(தமிழ் எழுத்துச் சீரமைப்பு பற்றி முனைவர் வா.செ குழந்தைசாமி அவர்கள் தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தில் காணொளி காட்சி மூலம் தெளிவு படுத்தியவைகளை.......இங்கே பதியப்பட்டுள்ளது.)
தமிழ் எழுத்துச் சீரமைப்பு
தமிழர்கள் ஒரு மொழியினர் பல நாட்டினர் எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர் தங்கள் அடையளத்தை காக்கவேண்டும்.
சிறுபான்மை மக்கள் தங்கள் அடையாளத்தை காக்கவேண்டும். தமிழர்களுக்கு நாடு அடையாளம் அன்று, மதம் அடையாளம் அன்று, அவர்கட்கு இருக்கும் ஒரே அடையாளம் தமிழ் மொழிதான். அவர்கள் தங்கள் அடையாளத்தைக் காக்கத் தமிழ் கற்கவேண்டும்.
தமிழ் மொழியின் 247 எழுத்துக்களைக் கற்க 107 குறியீடுகள் தற்பொழுது தேவைப்படுகின்றன.
ஆனால் ஒரு எழுத்துக்கூட குறையாது 247 எழுத்துகளையும் எழுதுவதற்கு 39 குறியீடுகள் போதும்.
இந்த மாற்றம் தான் தந்தை பெரியார் அவர்கள் முன் வைக்கும் தமிழ் எழுத்துச் சீரமைப்பின் குறிக்கோள்.
பெரியார் அவர்கள் முன்வைத்த தமிழ் எழுத்துச் சீரமைப்பு முழுவடிவம் பெற அடுத்த கட்டம், தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த படியாக வரவேண்டிய சீரமைப்பு. நாம் வாழ்வது கல்வியுகம் கல்வியறிவுதான் இன்றைய வளம்.
பண்டைக்காலத்தில் கல்வியென்பதே மொழிக்கல்வியாகத்தான் இருந்தது. கல்வியென்பது பெரும்பாலும் மொழிக்கல்வியாக இருந்ததாலும் மிக மிகச் சிலரே கல்வி கற்றதாலும், மொழியைக்கற்பது அதிக நேரத்தைச் செலவிடுவது மொத்தத்தில் அன்று பெரிய சமுதாய இழப்பாக இருக்கவில்லை. இன்று பல துறைகளை கற்பதற்கு கல்வி ஒரு கருவி. நாம் நம் முன்னோர்கள் போன்று மொழியை கற்பதற்கு மட்டும் அதிக நேரத்தை செலவிடமுடியாது. எனவே மொழியைக்கற்பது எளிதாக்கப்படவேண்டும். இது ஒரு சமுதாயத் தேவை.
கல்வியின் முதற் கட்டம் எழுதப்படிக்கத் தெரியவேண்டும். முதலில் எழுத்துகளை கற்கவேண்டும். எழுத்துகள் எளிதாக இருப்பது கற்பதை ஊக்குவிக்கும். படிக்கத் தெரிந்தால் கல்வியில் ஆர்வம் எழும்.
தமிழர்கள் இன்று உலகம் தழுவி வாழும் மக்கள். தமிழ் நாட்டின் எல்லைகள் முன்பு வடவேங்கடம், தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம் என்ற நிலையில் இருந்தன. இன்று இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லைகள் கடந்து பூமிப்பந்திடை அமைந்த நாடு பலவினும், அதாவது 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம் எந்தவொரு இடத்திற்கும் ஒரு அடையளம் வேண்டும்.
தமிழர்களுக்கு மதம் அடையாளமல்ல, சாதி ஓர் அடையாளமல்ல நாடும் அடையாளமல்ல. தமிழர்களுக்கு தமிழ் மொழி ஒன்றுதான் அடையாளம். தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்கள அடையாளத்தை காத்துக்கொள்ள தமிழ் கற்க வேண்டும்.
தமிழகத்தில் வாழும் தமிழர்களும் தமிழ் கற்கவேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களும் தமிழ் கற்கவேண்டும். உலகத் தமிழ் குடும்பங்களும் தமிழ் கற்கவேண்டும்.
தமிழச்சாதிக்கு ஒரு வேண்டுகோள் தமிழர்களின் 20 சதவிகிதம் பேர் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள். 75 மில்லியன் தமிழர்களில் ஏறத்தாழ 15 மில்லியன் தமிழர்கள் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள். தமிழர்கள் பலநாட்டினர், பல மதத்தினர், ஆனால் எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர்.
இன்றையத் தகவல் தொழில்நுடப உலகில் பெரும்பான்மையினரின் ஆக்கம் ஒரு சக்திவாய்ந்த திரவம் போன்றது. அதில் சிறுபான்மையினர் கரைந்து, கலந்து தமது அடையாளத்தை இழந்துவிடக்கூடிய பேராபத்து இருக்கிறது. தமிழர்கள் தங்கள் தனித்தன்மையைக் காக்க, அடையாளத்தை நிலைப்படுத்த தமிழர்க்கு இருக்கும் ஒரேக்கவசம் தமிழ் மொழிதான்.
உலகத்தமிழினம் தமிழ் மரபோடு, தமிழ் பாரம்பரியத்தோடு தொடர்பு அராது வாழவேண்டும். தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ் கற்க வேண்டும். அவர்கள் தமிழில் பரிச்சயம் வேண்டும். நாம் இதுவரை கூறிய அனைத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டுமானால் உலகத் தமிழினம் தமிழ் கற்பது இன்றியமையாதது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் நாடுகள் தவிர, மற்ற நாடுகளில் தமிழ் கற்பது ஒரு பொருளாதார தேவையல்ல., அரசியல் தேவையுமல்ல. நாம் கூறியிருப்பது போல் தமிழை கற்பது கடினமாக இருந்தால் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் இளந்தலைமுறையினர் தமிழ் கற்க முன்வரமாட்டார்கள்.
150 முதல் ஏறத்தாழ் 200 ஆண்டுகட்குள் பிஜி, பிரையோனியா, மொரிஷியஸ் போன்ற பலநாடுகட்கு சென்ற தமிழர்கள் தமிழை மறந்துவிட்டார்கள். இப்பொழுது இளந்தலைமுறைக்கு தமிழ் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்டிரேலியா போன்று அண்மைத் தலைமுறைகள் குடியேறிய நாடுகளில் அடுத்த தலைமுறை தமிழை இழந்து வருகிறது. இவர்கள் தமிழ் கற்க தமிழர்களாய் வாழ தமிழ் கற்பதை இயன்றவரை எளிதாக்க வேண்டும். அதற்கு முதற்படியாக தமிழ் எழுத்துகள் கற்பதை எளிதாக்கவேண்டும்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பதினைந்து இலட்சம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேருகிறார்கள். இவர்கள் அனைவரும் முதற் கட்டமாக தமிழ் எழுத்துகளை கற்கவேண்டும். எனவே பதினைந்து இலட்சம் குழந்தைகள் தமிழ் எழுத்துகளை கற்பதை எளிதாக்குவது மாபெறும் கல்விப்பணியாகும். மாபெறும் சமூதாயச் சேவையாகும். தமிழிலுள்ள 247 எழுத்துகளை கற்பதற்கு இன்று குழந்தைகள் 107 குறியீடுகளை கற்கிறார்கள். 247 எழுத்துகளை ஒரெழுத்துகூட குறையாமல் எழுதுவதற்கு 39 குறியீடுகள் போதும். இதைச் செய்வது பெரியார் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அவசியமான கட்டம். இங்கு நாம் பரிந்துரைப்பது தமிழ் வரிவடிவத்தில் சீர்மையை, விரைமையை, கற்பதில் விரைவை ஏற்படுத்தும் மாற்றமாகும். உண்மையிலேயே மிகச்சிறிய மாற்றம். நாம் இந்த கருத்துரையை பரிந்துரைப்பது தமிழில் உள்ள உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை குறிப்பிட வரிவடிவம் அல்லது எழுத்து அல்லது குறியீடு, ஆகிய சொற்களில் ஏதாவது ஒன்றை வேறுபாடின்றி ஒரு பொருள் பல சொல் என்ற வகையில் பயன்படுத்துகிறோம்.
‘’மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை’’ இது டார்வினின் தத்துவம். காலத்துக்கேற்ப எளிமை, சீர்மை, விரைவு கருதி மாற்றங்கள் நாம் விரிம்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்வில் இடம்பெற்றுவருகின்றன. ஒருமொழிக்கு ஒலி நிரந்தரமானது. எழுத்துகள் எனபவை ஒலிகளுக்கு நாம் உருவாக்கும் குறியீடுகள் மாறக்கூடியவை.
கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி காலந்தோறும் தமிழ் வரிவடிவம் அதாவது எழுத்துகள் மாறியே வந்திருக்கின்றன.
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ஒலி எழுத்துகளை இரு பெரும் பிரிவுகளாகப்பார்க்கலாம்.
1, முதன்மை எழுத்துகள்
2. சார்பு எழுத்துகள்
அவை பின்வருமாறு
முதன்மை எழுத்துகள்
உயிர் எழுத்துகள் 12
மெய் எழுத்துகள் 18
ஆய்த எழுத்துகள் 1
---------------------
மொத்த முதன்மை எ.ழுத்துகள் 31
---------------------
சார்பு எழுத்துகள்
உயிர் மெய் எழுத்துகள் 216
மொத்த தமிழ் ஒலி எழுத்துகள் 247 (முதன்மை எழுத்துகள் + உயிர்மெய் எழுத்துகள்)
ஐரோப்பிய மொழிகளிலும், இந்திய ஆசிய மொழிகளிலும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டுமே உள்ளன. இந்திய மொழிகளில் மட்டும் தான் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டுமின்றி உயிர்மெய் எழுத்துகள் என்ற தனி வரிவடிவம் கொண்ட எ.ழுத்துகள் இருக்கிறது. அதனால் எழுத்துகளின் எண்ணிக்கை அதிமாகிவிட்டது.
தமிழில் உள்ள 216 உயிர் மெய் எழுத்துகள் எளிமை, சீர்மை, விரைவு என்ற மூன்று நிலைகளிலும் பயணம் செய்து எவ்வாறு இனிவரும் காலத்திற்கு ஏற்ப அமைப்பை பெறலாம் என்பதை எடுத்துக்கூறுவதே நாம் பரிந்துரைக்கும் எழுத்துச் சீர்மையின் நோக்கமாகும்.
தமிழ் எழுத்துகளை கற்பதற்கு இப்பொழுது தேவைப்படும் குறியீடுகள் 107 அவை பின்வருமாறு.....
முதன்மை எழுத்துகள்
உயிர் எழுத்துகள்
அ முதல் ஔ வரையுள்ள உயிர் எழுத்துகள். இவற்றில் ஔ கூட்டெழுத்து எனவே பனிரெண்டு ஒலிகளுக்கு தேவைப்படும் குறியீடுகள் பதினொன்று.
மெய் எழுத்துகள்
க முதல் ன வரை பதினெட்டு இவற்றுடன் ஒரு புள்ளி . ஆக 19 குறியீடுகள். ஆயுத எழுத்து ஒன்று. மொத்த குறியீடுகள் முப்பத்தி ஒன்று.
சார்பு எழுத்துகள்
அதாவது உயிர் மெய் எழுத்துகள் தமிழில் உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவத்தில் ஒரு சீர்மை இல்லை. சில வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் இல்லை. சில வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் உள்ளது.
தமிழில் அகரமெய் தவிர்த்த ஏழு வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் இல்லை. பொதுவான குறியீடுகளே உள்ளன. இந்த எட்டு வரிசைக்குத் தேவைப்படும் புதியக்குறியீடுகள்...
ஆகாரக் குறியீடு (‘’கால் எழுத்து’’)
எகரக்குறியீடு (‘’ஒற்றைக்கொம்பு’’)
ஏகாரக்குறியீடு (‘’இரட்டைக் கொம்பு’’)
ஐகாரக்குறியீடு (‘’இரட்டை சுழி’’)
ஆக நான்கு மட்டுமே!
தமிழில் அகர மெய்தவிர்த்த ஏழு வரிசைகளுக்கு தனித்தனி வரிவடிவம் இல்லை. பொதுவான குறியீடுகளே உள்ளன.
அகரம் ‘க’ முதல் ‘ன’ வரை
ஆகாரம் ‘கா’ முதல் ‘னா’ வரை (ஆகாரக் குறியீடு கால் எழுத்து)
எகரம் ‘கெ’ முதல் ‘னெ’ வரை (எகரக் குறியீடு ஒற்றைக் கொம்பு)
ஏகாரம் ‘கே’ முதல் ‘னே’ வரை (ஏகாரக் குறியீடு இரட்டைக்கொம்பு)
ஐகாரம் ‘கை’ முதல் ‘னை’ வரை (ஜகாரக்குறியீடு)
ஒகரம் ‘கொ’ முதல் ‘னொ’ ஒரை (ஒகரக் குறியீடு (எகரக்குறியீடு + ஆகாரக் குறியீடு))
ஓகாரம் ‘கோ’ முதல் ‘னோ’ வரை (ஓகாரக்குறியீடு (ஏகாரக்குறியீடு+ஆகாரக்குறியீடு))
ஔகாரம் ‘கௌ’ முதல் ‘னௌ’ வரை (ஔகாரக்குறியீடு (எகரக்குறியீடு+ வரிவடிவம்)
ஆக எட்டுவரிசைகளான 147 எழுத்துகளுக்கு நான்கு குறியீடுகள் போதும். (ஆகாரம், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, ஜகாரம்)
தனித்தனி வரிவடிவம் தமிழ் எழுத்துகளுக்கு இருப்பதெல்லாம் நான்கு வரிசைகளுக்கு மட்டும் தான் அது..
இகரம் ‘கி’ முதல் ‘னி’ வரை
ஈகாரம் ‘கீ’ முதல் ‘னீ’ வரை
உகாரம் ‘கு’ முதல் ‘னு’ வரை
ஊகாரம் ‘கூ’ முதல் ‘னூ’ வரை
ஆக இந்த நான்கு வரிசைகளுக்கு தேவைப்படும் எழுத்துகள் 72
இநனோடு சேர்த்து மொத்த குறியீடுகள் 107.
தற்பொழுது உள்ள வழக்கில் 247 தமிழ் எழுத்துக்கள் கற்பதற்கு 107 வரிவடிவங்கள் தேவைப்படுகின்றது..
தமிழில் உயிர் மெய் எழுத்துகள் 216
அதில் உயிர் மெய் இகர, ஈகார, உகர, ஊகார நான்கு வரிசைகள் தவிர மீதமுள்ள 8 வரிசைகளில் உள்ள 144 எழுத்துகளுக்குத் தேவைப்படும் குறியீடுகள் 4. (ஆகாரம், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, ஐகாரம்).
இதைப்போலவே இகர, ஈகார, உகர, ஊகார உயிர் மெய் வரிசைகட்கு உயிர்மைக்குறியீடுகளைப் பயன்படுத்தினால் 4 உயிர்மெய்குறியூடுகள் போதும். இதனால் 68 வரிவடிவங்கள் குறையும்.
எடுத்து வைத்த உத்தியைச்செய்லபடுத்த 4 புதிதாக நான்கு உயிர் மெய் குறியீடுகள் தேவை. நாம் பயன்படுத்தக்கவைகளாக ஒரு பரவலான கருத்துக்கணிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் இவற்றின் உயிர் மெய்குறியீடுகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
இதனால்,
உயிர் எழுத்திற்கும் ஆயுதத்திறகும் 12 குறியீடுகள்
உயிர் மெய் அகரத்திற்கு 18 குறியீடுகள் மற்றும்
உயிர்மெய் குறியீடுகள் ஒரு புள்ளியுடன் சேர்த்து 9 ஆக மொத்தம் 39 குறியீடுகள் மட்டும் போதும்.
நாம் விளக்கும் இந்த மாற்றங்கள் ஏற்றுகொள்ளப்பட்டால்
30 முதன்மை எழுத்துகள் 9 உயிர் மெய் குறியீடுகள் ஆக 39 வரிவடிவங்களை கற்றாலே போதுமானது. இவற்றில் 4 நான்கு உயிர் மெய் குறியீடுகள் மட்டும் தான் புதியவை.. இவற்றை கற்பது மிகவும் எளிது.
நாம் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு குறியீடுகள் ஒரு கருத்துகணிப்பின் மூலம் உருவாக்கப்பட்டவை. இவை தமிழ் வடிவத்தோடு இயைந்து வருவதோடு தேவைப்பட்டால் வேண்டிய அளவு மாற்றப்படலாம். கொடுத்திருப்பது முடிந்த முடிவு அல்ல. முக்கியமாகத் தேவைப்படுவது உயிர்மெய் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகட்கும் மற்ற வரிசைகளைப்போலவே (ஆகார, எகர,ஏகார, ஐகார குறியீடுகளை பயன்படுத்தும்) குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்ற கொள்கையினை ஏற்பது தான்.
தமிழில் உள்ள 247 எழுத்துக்களை எழுதுவதற்கு ஒரு எழுத்துக்கூட குறையாமல் எழுதுவதற்கு இந்த 30 குறியீடுகள் போதும். நாம் முன்வைத்த சீர்திருத்தத்தை ஏற்று 39 எழுத்துகளை கற்றபின் தமிழ் கணக்கை குழந்தைகள் எழுதுவது எவ்வளவு எளிது என்பதை படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது....
தமிழ் வரிவடிவத்தை கற்பதும் தொடர்ந்து தமிழ் மொழியைகற்பதும் எளிதாக்கப்படும், ஊக்குவிக்கப்படும்.....
உலகத் தமிழர்கள் தமிழ் மொழியோடு, தமிழ் இலக்கிய உலகோடு தொடர்பறாது வாழ பெரிதும் உதவும்.
ஒரு மொழிக்கு உண்மையான வலிமை என்பது இலக்கணம், இலக்கியம் என்பதை விட பேசும் மக்களின் எண்ணிக்கை தான். அந்த எண்ணிக்கையை காப்பதற்கு முறையான வழியில் எந்த மாற்றமும் செய்யலாம், எந்த விலையும் கொடுக்கலாம்.
பெரியார் வழியில் நாம் சொல்லும் மாற்றம் எளியது, சிறியது, இயற்கையானது. மண்ணில் இருக்கும் தமிழ் வானில் பறக்க இறக்கை கொடுப்பது போன்றது. நாம் எடுத்து வைத்த ஒரு எளிய, சிறிய மாற்றத்தின் மூலம் குழந்தைகள் கற்க வேண்டிய எழுத்து வடிவங்கள் அதாவது குறியீடுகள் 107 இலிருந்து 39 தாக குறைகின்றன.
இது போன்ற மாற்றம் தமிழ் மொழிக்கு புதியது அல்ல. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கி காலந்தோறும் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் மாறியே வந்திருக்கிறது. ஒலி நிரந்தரமானது. வரிவடிவம் மாறக்கூடியது.
18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் செய்த மாற்றங்கள் எகரத்திறகும் ஒகரத்திற்கும் இருந்த புள்ளிகளை நீக்கிவிட்டு எகரத்தில் ஒரு சிறு கோடு சேர்ப்பதன் மூலம் ஏகாரமாகவும், ஒகரத்திற்கு சுழிப்பதின் மூலம் ஒகாரமாகவும் அவர் உருவாக்கினார். பனை ஏடுகளில் புள்ளி வைக்கும் சிரமத்தை தவிர்க்க அவர் இவ்வாறு செய்திருக்கலாம்.
சென்ற நூற்றாண்டில் பெரியார் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசு (படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல்) உயிர் மெய் ஆகார வரிசைகளில் மூன்று எழுத்துகளையும், உயிர் மெய் ஐகார வரிசைகளில் நான்கு எழுத்துகளையும் சீர்மையை கொண்டு வந்தது. இந்த மாற்றங்களினால் தமிழ் வரிவடிவம் ஒழுங்கு பெற்றதேயன்றி தமிழுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. நாம் பரிந்துரைக்கும் சீரமைப்பில் உயிர் மெய் இகர, ஈகார வரிசைகளிலும், உயிர் மெய் உகர, ஊகார வரிசைகளிலும் தனித்தனி எழுத்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உயிர் மெய் இகர ஈகார வரிசைகளிலும், உயிர் மெய் உகர ஊகார வரிசைகளிலும் மற்ற உயிர் மெய் வரிசைகளைப்போலவே உயிர் குறியீடுகளை பயன்படுத்துவதை பரிந்துரைத்திருக்கிறோம் இதனால் இந்த நான்கு வரிசைகளிலும் ஒரு சீர்மை யூனிபார்மட்டி வருகிறது. 72 வரிவடிவங்களை கற்பதற்கு பதிலாக நான்கு குறியீடுகளை கற்கவேண்டியிருப்பதால் கற்பது எளிதாகிறது. கற்பதில் விரைவு இடம் பெறுகிறது.
இப்படிபற்ற மாற்றத்தை நாம் தான் முதன் முதலில் செய்ய சொல்லுகிறோம் என்பதில்லை. நமது முன்னோர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் சான்றுகள் பின்வருமாறு....
நமது முன்னோர்கள் உயிர் மெய் இகரத்திற்கு குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை படத்திலுள்ள வேள்விக்குடி செப்பேட்டில் பார்க்கலாம்.
உயிர்மெய் ஊகாரத்திறக்கும் குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை வேள்விக்குடி செப்பேட்டில் பார்க்கலாம்.
உயிர்மெய் ஐகாரத்திற்கு குறியீட்டை தமிழக அரசு செய்த சீர்திருத்திற்கு முன்பே நமது முன்னோர்கள் பயன்படுத்தியிருப்பதை பள்ளன் கோவில் செப்பேட்டில் காணலாம்.
உயிர்மெய் எழுத்துகளன்றி உயிர் எழுத்துக்கு கூட உயிர் குறியீட்டை பயன் படுத்தியிருப்பதை காணலாம்.
கிரந்த எழுத்துக்களுக்கும் இது போன்ற உயிர் மெய்க் குறியீடுகளை பயன்படுத்துகிறோம்.
இகர, உகர வரிசைகளில் உயிர் மெய் எழுத்துகளுக்கு உயிர் மெய் குறியீடுகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தியிருப்பதை செப்பேடுகளில் கண்டோம். என்வே எவ்வித தயக்கமுமின்றி இந்த நான்கு வரிசைகட்கும் சீரமைக்க உயிர் மெய்குறியீடுகளை பயன்படுத்தலாம் என்பது இயல்பாகவே தோன்றும் சீரமைப்பாகும்.
இதில் புரட்சிகரமான அம்சம் ஏதுமில்லை. இதனால் ஏற்படும் நன்மை தான் புரட்சிகரமானது. இதில் கற்பனை செய்யப்படும் அளவில் தமிழுக்கு ஏற்படும் இ.ழப்பு என்று ஏதுமில்லை.
டார்வினின் தத்துவம் வலியது வெல்லும் என்பதன்று. சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் உயிர் வெல்லும் மாற மறுப்பது மறையும் என்பது தான்.
நாம் இங்கு எடுத்து வைத்திருக்கும் மாற்றம் நடைமுறைப்படுத்தபட்டால் பெரியார் அவர்கள் எடுத்துவைத்த தமிழ் எழுத்து சீரமைப்பு முழுமை பெறும்.
நாம் கூறும் மாற்றம் மிகவும் எளியது. அளவில் சிறியது ஆலின் விதை போன்றது. அதன் பயன் உண்மையிலேயே ஆல் போன்றது.
தமிழச்சாதி ஒரு குவலயக் குடும்பம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பாடிய கவிஞன் கணியன் பூங்குன்றன் ஒரு தீர்க்கதரிசி. இன்று நாம் குளோபல் வில்லேஜ் அதாவது குவலயக்கிராமம் என்று பேசுகிறோம். உலகு தழுவி வாழும் தமிழினம் இன்று அந்த குவலயக்கிராமத்தில்... குவலயக்குடும்பமாக... குளோபல் பேமிலியாக உருவாகியிருக்கிறது. தமிழர்களை உலகம் இன்று ஒரு மாகாணத்தில் வாழும் மக்களாக பார்க்கவில்லை. பொதுவாக உலகுத் தழுவி வாழும் மக்களாக, குறிப்பாக தெற்கு ஆசிய மக்களாக பார்க்கிறார்கள்.
இந்திய மொழிகளில் வங்கமும் உருதும் அணைடை நாடுகளில் ஆட்சி மொழிகள். அவற்றை விடுத்து மற்ற மொழிகளை மட்டும் நாம் இந்திய மொழிகள் என்று குறிப்பிடுவோம்.
சீன வானொலி 42 மொழிகளில் ஒளிபரப்புகிறது. அவற்றுள் இந்திய மொழிகள் இந்தி தமிழ் ஆகிய இரண்டு மட்டும் தான். காரணம் தமிழ் தெற்கு ஆசிய மொழி. சௌத் ஏசியன் லேங்குவேஜ் என கருதப்படுகிறது. உண்மையில் இன்று அது உலக குடிமக்களின் மொழி.
பிபிசி வானொலி உலகு அறிந்தது. அது 32 மொழிகளில் ஒளிபரப்புகிறது. பிபிசி வானொலியும் இந்தாய மொழிகளில் இந்தி தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் தான் ஒளிபரப்பு செய்கிறது. முதலில் கூறிய அதே காரணங்களுக்காகத்தான்.
அண்மைக்காலம் வரை யூனஸ்கோ நிறுவனம் கூரியர் என்ற மாத இதழை 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட்டு வந்தது. அதில் இடம் பெற்ற இந்திய மொழிகள் இந்தியும் தமிழும் தான்.
இன்று தமிழகத்தில் சில தொலைக்காட்சிகள் உங்கத் தமிழர் செய்திகள் என்ற செய்தி ஒளிபரப்புச் செய்கின்றன. சில தினசரி பத்திரகைகள் வாரம் ஒருமுறையாவது உலகத் தமிழர் செய்திகள் என்று வாரம் ஒருமுறையாவது செய்திகள் வெளியிடுகின்றன. இவையனைத்தும் தொடர வேண்டுமானால், வலிமைப்படவேண்டுமானால், விரிவடைய வேண்டுமானால், உலகத் தமிழ் மக்கள் தமிழோடு, தமிழ் மரபோடு தொடர்பு உடையவர்களாக வாழ.வேண்டும். தமிழ் இணையப்பல்கலைக்கழகம் உலகத் தமிழர்கள் தமிழ் கற்க உதவுகிறது. எழுத்து சீர்திருத்தம் தமிழ் கற்க பெரியளவில் எளிதாக்கும். குறிப்பாக உலகத்தமிழர்கள் தமிழ் கற்பதை எளிதாக்கும். அவர்கள் தமிழ் கற்பது தமிழ் இனத்தின் எதிர்காலத்திறகு வளம் சேர்க்கும், வலிமை சேர்க்கும்.
சங்ககாலக் கவிஞன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடினான். தற்காலத் தமிழர் புவனமும் மானுடர்க்கு பொது என்று வாழ்கிறார்கள்.
தமிழர்கள்
ஒரு மொழியினர்,
பல நாட்டினர்,
எல்லா நட்டிலும் சிறுபான்மையர்.
தமிழர்கட்கு தாங்கள் இன்று பன்னாட்டுச் சிறுபான்மையர் என்ற பார்வை வேண்டும். விழிப்புணர்வு வேண்டும்.
புவனமும் மானுடர்க்கு பொதுவெனும் தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம்.
ஒரு மொழிக்கு உண்மையான வலிமை
இலக்கணம் இலக்கியம் என்பதை விட
பேசும் மக்களின் எண்ணிக்கைதான்.
அந்த எண்ணிக்கையை காப்பதற்கு
முறையான வழியில் எந்த மாற்றமும் செய்யலாம்.
எந்த விலையும் கொடுக்கலாம்.
பெரியார் வழியில் நாம் சொல்லும் மாற்றம்
எளியது, சிறியது, இயற்கையானது.
மண்ணில் நடக்கும் தமிழ் வானில் பறக்க
இறக்கை கொடுப்பது போன்றது.
http://www.tamilvu.org/esvck/index.htm
.........முனைவர் வா.செ.குழந்தைசாமி