Thursday, September 25, 2014

ஓலைச் சுவடிகளுக்காக புதுச்சேரியில் ஒரு நூலகம்: 8,400 அரியவகை சுவடிகளைப் பாதுகாக்கும் பிரெஞ்சு நிறுவனம் - தி இந்து

ஓலைச் சுவடிகளுக்காக புதுச்சேரியில் ஒரு நூலகம்: 8,400 அரியவகை சுவடிகளைப் பாதுகாக்கும் பிரெஞ்சு நிறுவனம் - தி இந்து

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் 8400 ஓலைச் சுவடிக் கட்டுகளை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். 

புதுச்சேரியில் பிரெஞ்சு அரசு நிர்வாகத்தின்கீழ் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்கள், துறை வல்லுநர்கள், பணியாளர்கள் என சுமார் 60 பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் இந்தியாவின் இயற்கையையும் பண்பாட்டையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர். 

நமது தொன்மையையும் பாரம்பரிய பெருமைகளையும் நாம் பாதுகாக்க தவறிவிட்டபோதும் இந்த பிரெஞ்சு நிறுவனம் அதை எல்லாம் போற்றிப் பாதுகாக்கும் முயற்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இங்கு ஓலைச் சுவடிக்கு என்றே ஒரு நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அந்த நூலகத்தில் 8400 ஓலைச் சுவடிக் கட்டுகளை பாதுகாத்து வைத்துள்ளனர். 

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசினார் இந்த நிறுவனத்தின் ஓலைச்சுவடி ஆராய்ச்சித் துறை தலைவர் டி.கணேசன். “இங்கு கிரந்த எழுத்து ஓலைச்சுவடி கட்டுகள் ஐயாயிரமும் தமிழ் ஓலைச்சுவடிக் கட்டுகள் ஆயிரமும் திகழாரி மொழியில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் சுமார் 400 கட்டுகளும் உள்ளன. இவைகள் இல்லாமல் தெலுங்கு, நந்தி நாகரி மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிக் கட்டுகளும் உள்ளன. 

இவை அனைத்துமே நாங்களே ஊர் ஊராய் கிராமம் கிராமமாய் அலைந்து திரிந்து சேகரித்தவை. சில ஓலைச் சுவடிகள் எளிதில் கிடைத்துவிட்டன. எங்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு சில பேர் ஓலைச் சுவடிக் கட்டுகளை எடுத்துக் கொடுத்துவிட்டனர். சிலபேர் தரமறுத்தனர். அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்துத்தான் ஓலைச் சுவடிக் கட்டுகளை வாங்க வேண்டியிருந்தது.

இங்குள்ள ஓலைச்சுவடிகளில் கடவுளால் அருளப்பட்ட சைவ ஆகம நூல்கள் நிறைய இருக்கின்றன. இங்கிருப்பதைப் போன்ற சைவ மற்றும் சைவ சிந்தாந்த நூல்கள் உலகில் வேறெங்கும் இல்லை. அரிய நிறுவனங்கள் மற்றும் தகவல்களைப் பதிவு செய்யும் யுனெஸ்கோவின் ‘மெமரி ஆஃப் தி வேல்டு’ பதிவேட்டில் இங்குள்ள ஓலைச்சுவடி நூலகம் 2005-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓலைச் சுவடிகள்தான் தமிழ் இலக்கியத்தின் ஆதாரம். சுவடிகள் இல்லை என்றால் நமக்கு திருக்குறளே கிடைத்திருக்காது. ஆனால், நாம் ஓலைச்சுவடிகளின் அருமை தெரியாமல் இருந்து விட்டோம். அதனால் பெரும்பகுதியான சுவடிகள் அழிந்துவிட்டன. 

இங்குள்ள சுவடிகளை நாங்கள் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம். இவைகளை பூச்சிகள் அரித்துவிடக் கூடாது என்பற்காக ஒவ்வொரு ஏட்டிலும் ‘லெமன் கிராஸ் ஆயில்’ தடவி பாதுகாக்கிறோம். அதேசமயம், இந்தச் சுவடிகளில் உள்ள தகவல்கள் காலத்துக்கும் அழியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்தையும் டிஜிட்டலைஸ் பண்ணிவிட்டோம். இப்போது, இந்த ஓலைச் சுவடிகளில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஆன் லைனில் இருக்கின்றன. உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரும் இந்த ஓலைச்சுவடிகளில் உள்ள தகவல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்’’ என்று கூறினார் கணேசன். 

No comments:

Post a Comment