பத்ரி சேஷாத்ரி: ராணியின் படிக்கிணறு: யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக இந்தியாவிலிருந்து இரண்டு இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன என்ற செய்தியை இன்றைய தி ஹிந்துவில் பார்த்தேன். அதில் ஒன்று குஜராத்தில் பாடன் நகரில் இருக்கும் ‘ராணி கி வாவ்’ - ராணி (கட்டிய) படிக்கிணறு. இரண்டாவது இமாச்சலப் பிரதேசத்தின் பெரும் இமாலய தேசியப் பூங்கா.
ஜனவரி மாத இறுதியில் குஜராத் கலாசார யாத்திரை சென்றிருந்தபோது நாங்கள் ராணி கி வாவ் சென்றிருந்தோம். அப்போது எடுத்த சில புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் சேர்த்திருந்தேன்.
படிக்கிணறுகள் குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி போன்ற இடங்களில் விரவிக்கிடக்கின்றன. ஆனால் குஜராத்தில் அவை மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. நீர் இல்லாத மாநிலம் என்பதால் அப்பகுதியை ஆண்ட மன்னர்கள் நீர் நிலைகளுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து மிகச் சிறந்த கட்டுமானங்களை அவற்றைச் சுற்றி ஏற்படுத்தியிருந்தனர்.
இந்தக் குறிப்பிட்ட கட்டடமான ராணி கி வாவைக் கட்டுவித்தவர் மகாராணி உதயமதி. இவர் இந்தப் பகுதியை 12-ம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் பீமதேவ சோலங்கியின் மனைவி ஆவார். பீமதேவ சோலங்கி இறந்தபின் அவருடைய நினைவாக இந்தப் படிக்கிணற்றை உதயமதி கட்டினார் என்று பின்னர் 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு நூல் குறிப்பிடுகிறது. இந்தக் கிணறு இருக்கும் இடத்தில் எந்தக் கல்வெட்டும் கிடைக்கவில்லை.
No comments:
Post a Comment