2500 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிட்டவன் தமிழன் அந்த நெல்மணிகள் இப்போதும் இருக்கின்றன
நீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை ஆண்டுகளாக தமிழர்களின் உணவாக
இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?
அண்மையில் நான் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகளைப்
பார்த்தேன். தொல்லியல் அறிஞரான பேராசிரியர் ராஜன் அவர்களிடம் அந்த
நெல்மணிகள் உள்ளன.
|
Prof.K.Rajan |
பேராசிரியர் ராஜன் உலக அளவில் மதிக்கப்படும் தொல்லியல் அறிஞர்களில்
ஒருவர்.ஆழ்கடலுக்குக் கீழ் சென்று ஆய்வுகள் நடத்திய முதல் இந்தியத்
தொல்லியல் வல்லுநர். கொடுமணல், பொருந்தல் போன்ற இடங்களில் அவர் மேற்கொண்ட
ஆய்வுகள் தமிழர்களின் தொன்மை, சங்க காலம் இவற்றைப் பற்றிய புதிய
செய்திகளையும் வெளிச்சங்களையும் அளித்துள்ளன.
தற்போது புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை
தலைவராகப் பணியாற்றிவரும் பேராசிரியர் ராஜனுடன் புதிய தலைமுறை ஆசிரியர்
மாலன் நிகழ்த்திய உரையாடலில் இருந்து…..
மாலன் (தலைமுறை): சங்க காலம் சங்க காலம் என்கிறார்களே சங்ககாலம் என்பது எந்தக் கால கட்டத்தைக் குறிக்கிறது?
பேராசிரியர்
ராஜன்: மார்ட்டீமர் வீலர் (Mortimer Wheeler) என்ற தொல்லியலாளர்
புதுச்சேரி அருகில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் மிகப் பெரிய
அகழ்வாராய்வு ஒன்றினை 1940களில் நடத்தினார்..தமிழர்களுக்கும்
ரோமானியர்களுக்குமிடையே வர்த்தகம் நடைபெற்று வந்தது என்ற கருத்ததாக்கத்தை
முதன்முதலில் அவர்தான் வெளியிட்டார்.முசிறி, தொண்டி, காவேரி பூம்பட்டினம்,
கொற்கை, அரிக்கமேடு இவையெல்லாம் சங்க காலத் துறைமுகங்கள் என்ற அடிப்படையில்
அவர் அரிக்கமேடு ஆய்வைமேற்கொண்டார். அரிக்கமேட்டில் ரோமன் நாட்டிற்கு
தொடர்பான பொருட்கள் கிடைத்ததனால், அந்தப் பொருட்கள் கி.மு.மு முதலாம்
நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் இருப்பதால், சங்க காலம் என்பது கி.மு.முதலாம்
நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அவர் கருதினார். அதையொட்டி ரோமுடைய
எழுச்சிக்குப் பிறகுதான் தமிழகம் எழுச்சி பெற்றது எனற் கருத்தாக்கம்
உருவாகிவிட்டது.
இந்தியர்கள் ரோமானியர்களுக்கிடையேயான கடல் வழி வாணிபம் (Maritime Trade)
தான் தமிழகத்தில் அரசு என்ற உருவாக்கத்திற்கு பெரும் காரணமாக இருந்தது
என்ற ஒரு கருத்து வேறு உள்ளது. கிளாரன்ஸ் மலோனி, செண்பகலட்சுமி,
போன்றவர்கள் அந்தக் கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள்
இடையில அரிக்கமேட்டில் 3 மட்பாண்டங்கள கிடைத்தன. ரௌலட்டேட் வேர்,
(Rouletted Ware) என்ற பாண்டங்கள், அரிக்டேன் வேர், மது ஜாடி (amphora
jar) ) என்பவை அவை. இந்த மூன்றுமே ரோமன் மட்பாண்டங்கள் என்று வீலர்
சொல்கிறார். ஆனால் ரௌலட்டேட் வேர் ரோமன் மட்பாண்டம் கிடையாது. இந்த
ரௌலட்டேட் வேர் இந்தியாவின் கீழக் கடற்கரை, தென்கிழக்கு ஆசியாவில்
கிடைக்கிறது. ஆனால் ரோமன் பொருட்களோடு ரௌலட் வேரையும் ஒப்பிட்டு அதுவும்
கி.மு.முதலாம் நுற்றாண்டு என்று உறுதி செய்துவிட்டார்கள்.
ராபர்ட் சுவெல் (Robert Sewell) மதுரைக்கருகில் மாங்குளத்தில் சில
கல்வெட்டுக்களைக் கண்டறிந்தார். அவற்றில் காணப்பட்டது அசோகர் காலத்து
பிராமி எழுத்துக்கள் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) . என்று கருதினார்கள்.
ஜேம்ஸ் பிரின்ஸப் (James Prinsep) அசோகரது பிராமி கல்வெட்டுக்களை
படித்தபோது இதனையும் படிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால்
படிக்க முடியவில்லை. அதற்கு காரணம், அதிலிருந்த சில எழுத்துக்கள் அசோகர்
கால எழுத்துக்கள போல இல்லை. அது பிராகிரத மொழி. இது பிராமி வரி வடிவம்.
அதே வரிவடிவமாக இருப்பதால் இதன் மொழியும் பிராகிரதமாகத்தான் இருக்க
வேண்டும் என்று எண்ணினார்கள் அப்போது கே.சுப்ரமணிய ஐயர் மட்டும்தான் இது
பிராகிரதம் இல்லை, தமிழ் என்று சொன்னார்.
தமிழ் வடிவங்களை பார்க்கிறபோது இதனுடைய காலம் முன்னோக்கி செல்லக் கூடும்
என்று ஐராவதம் மகாதேவன் முடிவு செய்து கி.மு. 3ம் நூற்றாண்டு என்றார்.
அசோகரது பிராமி கிமு 3ம் நூற்றாண்டு. தமிழ் பிராமி அதற்கு 100 ஆண்டுகள்
முந்தியதாக இருக்க வேண்டும் என்று கிமு 3லிருந்து 2ம் நூற்றாண்டு வைத்துக்
கொள்கிறார். கிமு முதலாம் நூற்றாண்டு, என்று கருதிய மார்ட்டின் வீலரின்
கருத்தாக்கம் 1980 வாக்கில் 200 ஆண்டுகள் மேலும் பழமையாகி கிமு 3ம்
நூற்றாண்டு என்றானது தமிழகத்தின் அனைத்து வரலாற்று நூல்களிலும் சங்க காலம்
என்பது கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 3ம் நூற்றாண்டு வரை என்று பதிவு
செய்து விட்டார்கள்.
மாலன்: நீங்கள் ஈரோட்டிற்கு அருகில் உள்ள
கொடுமணல் என்ற இடத்தில் நடத்திய ஆய்வுகள் சங்ககாலம் கி.மு. மூன்றாம்
நூற்றாண்டிற்கும் முன்னதாக இருந்திருக்கக் கூடும் எனக் காட்டுகின்றனவா?
கொடுமணல் ஆய்வுகளின் முக்கியத்துவம் என்ன ?
|
Kodumanal Excavations |
பேரா.ராஜன்: பொதுவாக தொல்லியல் அகழாய்வுகள் பெருங்கற்படைச் சின்னங்கள் எனக்
கருதப்படும் ஈமக்காடுகளில் நடக்கும். பழங்காலங்களில் மிகப் பெரிய
கற்பலகைகளைக் கொண்டும், பெரிய கற்களைக் கொண்டும் அமைக்கப்பட்ட ஈமக்
குழிகளில் உடல்கள் புதைக்கப்பட்டன. ( Megalithic Culture) ஆதிச்சநல்லூர்,
குன்னத்தூர், கொடுமணல் என்று எல்லா அகழ்வாய்வுகளிலும் இந்த ஈமக்காடுகள்
பற்றிய பதிவுகள் நிறைய இருக்கிறது. 1960களில் நடந்த தொல்லியல் ஆய்வு என்பது
ஈமக்க்காடுகளை பதிவு செய்வது, ஆவணப்படுத்துவது என்பதாக மட்டுமே இருந்தது.
ஈமக்காடுகளை ஆவணப்படுத்தியவர்கள் அதை சங்க காலத்தோடு தொடர்பு படுத்தியும்
இருக்கிறார்கள். ஈமக் காடுகள் என்பது நீத்தார் நினைவாக உருவாக்கப்பட்டது
என்பது சரி, ஆனால் அவர்களுக்கென்று ஒரு வாழ்விடம் இருந்திருக்குமல்லவா? அதை
யாருமே ஆவணப்படுத்தவில்லை. இதனால் அந்த காலத்தில் வாழ்ந்த தமிழ்
மக்களுக்கு (அல்லது அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு) வாழவிடங்களே இல்லை
என்ற நிலைப்பாடு உருவாகிவிட்டது. பதிவுகளில் ஏற்பட்ட இந்த பிரச்னைகளால்
அந்த மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தார்கள் என்று சொல்கிறாரகள். லட்சுமி கிங்கல்
என்பவர் SOUTH INDIAN LEGACY A PANDUKKAL COMPLEX Lawrence S. Leshik,
South Indian Megalithic Burials: The Pandukal Complex (Weisbaden: Franz
Steiner Verlag GMBH, 1974) என்ற புத்தகத்தில் அவர்கள் அந்த காலத்தில்
நடோடிகளாக இருந்தார்கள் என்பதை பதிவு செய்திருக்கிறார் (பெருங்கற்படைச்
சின்னங்களைச் சங்க இலக்கியங்கள் 'பதுக்கை' எனக் குறிப்பிடுகின்றன).
நம்முடைய நொய்யல் ஆற்றங்கரை நாகரீகம் பற்றிய ஆய்வை புலவர் செ.ராசு
ஈரோட்டில் உள்ள கலைமகள் பள்ளியோடு சேர்ந்து நடத்தினார். அவர், அந்தப்
பகுதியில் உள்ள கொடுமணல் முக்கியமான ஊராக இருக்க வேண்டும் என்றும்,
பதிற்றுப்பத்தில் வருகிற ‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்’ என்ற வரியில்
உள்ளகொடுமணம்தான் இந்த கொடுமணலாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை சிறிய
அளவில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் தமிழ் பல்கலைகழகத்திற்கு இணைப்
பேராசிரியராக அதன்பின் வந்து சேர்ந்தார். பேராசிரியர் சுப்புராயலு மதுரை
பல்கலைகழகத்தில் இருந்து தமிழ் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.
நான் கோவாவில் துவாரகை பற்றி கடல் அகழாய்வு செய்து கொண்டிருந்தேன்.
நீங்களும் நம்ம ஊருக்கு வந்து இந்த ஆய்வில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று
என்னையும் அழைத்தார்கள். எனவே நானும் தமிழ் பல்கலைகழகத்தில் வந்து
சேர்ந்தேன். நாங்கள் மூவரும் முக்கியமான ஆய்வுக் குழுவாக மாறிவிட்டோம்.
புலவர் இலக்கிய அறிஞர். பேராசிரியர் சுப்பராயலு கல்வெட்டியலில் மிகவும்
புலமை வாய்ந்தவர். நாங்கள் ஒரு குழுவாக கொடுமணல் அகழாய்வை எடுத்துக்
கொண்டோம்.
நாங்கள் கொடுமணல் ஆய்வை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஏழு முறை
ஆய்வுசெய்தோம். (எங்களுக்கு கல்விப் பணி இருந்ததால் ஏழு ஆண்டுகள் என்று
சொல்வதில்லை. ஏழு சீசன் என்று சொல்லுவோம், மே, ஜுன் என்று 2 விடுமுறை
மாதங்களில் மட்டும்தான் போக முடியும். மற்ற மாதங்களில் மாணவர்களுக்கு
வகுப்பு எடுக்க வேண்டிய பணி இருக்கும்) 1980, 90களில் கொடுமணல் அகழாய்வை நாங்கள செய்தபோது மண் அடுக்கு
அடிப்படையில் செய்தோம். அப்போது மத்தியில் ரௌலட்டேட் வேர் என்ற மட்பாண்டம்
கிடைத்தது. அதேநேரம் வட இந்திய வெள்ளி முத்திரை நாணயங்களும் கிடைத்தன.
ஆனால் இந்த நாணயங்கள் ஆறாம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து நமக்குக்
கிடைக்கிறது. அது கிமு முதலாம் நூற்றாண்டு வரை வருகிறது. இதை வைத்து ஆறாம்
நூற்றாண்டு என்று முடிவு செய்வதா 2ம் நூற்றாண்டுஎன முடிவு செய்வதா என்ற
கேள்வி எழுந்தது ,, ஏற்கனவே ரௌலட்டேட் வேர் ரோமன் மட்பாண்டத்தின் காலம்
கிமு முதலாம் நூற்றாண்டு வரை என்று உலகம் முழுவதும் இருந்த கருத்து அந்த
நாணயம், மண் அடுக்கு இவற்றை வைத்து சங்க காலம் என்பது கிமு 3ம்
நூற்றாண்டில் இருந்து கிபி 3ம் நூற்றாண்டு வரை இருக்கும் என்று நாங்களும்
முடிவு செய்தோம்.
ஆனால் நாங்கள் செய்த ஆய்வைத் தாண்டி வர முடியாத அளவிற்கு கருதுகோள்கள்
இருந்ததால் அதைத் தாண்டி வர முடியவில்லை. ஆனாலும் அந்த நேரத்தில் அதை
நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சங்க காலத்தை இலக்கியவாதிகள், கல்வெட்டு
ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் என்று மூன்று தரப்பினரும் 3 விதமாக
காலக்கணிப்புச் செய்துள்ளோம். ஆனால் மூன்றுமே அறிவியல் ரீதியாக காலம்
கணிக்கப்படவில்லை. எனவே ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக் கணிப்பு இல்லை.
இந்நிலையில் அனுராதபுரத்தில் ராபின் கன்னிஹாம் என்ற பேராசிரியர் அகழாய்வு
செய்தபோது அங்கே கிடைத்த பிராமி வரி வடிவங்கள் கிமு ஆறாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவை என்று காலக் கணிப்பு செய்திருந்தார். இது மிகப் பெரிய
திருப்பத்தை ஏற்படுத்தியது.