- - னி(து) ஏத்தியசோ மீச்சரந் திருக்கோயில்
எடுப்பித் - - சிறந்து - லாணம் இசைப்ப
திருப்பிர திஷ்டை நிகழப் பண்ணி 30
திருவடி நிலையும் செம்பொனால் அமைத்துத்
துருவது வளர உமாசகி தன்திருமேனி
இருநிலம் போற்ற எழுந்தருளி வித்துக்
கேதகை மல்லிகை கிஞ்சுக மஞ்சரி
பாதிரி புன்னை (பலாசம்) ஆர்மகிழ் 35
சிதலை மௌவல் செருந்தி சண்பகம்
மாதவி என்றிவை வளம்பெற அமைத்துச்
செங்கண் விடையோன் சென்னி மன்னும்
கங்கை நீரும் மண்ணும் கொணர்ந்து
குருக்கள் குளிர கோயில் மேற்பால் 40
திருக் குளமாய்த் தீர்த்தம் கண்டு
செழுநிம் ஏத்தக் . . . . . . . .
கொட்டும் தட்டும் குலவி நிலவ
விருப்புறும் அடியார் மேவி சிறக்கத்
திருப்பணி ஆற்றித் தேவர் தானமாகப் 45
பெரிஏரி யில்நிலம் ஓரா யிரமும்
சிற்றேரி யில்நிலம் ஓரா யிரமும்
சீரார் செந்தமி ழோர்களிப் பார
ஈரா யிரம்குழி . . னிற் திகழக்
குணபதி யாய்எம் குற்றம் கடியும் 50
கணபதி யார்குமரர்க்(கு) இருநூறு குழியும்
மாராய னான பிரா . . . . . .
சூரிய தேவர்க்(கு) இருநூறு குழியும்
அஞ்சொல்லா . . த்தவ . . செய்வான்
திருக்களத் துமேல்பால் பாலை நன்நிலம் 55
ஒருவே லியும்நற் பண்ணையும் . . ழிந . .
பண்ணை மேல்பால் பசுஊர் நாற்பால்
எல்லை யுள்பட நஞ்சை புஞ்சை
நன்நில நிகழு நால்மறை அவர்பால்
பொன்னற விட்டு மண்ணறக் கொண்டு 70
தாரணி நிகழத் தண்கிளை வளரச்
சந்திரா தித்தர் தாம்உள் அளவும்
ஊழூழி உரவுபெற அமைத்தனன்
வாழி வாழி வையகத்(து) இனிதே

(6) 

கருநாடக மாநிலம் கோலார் வட்டம் விபூதிபுரம்
சிதைந்த ஜலகண்டேசுவரர் கோயிலில் காண்பது
கருநாடகக் கல்வெட்டுகள் தொகுதி-X # 132
தமிழ்மொழி, கிரந்த-தமிழ் எழுத்துக்களில் (CE1179)
(ஆசிரியப்பா)
திருமகள் துணைவன் ஜயமகள் நாயகன்
இருநிலம் காவலன் இளங்கோன் தழைசைமன்
வடதிசை மேருவில் வாரணம் பொறித்தோன்
குடதிசை இந்துவின் குலமுதல் சிறந்தோன்
தென்திசைக் காவிரிச் செழுநீர்க் கடந்தோன் 5 வந்திசைப் புரிந்தான் வானவன் கோன்தன்
சென்னியில் (கைவளை கோத்[து]அவன் திருக்கிளர்)
பொன்னின் ஆரமும் ஈரமும் புனைந்தோன்
எண்திசை அமரரும் இயமனும் நடுங்கிப்
பண்டுவெங் காளி பரிகலம் பறித்தோன் 10
நீள்நெடும் குன்றகம் துணித்து நாகர்
கீழ்நிலை யாலக மேப(ட) யாண்மையில்
அர(சை)ப் பொடியத் தாக்கி ஆங்கவர்
மு(ர)சம் கவர்ந்(த) மாடகலத் தமராயன்
முத்தி(ற) பருணிதன் முசுகுந்த கிரிநாதன் 15
வண்டர் பா(ல)ன் விக்கண் (டனவாத்சன்)
புரவா தீசன் செல்வன் பெயரால்
மற்றவன் திருமகள் (போல்)வழங்கு கற்பின்
மாதேவி என்பாள் பஞ்சவர் தூதன்
பானாரி புத்திரன் வெஞ்சிலை தடக்கை 20
வீர கங்கன் நடு{[வு]ற்ற சிந்தனன்
சூ}ரமன் தொடுகடற் றானைத் தோன்றற்(கு)
இளையவன் வெங்கணான் விக்ரமா தித்தற்குத்
தங்கை கூத்தற்கு தான்முன் சிறந்தவன்
ஓடக் கொ(ல்ல)த் தோங்கிய முக்கட(ல் 25
நேடிடு)ங் கோன்கச்சி காவல (னன்று)
தென்னனை அடுகளத் திட்டு வென்ற
மாகடந்த பணவிரி யுர வேந்தன்
பொன்பன பொ(ள்)புண் (நெடுவேல் புறங்காக்கும்)
எழிற்கங் கப்பெருமாள் அத்தை வாழி 30
அகலிடத் தெல்லாச் செல்வமும் தோற்றமும்
யாவையும் நில்லா (எனும்) நிலைஓதி
அருந்தவம் புரிந்த சிந்தையன் ஆகி
இருந்தறம் செய்வ(து) இயல்பென எண்ணி
சுற்றும் புரிசையும் தோரண வாயிலும் 35
கற்றளி அதுவும் கவின்பெற அமைத்து
நந்த வனமும் திருமடைப் பள்ளியும்
அமைத(ளி)க் குளமும் மடைவி ளாகமும்
ஒற்றைச் சங்கும் இரட்டைத் தாரையும்
மற்றும் பலப்பல வாச்சி(யம்) பட்டமும் 40
மணிபூம் பாரி(வர் பகடுமா புற்கட்டும்)
பலபடி நி(வந்த பரிசி லருளியன்று)
எழில்சக ரிற்றாயிரத் தொருநூற் றொன்றென
அறிஞரும் உரைத்த நாளில் அணியும்
சந்தமும் அகிலும் ஆரமும் மணியும் 45
பொன்னும் வருபுனல் சாரல் கொங்கலர்
கூ(வி)ளை கூற்றிடை உமையடு
சங்கரன் தன்னை தாபித் தனனே

(7) 

கருநாடக மாநிலம் கோலார் வட்டம் விபூதிபுரம் சிதைந்த
ஜலகண்டேசுவரர் கோயிலில் காணும் மற்றொரு பாடல்
கருநாடகக் கல்வெட்டுகள் தொகுதி-X # 131
தமிழ்மொழி, கிரந்த-தமிழ் எழுத்துக்களில். (CE1198)
(மருட்பா)
அலைகடல் உடுத்த மலர்தலை உலகத்(து)
எண்ணருங் கீர்த்தி இசையார் அதிபன்
அண்ணல்எம் குளந்தை அமரன் காதலன்
கோதில்புகழ் குவலாள மாநகரம் குடியேற்றிய
ஆதி அணிகேசன் அளகைப்பதி தானுடையோன் 5 திரைலோக்ய பட்டண ஸ்வாமி ஐயனருள்
சீராசைத் தேவ னுடனவ தரித்த
ஆயிடையாளுய்ய (த)ண்டைஅருந் ததியேஅனை யாள்தந்தாய்
திருவயிற் றுதித்த துளங்குமணி திருமார்பன்
செங்கமலப் புனல்புடைசூழ் செழுந்தொண்டை வளநாடன் 10
எங்கள்பெரி யாற்கிளைய பெரியான்மற் றீண்டுலகில்
ஒப்பரிய சகரையாண் டோரா யிரத்துமேல்
செப்பரிய நூறுகடந் திருபதுதான் சென்றதன்பின்
வென்றிபுனை கடாக்களிற்று விக்கிரம கங்கன்
குன்றெறிந்த கூரிலைவேல் கொற்றவனை யிடுவித்துக் 15
கொத்தலரும் பூம்புனல்சூழ் குவலாளத் தோரிதனில்
உத்தமத்தே நீர்நில மற்றொரு வேலையு மாளும்
சோலை அதனுக்கு வடமேற்கே விடுவித்து
திருச்செல்வம் பலபெருக்கி சி(னக்கலி)யு முப்பொழுதும்
கருத்தமைய எழுந்தருளும் படிநி(வ)ந்தம் கட்டுவித்துச் 20
சந்திரா தித்தர்வரை திருப்புகழ் நிறுத்
திந்த நானிலத்(து) இனிது வாழ்கெனவே

(8) 

ஆந்திரமாநிலம் திருப்பதி திருமலை
மேளமண்டப தென்புறச்சுவரரில் காண்பது
தேவஸ்தானக் கல்வெட்டுத் தொகுதி-1, #-80
(நேரிசை வெண்பா)
எத்தலமும் ஏத்தும் ராசகண்ட கோபாலன்
கைத்தலத்தின் கீழோர் கையில்லை - இத்தலத்தில்
உண்ணாதா ரில்லைஇவன் சோறுணும் இவன்புகழை
எண்ணாதா ரில்லை இனி

(9) 

கீழ்த்திருப்பதி அலிபிரி பெரியாழ்வார் கோயில்
மேல்பால் உள்பக்க சுவரினில் காண்பது
(நேரிசை வெண்பா)
கைப்பயலாம் பூவைநகர்க் காமவில்லி சர்ப்பகிரி
அப்பனுக்கு நற்பொலியூட் டாக்கினான் - ஒப்பாவால்
என்னம்மை முப்பத் திரண்டறமும் கற்பித்த
தன்னம்மை ஏரி தனை

 (10) 

திருப்பதி திருமலைசீனுவாசர் கோயில் முதல்சுற்று
தென்பக்க சுவரில் காண்பது
(நேரிசை வெண்பா)
ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை
யாதவர்கோன் வாழ இனிதூழி - போத
மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு
திருக்கைமலர் தந்தான் சிறந்து

 (11) 

சித்தூர் (அருகு) மேல்பாடி சோமநாதீசுவரர் கோயில்
மகாமண்டபத் தென்பக்கச் சுவரில் காண்பது
(நேரிசை வெண்பா)
பொத்தப்பிச் சோழன் புடோலிஅர சன்புவிமேல்
எத்திசையும் செல்லும்எழில் மேல்பாடி - மெய்த்தவத்தால்
சோளேந்திர சிங்க நாயகற்குக் தூங்குமணி
வாளேந்து மண்டபம்செய் தான்
 (12) 

கேரள மன்னன் இரவிவர்மன் காலம் (CE1620)
(?) பகவதிஅம்மன் கோவில்-திருவுண்ணாழி-சுற்றி
முகமண்டபம்-முல்லைமங்கலவன்-திருவிக்கிரமன் பணி
திருவிதாங்கூர் கல்வெட்டுத் தொகுதி VI பாகம் 11 # 125,126
(கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள்)
ஆதியெழு நூற்றுடன்தொண் ணூற்றையா மாண்டி
லற்பசியேழ் முற்றசமி அவிட்டம் வெள்ளி
மாதிசைசே ரின்னாளி லிரவி வேந்தன்
மனமகிழப் பகவதிவாள் வைத்த கோட்டத்
தோதிலுறு மிறைவியிருப் பதற்கு மேன்மை
யுறும்முக மண்டபமா மதற்கு நாப்பண்
முதறிவா லொருகலின்மண் டபஞ்செய் வித்தான்
முல்லைமங் கலவன்திரு விக்கிரமன் தானே (13)
எத்திசையும் புகழ்பெறவே மருவு கொல்லம்
எழுநூற்றுத் தொண்ணூற்றோ டெட்டா மாண்டில்
ஓத்துவளர் பங்குனிநா லாறோ டொன்றில்
லொத்துநிற்கும் கார்த்திகைமுன் மூன்றாம் பக்கம்
சத்தியவா சகன்முல்லை மங்கலத்து
தரணிதர னெனும்தாமோ தரனன்பாக
பத்தியனால் திருப்பணிகள் பலவும்செய்தே
பரலோக மடைந்தான் பொற்பாதம் பெற்றானே



(1)  ஓர் அகப்பொருள் பாடல்.

"பொங்கி ஒலிக்கின்ற நீருடைய (மலை வீழ் அருவி)ஆற்றின் கரையமைந்த

சிங்கைநகர் ஆரியனைச் சேராத அனுரை ஈசனின் மடமாதர், கையில் அணியும் கங்கணத்தை, (ஏந்தி) வேலொத்த இருகண்களால், (அதனைக்) காட்டினர். தங்கள் வளையணிந்த தாமரைநிற கைமேல் திலதம் எழுதி காட்டினர்." (தில்=எள். பெண்கள் நெற்றியில் இடும், எள் வடிவ பொட்டினை திலகம் என்பர். இக்காலத்து மக்கள் கீறும் இருதய வடிவின் தலைகீழ் நிலையை போல்வது.)

(2) தன்மபாலன் எனும் ஓர் மாதவனைக் (பிட்சு) பேசுகின்றது. அவன் ஓர் மாக்கோதை என்பதால் சேர மன்னர் மரபுத் தொடர் இழையோடுகின்றது இளங்கோவடிகளும் ஓர் சேரமன்னர் மரபினர் என அறிவோம்.

(3) தற்காலத்து திராட்சாராமம் முன்பு இடர்கரம்பை எனக் கூவப்பட்டமை தெளிவு வீமேச்சரம் பழம்பெரும் கோயில்களில் ஒன்றாதலும் அ·து செம்பினால் அணி செய்யப்பட்டுள்ளதும் (செம்பொன் வேய்ந்தது?) ஆங்கு 'நின்றாடுவானுக்கு' (ஆடல் வல்லானுக்கு?) மன்னன் விளக்கிடும் பணி செய்வித்தான் என்பதறிகிறோம்.

அடுத்து வரும் பாடலில் மன்னன் 'அபயன்' எனப்படுதலால் வடநாடுகளை கடந்த சோழ மன்னர் காலத்தில் அவர்தளபதிகள் இப்பணிகளை செய்தனராகலாம்

(4) மேற்கண்டபடி 'அபயன்' (சோழமன்னனின்) இருபதாவது ஆண்டில் தஞ்சையைச் சார்ந்த பஞ்சநதிவாணன் மகன் (தண்டுசென்ற தளபதி போலும்) திருநந்தாவிளக்கு அமைவித்தான் இவ்வபயன் அநபாயனெனும் விக்ரமசோழனானால் இதன் காலம் 12 ஆம் நுற்றாண்டாகலாம்



(5) கோயில் திருப்பணி நடந்தமை விவரம் கூறுவது. விக்கிரம சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டில் (CE1120) நிகரிலிசோழமண்டலத்து, கைவார நாட்டு, பாகட்டூர் கூற்றம்(?), சூகட்டூரில், சாமுண்டையன் மருத்துவச்சாலையன்-புராணமோதும் பிராமணன்-தாய் வீச்சமை பெற்ற உதயமார்த்தாண்ட பிரமராயன் எனும் விக்கிரம சோழனின் அரசியல் அதிகாரி தன் தமையன் (தந்தை) பெயரால் சோமீச்சரம் எனும் சிவன் கோயிலை, செம்பினால் ஓர் நிலை, உமையுடன் அமர்ந்த சிவமூர்த்தம், மணமலர் நந்தவனம், கங்கைநீர் மண், மேற்கே திருக்குளம், இவைகளுடன் மற்றும் பலப்பல நஞ்சை புஞ்சை பண்ணை நிலம் பசு, ஊர், ஏரி, நிவந்தங்களும் பரிகலங்களும் காலகாலமாக சீர்பெற நடைபெற அமைத்தான்.

(6) வீரகங்கன் எனும் கங்கப்பெருமாள் (கீழை கங்கமன்னன்?) தழைசை (இன்றைய தலைக்காடு?) எனும் நாட்டுத்தலைவன் யானைக்கொடி உடையவன் காவிரிகடந்து நாடு கொண்டவன் பானாரி(கொங்குநாடு)புத்திரன், நாகர் நாடு உட்பட நாடு பல கடல்கடந்தும் (விக்ரம சோழ னுக்காக) வென்றவன் தன் கடைவாழ்நாளில் நிலையாமை உணர்ந்து அறம்செய நினைந்து சகம் 1101 (C E 1179) ஆண்டில் (இங்கு) ஆற்றங்கரையில் கல்லினால் கோயில், சுற்று, மடவளாகம், மடைப்பள்ளி, தளிக்குளம், கோயில் பூசைக்கு நிவந்தங்கள் என்பன எல்லாம் சீர்பெற அமைய ஓர் சிவன் கோயிலை நிறுவினான்.

[இதில் காணும் 'மாடகலத்த மராயன்' எனும் சொல் மாடங்கள் உடையதான மரக்கலங்களை செலுத்தியவனைக் குறிக்கலாம். மாராயன் என்பது அரசர் அதிகாரிகளின் ஓர் பட்டப்பெயராதலால் அவர்களும் கடற்தானை செலுத்தியவர் என்பது பெறப்படும். இங்கும் நாகர் நாடு (தூரகிழக்கு) கடல்தானை பேசப்படுதல் காண்க மரக்காயர் எனும் சொல்லும் மரக்கலம் தொடர்புடையதே]

(7) சகஆண்டு 1120 (C E 1198) பலகுடிகளை குவளாபுரத்திற்கு குடிபெயரச்செய்து அளகேசனாக வாழ்பவன் திரைலோக்கிய ஐயனருளால் உதித்த சீராசதேவன் உடன் பிறந்தான் ஆயிடையாள் திருமகன் பெரியானெனும் பெயரியன் தொண்டை நாட்டினன் விகரமகங்க மன்னனின் உதவியினால் குளந்தை ஊரின் (தற்காலம்-கோலார்) வடமேற்கே நிலம் நீர் சோலை என நிவந்தம் பல இக்கோயிலுக்கு செய்வித்து வாழ்வித்தான்

(8) இராசகண்ட கோபாலன் (காகதீய மன்னன் ?) திருமலை கோயிலில் பலருக்கும் உணவளித்து உண்ணாதார் இல்லை என செய்து புகழ்படைத்தான்

(9) பூவைநகர் (பூந்தண்மலி?) சார்ந்த காவவில்லி என்பார் சர்ப்பகிரி (சேஷாசலம்) நாதனுக்கு சக்தியாக அம்மை செய்யும் 32 அறங்களைப்போல் நற்பலிக்கான ஏற்பாடுகள் அழகாக செய்தருளினான்

(10) கடல்போல் தாளாண்மை மிக்க யாதவர் தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான்.

(11) படோலி எனும் நாட்டுற்கு தலைவனான பொத்தப்பிச்சோழன் (தெலுங்கு சோழ வம்சத்தினன்) மேல்பாடி கோயிலுக்கு உயரத்தில் ஒலிமணியும் ஏந்துவாள் உயரத்திற்கு மேலாக ஓர் மண்டபமும் செய்வித்தான். அக்காலத்தில் இக்கோயிலீசனுக்கு சோளேந்திர சிங்கன் எனும் ஓர் சோழஅரசன் பெயர் அமைக்கப்பட்டுள்ளது [மேல்பாடி எனும் ஓர் ஊர் தற்காலம் சித்தூருக்கு அருகில் தமிழ்நாட்டு எல்லைக்குள் திருவலம் வள்ளிமலைக்கு இடையே பொன்னையாற்றின் கரைமேல் உள்ளது. எல்லை மீள்திருத்தமைப்பில் தமிழ்நாட்டுற்குள் வந்ததாகலாம்]

(12)  முல்லைமங்கலம் திருவிக்ரமன் எனும் தலைவன் கேரள மன்னன் இரவிவர்மன் மகிழ (?)பகவதி அம்மைக்கு கல்லினால் கோயிலும் அதனைச் சுற்றி முகமண்டமும் 795 கொல்லமாண்டில் (CE 1615) ஐப்பசி, ஏழில், அவிட்டம், முன் தசமி, வெள்ளிக்கிழமை நாளில், செய்தருளினான். 'நாப்பண்' (நடுவிருக்க) எனும் மிகப்பழமைவாய்ந்த சங்கத்தமிழ்ச் சொல் 1600 ஆண்டுகள் கழிந்தும் மலைநாட்டு புலவர் ஒருவரால் பயன் படுத்தப்பட்டுள்ளமை காண்க.

(13) மேற்கண்ட கொடையாளி முல்லை மங்கலத்து தரணிதரன் தாமோதரன் திருப்பணி முடித்து மூன்று ஆண்டுகள் கழிந்து கொல்லம் 798ல் பங்குனி கார்த்திகை மூன்றாம் பக்கம் 5ம்நாள்,பூதஉடலை நீத்துபரலோகம் அடைந்தமை பொளிக்கப்பட்டுள்ளது.

 
நூ.த.லோகசுந்தரமுதலி

No comments:

Post a Comment