http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60604074&format=html&edition_id=20060407
கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்
எஸ். இராமச்சந்திரன்
முருகு அல்லது முருகன் என்ற கருத்தோட்டம் வெறியாடல்
என்ற அற்புதத் தன்மையிலிருந்து தோன்றியது என்பது இன்று ஆய்வாளர்களால்
ஏற்றுக் கொள்ளப்படுகிறது[1]. குன்றக் குறவர் தெய்வமாக -
குறிஞ்சிக் கடவுளாகத் தோன்றிய இத் தெய்வம், தமிழ்ச் சங்கத்தின் தலைமைத்
தெய்வமாகவும் கருதப்பட்டது. குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருளான புணர்ச்சி
(தலைவனும் தலைவியும் சந்தித்துக் களவுமணம் புரிதல்) என்பது பூத்தரு
புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி என்று மூன்று வகைகள்
உடையதாக இலக்கண ஆசிரியர் குறிப்பிடுவர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்
அறிவுறுத்துவதற்காகக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு (வரி 212) இம் மூன்று
வகைப் புணர்ச்சிகளுள் களிறுதரு புணர்ச்சியையே முதன்மைப் படுத்துகிறது.
களிறு என்பது குறிஞ்சித் திணையின் உரிப்பொருளான களவு மணத்துடன் நெருங்கிய
தொடர்புடையதாக இருப்பதால் குறிஞ்சி நிலப் பறவையாகிய மயிலை விட முருக
வழிபாட்டுடன் அழுத்தமான தொடர்பைப் பெறுகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல்
10ஆம் நூற்றாண்டு வரையிலான முருகன் சிற்பங்களிலெல்லாம் முருகனின் வாகனமாக
யானையே சித்திரிக்கப்படுகிறது. இந்த யானை பிணிமுகம் என்ற பெயருடையது என்று
சங்க இலக்கியங்களால் தெரிய வருகிறது. யானை வடிவெடுத்து வள்ளியை அச்சுறுத்தி
முருகனிடம் அடைக்கலம் புகச் செய்து இருவரையும் மணம் புணரச் செய்தவர்
விநாயகரே என்று கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த
அருணகிரிநாதர் தமது திருப்புகழில் குறிப்பிடுகிறார். (அத்துயர் அதுகொடு
சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணமருள் பெருமாளே) கோவை மாவட்டம் மருதமலைக்கு அருகிலுள்ள
குமிட்டிபதி என்ற மலையில் காணப்படுகிற கி.மு. 1000ஆவது ஆண்டைச்
சேர்ந்தனவாகக் கருதப்படும் பாறை ஓவியங்களில், யானையின் மேல் வீரன் ஒருவனின்
உருவமும் ஐந்து பெண்டிர் கைகோத்துக் குரவையாடும் காட்சியும்
சித்திரிக்கப்பட்டுள்ளன. இவை வரலாற்றுக்கு முற்பட்ட பழங்குடியின மக்களால்
வரையப்பட்ட ஓவியங்களாகும். குறிஞ்சி நிலப் பழங்குடிகளிடையே முருக வழிபாடு
தொடர்பான குரவைக் கூத்து பெற்றிருந்த முதன்மையும், யானை இவ்வழிபாட்டில்
பெற்றிருந்த இடமும் இவ் ஓவியங்களால் தெளிவாகின்றன[2].
தமிழ் மரபு என்பதே அகத்திணை (காதல், களவுமணம்)தான் என்பதும்,
குறிஞ்சித்திணையே அகத்திணையின் அடித்தளம் என்பதும், குறிஞ்சிக் கிழவனாகிய
முருகனே தமிழ் மரபின் தலைமகன் என்பதும் 'இறையனார் களவியல் உரை ' (கி.பி.
8ஆம் நூற்றாண்டு) தோன்றிய பின்னணியால் தெரிய வருகின்றன.
அருணகிரிநாதர், 'சிவனை நிகர்பொதிய வரை முனிவன் அகம் மகிழ இருசெவி குளிர
இனிய தமிழ்பகர்வோனே ' எனப் பாடுகிறார். எனவே, 'தென்னாடுடைய சிவனை ' விட
முதன்மையான தெய்வம் முருகனே என்ற கருத்துக்கும் வலிமையான வரலாற்றுப்
பின்னணி உள்ளது. பிற்காலச் சோழர் ஆட்சியில் சைவத் திருமுறைகள்
தொகுக்கப்பட்டபோது, சங்க இலக்கியங்களில் சிவனைப் பற்றிக் கூறுவனவாக இன்று
கருதப்படும் ஒரு பாடல்கூட அத்தொகுப்பில் சேர்க்கப்படாமல், முருகனைப் பற்றிய
பாடலான திருமுருகாற்றுப்படை மட்டும் 11ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டது.
தமிழ்ச் சங்கத் தலைவரான நக்கீரர் (திருமுருகாற்றுப்படை ஆசிரியர்) பற்றிய
கதைகளும் கி.பி. 8-9ஆம் நூற்றாண்டுகளிலிருந்து வழங்கத் தொடங்கின. சங்ககாலத்
தமிழகத்தில் முருகனே சிவனது பலவடிவங்களுள் ஒரு வடிவம்தான் எனக்
கருதப்பட்டதால் திருமுருகாற்றுப்படை சைவத் திருமுறைகளுள் ஒன்றாகச்
சேர்க்கப்பட்டதா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, பழந்தமிழிலக்கண நூலான
தொல்காப்பியம் நானிலத் தெய்வங்களுள் சேயோனைக் குறிப்பிடுகிறதே தவிரச்
சிவனைக் குறிப்பிடவில்லை[3]. இதுவும் ஒரு முதன்மையான ஆய்வுச் சிக்கலை உருவாக்குகிறது.
சேயோன் = சிவன்
சேயோன், சிவன் இரண்டுமே சிவந்த நிறத் தெய்வம் என்ற பொருளுடைய சொற்களாகும்.
நிறத்தில் மட்டுமின்றி, சீற்றம் என்ற தன்மையில் இவ்விரு தெய்வங்களும் ஒத்த
தன்மையுடையவர்களாவர். ( 'முருகற் சீற்றத்து உருகெழு குரிசில் ' -
பொருநராற்றுப்படை 131; 'கூற்றொத்தீயே மாற்றருஞ் சீற்றம் ' -புறநானூறு
56:11) இந்திரன் என்ற தேவர்கள் அரசனின் படைகளான மருதகணங்களின் தலைவனாக
ருத்ரன், வேதங்களில் குறிப்பிடப்படுவது போன்றே வடமொழிப் புராணங்களில்
தேவசேனாபதியாக முருகன் (ஸ்கந்தன்) குறிப்பிடப்படுகிறான். இந்த ஏற்புத்
தன்மை இருந்ததால் சங்ககாலத் தமிழகத்தில் வைதிக ருத்ர வழிபாட்டினர்
(கடியலூர் உருத்திரங்கண்ணனார், நல்லுத்திரனார் போன்றோர்) முருகனைச் சிவனது
ஓர் அம்சமாகவே ஏற்றிருக்க வாய்ப்புண்டு[4]. பாசுபத சைவம்
போன்ற நிறுவனமயமாக்கப்பட்ட சைவசமயம் உருவாகாத காலகட்டம் அது ஆதலால் எந்த
அம்சத்துக்கு முதன்மையளிப்பது என்பது போன்ற குழப்பங்கள் நேர்ந்திருக்க
வாய்ப்பில்லை. முருக வழிபாட்டினை முதன்மையாப் பின்பற்றியவர்களும்
முரண்பாடின்றி இதனை ஏற்று வைதிக அங்கீகாரம் பெற்றிருக்கக் கூடும்.
சுக்லயஜுர் வேதத்தைச் சார்ந்த சதபத பிராம்மணத்தில் பருவங்களின் தலைவனான
பிரஜாபதி உஷையுடன் கூடி ருத்ரனாகிய குமாரனைப் பெற்றார் என்ற குறிப்பு
உள்ளது. விஷ்ணு புராணத்திலும், மார்க்கண்டேய புராணத்திலும் பிரம்மாவின்
நெற்றியிலிருந்து ருத்திரன் பிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது[5].
குமரன், பிரம்மண்யன் (பிராமணன்) போன்ற பெயர்கள் எல்லாம் ருத்திரனுக்கே
உரியவை என்பதை இக்குறிப்புகள் உணர்த்தும். ருத்ரன் பிரம்மாவின் மகன்
என்பதால்தான் சங்க இலக்கியங்களும் சிவனைப் 'பார்ப்பான் ' எனக்
குறிப்பிடுகின்றன (பரிபாடல் 5: 26-27). முருகனுக்குரியவையாகத் தற்போது
வழங்கும் குமரகுருபரன்[6], சுப்பிரம்மண்யன், பிரம்மசாஸ்தா போன்ற பல பெயர்களுக்குரிய பின்னணி, ருத்ரனுக்கே உரியவையாகும்[7].
தகப்பனின் ஐந்து தலைகளுள் ஒன்றைச் சிவன் கிள்ளியெடுத்ததாகக் கூறப்படும்
பழம்புராணக் கதையே, பிரணவத்தின் பொருளறியாத பிரம்மனின் சிரத்தில் முருகன்
குட்டியதாகவும், பிரணவத்தின் பொருளைத் தகப்பனுக்குக் காதில் உரைத்ததாகவும்
புனைந்துரைக்கப்பட்டன[8].
கி.பி. 3-4ஆம்
நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஆந்திர மாநில இக்ஷ்வாகு மன்னர்களின்
கல்வெட்டுகளில் 'விரூபக்கபதி ' என்ற தெய்வம் குறிப்பிடப்படுகிறது[9].
விரூபகர் எனப்பட்ட குள்ள பூதங்களின் தலைவனாகிய முருகனே இவ்வாறு
குறிப்பிட்டப்படுகிறான் என்பது இக்கட்டுரையாசிரியரின் கருத்தாகும். குள்ள
பூதங்களைக் 'கூளியர் ' எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். 'சூர்நவை
முருகன் சுற்றந்தன்ன நின் கூர் நல்லம்பின் கொடுவிற் கூளியர் ' எனப்
புறநானூறு (பா. 23) குறிப்பிடும். சிற்பங்களிலும் முருகன் இத்தகைய
பூதகணங்களுடன் சித்தரிக்கப்படுவதுண்டு[10]. பழந்தமிழ்
இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வேதாளிகர் எனப்பட்ட
இசைப்பாடகர்கள்-ஆடலர்கள் (மதுரைக்காஞ்சி 671, சிலப்பதிகாரம் 5:48; 26:74;
மணிமேகலை 28:50) இத்தகைய பூதகணங்களே எனக் கொள்ளலாம். இம்மரபினைத் தெளிவாக
அறிந்திருந்ததால்தான் 'வேதாள கணம் புகழ் வேலவனே ' என்றும், 'பாணிகள்
கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர்வேலா ' என்றும்
அருணகிரிநாதர் (கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) பாடுகிறார் எனத்
தோன்றுகிறது. இவர்கள் யக்ஷர், குஹ்யகர் முதலிய குள்ளவடிவக் குலக்
குழுவினராகலாம்.
பரிபாடலில் முருகன் பிறப்பு
பரிபாடலில் செவ்வேள் பற்றிய பாடலில் (பா. 5) உமாபதியாகிய ருத்ரனின்
ஸ்கலிதமான விந்திலிருந்து ஸ்கந்தன் பிறந்தது குறிப்பிடப்படுகிறது. இக்கதை
மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் கதையாகும். குப்தர்காலத்தைச் சேர்ந்த
காளிதாசனின் குமாரசம்பவம் (9:14) இதனை விரிவாகக் குறிப்பிடுகிறது -
பரிபாடல் வருணிக்கும் விவரங்கள் பெருமளவில் குமாரசம்பவத்தையொட்டியே
இருப்பது சிந்திக்கத்தக்கது. பரிபாடலின் கால நிர்ணயத்துக்கு இது
உதவக்கூடும். ஸ்கலிதம் என்பது வேதங்களிலும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அது
ருத்ரனோடு தொடர்புபடுத்தப்படுவதில்லை. வருணா - மித்ரர், திலோத்தமையின்
நடனத்தைக் கண்டு காமவசப்பட்டதால் ஸ்கலிதம் ஏற்பட, அதனைக் கும்பத்தில்
பிடித்து வைத்ததில் தோன்றியவர்களே அகத்தியரும் வசிஷ்டருமாவர். இக்கதை,
'முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய கடவுட்கணிகை காதலஞ்சிறுவர் அருமறை
முதல்வர் அந்தணர் இருவரும் ' என மணிமேகலையில் (13:94-96) கூறப்பட்டுள்ளது[11].
குறிப்பாக, வாருணி எனப்பட்ட (வருணன் மகனான) அகத்தியரை அக்னியோடு இணைத்து,
'அங்கி அகத்தியன் ' எனத் திருமூலரின் திருமந்திரம் குறிப்பிடும். எனவே
வருணனுக்கு ஏற்பட்ட ஸ்கலிதத்தில் பிறந்தவன் அக்னி என்ற வேதகாலக் கதையின்
திரிந்த வடிவங்களே முருகன் பிறப்பு பற்றிய இக்கதைகள் என்பது புலப்படும்.
சதபதப் பிராம்மணத்தில் பருவங்களின் தலைவனான பிரஜாபதி என்று
குறிப்பிடப்படுபவர் ரிதம் அல்லது ருதுக்களின் தலைவனாக வேதப்பாக்களில்
குறிப்பிடப்படும் வருணனே என்றோ மித்ரனே என்றோதான் கொள்ள இயலும். குப்தர்
காலத்தில் பாசுபத சைவ சமய எழுச்சி ஏற்பட்டபோது சிவனே பரம்பொருள் என்ற
கோட்பாடு உருவாகி, யஜுர்வேத (நமசிவாய) முத்திரையும் பெற்ற பின்னர்தான்
சேயோன் (முருகன்) சிவனது மகனாகச் சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும். இதனைப்
பின்பற்றியே பரிபாடலில் முருகன் பிறப்பு வருணிக்கப்படுகிறது எனத் தெளிவாகத்
தெரிகிறது[12].
திருமுருகாற்றுப்படையில் முருகன் பிறப்பு
இப்போது நமது முதன்மையான பிரச்னைக்கு வருவோம். திருமுருகாற்றுப்படையினைப்
பரிபாடலைவிட மிகவும் முற்பட்ட நூலாகக் கொள்ள இயலாது என்பது தமிழறிஞர்கள்
அறிந்த ஒன்றே. மட்டுமின்றி, திருமுருகாற்றுப்படையிலும், முருகனின் பிறப்பு
வருணிக்கப்படும்போது, மகாபாரதத்திலும் குமார சம்பவத்திலும்
குறிப்பிடப்படும் சில செய்திகள் இடம்பெறத்தான் செய்கின்றன.
எடுத்துக்காட்டாக, ஸ்கலிதமான விந்தினை அக்னி ஏந்திச் சென்று கங்கையில்
விடுவது. இது, 'ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர்ப்பயந்த ஆறமர் செல்வ '
எனத் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்படுகிறது (வரி. 253-255). ஐவருள்
ஒருவன் என்பது பஞ்சபூதங்களுள் ஒருவனான அக்னி. இவன், ஸ்கந்தன் பிறந்தபோது
தாங்கமுடியாத சூட்டோடு இருந்ததால் தனது கையில் ஏந்திக் கங்கையாற்றில்
விடுத்தான் என மகாபாரதம், குமாரசம்பவம் கூறுகின்றன. மேலும் சிவனது
மனைவியாகப் புராணங்களில் குறிப்பிடப்படும் மலைமகள் முருகனது தாயாகக்
குறிப்பிடப்படுகிறாள் (வரி. 257). இவ்வாறிருக்க, திருமுருகாற்றுப்படை
மட்டும் எவ்வாறு வேறுபடுகிறது என்ற கேள்வி எழுவது இயல்பே. ஆனால்
உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ஐவருள் ஒருவரான அக்னி ருத்ரனின் தெய்வம்
எனக் குறிப்பிடுகிறார். எனவே, அக்னி முருகனை சுவீகரித்த தந்தையே. முருகன்
'ஆல்கெழு கடவுட் புதல்வன் ' எனத் திருமுருகாற்றுப்படையில்
குறிப்பிடப்படுகிறான். (வரி. 256) எனவே, ஆல்கெழு கடவுளே முருகனின் உண்மையான
தந்தை எனத் தெரிகிறது. ஆலின் கீழ் அறம் பகர்ந்தான் எனப் பக்தி
இலக்கியங்களிலும் ஆகமங்களிலும் அவற்றின் அடிப்படையில் சிற்பங்களிலும்
சித்தரிக்கப்படும் தக்ஷிணாமூர்த்தி வடிவச் சிவன்தான் இவ் ஆல்கெழு கடவுள்
என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். ஆனால் இது சரியன்று.
வடாஸ்ரயன் (ஆலமர் செல்வர்) என்பது குபேரனின் பட்டப் பெயராகும். ஆலமரத்தை
வைஸ்ரவணாலயம் (குபேரன் கோயில்) எனக் குறிப்பிடுவது பழைய மரபாகும்[13].
'ஆலமர் செல்வன் மகன் ' என்பது முருகனைக் குறிப்பிடுவதற்குச் சிலம்பிலும்
(24:15) மணிமேகலையிலும் (3:144) பயன்படுத்தப்படும் அடைமொழியாகும்.
சிலம்பில் 'கயிலை நன்மலையிறைமகன் ' என்ற குறிப்பும் சேர்ந்து
காணப்படுகிறது. கயிலைமலை சிவ வழிபாட்டுடன் இணைந்ததால் இது தெளிவாகச்
சிவனையே குறிப்பிடுவதாகத் தோன்றும். ஆனால் வால்மீகி ராமாயணத்தில் கைலாச
மலைச் சிகரத்தில் வசிப்பவன் தனதன் எனப்படும் குபேரன் என்ற குறிப்பு உள்ளது.
(கைலாச சிகரா வாஸீதனத) வெள்ளிமலை என்பது குபேரன் மலை என்பதும் அங்குள்ள
அலகம் என்ற சுனை அவனுக்குரியது என்பதும் வேறு சில புராணங்களிலும்
குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, 'ஆல் கெழு கடவுள் ' எனத் திருமுருகாற்றுப்படை
கூறுவது யக்ஷர் குலத்தவரின் முதன்மைத் தெய்வமான குபேரனாக இருக்கவே
வாய்ப்புகள் அதிகமாகும். குபேரனுக்கும் ஹாரிதிக்கும் பிறந்த நளகூபரன்,
மணிக்ரீவன் என்ற இருவர் பற்றியும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த -
விசாக என்ற இரு கடவுளர்களே இணைந்து சுப்பிரமணியன் என்ற தெய்வமாயினர்
என்றும் ஒரு கருத்து உண்டு. 'இரு பேருருவின் ஒரு பேர் யாக்கை அறு வேறு
வகையின் அஞ்சுவர மண்டி ' எனத் திருமுருகாற்றுப்படை (வரி. 57) குறிப்பிடுவது
இக்கருத்தையே எனலாம்.
முருகனைச் செட்டி எனக்
குறிப்பிடுவதுண்டு. சுந்தரர் தேவாரத்திலும், வேம்பத்தூரார்
திருவிளையாடற்புராணத்திலும் தனிப்பாடல்களிலும் இத்தகைய குறிப்பு உள்ளது.
இது குபேர மரபின் தொடர்பைக் காட்டுவதே என்பதில் ஐயமில்லை[14].
ஆயினும் நாம் முக்கியமாக ஆராய வேண்டியது, யக்ஷர் (இயக்கர்) குலத்துக்கும்
முருகனுக்கும் இடையிலான தொடர்பேயாகும். இயக்கர்கள் குபேரனைத் தலைவனாகக்
கொண்டவர்களாவர் என்பது புராண மரபாகும். இவர்கள் மலைக் குகைகளில் வசித்ததால்
குஹ்யகர் எனவும் குறிப்பிடப்பட்டனர். முருகனைக் குறிக்க வழங்கும் குஹன்
என்ற பெயர் இப்பொருளுடையதே. இலங்கையில் 'மலையக்க ', 'கிரியக்க ' என்ற
பெயர்களில் முருகனை வழிபடுவது இந்தோ ஆஸ்திரலாய்டுப் பழங்குடி மரபாக
இருந்துள்ளது[15]. இப்பழங்குடியினரால் வழிபடப்பட்ட
தெய்வம் குருதியின் மணத்தை விரும்பி வருகிற பேயாகக் கருதப்பட்டது. போர்
வீரர்களின் புண்ணிலிருந்து வடிகிற குருதியை மட்டுமின்றிப் பெண்டிரின்
மாதவிலக்கு ரத்தத்தின் மணத்தையும் குஹ்யகர்கள் விரும்புவர் என்பது
புராணங்களின் கருத்தாகும்[16]. அதாவது ரணஜன்னி,
மாதவிலக்குக் காலத்தில் பெண்டிர்க்கு ஏற்படும் மனநோய் அல்லது மனஅழுத்தம்
போன்றவை குஹ்யகர்களால் ஏற்படுவன எனக் கருதப்பட்டது[17].
முருகயர்தல் என்பது போர் தொடர்பாகவும் வேலன் வெறியாடல் என்பது காதல்
தொடர்பாகவும் முருகனுக்கு நடத்தப்படும் வழிபாடுகள் என்பது சங்க இலக்கியக்
குறிப்புகளால் தெரியவருகிறது. 'நெறியறிந்த கடிவாலுவன் அடியொதுங்கிப்
பிற்பெயராப் படையோர்க்கு முருகயர ' என மதுரைக்காஞ்சி (வரி. 37-38)
குறிப்பிடுவது போர் தொடர்பிலான முருகயர்தல் ஆகும். மாதவிலக்குக் காலத்தில்
பெண்டிர் முருகன் கோயிலுக்குச் சென்றால் முருகனால் பீடிக்கப்பெற்றுச்
சுருண்டு விழுந்து விடுவர் என்ற பொருளில் 'அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரின் இகழ்ந்து நின்றவ்வே ' எனப் புறநானூறு (பாடல் 299)
குறிப்பிடுகிறது. முருகு என்ற சொல்லே முருக்குதல் (உடலை முருக்குதல், போர்
செய்தல்) முருகுதல் (மணத்தல் - மணம்புரிதல்) ஆகிய இருவகைக்
கருத்தோட்டங்களுடன் தொடர்புடையதாகும். இக்குறிப்புகளால், வடமொழிப்
புராணங்களில் யக்ஷர் என்றும் குஹ்யகர் என்றும் குறிப்பிடப்படும் குள்ளமான
உருவம் படைத்த இனக் குழுவினரின் தெய்வமே முருகன் என்ற கருத்து சங்ககாலத்
தமிழர்களுக்கு அன்னியமானதன்று என நாம் ஊகிக்கலாம்[18].
பரிஷத்தும் முருகனும்
பரிஷத் என்ற பழங்குடியமைப்புச் சபை பற்றி வேதங்களும் மகாபாரதமும்
குறிப்பிடுகின்றன. 'பாரிஷத்ய ' எனப் பரிஷத்தின் உறுப்பினர்கள்
குறிப்பிடப்படுவர். பாரிஷத்யர்கள் மழையைத் தடுத்ததால் இந்திரன் தனது
வஜ்ராயுதத்தை எறிந்து அவர்களை அழித்தான் என ரிக்வேதம் (III:33:7)
குறிப்பிடுகிறது[19]. முருகன் பிறந்ததும் இந்திரன் தனது
வஜ்ராயுதத்தை எறிந்து முருகனை ஆறு கூறாக்கியதாகப் பரிபாடல் (5:51-54)
குறிப்பிடுகிறது. இது மேற்குறித்த வேதக் கருத்தின் வளர்ச்சியே எனலாம்.
பரிஷத் என்ற அமைப்புக்கு ஸ்கந்தனே தலைவன் என மகாபாரதம் குறிப்பிடும்[20].
பாரிஷத்யர் எனப்பட்ட இக்குடியரசுச் சபை உறுப்பினர்களுக்கும் தாய்வழிச்
சமூகக் கூறுகள் உடைய மாருதிகணம் (மருத்கணம்) உறுப்பினர்களும் பலவகைகளில்
ஒத்துக் காணப்படுவர். மாருதி கணத்தில் ஆடலும் பாடலும் நிகழ்வது வேதங்களில்
குறிப்பிடப்படுகிறது[21]. பாரிஷத்யகணம் என்பதே சைவ சமய
பக்தி இலக்கியங்களில், சிவன் நடனமாடும்போது இசைக்கருவிகள் இயக்கும்
'பாரிடகணம் ' எனக் குறிப்பிடப்படுகிறது[22]. இவை குள்ள
பூதங்களாகும். ஆணாதிக்கச் சமூகத்துக்கு முற்பட்ட பழங்குடி அமைப்புப்
பின்னணியைக் கொண்ட முருக வழிபாட்டில், இப்பாரிட கணங்களில் பெண்டிரும்
இருந்திருக்க வேண்டும். 'மதிமுக மடவார்தம் பண் தேய்த்த மொழியினார்
ஆயத்துப் பாராட்டிக் கண்டேத்தும் செவ்வேள் ' எனச் சிலம்பு (1:36-38)
குறிப்பிடும் 'பண்தேய்த்த மொழியினார் ஆயம் ' இத்தகைய பரிஷத்தே எனலாம்.
கம்பராமாயணம் காலத்தால் பிற்பட்ட நூலாயினும், 'பந்தினை இளையவர் பயிலிடம்
மயிலூர் கந்தனையனையவர் கலை தெரிகழகம் ' எனக் (1:2:48) குறிப்பிடுவதிலுள்ள
கழகமும் இத்தகைய பரிஷத்தே எனக் கொள்வதில் தவறில்லை. 'கழகம் ' என்பது
சூதாடும் இடம் என்ற பொருளில் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளதும்[23],
இது முன்னேற்றமடைந்த நாகரிகச் சமூகத்தின் ஒழுக்கக் கோட்பாடுகளால்
தவறானதாகக் கணிக்கப்பட்ட பழங்குடிச் சமூக அமைப்புச் சபையே என்பதை
உணர்த்தும்[24]. உண்மையில், திருமுருகாற்றுப்படை (வரி.
264) 'மங்கையர் கணவ ' என முருகனைக் குறிப்பிடுவது மங்கையர் கணத்தின்
தலைவன் என்ற பொருளிலேயே ஆகும். 'கணப ' என்ற இச்சொல்லின் பெண்பால் 'கணிகை '
ஆகும். ஆடல் பாடலில் வல்ல கணத்தலைவியே கணிகை. (பழங்குடியமைப்பில் 'காளி
'யே கணிகை) இத்தகைய பரிஷத் கணத்தின் உறுப்பினர்களான பாரிஷத்யர்கள்,
'விரூபகர்கள் ' என்றும், 'மகாபாஷாணயோதினாம் ' (பெரிய கற்கருவிகளைக் கொண்டு
போரிடுவோர்) என்றும், பறவைகள் மிருகங்கள் போன்றவற்றைக் குலக்
குறியீடுகளாகக் கொண்டவர்கள் என்றும் புராணங்களில் குறிப்பிடப்படும்
விவரங்கள் இவர்கள் பழங்குடிச் சமூகத்தவரே என உணர்த்தும். எனவே முருகனைத்
தமிழ்ச் சங்கத்தின் அல்லது கழகத்தின் முதல்வனாகக் குறிப்பிடும் மரபு
அர்த்தமற்றதல்ல என நம்மால் உணரமுடிகிறது. கழகம் என்ற சொல், அறிஞர்
வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுவதைப் போலக் 'கலப ' (Club) என்ற
கருத்தோட்டத்துடன் தொடர்புடையதாகும். இதனோடொத்த பழங்குடிச் சமூக அமைப்பே
பரிஷத் ஆகும். தமிழகக் கோயிற் கல்வெட்டுகளுள் பழமையான கல்வெட்டுகளில்
'மூலபரிடை '(மூலபரிஷத்) குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது. மூலபரிடை
ஆடல்பாடல் வடிவிலான வழிபாட்டை நிர்வகித்திருக்கக்கூடும்.[25]
குஹ்யக மரபின் பிற்கால எச்சங்கள்
குஹ்யக மரபும் பரிஷத் தொடர்புகளும் முற்றிலும் மறைந்து போய், முருகன்
தெளிவாக வைதிக அடையாளம் பெற்று விட்ட பிற்காலத்தில் கூட, முருகன்
பெண்டிரைப் பீடிக்கும் பேய்த் தெய்வம் என்ற கருத்து இலக்கியங்களில் இடம்
பெறுகிறது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டைய வில்லுப்பாட்டு நூலான சிவனணைஞ்சான்
கதையில், (குறவர் குலப்பூசாரியாகிய) 'மலை வேலன் ' எனப்படும் இருளன் ஆசான்,
கதை நாயகனான சிவனணைஞ்சானுக்கு வசியமருந்து தயாரித்துக் கொடுக்கிறான்;
சிவனணைஞ்சான் அதனைத் தனது காதலி சின்னணைஞ்சிக்குக் கொடுக்க, அதனை அருந்தி
மயங்கும் சின்னணைஞ்சி, முருகன் தன்னைப் பிடித்துக் கொண்டானோ என ஐயுறுகிறாள்
என்ற செய்தி இடம் பெற்றுள்ளது[26]. அதே போல, குறமகளாகிய
வள்ளி மாதவிலக்காக இருந்த வேளையில் அவளைச் செந்தில் முருகன் நெருங்கிச்
சேட்டை செய்ததாக 17ஆம் நூற்றாண்டுக் கவிஞரான வசைகவி ஆண்டான் என்பவர்
பாடுகிறார்[27]. இத்தகைய எச்சங்கள், மிகப் பிற்காலம்
வரையிலும் முருகனின் குஹ்யக மரபு தொடர்ந்து மக்கள் நினைவில் இருந்து
வந்துள்ளது என்பதை உணர்த்தும். இம்மரபு, இன அடிப்படையில்
இந்தோ-ஆஸ்திரலாய்டு மற்றும் மங்கோலிய இனக் கூறுகள் கலந்த சிவந்த நிறக்
தெய்வமரபாக இருக்கக்கூடும். பழந்திராவிட (Proto Dravidian) மரபு இது எனக்
குறிப்பிடுவது மொழியியல் அடிப்படையில் பொருத்தமாக இருக்குமா எனத்
தெரியவில்லை. இது தொடர்பாக முடிவு மேற்கொள்வதற்கு தொல்லியல், மானிடவியல்,
மொழியியல் துறைகள் சார்ந்த விரிவான ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வருணன்-திலோத்தமை (திலோத்தமா என்றால் எள் போன்ற உத்தமமான கரிய நிறத்தவள்
எனப் பொருள்படும்) உறவு குறித்து மேற்குறித்த துறைகள் சார்ந்த ஆய்வுகளின்
அடிப்படையிலான விளக்கம் இதற்குத் துணை புரியக் கூடும். ஆனால் பொதியமலைக்
குறவர்கள், தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு உருவாவதற்கு வித்திட்டிருக்க
வேண்டும் என்பதிலும், இக் குறவர்கள் மேற்குறித்த இனக்கூறுகள் உடையவர்களாக
இருந்திருக்க வேண்டும் என்பதிலும் ஐயமில்லை.
முருகன் - சிவன் உறவு முழுமையடைதல்
மகாபாரதம் வனபர்வதத்தில் தொடங்கும் சிவனுக்கும் முருகனுக்கும் இடையிலான
தகப்பன் - மகன் உறவு முறை, பாசுபதத் தாக்கத்தால் பரிபாடலில் ஓரளவு வளர்ச்சி
பெற்று கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தொடங்கிய பக்தி இயக்கத்தின்
பணியால் தெளிவான தோற்றத்தைப் பெறுகிறது எனக் கண்டோம். ஆயினும், கி.பி.
13ஆம் நூற்றாண்டில்தான் தமிழகக் கோயிகளில் - சிவாலயங்களில் - முருகனுக்கு
வடமேற்குத் திசையில் தனிச் சன்னிதி அமைக்கும் மரபு தோன்றுகிறது. திக்
பாலர்களில் வாயுவுக்கு உரிய திசை வடமேற்காகும். வாயுதிசையில் முருகனுக்கு
சன்னிதி அமைப்பதற்கு அடிப்படையாக அமைவது, 'ப்ருஷ்ணி எனப்படும் நிலமகளுடன்
புணர்ந்து ருத்ரன் மருத் (வாயு) கணங்களைப் பெற்றான் ' என்று பொருள்படும்
வேதப் பாக்களின் கருத்தேயாகும். வைதிக மரபுப்படி, மருத் கணங்கள் என்பவை
இந்திரனின் (தேவர்களின்) போர்ப் படைகள் ஆகும். தேவசேனாபதியாகிய முருகன்,
ருத்ரனின் மகனாக்கப்பட்டுவிட்டதால், வைதிக மரபுப்படி ருத்ரனுக்கும்
ப்ருஷ்ணிக்கும் பிறந்த மருத் (வாயு) கணத்துடன் இணைக்கப்பட்டு முரண்பாடற்ற
வகையிலும், அவனது பூர்விகத்தை உணர்ந்தவர்களும் ஏற்கும் வகையிலும்,
சிவாலயத்தின் வடமேற்கில் அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்கிறான்.
இக்கால கட்டத்திற்குப் பின்னர், சைவம் என்றாலே சிந்தாத்த சைவம் என்ற
அடையாளத்தைப் பெற்று விடுகிறது. சைவ சமயத்தைப் பின்பற்றிய, அதே வேளையில்
இசை - நடனக் கலைப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அருணகிரி நாதர்
போன்றோர் மட்டுமே முருகனின் பூர்விகத்தை மறக்காமல் போற்றினர்.
அடிக்குறிப்புகள்:
1. 'முருகாற்றுப்படுத்தல் ' என்ற அகநானூற்றுக் குறிப்புக்கு
உரையாசிரியர்கள், 'முருகனை மேனியின் கண்ணே ஆற்றுப்படுத்தல் ' எனப் பொருள்
கொண்டுள்ளனர். திருமுருகாற்றுப்படை, இத்தகைய சடங்குக்கு உரிய மந்திரக்
கவிதையாகும்.
2. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கோவை மாவட்டப் பதிவு அலுவலர்
(ஓய்வு) திரு. இரா. பூங்குன்றன் அவர்களால் கண்டறியப்பட்ட ஓவியங்கள் இவை.
இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சில கருத்துகள் செம்மைப்படுத்தப்படுவதற்கு
அவருடனான உரையாடல்கள் பெருமளவுக்கு உதவிகரமாக இருந்தன.
3.
சிவன் நால்வகை நிலங்களின் தெய்வங்களான சிறு தெய்வங்களுக்கு மேம்பட்ட
பரம்பொருளாதலால் தொல்காப்பியர் சிவனைக் குறிப்பிட்டுச்
சிறுமைப்படுத்தவில்லை என்பது போன்ற விளக்கம் சில அறிஞர்களால் வழங்கப்படுவது
ஏற்கத்தக்கதாக இல்லை. பார்க்க: பக்கம் 21-22, துர்க்கை வழிபாடும்
சிற்பங்களும் - ச. கிருஷ்ணமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 600108,
2000.
4. சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும்
வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது.
இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க
வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள்
கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர்
உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார்
நகரிலிருந்த 'கந்துடைப் பொதியில் ' குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம்,
பொதியில், கந்துடை நிலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என
அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.
5. திருச்சிராப்பள்ளி கீழ்க் குடைவரையில் (கி.பி. 7-8ஆம் நூற்றாண்டுகள்)
முருகனுடன் குள்ள பூதங்கள் நிற்கின்ற காட்சி சிற்பமாகச்
சித்தரிக்கப்பட்டுள்ளது.
6. முருக வழிபாட்டில் பூசாரியாகச்
செயல்பட்ட வேலன் முருகனைத் தன் மேனியின்கண்ணே ஆற்றுப்படுத்தியமையால் அவன்
குருநாதனாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். குரவன் என்ற சொல்லால் சங்க
காலத்தில் வேலன் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். 'குன்றக் குரவை ' என்ற
முருகன் தொடர்பான ஆடல் குரவன் (குருநாதன்) என்ற வழக்கோடு தொடர்புடையதாகத்
தோன்றுகிறது. கெளமாரம் என்பது குமரன் (முருகன்) வழிபாட்டுச் சமயமாகும்.
இவ்வழிபாட்டு மரபின் அடிப்படையே சாமியாடுதல் தான். துளு மொழியில் 'கோமரே '
என்ற சொல் சாமியாடுதலையும், குறி சொல்லுதலையும் குறிக்கும். நெல்லைச்
சீமையில் பேய்க் கோயில் என அழைக்கப்படும் ஒருவகைச் சுடலை கோயில்களில்
கோமரத்தாடி என்ற சாமியாடுபவர் வழிபாட்டில் முதன்மையான இடம்பெறுவது வழக்கம்.
'கெளமாரத்து ஆடி ' என்ற சொல்லே இவ்வாறு வழங்குகிறது என்பது தெளிவு. குறி
சொல்லுதல் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால் அது அண்மைக் காலம் வரை குன்றக்
குறவர் மரபாகவே இருந்து வந்துள்ளது.
7. லாவோஸ்
ராஜ்யத்தின் வாட்லுவாங்கெள எனுமிடத்தில் உள்ள சமஸ்கிருதக் கல்வெட்டில்
'பகவந் மஹாபுருஷ ப்ரஹ்மண்ய தாநுசாரீவ ப்ராஹ்மண்ய பாவே ' என்ற வரி உள்ளது.
(பக்கம் 95, பல்லவர் செப்பேடுகள் முப்பது - பி. ஸ்ரீ., தி.நா.சு., உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600113, 1999) 'பகவான் மகாபுருஷனுடைய
பிரம்மண்ய பாவத்தை அனுசரித்துச் செல்லும் பிராம்மண பாவம் உடையவன் ' எனப்
பொருள்படும். இது அகஸ்தியரைக் குறிக்கும் என்றும், சுப்பிரமணியரிடம்
அகஸ்தியர் தமிழ் கற்றார் என்ற புராணக் கதையும், அகஸ்தியர் சிவனோடு
ஒன்றுபடுத்தி அடையாளங் காணப்பட்டதால் முருகனிடம் சிவன் சிஷ்யனாகப் பாடம்
கேட்டார் என்ற கதையும் உருவாகியிருக்கலாம் எனத் தி.நா.சு. கருதுகிறார்.
ஸ்கந்தசிஷ்யன் என்ற பல்லவனின் பெயர் அகஸ்தியரையும் சிவனையும் குறிக்கும்.
'ஜடிலத்தவன் இட்ட விசிட்ட குலத்தொரு செட்டி யிடத்தின் உதித்தருள் ருத்ர
ஜன்மன் பெயர் செப்பியிடப் பரிவாலே சனகற்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சனற்
குமரற்கும் அனுக்ரஹ மெய்ப்பலகைச் சதுபத்து நவப் புலவர்க்கும் விபத்தியின்
ஞான படலத்துறு லக்கண லக்ய தமிழ் த்ரயமத்தில் அகப் பொருள் வ்ருத்தியினைப்
பழுதற்றுணர்வித்தருள் வித்தக சற்குரு நாதா ' என்று அருணகிரி நாதர்
திருப்புகழில் ஓசைநயத்துடன் வருணிப்பது சிவனுடைய தட்சிணாமூர்த்திக்
கருத்தோட்டத்தையும், முருக வழிபாட்டுடன் இணைத்து இசையுடனும் ஆடலுடனும்
இணைந்த அகப்பொருள் (களவு அல்லது காந்தர்வ மணம்) மரபினை அறிவுலகத்துக்கு
அறிமுகப்படுத்தியவன் முருகனே என்ற ஒரு சித்திரத்தைப் படைக்கும்
முயற்சியாகும்.
8. பிரணவம் (ஓம்) என்பது ஹீப்ரு மொழியில்
'ஒமேகா ' என வழங்கப்படுகிற இறுதி எழுத்தாகும். ஓ-மெகா அல்லது மெகா-ஓ
என்றால் பெரிய ஓ எனப் பொருளாகும். எல்லையற்றது என்பது இதன் பொருள். ஹீப்ரு
மொழியில் சொற்றொடர்களை வலமிருந்து இடமாக எழுதும் முறை நிலவிற்று.
இடமிருந்து வலமாக எழுதும் முறை பின்பற்றப்பட்ட நாடுகளில் ஹீப்ரு
எழுத்துகளும் இட வல மாற்றம் பெற்றன. ஒமேகா என்பது குறியீட்டில் எழுதப்பட்டு
ஓம் என உச்சரிக்கப்பட்டது. குறியீட்டில் ஓம் என எழுதப்படுவது இம் மரபைப்
பின்பற்றியே. வேதம் ஓதும் பிரம்மாவுக்குப் பிரணவத்தின் பொருளை முருகன்
உரைத்தான் என்பதை இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், 'பிராமி ' எழுத்து
முறையை உருவாக்கியவனே நல்ல பிராமணனாகிய சுப்பிரம்மண்யன்தான் என்று
பொருள்படக்கூடும். பிராமி எழுத்து முறை, யூதர்களின் வட அரமைக் எழுத்து
முறையை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டது என்பது தொல்லெழுத்து
நிபுணர்களின் கருத்தாகும்.
9. 'விரூபக்கபதி மகாசேன ' -
இக்ஷ்வாகு மன்னர் கல்வெட்டுகள் - Epigraphia Indica - Vol. XX, p.6
(Archaeological Survey of India, New Delhi)
10. Elements of Hindu Iconography, T.A.Gopinatha Rao, Motilal Banarasidas, New Delhi, 1985.
11. மகாபிரம்மா, திலோத்தமையின் நடனத்தைக் கண்டு காமவசப்பட்டது
மணிமேகலையில் கூறப்படுகிறதெனில், அவனுக்கு நான்கு முகங்கள் ஏற்பட்ட
பின்னணி, திலோத்தமையின் ஆடலை ரசிப்பதற்காக மூன்றரைக் கோடி வருடத் தவத்தின்
பலனை இழந்து பெற்ற முகங்களே என்ற கதை சீவக சிந்தாமணி பாடல் 207இல்
கூறப்படுகிறது. இந்நூல்களில் முதுபெரும் கடவுளான பிரம்மாவாக அல்லது
நான்முகனாகச் சித்திரிக்கப்படுபவர் வேதகால வருணனே ஆவார்.
12. மகாபாரதத்தில் குப்தர்காலத்து இடைச் செருகல்கள் உள்ளன என அறிஞர்கள்
கருதுகின்றன. மகாபாரதத்தில் ஓரிடத்தில் சிவன் லகுளீசராகக்
குறிப்பிடப்படுகிறார். அத்தகைய குறிப்புகள் பாசுபத சைவத்தின் செல்வாக்கை
உணர்த்தும். வியாசரின் மகாபாரதம் ஆரண்ய பர்வம் 234-6ஆம் அத்தியாயங்களில்
அக்னி பகவான் சப்தரிஷிகளின் மனைவியர் மேல் ஆசை கொண்டபோது ஸ்வாஹாதேவி,
அருந்ததி தவிரப் பிற அறுவரின் வடிவங் கொண்டு அவனுடன் கூடியதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. 'மேருக்குன்றத்து ஊறுநீர்ச் சரவணத்து அருந்திறல்
முனிவர்க்கு ஆரணங்காகிய பெரும் பெயர்ப் பெண்டிர் பின்பு உளம் போக்கிய
அங்கிமனையாள் அவரவர் வடிவாய்த் தங்கா வேட்கை தனையவள் தணித்ததூஉம் ' என
மணிமேகலை 18: 92-97 கூறும். இது அறுமுகன் பிறந்த கதைக்கு அடிப்படையாகலாம்.
அறுமுகனை அக்னிபுத்ரன் எனக் கொள்வதற்கு இக்கதையே ஏற்றது. (இருப்பினும்,
பிக்ஷாடனர் - ரிஷிபத்னி குறித்த கதை, சப்தமாதர் - வீரபத்ரர் குறித்த கதை
ஆகியனவும் இதனோடு தொடர்புடையனவே.) இக்கதை, குப்தர்கால இடைச் செருகலாக
மகாபாரதத்தில் நுழைந்திருக்கலாம்.
13. மாசிமகம் - வருணன்
வழிபாடு, எஸ். இராமச்சந்திரன் - மாசிமகமும் மங்கலநீர் விழாவும், பக்கம் 33,
சேகர் பதிப்பகம், சென்னை - 600 078, 1991.
14. வைதிக
சமயத்தின் தத்துவத் தலைவனாக அல்லது வேதகாலத்து ஞான காண்ட முதல்வனாகக்
கருதத்தக்க வருணனின் செல்வ வளத்தன்மை பாற்கடலாக உருவகிக்கப் பட்டிருக்க
வேண்டும். வருணனின் இரு தொடைகள் க்ஷார, க்ஷீர, உததிகள் (உப்புக்கடல்,
பாற்கடல்) என்ற கருத்தோட்டம் அதர்வண வேதத்தில் காணப்படுகிறது. க்ஷீரன் என்ற
கருத்தோட்டம் குவீரன், குவேரன் எனப் பிராகிருதத்தில் திரிந்து வழங்கி
மீண்டும் குபேரன் என்ற வடிவில் புராண காலத்தில் சமஸ்கிருத வடிவம்
அடைந்திருக்கலாம். அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதி க்ஷீரனே (பாற்கடல்
இறைவனே) என்பது பெளராணிக மரபாகும். பிராமணன் செட்டியாக உருமாற்றம்
அடைந்தது, வருணன் குபேரனாக உருமாற்றம் அடைந்ததை ஒட்டி நிகழ்ந்த மாற்றமே
ஆகும்.
15. South India and Sri Lanka - K.K. Pillai, Page 15, Madras University, 1975
16. Dictionary of Hinduism - Page 105, Margaret and James Stutley, Allied Publications Pvt. Ltd., Chennai.
17. Hysteria என்ற சொல் Hyster (கருப்பை) என்ற கிரேக்கச் சொல்லோடு
தொடர்புடையது. அதாவது பருவகாலத்தில் பெண்டிர்க்கு ஏற்படும் மனநோய் அல்லது
மனஅழுத்தமே ஹிஸ்டாரியா எனக் கருதப்பட்டது. எனவே இந்நம்பிக்கை பழங்குடி
மூலமுடையது ஆகும். முருகன் இளம் பெண்டிரை வசியம் செய்து வசப்படுத்துவதை
மாற்றி சாந்திப்படுத்துவதற்காக வேலனின் வெறியாட்டம் நிகழ்வதுண்டு. காதல்
வசப்பட்ட பெண்டிர் தமது உளநோய் முருகனால் நேர்ந்ததன்று என்று உறுதிபடக்
குறிப்பிடுவதும் உண்டு. பின்னாளைய இலக்கியங்களில் இது வெறிவிலக்குதல் என்ற
துறையாகவே வளர்ச்சி பெற்றது. அதே வேளையில், இளம் பெண்டிர் மனதில் முருகனைப்
பற்றிய ஓர் அச்சமும் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. பருவப் பெண்டிருக்கு
முருகனை வழிபடும் உரிமை மறுக்கப்படுவது இன்றும் சில பகுதிகளில் பழங்குடி
மரபின் எச்சமாக நிலவி வருகிறது. மும்பைக்கு அருகிலுள்ள பர்வதகிரி
சுப்ரமணியர் கோயிலில் பெண்டிர் அனுமதிக்கப் படுவதில்லை எனத் தெரிய
வருகிறது. இக்கட்டுரையின் அடிக்குறிப்பு [2]-ல் குறிப்பிடப்படும்
குமிட்டிப்பதி பாறை ஓவியங்கள் இடம்பெற்றுள்ள மலைப்பகுதிக்குப் பெண்டிர்
செல்லக்கூடாது என்ற ஒரு மரபு வழக்கிலுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில்
வழக்கிலுள்ள தடையும் இத்தகைய பழங்குடி மரபுத் தொடர்ச்சியே.
18. நெடுவேள் என முருகனைக் குறிப்பிடும் மரபு தனி ஆய்வுக்குரியது. திருச்செந்தூரைப் பொருத்தவரை இது இந்திரனைக் குறிக்கக் கூடும்.
19. மேற்கோள்: Chapter 9. Aspects of Political Ideas and Institutions in
Ancient India - R.S.Sharma - பதிப்பு: I.C.H.R. இக்குறிப்பு, 'மழை
பிணித்தாண்ட பாண்டிய மன்னன் ' பற்றிய பழங்கதைக்கும் அடிப்படையாகலாம்.
இக்கதை, 'மேகஞ்சிறை கொண்ட ஐயனார் வில்லுப்பாட்டில் ' (நெல்லை மாவட்டம்,
ஆலங்குளம் அருகில் உள்ள மகிழ்வண்ணநாதபுரம்) பாடப்படுகிறது.
20. மகாபாரதம் X:7 :8; III 228 : 1; IX : 45 : 102; 46 : 79-88.
மேற்கோள் Chapter IX. Aspects of Political Ideas and Institutions in
Ancient India - R.S.Sharma - I.C.H.R.
21. அதர்வண வேதம் IV
: 15:4 - மேற்கோள்: Chapter VIII. Aspects of Political Ideas and
Institutions in Ancient India - R.S.Sharma - I.C.H.R.
22.
'பாரிடம் பாணி செய்ய ' - சம்பந்தர் தேவாரம் - திருவொற்றியூர்ப் பதிகம்
பாடல் 2. தேவாரப் பாடல்களில் 'பாரிடம் ' என்ற சொல் பூதகணங்களைக்
குறிப்பதற்குப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
23.
சூதுபொருதல் என்பது, குடியரசு கணங்களில் அரசுரிமையை நிர்ணயிக்கும்
போட்டிகளுள் ஒன்றாக இருந்ததென்பது மகாபாரதக் கதையாலும் புலனாகும். மேலும்
விவரங்களுக்குப் பார்க்க: Chapter XI. Aspects of Political Ideas and
Institutions in Ancient India - R.S.Sharma - I.C.H.R.
24.
'கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார் ' (குறள் 935);
'பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் ' (குறள் 937)
25. 'இவாள்வார் திருவிழாவிலேழா நாளாலாடிப் பாடின பரிஷை நாயகன்மார்க்கு ' -
வடஆர்க்காடு மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் திருமால்புரம் - முதல் இராஜராஜ
சோழன் கல்வெட்டு - பதிப்பு: சூ. சாமிநாதன், மைசூர் - ஆவணம் இதழ் 4, பக்கம்
3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
'அருஷை யொடரஹர
வெனக் குனித்தடிமை செய் பருஷையர் வெஹுவிதம் பயின்றது ' என்று இராஜராஜ
சோழனின் திருக்கோவலூர்ப் பாடற் கல்வெட்டு குறிப்பிடுகிறது. (பதிப்பு:
பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை. சதாசிவ பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்
கழகம், 1974, பக்கம் 607-608) குனித்தல் என்ற சொல் பூசையின் ஒரு பகுதியாகிய
ஆடலைக் குறிக்கும். பருஷையர் (பரிஷை நாயகன்மார்) என இக்கல்வெட்டுகளில்
குறிப்பிடப்படுவோர் பாரிஷத்யர்களே என்பதில் ஐயமில்லை.
maanilavan@gmail.com