பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் – நடன காசி நாதன்
இன்றைக்கிருக்கும் தமிழ் எழுத்தின் மிகப் பழைய வடிவத்தைப் ”பண்டைத்
தமிழ் எழுத்து” என்கிறோம். இவ்வெழுத்தைச் சிலர் தற்பொழுது ”தமிழ் பிராமி”
என்றும் ”தாமிழி” என்றும் எழுதுகின்றனர். தமிழ் பிராமி என்றழைப்பதற்கு
அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து
என்றும், அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியிலிருந்து இவ்வெழுத்துத்
தோன்றியதே எனினும் அதிலிருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர்.
அவ்வாறெனில் பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் ”பிராகிருத பிராமி”
என்று அழைப்பதுதானே சரியாகும். மேலும் அப்பிராமி எவ்வெழுத்திலிருந்து
தோன்றியது? திடீரென்று அவ்வெழுத்தை மௌரியர் உருவாக்கிக் கொள்கையில் மற்ற
பகுதி மன்னர்கள், குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் தங்களுக்கென ஒரு எழுத்தை
உருவாக்கிக் கொண்டிருக்கமாட்டார்களா? அவ்வாறு தங்களுக்கு உருவாக்கிக்கொண்ட
எழுத்துதான் தமிழ் எழுத்து. அதன் பழமை குறித்துப் பண்டைய வடிவத்தைப்
”பண்டைத் தமிழ் எழுத்து” என்று அழைக்கிறோம்.
சற்றேறக்குறைய கி.மு.300ல் எழுதப்பெற்றதெனக் கொள்ளப்பெறும். ”சமவயங்க
சுத்த” என்னும் சமண நூலில் பதினெட்டு வகையான எழுத்துகள் குறிக்கப்
பெற்றுள்ளன. ”பம்பி”, ”தாமிழி” என்ற எழுத்துகள் அவற்றில் காணப்படுகின்றன.
”பம்பி என்பது பிராமி எழுத்தைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும்,
”தாமிழி” என்பது தமிழைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும்
கொள்ளப்படுகிறது. அந்த பிராமி எழுத்தில் அசோகன் கல்வெட்டுகள் உள்ளன என்றும்
தாமிழி எழுத்தில் தமிழ்நாட்டில் உள்ள பண்டைய கல்வெட்டுகள்
எழுதப்பெற்றுள்ளன என்றும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுகள்
தமிழ் எழுத்திலும், தமிழ் மொழியிலும் இருப்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் பிராகிருத மொழியில் உள்ள அசோகன் கல்வெட்டுகள் ”பம்பி” எழுத்தில்தான்
உள்ளன என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் ”பம்பி” எழுத்தில்
உள்ளதாகக் கொள்ளப்படுகிறது. அசோகன் கல்வெட்டில் காணப்படும் எழுத்திற்குப்
”பிராமி” என்ற பெயரை முதன் முதலில் சூட்டியவர் ப்யூலர் என்ற
மேல்நாட்டார்தான். அவ்வாறு அழைக்கப்பெற்றது சந்தேகத்திற்கு இடமானது
என்றும், வேறு ஒரு புனிதமான எழுத்திற்கு ”பிராமி” என்ற பெயர் சூட்டப்பட்டு
இருக்கலாம் என்றும் டி.பி. வர்மா கருதியுள்ளார்.
அசோகன் கல்வெட்டுகள் நிலையே அவ்வாறு இருக்கும்போது தென் இந்திய பண்டைக்
கல்வெட்டுகள் ”தென்னிந்திய பிராமியிலே” எழுதப் பெற்றுள்ளன என்பதும்,
தமிழ்நாட்டுப் பண்டைய கல்வெட்டுகள் ”தமிழ் பிராமியில்”
எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் ஏற்றுக் கொள்ள இயலாதவை.
தமிழ் எழுத்துப் பிராகிருத மொழியில் ”தாமிழி” என்று
குறிக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி ஆங்கிலமொழி பேசுவோரால் ”ட்ராங்குபார்”
என்றழைப்பதுபோல், தமிழ்மொழி பேசும் நாம் தமிழ் எழுத்து என்றுதான்
குறிப்பிடுதல் வேண்டும். இந்தியாவின் முதன்மைக் கல்வெட்டு ஆய்வாளராக இருந்த
கே.ஜி. கிருஷ்ணன் தமிழ் எழுத்து என்றே கூறிவந்தார்.