Friday, May 6, 2016

அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை எஸ். இராமச்சந்திரன்

Akshaya-tritiya-akha-trij-happy-akshaya-tritiya.jpg (600×400)



அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை

எஸ். இராமச்சந்திரன்

அக்ஷய த்ரிதியை அல்லது அட்சய திருதியை என்ற அழிவற்ற மூன்றாம் பிறைத் திருவிழா தற்போது பரபரப்பாகப் பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறிவருகிறது. அக்ஷய த்ரிதியை அன்று நகை வாங்கி அணிந்தால் செல்வம் பெருகும் என்ற ஒரு நம்பிக்கையை நகை தயாரிக்கும் நிறுவனங்கள் (Jewellers) மக்கள் மனதில் விதைத்துப் பரப்பி வருகின்றன. அக்ஷய த்ரிதியை என்ற நிகழ்வுக்கு என்ன வரலாற்றுப் பின்னணி இருக்கின்றது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது. கேரள மாநிலத்தில் ஓணம் விழாவும் தமிழகத்தில் தைப் பொங்கலும் கொண்டாடப்படுவது போல மராட்டிய மாநிலத்தில் அக்ஷய த்ரிதியை முதன்மையான ஒரு விழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அங்கும் கூட இவ்விழாவின் சமய, சமூகப் பின்னணி என்ன என்பதைப் பற்றிய சரியான புரிதல் இல்லை. எனவே, அக்ஷய த்ரிதியை பற்றிய ஒரு வரலாற்று ஆய்வாக இக் கட்டுரை அமைகிறது.

அக்ஷய த்ரிதியை என்ற சொல்லுக்குத் தேய்தலற்ற அல்லது வளர்கின்ற மூன்றாம் பிறை நாள் என்பது பொருளாகும். ஒரு மாதத்தின் வளர்பிறைப் பகுதியாகிய சுக்ல பட்ச த்ருதியைத் திதியை அக்ஷய த்ரிதியை எனக் குறிப்பிடுவது பொருத்தமே. கதிரவனின் ஒளிமங்கிய பிறகு அந்திவானத்தில் மேற்குத் திசையில் கீற்றாகப் புலப்பட்டுச் சிறிது நேரத்தில் மறைந்துவிடுகிற மூன்றாம் பிறையைக் காத்திருந்து தரிசிக்கின்ற சமய நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மூன்றாம் பிறையும் புனிதமானதே. ஆயினும், அவற்றையெல்லாம் அக்ஷய த்ரிதியை என அழைப்பதில்லை. எனவே எது அக்ஷய த்ரிதியை என ஆராயவேண்டியது நம் கடமையாகிறது. கி.பி. 1679ஆம் ஆண்டுக்குரிய தெலுங்குச் செப்பேடு ஒன்றில் சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று அக்ஷய த்ரிதியை திதியின் போது ராகவேந்திர தீர்த்தரின் மகன் யோகீந்த்ர தீர்த்த ஸ்ரீபாதருக்குத் தாமிரபரணி நதிக்கரையில் ஆறாம்பண்ணை என்ற ஊரில் மட மான்யமாக நிலம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (பெங்களூர் ராகவேந்திரர் மடத்திலிருந்து வெளியிடப்பட்ட 10ஆவது செப்பேடு). எனவே சித்திரை மாததில் ரோகிணி நட்சத்திரத்தில் அமைகின்ற த்ரிதியைத் திதி அக்ஷய த்ரிதியை என அழைக்கப்பட்டதெனத் தெரிய வருகிறது. ஆனால், கி.பி. 1875ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சாவூர் மானோஜியப்பா தெரு அண்ணா சத்திரம் தண்ணீர்த் தொட்டிக் கல்வெட்டு "வைகாசி மாதத்தில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அக்ஷய த்ரிதியை உதய கருட வாகனோத்ஸவம்" எனக் குறிப்பிடுகிறது (செ. இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள் பக்கம் 21, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை, 1987). மேற்குறித்த இரண்டு கல்வெட்டுகளுமே திருமால் வழிபாடு தொடர்பான கல்வெட்டுகளாயினும், முன்னது துவைத சம்பிரதாயத்தையும், பின்னது விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தையும் சேர்ந்தவையாகும். பிந்தைய கல்வெட்டில் வைகாசி மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் அக்ஷய த்ரிதியை கொண்டாடப்பட்டது என்ற குறிப்பு இடம்பெறவில்லை. ஆயினும், வைகாசி மாதத்தில் வளர்பிறை த்ரிதியை திருவாதிரை நட்சத்திரத்தில்தான் வரும். எனவே இப்போது அக்ஷய த்ரிதியை என்பது சித்திரை ரோகிணியில் வருவதா வைகாசி திருவாதிரையில் வருவதா என்ற முதன்மையான கேள்வி எழுகிறது. சித்திரை ரோகிணி என்பது சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு கோள்களும் தத்தமது உச்ச வீட்டில் இருக்கும் போது நேர்கிற த்ரிதியைத் திதியாகும். அதாவது மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இடம்பெற்றிருக்கும் போது நிகழ்கிற த்ரிதியை. வைகாசி திருவாதிரை என்பது இத்தகைய கோள்களின் உச்ச ஸ்தானம் சார்ந்த நிகழ்வன்று. ஆனால், ஆதிரை நட்சத்திரத்தில் மூன்றாம் பிறை என்பது சிவ வழிபாட்டோடு பின்னிப் பிணைந்த ஒரு நிகழ்வாகும். சிவனை ஆதிரையான் எனப் பரிபாடல், கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சிவன் தலையில் சூடிய பிறை நிலவு மூன்றாம் பிறையே என்பதும் மிகப் பழைய மரபாகும். எனவே, வைகாசி ஆதிரை என்பது சிவ வழிபாட்டுக்கு அடிப்படையான ஒரு புனித நாள் என்பதில் தவறில்லை. மேற்குறித்த இரண்டு வித நிகழ்வுகளையும் வரலாற்றுத் தராசில் வைத்து எடை போடும் போது வைகாசி ஆதிரையே வலிமையான ஒன்றாகத் தெரியவருகிறது. ஏனெனில், வைதிகப் புராண மரபின்படி நான்கு யுகங்களுள் தற்போது நடைபெறுகிற கலியுகம் மாசி மகத்தன்று தொடங்கிற்று என்றும் முதல் யுகமாகிய கிருத யுகம் அல்லது சத்ய யுகம் வைகாசி மாத சுக்ல பட்ச த்ரிதியையில் (அக்ஷய த்ரிதியை அன்று) தொடங்கிற்று என்றும் நம்பப்படுகின்றன. வைகாசி ஆதிரைக்கு வலிமை சேர்க்கின்ற வரலாற்றுச் செய்திகளை இனி ஆராய்வோம்.

அட்டமூர்த்தியும் ஆதிரை நாளும்

சிவன் எண்வகை வடிவினன் என்பது மிகப் பழமையான ஒரு கோட்பாடாகும். இதனை அஷ்டமூர்த்தித் தத்துவம் எனக் குறிப்பிடுவர். அஷ்டமூர்த்தி என்பது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் சூரிய சந்திரரும், ஆன்மாவும் என்று சைவர்கள் குறிப்பிடுவர். எட்டாவதாக இடம்பெறும் தத்துவம் அறம் அதாவது தர்மம் என்று சங்க இலக்கியமாகிய பரிபாடலில் (வரி 3:4-5) குறிப்பிடப்படுகிறது. கி.பி. 5-6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிமேகலை (27: 89-90) யஜமானன் என்கிற யாகத்தீ வடிவத்தைக் குறிப்பிடுகிறது. வைதிக நெறி சார்ந்த சைவ சமயத்தில் இக் கோட்பாடே நெடுங்காலமாக நிலைத்திருந்தது. சைவ நாயன்மாராகிய திருநாவுக்கரசர் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எரியும் காற்றுமாகி ஆகாயமாய் அட்டமூர்த்தியாகி" எனக் குறிப்பிடுகிறார். பிங்கலர் என்ற ஜைன முனிவரால் கி.பி. 10-11ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பிங்கலநிகண்டு, அஷ்டமூர்த்தியின் எட்டாவது அம்சமாக யஜமானனுக்குப் பதிலாக ஆன்மாவைக் குறிப்பிடுகிறது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கருவூர்ச் சித்தரின் ஒன்பதாம் திருமுறைப் பாடல் ஒன்று ("அம்பரா அனலா அனிலமே...") இயமானனுக்குப் பதிலாக அணுவைக் குறிப்பிடுகிறது. கி.பி. 16-17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அதிவீரராம பாண்டியன் தமது கருவைப்பதிற்றுப்பத்து அந்தாதியில் (பாடல் 20), "ஆதவன் மதிபார் அனல் வெளிபுனல் கால் அருமறை எச்சனென்று எட்டுப் பேதமாம்" எனக் கூறுகிறார். யஜமானன் என்பது எச்சன் என்று கூறப்பட்டுள்ளது. கி.பி. 16-17ஆம் நூற்றாண்டில் சேய்ஞலூர் ஞானப்பிரகாசர் என்பவரால் கைக்கோளர் சமூகத்தவரின் வீரச்சிறப்புகளைப் புகழ்ந்து இயற்றப்பட்ட "வீர நாராயண விஜயம்" என்ற நூல், அஷ்டமூர்த்தித் தத்துவத்தில் எட்டாவது அம்சமாக "ஆவி"யைக் குறிப்பிடுகிறது. (வீர நாராயண விஜயம், பதிப்பு: ந. கந்தசாமி, ராசிபுரம் - 1986.) கி.பி. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொகலாய அரசன் முன்னிலையில் சைவத் துறவி குமரகுருபரர் சிவனது அஷ்டமூர்த்தித் தத்துவத்தை விளக்கிப் பேசுகையில், எட்டாவதாக இருக்கின்ற தத்துவம் ஆத்மா எனக் குறிப்பிட்டதாகச் சைவ சமய அறிஞர்கள் எழுதியுள்ளனர்[1]. எவ்வாறாயினும், இந்த எட்டு வகைப் பொருள்களுக்கும் உரிய நட்சத்திரங்கள் இவை இவை எனக் குறிப்பிடும் ஒரு மரபு உண்டு. இந்திர காளிய மேற்கோளாக நவநீதப் பாட்டியல் உரை குறிப்பிடுகின்ற விவரத்தின்படி, நீர் சதய நட்சத்திரத்துடனும், நிலம் கேட்டை நட்சத்திரத்துடனும், காற்று சுவாதி நட்சத்திரத்துடனும், நெருப்பு கார்த்திகை நட்சத்திரத்துடனும், ஆகாயம் ஓண நட்சத்திரத்துடனும், சூரியன் புனர்பூச நட்சத்திரத்துடனும், சந்திரன் மிருகசிரஸ் நட்சத்திரத்துடனும், இயமானன் பரணி நட்சத்திரத்துடனும் இணைத்துப் பேசப்படும். (நவநீதப் பாட்டியல் மூலமும் உரையும், உ.வே.சாமிநாத ஐயர் பதிப்பு, 1961, பக்கம் 20) இவ்விவரங்களை இத்தனை விரிவாக இங்குக் குறிப்பிடும் நோக்கம் சிவ வழிபாட்டின் அடிப்படைத் தன்மையாகிய அஷ்டமூர்த்தித் தத்துவத்தில் ஆதிரை நட்சத்திரத்துக்கு இடமில்லை என்பதை உணர்த்துவதற்காகத்தான். அஷ்ட பைரவர் எனக் குறிப்பிடுவதும் பரணி நட்சத்திரத்தை பைரவருக்கு உரியதாகக் கொள்வதும் மரபாக இருப்பதால் அஷ்ட மூர்த்தித் தத்துவம் பைரவ வழிபாட்டையே அடிப்படையாகக் கொண்டது என்பதும் யஜுர்வேதத்தில் இடம்பெறுகிற யாகத்தீ வடிவ ருத்திர வழிபாட்டுக் கூறுகளுடன் பைரவ வழிபாடு இணைந்ததன் விளைவாக உருவான பக்தி இலக்கியக் காலச் சிவ வடிவத்தின் இயல்புகளாகப் புனையப்பட்டவையே மேற்குறிப்பிட்ட விவரங்கள் என்பதும் தெளிவாகின்றன. அவ்வாறெனில், ஆதிரை நட்சத்திரமும் மூன்றாம் பிறை நிலவும் சிவவழிபாட்டின் அடிப்படை அம்சங்கள்தாமா என்று ஆராயப்பட வேண்டிய நிலை உள்ளது. சங்க இலக்கியமான பரிபாடல், "ஆதிரை முதல்வனிற்கிளந்த நாதர் பன்னொருவர்" (பா. 8:6-7) என்றும், "பதினொரு கபிலரும்" (பா. 3:7) என்றும் குறிப்பிடுவதிலிருந்து ஏகாதசருத்ரர் என்ற கருத்தோட்டம் ஆதிரை நட்சத்திரத்தோடு தொடர்புடையது என்று தெரிகிறது. கலித்தொகை (150: 17-20) பிள்ளைப் பிறையைச் சடையிலணிந்த சிவனைப் "புதுத்திங்கட்கண்ணியான்" என்றும் "ஆதிரையான்" என்றும் குறிப்பிடுகிறது. செந்நிறத்தைக் கபில நிறம் அல்லது ருத்ர நிறம் எனக் குறிப்பிடுவர் . எனவே இவ்வருணனைகளெல்லாம், கபில நிறத்தவனாகிய அக்னி வடிவ - ருத்ரனைக் குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. ஆயினும் இவனது வடிவம் வைதிக மரபினுள் முழுமையாக ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்ட சிவ வடிவமாகவும் தெரியவில்லை. அப்படியானால், இந்த ஆதிரையானின் அடிப்படை வடிவம் எது என்ற கேள்வி எழுகிறது.

அஹ¤ரமஸ்தாவும் ஆதிரையானும்

மேற்குறித்த கேள்விக்கு விடை தேடுவதென்றால், பாரசீக சமய நூலாகிய "ஜெண்ட அவெஸ்தா" நூலினையும் பாரசீகக் கிளை மொழியாகிய பஹ்லவி மொழியில் எழுதப்பட்டுள்ள ஜொராஸ்டிர சமய நூல்களையும் நாம் புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கும். அஹ¤ரமஸ்தா (அசுரர் தலைவன்) என்ற பெயரில் வழிபடப்பட்ட வருணன் என்ற முழுமுதற் கடவுளின் புதல்வன் ஆதர் ஆவான். நிலவுலகில் இவனது வடிவம் நெருப்பு. வானமண்டலத்தில் இவன் ஆதர் என்ற நட்சத்திரமாக இருக்கிறான். வளர்பிறைக்கால மூன்றாம் பிறை இந்த ஆதர் நட்சத்திரத்துடன் இணைந்து மேற்றிசையில் அந்திக் காலத்தில் சிறிது நேரம் தோன்றி மறையும் போது, இயற்கையில் என்னென்ன நிகழும் என்று பஹ்லவி நூல்கள் குறிப்பிடுகின்றன. அப்போது பருவக் காற்று வீசத் தொடங்கும்; அபாம் நபாத் (அப்புவின் நாபி அல்லது தண்ணீரின் கொப்பூழில் பிறந்தவன்) உதிப்பான்; மலைகளை உடைத்துக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுக்கும்; காட்டு மலர்கள் மலரும் என்றெல்லாம் அந்நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது[2]. ஆதர் எனப்பட்ட ஆதிரை நட்சத்திரத்துடன் இணைந்து மூன்றாம் பிறை தோன்றுவதென்பது வைகாசி மாதத்தில்தான் நிகழும். முழுநிலவுக் காலத்தை மாதத்தின் முடிவாகக் கொள்கின்ற பூர்ணிமாந்த முறையின்படி சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்துடன் முடிவடையும். 27 நட்சத்திரங்களை நிலவின் ஒரு சுழற்சிக் காலமாகிய 30 நாள்களுக்குப் பிரித்து வழங்க வேண்டியதிருப்பதால், வைகாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அமாஸ்யம் (மதிமறைவு) நிகழ்ந்த பின்னர் ஆதிரை நட்சத்திரத்துடன் த்ரிதியைத் திதியும், சித்திரையிலிருந்து மூன்றாவது நட்சத்திரமாகிய விசாக நட்சத்திரத்துடன் பூர்ணிமையும் இணைந்து நிகழ்கிற வகையில் கணக்கீடு செய்யப்படும். இவ்வாறு வைகாசி மாத வளர்பிறை மூன்றாம் (த்ரிதியை) திதி திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து தோன்றுவது அம்மாதத்தின் 18ஆம் தேதியன்று நிகழும். இன்றைய ஆங்கிலக் காலண்டர்படி, ஜூன் மாதத் தொடக்கத்திற்கு இது பொருந்தி வரும். மலையாளத்தில் இதனை இடவப்பாதி என்று குறிப்பிடுவர். ரிஷப மாதமாகிய வைகாசி மாதத்தின் இடைப்பகுதி என்று இதற்குப் பொருள். இக்காலகட்டத்தில்தான் தென் மேற்குப் பருவக் காற்று தொடங்கும். தென்மேற்குப் பருவக்காற்று வீசுகின்ற பகுதிகளில் கோடை இடி மின்னலுடன் பருவ மழை தொடங்கும். மேகங்களினிடையே தோன்றும் மின்னல் கொடிதான் அபாம் நபாத் என்ற உருவகமாகப் பஹ்லவி நூல்களில் குறிப்பிடப்பட்டது. நெருப்பு என்பது படைப்பியக்கத்தைக் குறிக்குமாதலால், வருணனால் படைக்கப்பட்டவன் அதாவது அவனது மகன் என மின்னல் உருவகப்படுத்தப்பட்டது. மலையை உடைத்துக் கொண்டு வெள்ளம் பெருகுவது என்பதையும் காட்டு மலர்கள் மலர்வது என்பதையும் பொதிய மலை, திரிகூடமலைப் பகுதியில் குற்றாலம் அருவியில் தண்ணீர் வீழ்வது தொடங்குகின்ற நிகழ்வுடனும் நீலகிரி மலையில் மலர்க் கண்காட்சி நடத்தப்படுகின்ற நிகழ்வுடனும் தொடர்புபடுத்திப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். ஆதிரையான் வழிபாட்டில் தலைமை இடமாக ஜொராஸ்டிர சமய நூல்களில் குறிப்பிடப்படும் இடம் ஆதரோபாதகான் என்பதாகும். இது இன்றைய அஜர்பைஜான் ஆகும். ஆதரோபாதகான் என்பதற்குப் பாதாளத்தின் நெருப்பு என்று பொருள். அப்பகுதியில் நிலத்தடியிலிருந்து எரிவாயு வெளிப்படும் நிகழ்வுகள் நடைபெற்றமையால் இப்பெயர் சூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒருவகையில் பார்த்தால் அஜர்பைஜான் பகுதியைப் பொருத்தவரை அஹ¤ரமஸ்தா (ஓர்மஸ்த்) என்ற பெயரில் வழிபடப்பட்ட வருணனின் மகன் ஆதர் என்ற நெருப்புக் கடவுள் என்ற உருவகம் கூட, மண்ணுக்கடியிலிருந்து கிடைக்கின்ற திரவ வடிவிலான எரிபொருள்களையும், வெந்நீர் ஊற்றுகளையும் குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு.

சைவ சமயத்தில் ருத்ரனின் முதன்மையான வடிவம் அக்னியாகவே கருதப்படுகிறது. வைணவ மரபின்படி, விஷ்ணு நீர் வடிவினன் என்பதால் அவர் நாராயணன் எனப்படுவார். திருமாலுடன் திருவோண நட்சத்திரத்தையும், சிவனுடன் திருவாதிரை நட்சத்திரத்தையும் தொடர்புபடுத்துவது மரபு. 27 நட்சத்திரங்களில் இவை இரண்டுக்கு மட்டுமே திரு என்ற அடைமொழி சேர்க்கப்படுகிறது. திருவோண நட்சத்திரம் தண்ணீரின் அம்சம் உடையது என்றும், திருவாதிரை நட்சத்திரம் நெருப்பின் தன்மை உடையது என்பதும் இந்து சமய நம்பிக்கைகளாகும். (நாம் முன்னர்க் குறிப்பிட்ட நவநீதப்பாட்டியல் உரை மேற்கோளின்படி, விஷ்ணு நீல நிற விண்ணுடன் தொடர்புபடுத்தப்படுவார்.) எனவே, ஆதர் என்ற தெய்வத்தை நெருப்பு வடிவில் பாரசீக சமயத்தவர் வழிபடுவது வைதிக மரபுக்கும் ஏற்புடைய செயல்பாடே ஆகும். இது பாரசீக சமயத்தில் யாகத்தீயாக - யஜமானனாகக் கருதப்படுவதில்லையாயினும் படைக்கின்ற ஆற்றலாகக் கருதப்பட்டது. ஆதர் என்ற நெருப்புக் கடவுளை வழிபடுகின்ற பூசாரி அத்ரவன் எனப்பட்டார். குஜராத் பகுதியில் வழங்கிய பாரசீகக் கிளை மொழியாகிய பாசண்ட மொழியில் கிறிஸ்து சகாப்தத் தொடக்க நூற்றாண்டுகளில் இந்தத் தீ வழிபாட்டுப் பூசாரி அத்ரணன் என அழைக்கப்பட்டார் எனச் சில குறிப்புகளால் தெரிய வருகிறது. அத்ரணன் என்ற இச் சொல்லே தமிழில் அந்தணன் என வழங்குகிறது. ஆதர் என்ற பாரசீகப் பெயருடன் ஆதிரை என்ற தமிழ் வடிவமே நெருக்கமுடையதாகத் தோன்றுகிறது. சமஸ்கிருதத்தில் ஆர்த்ரா என்று இந்த நட்சத்திரம் வழங்கப்பட்டது. நாம் இங்குக் குறிப்பிட்டுள்ள ஆய்வுக் கருத்து பல்வேறு தளங்களில் ஆராய்ந்து நிலை நாட்டப்படவேண்டிய ஒன்றாகும். இப்போதைக்கு ஒரு தொடக்கம் என்றுதான் இதைச் சொல்ல முடியும். தமிழகச் சிவ வழிபாட்டு மரபில் பாரசீக சமயத்தின் ஒரு கிளையாகிய குஜராத்திப் பாசண்ட சமய மரபின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதற்கான ஒரு மேலோட்டமான சான்றாக இதனை எடுத்துக் கொள்ளலாம்[3]. மேலைக் கடற்கரைப் பகுதியாகிய மராட்டிய மாநிலப் பகுதிகளில் அக்ஷய த்ரிதியை முதன்மையான ஒரு விழாவாக நீடித்து வருவது பஹ்லவி மொழிப் புராணத் தொடர்பின் எச்சமே எனலாம்.

அரும்பெறல் ஆதிரையான் அணி

இனி, அக்ஷய த்ரிதியைக்கும் நகை அணிவதற்கும் என்ன தொடர்பு எனப் பார்ப்போம். இது தொடர்பாகச் சிந்திக்கும் போது இரண்டு கருத்துகள் தோன்றுகின்றன. ஒன்று நாம் மேலே கண்டது போல மின்னல் கொடி என்பது ஆதிரையானின் ஓர் அம்சமாகும். கலித்தொகை (150: 20-21) பாடலில் "அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த பெருந் தண் சண்பகம் போல" என்ற குறிப்பு காணப்படுகிறது. சண்பகம் ஒரு காட்டு மலராகும். குற்றாலத்தில் சண்பக அடவி என்றே ஒரு காட்டுப் பகுதி உண்டு. அபாம் நபாத் எனப்பட்ட மின்னல் கொடியின் ஒளியில் காட்டு மலர்கள் மலர்வது இயல்பு. குறிப்பாக, மின்னல் ஒளி பட்டுத்தான் தாழை மடல் விரியும். மின்னலைக் குறிக்கும் கேது என்ற சொல்லுடன் தொடர்புடையதே "கைதை" என்ற சொல்லாகும். சமஸ்கிருதத்தில் கேதகி என்றும், மராட்டி மொழியில் கேட்கி என்றும் இச்சொல் வழங்கும். இவை தாழம் பூவுக்குரிய பெயர்களாகும். ஆஷாட (ஆடி) மாதத்தில் கார்காலம் தொடங்கும்போது மின்னலால் தாழை மலர்கிறது எனக் கவி காளிதாசனின் மேகதூதம் (1: 2-3) குறிப்பிடுகிறது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் கணநாத நாயனார் பிறந்த ஊராகிய சீர்காழியைக் குறிப்பிடும்போது, "கொண்டல் கொண்டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறும் கண்டல்வெண் சோறளிக்குங்கடற் காழி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "மேகங்களினிடையே தோன்றுகின்ற மின்னலுக்குப் படையலாகத் தாழை தனது மடலை விரித்து மகரந்தமாகிய சோற்றினைப் படைக்கின்ற சீர்காழி" என்பது இதன் பொருளாகும்[4]. தாழை மடல் பொன்னிறமுடையதாகும். தாழையும் சிவ பெருமானால் விரும்பிச் சூடப்பட்டது என்பதற்கு சைவத் திருமுறைகளில் ஆதாரம் உள்ளது[5]. சைவ சமயத்தில் கோயில் என்றாலே சிதம்பரத்தைத்தான் குறிக்கும். சிதம்பரம் நடராசர் கொன்றையும் செண்பக மாலையும் சூடியதாக அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியில் குறிப்பிடுகிறார். ("தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்"). திருவாரூர் அருகிலுள்ள முதன்மையான பைரவ வழிபாட்டுத் தலமாகிய திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர் சிவப்பேறு பெற்ற இருபத்தோராம் நாள் சிவ பெருமான் செண்பகப்பூ மணம் வீச பவனி வருவார் என்று நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் சித்திரைப் பரணி கழிந்த இருபத்து ஒன்றாம் நாள் திருவோண நட்சத்திரத்தன்று செண்பகப்பூ உற்சவம் கொண்டாடப்படுகிறது. (ஸ்ரீ புஷ்பரதீசுவரர் சிவமஞ்சரியின் 46ஆவது மலர், திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2004 தீபாவளித் திருநாள்) சண்பகமலர் பொன்னிறமுடையது. சிவபெருமானின் சடையில் அணிவதற்குரியதே. ஆயினும் சீதையின் சாபத்தைப் பெற்றதால் தாழையும், நாரதரின் சாபத்தைப் பெற்றதால் சண்பகமும் சிவ வழிபாட்டில் விலக்கப்படுகின்றன எனப் பிற்கால நூல்களான சிவபுராணமும், சிவ மகாபுராணமும் குறிப்பிடுகின்றன (பக்கம் 811 மற்றும் 727, "அபிதான சிந்தாமணி" ஆ. சிங்காரவேலு முதலியார், Asian Educational Services, Madras 1988). தமிழக வழிபாட்டு மரபில் சிவன் கொன்றை மாலையையே சிறப்பாகச் சூடியதாகக் குறிப்பிடுவர். கொன்றை மலரும் பொன்னிறமுடையதே. "கண்ணி கார் நறுங் கொன்றை வண்ண மார்பில் தாரும், அ·தே" என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து குறிப்பிடும். எனவே சிவபெருமான் பொன்னிற மலர்களை விரும்பி அணிபவர் என்பது புலனாகும். தமிழகச் சைவ வழிபாட்டு மரபில் சிவன் கொன்றை சூடியாகவே காட்சியளிக்கிறார். சேய்ஞலூர்ப் பிள்ளை எனப்படும் சண்டேஸ்வரருக்கு சிவன் தாம் அணிந்திருந்த கொன்றை மாலையைச் சூட்டிச் "சண்டேச பதம்" எனப்படும் பதவி அளித்ததாகத் தேவாரமும் பெரியபுராணமும் குறிப்பிடும். சங்ககால இலக்கியமான கலித்தொகையின் இறுதிப்பாடல் "பிறங்குநீர் சடைக்கரந்தான் அணி அன்ன நின்நிறம்", "உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்னநின் உரு", "புதுத்திங்கட் கண்ணியான் பொன்பூண் ஞான்று அன்ன நின் கவின்" என்றெல்லாம் தலைவியின் பொன்வண்ண எழிலைப் புகழ்ந்து உரைக்கின்றது. இவ்வரிகளிலெல்லாம் கொன்றைப் பூ பொன்னாக அல்லது பொன் நகையாக உருவகிக்கப்பட்டுள்ளது[6]. இவ்வாறு சிவபெருமானுக்கும் கொன்றைக்கும் உள்ள உறவு விதந்து ஓதப்பட்டாலும் பலவித மலர்கள் அணிவதையும் சிவன் விரும்பவே செய்கிறார் என்பது சைவத் திருமுறைகளால் தெரிய வருகிறது. "ஏற்று வெல்கொடி யீசன்றனாதிரை நாற்றஞ் சூடுவர் நன்னறுந்திங்களார் நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார் வேற்றுக் கோலங் கொள் வீழிமிழலையே" (ஐந்தாம் திருமுறை திருவீழிமிழலைப் பதிகம் பாடல் 2) என்ற தேவாரப் பாடலில் திருநாவுக்கரசர், யோகியான சிவபெருமான் போகியின் கோலத்தை ஏற்றுப் பலவித நறுமலர்களையும் சந்தனத்தையும் புனைந்து ஆதிரை நாளில் தோன்றுகின்ற காட்சியைக் குறிப்பிடுகிறார். மேலும், அவரே தமது திருவாரூர்ப் பதிகத்தில் "வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள் சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஒளிதோன்றச் சாதிகளாய பவள முத்துத் தாமங்கள் ஆதி ஆரூர் ஆதிரை நாளாலது வண்ணம்" என்ற பாடலில் நறுமண மலர் மாலைகள் மட்டுமின்றிப் பவளங்களும் முத்துகளும் விரவிக் கோத்த மாலையையும் ஆதிரை நாளன்று சிவபெருமான் அணிந்து வண்ணமுறக் காட்சியளிக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். சைவத் திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் "அணியுடை ஆதிரை நாள்" என்ற ஒரு குறிப்பு காணப்படுகிறது (9: 29.12). பிள்ளைப் பிறை ஆதிரையான் தனக்கு அணியாக அல்லது மாலையாக மின்னல் கொடியைக் கொள்வது போல, அவனை வழிபடுபவர்களும் ஒளி மிகுந்த பொன் நகைகளை எய்துவர் என்ற ஒப்புமை அடிப்படையிலோ, அவன் அணிகிற - மின்னலால் மலர்கிற பொன்னிற மலர்களைப் போன்ற நகைகளை அடைவர் என்ற அடிப்படையிலோ இத்தகைய நம்பிக்கை தோன்றியிருக்கலாம். ஆற்றுப் பெருக்கு என்பதே வளமைச் சடங்குகளோடு தொடர்புடையாதாகும். குடும்பம் தழைக்க வேண்டும், மண வாழ்வு நிலைக்க வேண்டும் என்ற வேண்டுதலின் அடிப்படையில் ஆடிப் பெருக்கு நாளன்று தாலி பெருக்கும் சடங்கு செய்வது போல, வைகாசி மாத ஆதிரை நாளிலும் தாலி பெருக்கும் சடங்கு இந்தியாவின் மேலைக் கடற்கரைப் பகுதிகளிலோ, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலோ நிகழ்ந்திருக்க வேண்டும். குடகு மலையில் உதிக்கின்ற காவிரியின் பிறந்த நாளாக ஆதிரை நாளைக் 'காவேரி மஹாத்மியம்' (சரஸ்வதி மகால் நூலகச் சுவடி) குறிப்பிடுகிறது. எனவே, பருவ மழை தொடங்குவதற்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உதிக்கின்ற ஆறுகளில் நீர்ப்பெருக்கு ஏற்படுவதற்கும் உரிய நாளாகிய வைகாசி ஆதிரை நாளன்று மங்கல நாண் உள்பட அணிகலன்களைப் பெருக்கிக்கொள்வதென்பது நம்பிக்கை சார்ந்த சடங்காகவும் தோன்றியிருக்கலாம். புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் கல்வெட்டில் (Pudukkottai State Inscriptions - 139), வைகாசி ஆதிரை நாள் விழா என்பது விளைச்சல் தொடர்பான விழாவாகவே தோன்றியது என்பதற்கான ஆதாரம் உள்ளது. மழை வளம் என்ற கருத்தோட்டமும், ஆற்று நீர்ப்பாசனத்தால் விவசாயம் செழித்தல் என்ற சமூகப் பொருளியல் நிலைப்பாடும் இந்த வைகாசி ஆதிரை நாள் ஆடல் மரபுடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. ஆறுகளைத் தெய்வமாகத் தொழுத முன்னோர், ஆற்றுப் பெருக்குடன் குடும்ப வாழ்க்கையின் நலன்களையும் தொடர்புபடுத்திப் பார்த்ததால்தான் ஆடிப்பெருக்கின் போது தாலி பெருக்கும் சடங்கு நிகழ்த்தப்படும் வழக்கம் தோன்றியது. சரியாகச் சொல்வதானால் ஆடி மாதம் 18ஆம் நாளன்று தாலி பெருக்கும் சடங்கினைச் செய்வது என்பதேகூட வைகாசி மாதம் 18ஆம் நாளன்று (பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி வைகாசி மாத வளர்பிறை ஆதிரை நாளன்று) தாலி பெருக்கும் சடங்கு செய்து வந்த மேலைக் கடற்கரைப் பகுதி மரபின் பிற்காலத் திரிபாகவே இருக்கவே வேண்டும். செண்பகமாறன் என்ற பாண்டிய குல முன்னவர் பெயரும் பொதிய மலையுடன் தொடர்புடையதே ஆகும். பிற்காலத்துக் கேரள அரச வம்சத்தவருள் செண்பகராமன் என்ற பெயர் அதிகமாக வழங்கியுள்ளது. இவையெல்லாமே மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அமைப்புடன் தொடர்புடைய சொல் வழக்குகளே எனத் தோன்றுகிறது. மேலும் சண்பகம் என்பது வசந்த (இளவேனில்) காலத்தில் மலர்வது எனக் காளிதாசன் தனது ரிதுசம்ஹாரத்தில் (6:5) குறிப்பிடுகிறார். எனவே சண்பகம், தாழை, கொன்றை இவையெல்லாமே வேனிற் பருவத்துடனும் தென்மேற்குப் பருவக் காற்றுடனும் தொடர்புடைய மலர்களாகலாம்.

ஆதிரை நாள் வண்ணமும் சேயோன் வழிபாடும்


(படம்: சிவனைப் போன்ற தோற்றமுடைய முருகன் - ஆந்திர மாநிலம் சேஜர்லா)

சங்ககாலக் குறிஞ்சி முல்லை ஆகிய நிலங்களுடன் தொடர்புடைய சேயோன் வழிபாட்டிலும், மாயோன் வழிபாட்டிலும் கடம்பு கொன்றை ஆகியன தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றன. சங்க இலக்கியத்தில "கடம்பமர் கடவுள்" எனச் சேயோன் குறிப்பிடப்படுகிறான். "கார்க் கடப்பந்தார் எம் கடவுள்" எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடும் (3:24:14). கார்க் கடப்பந்தார் என்பது கார் காலத்தில் இடி இடிப்பதால் மலர்கின்ற கடம்ப மலர்களால் கட்டப்பட்ட மாலை எனப் பொருள்படும். ஆதிரை நாளுடன் முருகனைத் தொடர்புபடுத்துவது இயலாத ஒன்றே. ஆயினும், சங்க காலச் சேயோன் வழிபாட்டுடன் நாம் மேலே கண்ட, பஹ்லவி மொழிப் புராணச் செய்திகளான காட்டு மலர்களை மலர்வித்தல், மலைகளை உடைத்து ஆறுகளைப் பெருக்கெடுக்கச் செய்தல் போன்றன தொடர்புடைய அம்சங்களாகவே காணப்படுகின்றன. குறிஞ்சிப் பாட்டில் தலைவன் வருகை வருணிக்கப்படுகையில் "வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇய தண்ணறுந் தொடையல் வெண்போழ்க் கண்ணி நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சி " (வரி 114-116) எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு உரை கூறுகையில் "பல நிறங்களையும் பல சாதிகளையும் உடைய மலர்களை ஆராய்ந்து தொடுத்த தண்ணிய நறிய தொடையலையும் வெள்ளிய தாழை மடலிலே யுடைத்தாகிய கண்ணியையும் முருகனென்று அச்சமுறும்படி சூடி" என நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். (பக்கம் 194-5, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் - உ.வே. சாமிநாதய்யர் பதிப்பு, 1974.) குறிஞ்சிப்பாட்டில்தான் 99 வகை மலர்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும். முருகு என்ற சொல்லே மணம் என்ற பொருளுடையதாகும். "முருகமர் பூ முரண்கிடக்கை" எனப் பட்டினப்பாலை (வரி 37) குறிப்பிடுகிறது[7]. மலைகளை உடைத்துக் கொண்டு ஆறுகளைப் பெருக்கெடுக்கச் செய்தல் என்பதும் இடி விழுவதாலேயே மலைகளில் சுனைகள் தோன்றுகின்றன என்ற பழங்குடி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். "குருகொடு பெயர் பெற்ற மால்வரை யுடைத்து மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை" எனச் செவ்வேள் பற்றிய பரிபாடல் (5:9-10) குறிப்பிடுகிறது. இது மலைகளிலிருந்து ஆறுகளைப் பெருக்கெடுக்கச் செய்த அற்புதச் செயல் பற்றிய ஒரு வர்ணனையே ஆகும். "திறல் வேல் நுதியிற் பூத்த கேணி விறல் வேல் வென்றி வேலூர்" என்ற சிறுபாணாற்றுப்படை (172-3) வரிகளுக்கு முருகனின் வேல் நுனியால் உருவாக்கப்பட்ட கேணியை உடைய வேலூர் என்றே உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். சேயாறு (செய்யாறு) இவ்வாறு முருகனது வேலால் மலையை உடைத்து உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. (பக்கம் 733, "அபிதான சிந்தாமணி", ஆ. சிங்காரவேலு முதலியார்.) இவ்வாறெல்லாம் இருப்பினும் முருகனைக் கார்த்திகை நட்சத்திரத்துடன் தொடர்புபடுத்துவதான் மரபாக இருந்து வந்துள்ளது. மட்டுமின்றி, வருணன் மகன் அக்னி என்ற கருத்தோட்டத்தின்படி, முருகனை பிரம்மாவின் மகனாகவும் குபேரனின் மகனாகவும் வெவ்வேறு வகைகளில் சித்திரித்து வந்ததன் படிநிலை வளர்ச்சியாக முழுமுதற் பரம்பொருளாகிய சிவபெருமானின் மகன் என்ற நிலையை எய்தி அத்துடன் நிறைவு கொள்ள வேண்டியதாயிற்று. "நம்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்" என அப்பர் பெருமான் குறிப்பிடுவதைப் பார்க்கும்போது கெளமாரம் என்ற சமய மரபு, கி.பி. ஏழாம் நூற்றாண்டு அளவிலேயே தனது தனித்தன்மையைப் பெருமளவு இழந்து விட்டது என்பது புலனாகிறது. கடம்பமர் கடவுளாகிய கந்தன் குறிஞ்சி நிலக் கடவுளாக வட்டார அளவில் மட்டும் செல்வாக்குப் பெற்ற தெய்வமாக நின்றுவிட்டது போன்றே முல்லை நில வேட்டுவர்-ஆயர் வழிபாட்டு மரபாகிய பைரவ மரபும் சைவ சமயத்தின் அகச் சமயப் பிரிவுகளுள் ஒன்றாகச் சுருங்கிப் போயிற்று. "கரந்தை சூடி" எனச் சிவபெருமானைக் கி.பி. 12ஆம் நூற்றாண்டைய இலக்கியமான கம்பராமாயணம் குறிப்பிடுகின்றது (யுத்த காண்டம் இராவணன் சோகப்படலம் பாடல் 11). கரந்தை என்பது திருநீற்றுப் பச்சிலை ஆகும். சிவ பெருமானை இவ்வாறு குறிப்பிடுவதன் பின்னணி என்னவெனில் முல்லை நிலத்து ஆயர் மரபாகிய ஆநிரை காவல் மரபினைச் (கோரக்ஷகன் அல்லது கோரக்கன் = கோர்க்கா வடிவமாகிய பைரவன்) சிவ வழிபாட்டுடன் இணைத்ததன் விளைவே ஆகும்[8]. மழைக் காலத்தின் உட்பிரிவுகளாகிய கார்காலமும், கூதிர்காலமும் முல்லைக்கும் குறிஞ்சிக்கும் உரிய முதற் பொழுதுகள் ஆகும். எனவே, சிவ வழிபாட்டுடனும் சேயோன் வழிபாட்டுடனும் கார்காலத்தில் மலர்கின்ற அல்லது மின்னலால் மலர்கிற மலர்கள் உறவு உடையனவாகவே சித்திரிக்கப்பட்டு வந்தன. இந்த இலக்கிய மரபுப் பின்னணி காட்டுமலர்களை மலர்விக்கும் மூன்றாம் பிறை ஆதிரையான் வழிபாட்டுக்கும் பொருத்தமுடையதாக அமைந்திருப்பதால் ஆதிரை நட்சத்திரத் தொடர்பு சிவ வழிபாட்டின் அடிப்படை அம்சமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில் இடர்ப்பாடுகள் எவையும் நேரவில்லை.

வைகாசி ஆதிரை - கல்வெட்டு ஆதாரங்கள்

சைவ சமயத்தில் ஆழ்ந்த பிடிப்பும், சமய அனுபவமும் உள்ளவர்கள் சிவனின் திருநடனம் நிகழ்ந்த மார்கழித் திருவாதிரை நாளையே சிவனுடைய ஆதிரை நாளாகக் கருதுவார்களே தவிர, மூன்றாம் பிறை ஆதிரை நாளை முதன்மையானதாக ஏற்க மாட்டார்கள். மார்கழித் திருவாதிரை நாளென்பது சைவ சமய நாயன்மார்களில் குரு ஸ்தானத்தை வகிக்கின்ற திருஞானசம்பந்தரால் மயிலைப் பதிகத்தில் முதன்மையான ஒரு திருவிழா நாளாகக் குறிப்பிடப்படுகிறது ("கபாலீச்சுரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்" - இரண்டாம் திருமுறை, மயிலைப் பதிகம், பாடல் 4). மார்கழித் திருவாதிரை என்ற குறிப்பு இப்பாடலில் இல்லையாயினும் இதற்கு முந்தைய பாடலில் கார்த்திகை விளக்கீடு விழாவும், அடுத்த பாடலில் தைப்பூச விழாவும் குறிப்பிடப்படுவதால் இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆதிரை நாள் மார்கழித் திருவாதிரை என்பது எளிதில் முடிவு செய்யத்தக்கதே. ஆயினும், மார்கழி மாதப் பூர்ணிமை நாள் என்பது திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்தைய நட்சத்திரமாகிய மிருகசிரஸ் நட்சத்திரத்தன்று நிகழ்வதாகும். மார்கசீரிஷ என்ற பெயரே மார்கழி எனத் தமிழில் திரிந்துள்ளது. சைவ சமயத்தின் தலைமை இடமாகக் கொள்ளத்தக்க நடன சபாபதியின் அம்பலமாகிய சிதம்பரத் திருத்தலத்தில் திருவாதிரைக்கு முதல் நாளாகிய மிருகசிரஸ் நட்சத்திரத்தன்றுதான் தேர்த் திருவிழா நடைபெறுகின்றது. எனவே, மார்கழித் திருவாதிரை என்பது சோதிட - வானநூல் அடிப்படையிலும் சைவ சமய வழக்குகளின்படியும் முழுமையான ஒரு திருநாளாக ஏற்றுக் கொள்ளத் தக்கதா என்பது ஐயத்துக்குரியதே[9]. ஆனால், வைகாசி மாத ஆதிரை என்பது பெருந்திருவிழா எனப்பட்ட வைகாசி விசாகத் திருவிழாவின் கால்கோள் நாளாகக் கருதிப் பின்பற்றப்பட்டு வந்தது என்பதைத் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து நாம் உய்த்துணர முடிகிறது. "தஞ்சை ராஜராஜீஸ்வரம் உடையார் திருக்கோயிலில் வைய்காசிப் பெரிய திருவிழாவில் திருவாலன் திருமுதுகுன்றனான விசய ராசேந்திர ஆசாரியனும் இவன் வர்க்கத்தாரும் இராசராசேசுவர நாடகமாடினர்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது (South Indian Inscriptions Vol II No. 17). நாடகம் நிகழ்த்தியவன் ஆசான் பட்டம் பெற்றவன். நாடகம் நடைபெற்றதோ சோழர்கள் தலைநகரப் பெருங்கோயிலில். நடைபெற்ற விழாவோ பெரிய திருவிழா. எனில், ஆடல் தொடர்பான ஆதிரை நாள் இத்திருவிழாவோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புற்றிருக்க வேண்டும் என நாம் முடிவு செய்வது தவறாகாது. நமது ஊகத்துக்குப் பக்க பலமாகப் பல கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கின்றன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனின் ஆட்சிக் காலத்தில் திருவிடைமருதூரில் கீர்த்திமறைக்காடனான திருவெள்ளறைச் சாக்கை வைகாசித் திருநாளில் மூன்று கூத்துகள் நிகழ்த்தினான் எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பெரம்பலூர் மாவட்டம் காமர(ச)வல்லியில் கி.பி. 1041இல் சாக்கைமாராயன் விக்ரமசோழன் என்பவன் மார்கழி, வைகாசித் திருவாதிரை நாள்களில் மூன்று முறை கூத்து நிகழ்த்தியுள்ளான் (Annual Report on Epigraphy for the year 1915 - page 98, para 22). இதே போன்று, திருமார்கழித் திருநாளும் திருவைய்காசித் திருநாளும் திருக்களபப்படி எனப்பட்ட சந்தனக்காப்பு நடைபெற்றது எனக் கச்சினம் சிவன் கோயிலிலுள்ள கி.பி. 1249ஆம் ஆண்டுக் கல்வெட்டால் அறியலாம். (திருத்துறைப்பூண்டிக் கல்வெட்டுகள் - தொடர் எண் 1976/56 - பொறுப்பாசிரியர் - இரா. நாகசாமி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1978). நாம் முன்னர் குறிப்பிட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள இரண்டாம் இராசாதி ராச சோழனின் கி.பி. 1168ஆம் ஆண்டுக் கல்வெட்டில் "சதிர விடங்க நாயகற்கு வைகாசித் திருவாதிரை திருநாளுங்கண்டு திருநாளுக்கு கூத்தாடுகைக்குக் காணியாக... இத் திருநாளைக்கு ஆறு கூத்தாடுவாராகவும், விளையினும் விளையாவிடினும் இக் கூத்தாறும் ஆடக் கடவதாகவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (Pudukkottai State Inscriptions - No. 139). கி.பி. 1020ஆம் ஆண்டைச் சேர்ந்த நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் புஞ்சை நற்றுணை ஈஸ்வரர் கோயில் கல்வெட்டில் "வைகாசித் திருவாதிரைத் திருநாள் திரு உற்சவம்" என்ற குறிப்பு காணப்படுகிறது. ("ஆவணம்" இதழ் 6 பக்கம் 22 தமிழகத் தொல்லியல் கழகம் வெளியீடு திரு. சூ. சுவாமிநாதன் கட்டுரைக் குறிப்பு) வைகாசித் திருவாதிரைத் திருநாள் என்பது அக்ஷய த்ரிதியை என்பதைத் தவிர இதில் வேறு முதன்மை ஏதும் இருக்க வழியில்லை. இந்த இடத்தில் வேறொரு கல்வெட்டுக் குறிப்பும் நமது கருத்துக்கு வலிமை சேர்க்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் மாங்காடு வல்லீஸ்வரர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள பல்லவ அரசன் நந்தி விக்கிரம வர்மனின் கி.பி. 863ஆம் ஆண்டுக் கல்வெட்டில் (South Indian Inscriptions Vol XII No. 53) அக் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர விழாக்கள் இரண்டு முதன்மையாகக் குறிப்பிடப்படுகின்றன. அவை: திருவாதிரைத் தலை உவா, திங்கள் நிலவு ஆகிய நாள்கள் ஆகும். இக்குறிப்பில் இடம் பெறும் நாள்கள் இரண்டுமே நிலவு தொடர்பான உவா நாள்களாகும். தலை உவா எனக் குறிப்பிடப்படுவது வளர்பிறையில் கண்ணுக்குப் புலப்படும் பிறையாகிய மூன்றாம் பிறையே ஆகும். திங்கள் நிலவு என்பது பூர்ணிமை நாளாகும். எனவே திருவாதிரை நட்சத்திரத்தன்று மூன்றாம் பிறை வருகின்ற வைகாசி நாளும் மார்கழித் திருவாதிரையுமே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன எனத் தெரிகிறது. வேறு சில கல்வெட்டுக் குறிப்புகளாலும் இதனை நாம் உறுதிப்படுத்த முடியும். கோனேரி ராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் கல்வெட்டு (South Indian Inscriptions Vol III No. 151) மார்கழித் திருவாதிரை, வைகாசித் திருநாள் ஆகியவற்றுக்காக முசிதைக்குடி என்னும் சிற்றூருக்கு அறுநூறு கலம் நெல் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டில் இரண்டு திருவிழாக்கள் முதன்மையாகக் குறிப்பிடப்படுகின்றன. இதில் இரண்டாவதாகக் குறிப்பிடப்படும் வைகாசித் திருநாள் என்பது வைகாசி விசாகத் திருநாளாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆயினும் இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஏகாதச ருத்ரர் என்ற வைதிக மரபுப்படி பதினொரு நாள் திருவிழாக் கொண்டாடுகிற இன்றைய சிவாலய வழிபாட்டு மரபுகளின் கண்ணோட்டத்தில் பார்த்தால் வைகாசித் திருவாதிரையன்று முதல் நாள் திருவிழா தொடங்கி வைகாசி விசாகத்தன்று பதினோராம் நாள் திருவிழாவை நிறைவு செய்ததாகக் கருதிட இயலும். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் நார்த்தாமலை விசயாலய சோழீஸ்வரர் கோயிலில் வைகாசி மாதத்தில் 10 நாள்கள் திருவிழா நடைபெற்றது என அக் கோவில் கல்வெட்டொன்றால் தெரிய வருகிறது. (Annual Report on Epigraphy 296/1964). வைகாசித் திருவாதிரை (அக்ஷய த்ரிதியை) நாள் அந்திப் பொழுதில் கால்கோள் விழாத் தொடங்கி புனர்பூச நட்சத்திர நாளினை முதல் நாள் திருவிழாவாகக் கொண்டு வைகாசி விசாகத்தன்று 10ஆம் நாள் திருவிழா நடத்தி நிறைவு செய்தனர் என நாம் முடிவு செய்யலாம்.

அப்பர் தமது திருக்குறுக்கை வீரட்டப்பதிகத்தில் "தீர்த்தமாம் அட்டமிமுன் சீருடை ஏழு நாளும் கூத்தராய் வீதி போந்தார் குறுக்கை வீரட்டனாரே" எனப் பாடுகிறார். ஏழு நாள்கள் ஆடவல்லானுக்குத் திருவிழா நடந்தது என்றும் எட்டாம் நாள் விடாயாற்றி எனப்படும் தீர்த்தவாரி நடைபெற்றது என்றும் இப்பாடலால் தெரியவருகின்றன. அப்பர் காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகள் கழிந்த பின்னர், கி.பி. 873-ல் திருக்குறுக்கைக்கு அருகிலுள்ள திருமெய்ச்சூரில் வைகாசி உத்திரம் என்ற விழா ஏழு நாள்கள் நடைபெற்றது எனக் கல்வெட்டுக் குறிப்பால் தெரியவருகிறது (South Indian Inscriptions Vol XIII No. 240). இவ்விழா வைகாசித் திருவாதிரை அன்று தொடங்கி ஏழு நாள்கள் நடந்து ஏழாம் நாளான உத்தர நட்சத்திரத்தன்று முடிவுற்றது என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. திருக்குறுக்கை நடராசரின் பெயராக அப்பர் பெருமான் குறிப்பிடுகின்ற "கூத்தராய் வீதி போந்தான்" என்ற பெயரை ஆட் பெயராகச் சூட்டிக் கொண்டவர்கள் திருக்குறுக்கை வட்டாரத்திலுள்ள அகஸ்தியன்பள்ளிச் சிவன் கோயில் கல்வெட்டில் (மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்காலம் கி.பி. 1273 - South Indian Inscriptions Vol. XVII No. 550) இடம் பெறுகின்றனர். இதே கோயிலிலுள்ள மாறவர்மன் குலசேகரனின் கி.பி. 1299ஆம் ஆண்டுக் கல்வெட்டில் (South Indian Inscriptions Vol XVII No. 549) "பெருமாள் திருமேனி கல்லியாண திருமேனியாக வேண்டுமென்று வைகாசி மாதத்து அத்தம் தீர்த்தமாக நாங்கள் கண்ட திருவைகாசித் திருநாள்" என்ற குறிப்பு உள்ளது. வைகாசி மாதத்தில் அஸ்த நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைபெற வேண்டுமெனில் திருவாதிரை நட்சத்திரத்தை முதல் நாளாகவும் உத்தர நட்சத்திரத்தை ஏழாம் நாளாகவும் அஸ்த நட்சத்திரத்தைத் தீர்த்தவாரி நடைபெறுகிற எட்டாவது நாளாகவும் கொண்டு விழா நடைபெற்றிருக்க வேண்டுமெனத் தெளிவாகிறது. "தீர்த்தமாம் அட்டமி" என அப்பர் பெருமான் குறிப்பிடுவதனை "எட்டாம் நாளாகிய தீர்த்தவாரி" என்ற வகையில் பொருள் கொண்டு இவ்வாறு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்திலுள்ள வில்லியனூர்க் கல்வெட்டு ஒன்று (A.R.E. 187/1936-37) பராக்கிரம பாண்டியன் ஆட்சிக் காலத்தை (கி.பி. 14ஆம் நூற்றாண்டு)ச் சேர்ந்தது. திருவாதிரையன்று கொடியேற்றம் தொடங்கி, 8 நாள்கள் வைகாசித் திருவிழா நடந்து அஸ்த நட்சத்திரத்தன்று தீர்த்தவாரியுடன் விழா முடிவுற்றது என இக் கல்வெட்டால் தெளிவாகத் தெரிய வருகிறது. ஆருத்ரா தரிசனம் என்பது மார்கழி மாதத் திருவிழாவே என்ற நிலை உருவான பின்னரும் கூட, ஆடல்வல்ல பெருமானின் திருவிழா நடைபெற்ற நாள்களாக மார்கழித் திருவாதிரை மட்டுமின்றி வைகாசித் திருவாதிரையும் சிவாலயங்களில் தொடர்ந்து நீடித்து வந்துள்ளதென இக்கல்வெட்டுகளால் தெரிய வருகிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் தமது மயிலைப்பதிகத்தில் கபாலீச்சுரத்தில் நிகழ்ந்த மார்கழித் திருவாதிரைத் திருவிழா பற்றிக் குறிப்பிடுகிறார் எனக் கண்டோம். அவ்வாறிருக்கையில் வைகாசி மாதத் திருவாதிரை சிவ வழிபாட்டின் முதன்மையான ஒரு விழாவாகக் கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை நீடித்து வந்தது என்பது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால், திருஞானசம்பந்தர் தமது மயிலைப்பதிகத்தில் பங்குனி உத்தர நாள் விழாவினைக் குறிப்பிடும் ஏழாவது பாடலை அடுத்து வருகின்ற எட்டாவது பாடலில் அட்டமி நாள் விழாவினைச் சுட்டுகிறார். இது சித்திரை அட்டமி நாள் ஆகும். வைக்கத்து அட்டமி என்ற பெயரில் இன்றளவும் கேரள மாநிலம் வைக்கத்தில் சித்திரை மாதத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. மயிலைப்பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் திருஞானசம்பந்தர் "நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும் உற்றாங்குணர்கிலா மூர்த்தி திருவடியைக் கற்றார்களேத்துங் கபாலீச்சுரம் அமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்" எனக் குறிப்பிடுகிறார். இப்பாடல் வைகாசி மாததில் நிகழ்ந்த பொன்தாம்பு எனப்படும் மங்கல நாண் பூணும் விழாவைக் குறிப்பிடுகிறது. நாம் இக்கட்டுரையில் ஆராய்ந்த செய்திகள், கல்வெட்டுக் குறிப்புகள் மற்றும் கருத்துகள் அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தால் இத்திருவிழா வைகாசி மாத ஆதிரை நாளில் நிகழ்ந்த அக்ஷய த்ரிதியைத் திருவிழாவே என்பது தெளிவுறுகின்றது.

இறுதியாக, வேறொரு சிக்கலுக்கு நாம் விடை தேடவேண்டிய கடமை உள்ளவர்களாக இருக்கின்றோம். தண்ணீரின் கொப்பூழில் தோன்றியவன் என்ற கருத்தின் அடிப்படையில் மின்னல்கொடி என்பது படைப்பாற்றலின் உருவகமாகக் கருதப்பட்டது எனக் கண்டோம். மூன்றாம் பிறை ஆதிரை நாளன்று தோன்றுகிற மின்னல் தென்மேற்குப் பருவக் காற்றின் தொடக்கத்துடனும் அப் பருவக் காற்றால் ஏற்படுகிற மழை வளத்துடனும் தொடர்புபடுத்தப்பட்டது எனவும் கண்டோம். இத்தகைய படைப்பாற்றல் என்பது வைதிக மரபில் பிரம்மா என்ற தெய்விகக் கருத்தோட்டமாகத்தான் சித்திரிக்கப்பட்டது. நீர்த் தெய்வமாகிய நாராயணனின் கொப்பூழில் (தொப்புள் கொடியில்) தோன்றியவர் என்றும் ஆகம நெறிப்படி அமைக்கப்படும் கோயில்களில் கொடிக் கம்பமாக உருவகிக்கப்படுபவர் என்றும் தாயின் கர்ப்பப்பையில் முதல் வித்தாகத் தோன்றிப் பத்து மாத பந்தத்தின் அடையாளமாகவும் கருவின் உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் திகழ்கிற கொப்பூழாக ரிஷிகளின் மனக் காட்சியில் தோன்றியவராகவும் பிரம்மாவை அறிஞர்களும் தத்துவவாதிகளும் அடையாளம் கண்டுள்ளனர். விந்து என்பது முதல் முதலில் படைக்கப்பட்ட ஒளி வடிவம் என்றும், நாதம் என்பது முதல் முதலில் தோன்றிய ஒலி வடிவம் என்றும் ஆன்மிகவாதிகள் கருதுவர். மின்னல் பிரம்மா எனில், இடி சரஸ்வதி ஆகும். கொப்பூழ் பிரம்மா எனில் மூச்சுக்காற்று (பிறந்த குழந்தையின் முதல் அழுகை) சரஸ்வதி ஆகும். இத்தகைய படைப்பாற்றலின் உருவகக் குறியீடுகளுடன் தொடர்புடைய தாழை மலர் அதாவது மின்னலால் மலர்கிற தாழை மலர், விண்ணுக்கும் பாதாளத்துக்குமாக ஊடுருவிப் பரந்து நிற்கும் ஊழித் தீயாக உருவகிக்கப்படும் சிவபெருமானின் முடியைக் கண்டதாக பிரம்மாவுக்கு சார்பாகப் பொய்ச் சாட்சி சொல்லிற்று என்ற ஒரு கதை பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. இது ருத்ரமூர்த்தியின் யஜமான வடிவம் பெற்ற செல்வாக்கின் விளைவாகப் புனையப்பட்ட கதையே என்பது தெளிவு. வைதிக யக்ஞ மரபுக்கும், ஆகம நெறிகளுக்கும் வானநூல் அறிவின் அடிப்படையில் அமைந்த வழிபாட்டு மரபுகளுக்கும் இடையில் நேர்ந்த பல சமரசங்களின் விளைவாக மூன்றாம் பிறையும் ஆதிரையும் ருத்ர வழிபாட்டின் முதன்மையான அம்சங்களாக ஏற்கப்பட்டன. ஆயினும் ஆதிரை நட்சத்திரம் உருவானது குறித்த புராணக் கதைகளைப் பார்த்தால், பெண் மானாக மாறிய சரஸ்வதியை பிரம்மா தாம் ஓர் ஆண் மானாக மாறித் துரத்துகையில் சிவன் என்னும் வேடனால் அம்பெய்து கொல்லப்படுகிறார் என்றும் பிரம்மாவிடமிருந்து ஒரு ஜோதி தோன்றி ஆதிரை நட்சத்திரமாக மாறிற்று என்றும் தெரியவருகின்றன. பிரம்மன் என்கிற பெயரின் பாரசீக வடிவமாகிய பஹமன் (Bahaman) என்பது கிறிஸ்து சகாப்தத் தொடக்க நூற்றாண்டுகளில் அரசர் சிலரின் பெயராக இருந்துள்ளது. சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படும் குசிகர் குலத்தவர்கள் (கெளசிக கோத்திரத்தவர்கள்) பாரசீகத் தொடர்புடையவர்கள் என அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். ஆதிரையான் வழிபாட்டின் ஆதிமூலம் பாரசீகச் சமய மரபே என்பதற்கு இவையெல்லாம் ஆதாரங்கள் என நாம் கருதுவதில் தவறில்லை.

அடிக்குறிப்புகள்:

[1]. "குமரகுருபரர்... துருக்கர்களது உத்தேசப்படியே சிவக்கக் காய்ச்சிய இரும்பைக் கொணர்வித்து சைவ சமயமே மெய்ச் சமயமானால், அச் சமயத்துக்குரிய சிவ பெருமானுக்குப் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், சூரியன், சந்திரன், ஆன்மா என்னும் எட்டுமே திரு உருவமானால், அவ் வெட்டனுள்ளும் அக்கினியே பிரதானமானால் இது சுட மாட்டாது என்னும் கருத்தோடு அவ்விரும்பைத் தமது திருக்கரத்திலே ஏந்தி அருளினார்", பக்கம் 218, "ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்" - மு. அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1990.


[2]. The Zend Avesta - Part II Translated by James Dermesteter, p. 6, The Sacred Books of the East - Vol 23 - General Editor: F. Max Muller, Motilal Banarsidas Publishers, New Delhi, 2000. மேலும் விவரங்களுக்குப் பார்க்க: The Sacred Books of the East - Vol 5, 18, 24, 37, 47 Pahalvi Texts Translated by E.W. West, Motilal Banarsidas Publishers.


[3]. இக்கட்டுரை ஆசிரியால் எழுதப்பட்டுவருகிற ஐயனார் வழிபாடு குறித்த கட்டுரையில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.


[4]. பழைய எம்.ஜி.ஆர். திரைப்படப்பாடலில் "சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே" என்று ஒரு வரி இடம் பெற்றுள்ளது. இது கவிஞர் சுரதாவின் பாடலாக இருக்கலாம்.


[5]. இந்தியாவிலுள்ள மிகப் பழமையான சிவலிங்கங்களுள் ஆந்திர மாநிலம் குடிமல்லத்திலுள்ள பரசுராமேஸ்வரர் கோயிலில் காணப்படும் சிவலிங்கமும் ஒன்றாகும். இச் சிவலிங்கத்தில் சிவனுடைய மனித உருவச் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. இச் சிற்பத்தில் சிவ பெருமான் தாழை மடல் சூடியுள்ளதாக அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவ வழிபாட்டின் பரிணாம வளர்ச்சிக் கட்டங்களுள் இது மிகப் பழமையான ஒரு கட்டமாகும்.



[6]. நகுதல் என்ற கருத்திலிருந்தே நகை என்ற சொல் தோன்றியுள்ளது. ஜ்வலித்தல் என்ற சொல்லுக்கும் Jewell என்ற சொல்லுக்கும் உள்ள தொடர்பு வெளிப்படையானது. Smile, Smith என்ற சொற்களும் தம்முள் தொடர்புடையனவே. ஸ்மிதா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு நகைப்பவள் என்று பொருள். Goldsmith என்ற சொல்லுடன் ஸ்மிதா என்ற சொல்லுக்கு உள்ள தொடர்பும் வெளிப்படையானதே. இக் கலித்தொகைப் பாடலில் கொன்றைப் பூ மாலை பொன் அணியாகவே உருவகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. "பொலஞ் செய் கிண்கிணிக் காசின் அன்ன போதீன் கொன்றை" எனக் குறுந்தொகை (148) குறிப்பிடுகிறது.


[7]. குறிஞ்சித் திணைக்குரிய உரிப் பொருளாகிய களவு மணத்தினைக் காந்தர்வ விவாகத்துடன் தமிழ் இலக்கண மரபு தொடர்புபடுத்தும். மணம் என்ற சொல்லே காந்தர்வம் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல்லாகிய கந்தம் என்ற சொல்லுடன் தொடர்புடையதாகத் தோன்றுகிறது. மணத்தல் (Smell) என்ற புலனுணர்வுக்கும் இணை விழைவு உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது அறிவியலாளர்களின் கருத்தாகும். நம்முடைய ஆய்வுப் பொருளுடன் இக் கருத்து எவ்வாறு தொடர்புறுகிறது என்ற கேள்வி எழுவது இயல்பு. காந்தார நாடு எனப்படும் ஆப்கானிஸ்தான காந்தஹார்ப் பகுதிப் பூர்வகுடிகளின் மரபே காந்தர்வ உறவு முறை ஆகலாம். நக்கீரர் குறித்த "நெற்றிக்கண்" கதையில் இடம் பெறுகிற பெண்டிர் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற கேள்வியும், சிவபெருமான் இயற்கை மணம் உண்டு என்று இக்கேள்விக்கு பதிலளித்ததாகக் கூறப்படுவதும் ஆதிரையான் வழிபாட்டுடன் காந்தாரப் பகுதிக்கு இருந்த ஆரம்பகால உறவுகள் பற்றிய பூடகமான பதிவுகள் ஆகலாம். இது தனித்த விரிவான ஆய்வுக்கு உரியது.

[8]. இது குறித்த விளக்கமான கட்டுரை, 'Transformation of Tamil Society in North Tamilnadu - A random study through reinterpretation of some inscriptional terms and names' என்ற தலைப்பில் இக்கட்டுரை ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளது. (பதிப்பு: Journal of Tamil Studies - Vol. 57 & 58. June & December 2000, International Institute of Tamil Studies, Chennai - 600113.)

[9]. தில்லை வாழ் அந்தணர்களுள் ஒருவரும், சைவசித்தாந்த சந்தான குரவர்களுள் ஒருவரும், கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான உமாபதி சிவாச்சாரியார், தமது சேக்கிழார் நாயனார் புராணத்தில் (பா. 80, 83), திருத்தில்லை மன்றினில் நின்றாடும் நடராசர்க்குச் சித்திரைத் திருவாதிரை தொடங்கி மகாபூசை நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார். மாசிமகத் திருவிழாக் காலத்தில் வளர்பிறை ஏகாதசியன்று வருகிற திருவாதிரை நாளிலும் இறைவனுக்குச் சிறப்பான அபிஷேகம் நடைபெற்றது எனக் கி.பி. 937ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் (South Indian Inscriptions - Vol. VII No. 517) குறிப்பிடப்பட்டுள்ளது. மாசி மகம் என்பது வருணன் விழா ஆதலால் வருணன் மகன் ஆதிரையான் என்ற பாரசீக மரபையும், ஏகாதச ருத்ரர் என்ற வைதிக மரபையும் இணைத்து இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கலாம்.

maanilavan@gmail.com
நன்றி: திண்ணை . எஸ் இராமச்சந்திரன் அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை ஏப்ரல் 27 2006   Copyright:thinnai.com  


No comments:

Post a Comment